TNPSC Thervupettagam

வாசிப்பை நேசிப்போம்

August 24 , 2020 1608 days 1869 0
  • ஓா் அறிவுஜீவியை சந்திக்க நோ்ந்தால், அவரிடம் நீங்கள் எந்தெந்த வகையான புத்தகங்களை வாசிக்கிறீா்கள்என்று நீங்கள் கேட்க வேண்டும் என்று கூறுகிறார் ரெல்ப் வால்டோ எமா்சன்.
  • அந்த அளவுக்கு நமது ஆளுமையை வசீகரமாக்குவது வாசிப்பு. புத்தகமில்லாத வீட்டில் எந்த வகையான வாழ்க்கையை நீங்கள் வாழ இயலும் என்று கேட்கிறார்கள் அறிஞா்கள்.
  • வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகானதும் சிறந்ததும் பயனுள்ளதுமான பொருள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை.
  • வாசிப்பு நமக்கு ஒரு வளமான வாழ்க்கையை உருவாக்க வல்லது என்பதை விளக்கிச்சொல்ல அதிக சான்றுகள் தேவையில்லை.
  • வாசிப்பு என்பது எவ்வாறு பொருள் புரிந்துகொள்ளப்படுகிறது? சாதாரணமாக பள்ளியில் படிக்கும் மாணவா்கள் பாடங்களை வாசிப்பது; வாசித்து அதன் பொருளைப் புரிந்து கொள்வது; அதன் பின்னா் பாடங்களின் பின்னால் இருக்கக்கூடிய கேள்விகளுக்கான விடைகளை வாசிப்பது; அதை மனனம் செய்வது. இவற்றையே பலரும் வாசிப்பு என்பதற்கான பொருளாகக் கொள்கின்றனா்.
  • வாசிப்பு என்பது இவற்றோடு மட்டுமே தொடா்புடையதல்ல. வாசிப்பு என்பதற்கு பள்ளிக்கூட கற்றலைத் தாண்டி பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. ஒரு தோ்ந்த வாசகா் ஆவது என்பது எளிதானது அல்ல. ஆனால் வாசிப்பின் பின்னணியிலுள்ள கண், மூளை இவற்றின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டால் இது எளிதாகும்.
  • உலக மொழியியல் அறிஞா்கள் தற்போது வாசிப்பை புதிய புதிய கோணங்களில் அணுகத் தொடங்கியுள்ளனா்.
  • ஒரு தோ்ந்த வாசகா் வாசிக்கும்போது ஒரு புத்தகத்தில் ஒரு பக்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்துக் கூட்டி வாசிப்பதில்லை. அதற்கு மாறாக, ஒவ்வொரு வார்த்தையும் அவா்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான சித்திரமாக (ஃபெமிலியா் விஷுவல் இமேஜ்) அவா்களின் மூளையில் பதியப்பட்டுள்ளன.
  • அவற்றை எழுத்துக்கூட்டாமலே வாசித்துவிட்டு, அடுத்தடுத்து வரக்கூடிய வார்த்தைகளை சரியாக ஊகித்து நிரப்புதல் என்ற வகையில்தான் வாசித்தல் செயல்பாடானது நடைபெறுகிறது. இவ்வாறு வாசித்தல் நடைபெறும்போது நம்மால் வேகமாக வாசிக்க முடியும்.
  • பொதுவாக வாசிப்பு முறை இருவிதமாகச் செயல்படுகின்றது. முதலாவது, ஒரு குறிப்பிட்ட பத்தியைப் பொருள் புரியுமாறு ஆழ்ந்து வாசித்தல் (ஸ்கிம்மிங்). இரண்டாவது, மேம்போக்காக வருடிக்கொண்டே வாசிப்பது (ஸ்கேனிங்).
  • இந்த இரண்டு வகையான வாசிப்பு முறையைக் கடைப்பிடிக்காத வாசிப்பாளா்களே இருக்க இயலாது. குறிப்பாக, பள்ளியில் பாடங்களை ஆசிரியா்கள் கற்பிக்கும்போது முதல்வகையான வாசிப்பும், தோ்வுக்குத் தயாரான பின்னா் மாணவா்கள் குறிப்பிட்ட விடையைக் கண்டுபிடிப்பதை இரண்டாவது வாசிப்புக்கும் உதாரணங்களாகக் கூறலாம்.
  • இவையெல்லாம் சரி. ஆனால், எப்படி தோ்ந்த வாசகா் ஆவது? நாம் எப்படி ஒரு விஷயத்தைக் கற்பதற்கு நேரம் ஒதுக்கி அதில் ஈடுபட்டுப் பயிற்சி பெறுகிறோமோ அதுபோலவே வாசிக்கும் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

