TNPSC Thervupettagam

வானம் தந்த கொடையை வீணடித்துவிடக் கூடாது!

October 8 , 2020 1389 days 598 0
  • கரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்துவரும் சூழலில், இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு கிடைத்திருப்பது விவசாயத்துக்கு நல்ல சமிக்ஞையாகும்.
  • அதைப் போலவே, கரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருந்தாலும் மழைப்பொழிவு காரணமாக இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கண்டிருக்கிறது.
  • எப்போதும் இயற்கைப் பேரிடர்களின்போது விவசாயமும் பாதிக்கப்படுவது வழக்கம். இம்முறை அப்படி இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.
  • மழைப்பொழிவைப் பல வகைகளாகப் பிரிப்பார்கள். வழக்கமான அளவில் 96%-104% வரை பெய்தால் அது வழக்கமான மழைப்பொழிவு; 90%-க்கும் குறைவாகப் பெய்தால் வழக்கத்துக்குக் குறைவான மழைப்பொழிவு; 104%- 110% வரை பெய்தால் அது வழக்கத்துக்கு அதிகமான மழைப்பொழிவு; 110%-க்கும் மேலே பெய்தால் அது மிக அதிகமான மழைப்பொழிவாகும். இதில் இந்திய அளவில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமான மழைப்பொழிவு கிடைத்திருக்கிறது.
  • ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் பருவமழையானது இந்தியாவில் ஒரு ஆண்டுக்குள் பெய்யும் மழையில் 70% மழைப்பொழிவைத் தருகிறது.
  • இந்த ஆண்டு மிகச் சரியாக ஜூன் 1 தொடங்கிய மழையானது ஜூன் 26-க்குள் இந்தியா முழுவதையும் அடைந்தது; அதாவது, வழக்கமான ஜூலை 8-க்கு 12 நாட்கள் முன்பாக. அதேபோல், வழக்கமாகப் பருவமழை முடிவதற்கு 11 நாட்கள் கழித்து செப்டம்பர் 28 முடிவுக்கு வந்தது.
  • 2019, 2020 என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வழக்கத்துக்கு அதிகமான மழை பெய்துள்ளது. இந்திய வானிலை மையத்தின் தரவுகள்படி 1958, 1959 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் அதிக மழைப்பொழிவு கிடைத்திருக்கிறது.
  • ஒன்றியப் பிரதேசங்கள் உட்பட 19 மாநிலங்களில் வழக்கமான அளவு மழை பெய்திருக்கிறது; ஒன்றியப் பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் அதிகமான மழை பெய்திருக்கிறது. சிக்கிமில் மிக அதிகமான மழை பெய்திருக்கிறது.
  • கரோனாவால் பலத்த அடிவாங்கியிருக்கும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மழைப்பொழிவு வாராது வந்த மாமணியாகும்.
  • இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கும் தொழிலான விவசாயத்தில் இந்த மழையின் நல்விளைவுகள் பிரதிபலித்திருப்பது நற்செய்தியாகும்.
  • இந்த நேரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டியது அவசியம்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் மக்களை விவசாயம் தொடர்பான வேலைகளிலும் ஏரி, வாய்க்கால், குளம் போன்றவற்றைச் சீரமைக்கும் பணிகளிலும் ஈடுபடுத்தலாம்.
  • இந்த ஆண்டின் மழைப்பொழிவின் காரணமாக இந்திய அளவிலும் சரி, தமிழ்நாடு அளவிலும் சரி பல ஏரிகள் நிரம்பியிருப்பதால் பாசனத்துக்கும் குடிநீருக்கும் இன்னும் ஓராண்டு பிரச்சினை இருக்காது என்று நம்பலாம்.
  • ஆனால், பெருமழை வெள்ளம் வந்த ஒருசில ஆண்டுகளிலேயே தண்ணீர்ப் பஞ்சத்தைக் கண்ட வரலாறு நமக்கிருப்பதால் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.
  • வானம் தந்த கொடையை நிலத்தடியிலும் ஏரி, குளம் போன்றவற்றிலும் உரிய விதத்தில் தேக்கிவைப்பதே வறட்சியற்ற எதிர்காலத்தை நமக்கு உறுதிசெய்யும்!

நன்றி: தி இந்து (08-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்