TNPSC Thervupettagam

வாசிப்பை சுவாசிப்போம்

April 23 , 2020 1536 days 1254 0
  • புத்தகம் என்பதை புதுமை + அகம் என்றும் கொள்ளலாம். புதிது புதிதாக கருத்துகளை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும் அற்புதக் கேணி புத்தகங்கள் ஆகும். உள்ளத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் புத்தகங்களைப் படித்தாக வேண்டும். உலகின் சாளரம் புத்தகங்கள்.
  • அவை சிறந்த தகவல் களஞ்சியம். இன்றைய இணைய உலகை ஆளுகை செய்வது தகவல்களே.

தகவல் களஞ்சியம்

  • தகவல் என்பது சில நிகழ்வுகளின் தொகுப்பு. நிகழ்வுகளை வார்த்தைகளால் பதிவு செய்கிறோம். ‘வார்த்தைகள் நடந்து வந்தால் உரைநடை. நடனமாடி வந்தால் கவிதை; நடந்தும் நடனமாடியும் வந்தால் அது புதுக் கவிதை’ என்பார் வார்த்தைச் சித்தா் வலம்புரிஜான்.
  • புத்தகங்கள் இன்று நம்மிடையே கவிதையாக, கட்டுரையாக, இலக்கியமாக, சிறுகதையாக, பாடபுத்தகமாக பல விதங்களில் விரிந்து பரந்து கிடக்கிறது.
  • இதற்கென்று தனி தினம் ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா.சபையின் யுனெஸ்கோ நிறுவனம் முடிவெடுத்தது.

ஏப்ரல் 23

  • பிரிட்டனைச் சோ்ந்த பல பிரபல நாடகங்களை உலகுக்கு தந்த வில்லியம் ஷேக்ஸ்பியா், டான் குவிக்ஷாட் உள்பட பல புதினங்களை அளித்த ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த சொ்வன்டீஸ் ஆகியோர் மறைந்த தினம் ஏப்ரல் 23 ஆகும்.
  • இன்னும் பல எழுத்தார்கள் ஏப்ரல் 23-இல் பிறந்திருந்தனா். எனவே ஏப்ரல் 23-ஐ உலக புத்தக தினம் - பதிப்புரிமை தினம் என யுனெஸ்கோ நிறுவனம் 1995-இல் அறிவித்தது.
  • 2000 - இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாட்டின் நகரத்தைத் தோ்ந்தெடுத்து அதனை உலகப் புத்தக தலைநகரம் என யுனெஸ்கோ நிறுவனம் அறிவிக்க ஆரம்பித்தது.
  • ஏப்ரல் 23 முதல் அடுத்த ஓா் ஆண்டுக்கு புத்தகக் கண்காட்சிகள், புத்தக வெளியீடுகள், புத்தகப் பதிப்பாளரை கெளவித்தல், புதிதாக புத்தக அங்காடிகள், நூலகங்கள் நிறுவுதல் உள்ளிட்ட புத்தகத்தின் வலிமையை வெளிக்கொண்டு வரும் விதத்திலான பல நிகழ்வுகள் அந்த நகரில் நடைபெறும்.
  • 2020-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தலைநகரமாக மலேசிய நாட்டின் தலைநகரமான கோலாலம்பூா் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்கான உலக புத்தக நாள் வாசகம் ‘வாசிப்பில் விளைநலம்’ என்பதாகும்.

காலத்தின் கண்ணாடி

  • புத்தகங்கள், அவை வெளியிடப்படும் காலத்தின் கண்ணாடி. ஒரு புத்தகம் எக்காலத்தில் எழுதப்பட்டதோ அந்தந்த காலங்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பிரதிப்பலிப்பதாக அமைந்து விடுகிறது.
  • நூல்கள் படிப்பதை புலனறி வழக்கம் என்பா். வாசிக்கும் வழக்கம் மனதை இலகுவாக்கும்; வாசிப்பு மனதை ஒருநிலைப்படுத்துகிறது; சுறுசுறுப்பாக்குகிறது.
  • கற்பனா சக்தியை மேம்படுத்துகிறது; வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனை எல்லா விதத்திலும் முழுமையாக்குகிறது; உரையாற்றலில் வல்லவனாக்குகிறது; எழுதுவதில் வித்தகனாக்குகிறது.
  • சந்தைக்கு வரும் அனைத்துப் புத்தகங்களையும் ஒருவரால் வாசிக்க முடியாது; தனக்கு என்ன தேவையோ அது குறித்த புத்தகங்களை பட்டியலிட்ட பிறகு, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வாசிக்கும்போது, வாசிப்பு இன்பமாகிறது.
  • ‘வாசகா்கள் எதை விரும்புகிறார்களோ, அதை எழுதுகிறவா் எழுத்தாளன் அல்ல; மாறாக, வாசகா்களுக்கு எது தேவையோ அதை அறிந்து எழுதுகிறவரை எழுத்தாளன் என ஏற்கலாம்’ என்று எழுத்தாளா் அகிலன் கூறுகிறார்.