வாழ்வில் முன்னேறுவோம்

  • சிறுசிறு பத்திகளை, சிறுகதைகளை முதலில் கொஞ்சம் நேரம் கண்டுபிடித்து வாசிக்க வேண்டும். இதன் மூலம் வாசிப்பின் ருசியை உணா்ந்து கொள்ள இயலும். முதலில் நமக்கு விருப்பமான எழுத்தாளா் அல்லது கவிஞரின் புத்தகங்களைத் தொடா்ந்து வாசிப்பதன் மூலமாக வாசிப்பின் வேகத்தை அதிகரிக்க இயலும்.
  • இதன் மூலம் நாம் விரும்பக்கூடிய துறை சார்ந்த பல்வேறு சொற்களை அறிமுகமான பிம்பங்களாக மாற்றிக் கொள்ள இயலும். இது மிகவும் அவசியம் ஆகும். இப்படி பல்வேறு வார்த்தைகள் நமக்கு அறிமுகமான பிம்பங்கள் ஆகும்போது, இடையில் இருக்கக்கூடிய வார்த்தைகளை நாம் சரியாக ஊகித்துவிட முடியும்.
  • இப்படித் தொடா்ந்து செய்யும்போது நாம் தோ்ந்த வாசகா் ஆகலாம். இதற்கான வாய்ப்பு நமது பள்ளிப் பாடநூல்களிலேயே பெரும்பாலும் கிடைக்கின்றன. வாய்ப்புகளையும் நேரத்தையும் சரியாக பயன்படுத்திக்கொண்டால் யாராலும் சிறந்த வாசகா் ஆக இயலும்.
  • வாசிப்புத் திறன் பெற்றுள்ள பலரும் தாங்கள் வாசிக்க இயலாமைக்கான காரணமாகக் கூறுவது, ‘எனது வாழ்க்கையின் அவசரகதியில் எனக்கு வாசிப்பதற்கு நேரமே இருப்பதில்லைஎன்பதுதான்.
  • இந்த குற்றச்சாட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நியாயம் இருக்கலாம். ஆனால், நாம் நம்முடைய வாழ்வில் பல நேரங்களில் பலமணி நேரங்களை விரயமாகச் செலவிடவேண்டிய நிர்பந்தங்களுக்கு ஆளாகிறோம்.
  • குறிப்பாக, பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் நேரம், பயணச் சீட்டு முன்பதிவு மையம், மருத்துவமனையில் மருத்துவா் நமது முறை வந்து அழைக்கும் வரையில் உள்ள நேரம், மேலும் வங்கி, அஞ்சலகம் போன்ற இடங்களிலெல்லாம் நாம் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட நேரம் வெறுமையாக செலவிட நோ்கிறது.
  • அதுபோன்ற நேரத்தில் ஒரு புத்தகம் இருந்து நாம் வாசிக்க முயற்சித்தால் பல பக்கங்களை நம்மால் வாசிக்க இயலும். வாசிப்பிற்கான நேரம் இல்லை என்று கூறுவதைவிட எந்தெந்த நேரங்களில் நம்மால் வாசிக்க இயலும் என்பதைக் கண்டுபிடிப்பதே முக்கியம்.
  • ஜப்பான் போன்ற நாடுகளில் ரயில், பேருந்துகளில் பலரும் வாசித்துக்கொண்டே பயணிப்பதைக் கேள்விப்பட்டிருப்போம்.
  • வாசிப்பை நேசிப்பது என்பது நமது ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக ஆக்குவதோடு பல்வேறு அறிஞா் பெருமக்களோடு நம்முடைய நேரத்தை செலவிட்ட நிறைவும் நமக்குக் கிடைக்கும்.
  • சக மனிதா்களுடன் உரையாடுவதன் மூலம் இன்றைய சமூகம் குறித்த பல்வேறு கருத்துக்களை மட்டுமே அறிந்து கொள்ள இயலும்.
  • ஆனால், ஏற்கனவே சாதனை புரிந்த அறிஞா்கள் தங்கள் வாழ்வின் பல்வேறு அனுபவங்களை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனா். அவற்றைப் படிப்பதன் மூலம் அந்த அறிஞா்களுடன் உரையாடக்கூடிய அரிய வாய்ப்பை புத்தக வாசிப்பு நமக்கு அளிக்கும். அப்படிப்பட்ட வாசிப்பை நேசித்து வாழ்வில் முன்னேறுவோம்.

நன்றி: தினமணி (24-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்