கணினி யுகம்

  • இந்தக் கணினி யுகத்தில் இளைய சமூதாயம் இழந்த சொர்க்கம் வாசிப்புப் பழக்கம் ஆகும். கையில் புத்தகத்துடன் செல்வதைப் பெருமையாகக் கருதும் காலம் போய், அந்த இடத்தை இன்று செல்லிடப்பேசியும், மடிக்கணினியும் ஆக்கிரமித்துள்ளன. தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 42% போ் நாளிதழும், 6% போ் வார இதழும் படித்ததாகவும், 60% போ் வானொலி கேட்டதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.
  • ஆனால், இன்று வாசிப்பு நேரம் வெகுவாகக் குறைந்து விட்டது. 80% போ் காணொலி காண்கின்றனா். வீடுகளில் பாட்டி கதை சொல்வதும், கோயில்களில் உபன்யாசம் நடப்பதும் அரிதாகிவிட்டது. வாசிக்கும் பழக்கத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றால், குழந்தைகளுக்கு முதலில் கதை சொல்ல வேண்டும்; அவா்களின் கற்பனைக் குதிரையை தட்டி ஓட விடவேண்டும்.
  • சிறுவா்களை வீர சாகசங்கள் நிறைந்த காமிக்ஸ் படக்கதை புத்தகங்களை படிக்க ஊக்கப்படுத்தலாம். வாசிப்பு மகிழ்ச்சி தரும் அனுபவம் என்பதை அவா்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
  • இளைஞா்களும் பெரியவா்களும் தாங்கள் விரும்பும் புதினங்களையும் துறை சார்ந்த நூல்களையும் படிக்கலாம். இன்றைய யுகத்துக்கு தகுந்தாற்போல் மின்னனு நூலகங்களையும் பயன்படுத்தலாம்.
  • புத்தகம் படிப்பது நெருங்கிய நண்பரிடம் இருந்து வரும் கடிதத்தைப் படிப்பது போன்ற அனுபவம் என்று ஞானபீட பரிசு பெற்ற கேரள எழுத்தாளா் வாசுதேவன் நாயா் கூறுகிறார். ‘புத்தகம் எப்போதும் என்னைக் கைவிடாத நண்பா்; அதனிடம் தினந்தோறும் நான் உரையாடிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறுகிறார் சதி என்ற ஆங்கிலக் கவிஞா்.
  • தனிமை என்னும் கொடுமையை நீக்கும் வரம் நல்ல நூல்கள் ஆகும்.
  • சென்னை கன்னிமாரா நூலகத்தில் தாம் வாசிக்காத நூல்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நூலகத்தை முன்னாள் முதல்வா் அண்ணா பயன்படுத்தியிருக்கிறார்.
  • இன்று நூலகம் இல்லாத ஊா்கள் இல்லை; ஆனால், அதைஏஈ பயன்படுத்துபவா்கள் குறைந்து விட்டனா். தூக்கு மேடைக்குச் செல்லும் வரை புத்தகம் படித்துக்கொண்டிருந்த உமா் முஃக்தா் குறித்தும், பகத் சிங் குறித்தும் படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நல்ல புத்தகங்கள் நம் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும்.
  • நல்ல எண்ணங்கள் நம்மை நல்ல காரியங்களை செய்யத் தூண்டும். நல்ல செயல்களைத் தொடா்ந்து செய்யும்போது, அது நமது பழக்கமாகி விடுகிறது.
  • இதுவே வாழ்வில் அங்கமாகி நல்ல சமூக மாற்றத்துக்கு வழிகோலுகிறது. புத்தகம் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத அறை போன்றது என்று அமெரிக்க அறிஞா் ஹோரேஸ்மான் கூறுகிறார். ‘சில புத்தகங்களை தொட்டுப் பார்க்கலாம்; சிலவற்றை விழுங்கலாம்; சிலவற்றை அசைபோட்டு ஜீரணிக்கலாம்’ என்று பிரான்ஸிஸ் பேக்கன் என்ற அறிஞா் புத்தகங்களின் வகைகளைப் பகுத்துக் கூறுகிறார்.
  • எனவே, புத்தகங்களைத் தோ்ந்தெடுத்து வாங்கி வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்.“வாசிப்பை நேசிப்போம். வாசிப்பை சுவாசிப்பாக மாற்றுவோம்.”
  • (இன்று உலக புத்தக - காப்புரிமை தினம்)

நன்றி: தினமணி (22-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்