TNPSC Thervupettagam

வானவில் அடையாளத்தை மதிப்போம்!

September 24 , 2024 114 days 106 0

வானவில் அடையாளத்தை மதிப்போம்!

  • அண்​மையில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்​தேன். கலை நிகழ்ச்​சிக்காக மாணவர்கள் நடனம் பழகிக்​கொண்​டிருந்​தார்கள். திடீரென ஒரு மாணவர், பயிற்சிக்கு நடுவில் பேசிக்​கொண்​டிருந்த இரண்டு மாணவர்களை நோக்கி, “டேய், வானவில் பாய்ஸ், நான் சொல்றதக் கேளுங்கடா” என்றார். அதிர்ச்​சி ​அடைந்​தேன். பால் புதுமை​யினர் குறித்துச் சமூக ஊடகங்​களிலும் பொறுப்பற்ற முறையில் கிண்டல்கள் பகிரப்​படு​வதைக் காண முடிகிறது.
  • நகைச்சுவை முகமூடி​யுடன் வரும் இப்படிப்பட்ட வெறுப்பு உரையாடல்​களால் பிரிவினையும், வெறுப்பும், கலவரங்​களும் உருவாவதை எண்ணற்ற ஆய்வுகள் சுட்டிக்​காட்​டி​யுள்ளன. ஆனாலும் பாலின, சாதிய, மொழிச் சிறுபான்​மை​யினரின் அடையாளங்கள் மீது நகைச்சுவை வடிவில் பாகுபாடு​களும், சமூக அநீதி​களும் பரப்பப்​படும்போது பலரும் சிரித்து ஆதரிக்கிறார்கள். இது ஆபத்தானது!

‘வானவில்’ வரலாறு:

  • அமெரிக்க வரலாற்றில், தானொரு தன்பாலின ஈர்ப்​பாளர் என்பதை வெளிப்​படையாக அறிவித்து, தேர்தலில் வென்ற முதல் நபர் ஹார்வி மில்க். இந்த வரலாற்றுச் சாதனையை, பன்முகத்​தன்​மை ​உடைய ஓர் அடையாளத்தின் மூலம் கொண்டாட விரும்​பினார் கில்பர்ட் பேக்கர். இவரும் தன்பாலின ஈர்ப்​பாளரே. இயற்கையின் கொடையான வானவில்லை கில்பர்ட் தேர்ந்​தெடுத்​தார்.
  • 1978இல் எட்டு நிறங்​களில் வானவில் கொடியை வடிவமைத்​தார். சில ஆண்டுகள் கழித்து, தயாரிப்புக் காரணங்​களால் ஆறு நிறங்​களுடன் உருவாக்​கினார். மேலும், “நாம் உண்மை​யுடன் வாழ்வதற்கு, நமது பொய்யான வாழ்க்கையி​லிருந்து மற்றவர்கள் பார்க்​கும்படி வெளியே வர வேண்டும். அதைச் சொல்வதற்கு மிகச் சரியான கருவி கொடி” என்றார். 1978, ஜூன் 25இல் சான்பிரான்​சிஸ்​கோவில் நடைபெற்ற தன்பாலின ஈர்ப்​பாளர்​களின் சுதந்​திரப் பேரணியில் முதல் முறையாக வானவில் கொடி பறந்தது. ஆனாலும், வெளி உலகத்தின் கவனத்தைப் பெறவில்லை.
  • 16 ஆண்டு​களுக்குப் பிறகு, 1994இல் ஸ்டோன்வால் கிளர்ச்​சியின் வெள்ளிவிழா ஏற்பாடுகள் தொடங்கின. 1969இல் நியூயார்க் மாநிலத்​தில், ஸ்டோன்வால் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள், பால் புதுமை​யினரைக் கொடூர​மாகத் தாக்கி, அதன் விளைவாகப் பால் புதுமை​யினர் பல நாள்கள் கிளர்ச்​சியில் ஈடுபட்டு அமைப்பாக இணைந்த வரலாற்றின் கொண்டாட்டம் நடைபெற்றது.
  • வெள்ளி விழாப் பேரணிக்காக ஒன்றரை கி.மீ. நீள வானவில் கொடியை கில்பர்ட் உருவாக்​கினார். பால் புதுமை​யினரின் கைகளில் வானவில் கொடி உயர்ந்து சாலை முழுவதையும் அழகுபடுத்​தியது. உலகளவில் கவனம் பெறத் தொடங்​கியது. பால்புது​மை​யினரின் அடையாளமாகவும் மாறியது.

அடையாளங்களை இகழ்தல்:

  • அமெரிக்​காவைச் சேர்ந்த சமூக உளவியல் பேராசிரியர் தாமஸ் ஃபோர்ட், “ஒரு சமூகக் குழுவையோ அல்லது அதன் பிரதி​நி​தி​களையோ இழிவு​படுத்திச் சிரிப்​பதில் (Disparagement Humor) வெளிப்​படையான வெறுப்பும் முன்தீர்மான எண்ணங்​களுமே பொதிந்​துள்ளன. ஆனால், நகைச்சுவை என்னும் பெயரில் சொல்லப்​படு​வ​தால், இது வெறுப்​பாகவோ முன்தீர்மான எண்ணமாகவோ வெளியில் தெரிவ​தில்லை” என்று அதன் முரணைச் சுட்டிக்​காட்டு​கிறார். இதைக் கருத்துச் சுதந்​திரம் என ஆதரிக்​கிறவர்​களும் இருக்​கிறார்கள்.
  • பிறர் மீது வெறுப்பும் முன்சார்பு எண்ணமும் கொண்ட​வர்கள், தங்களின் உண்மையான குணத்தைப் பெரும்​பாலும் மறைத்து வைத்திருக்​கிறார்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் உரையாடும்​போதும், நம்மை யாருக்கும் அடையாளம் தெரியாது என்னும் சூழலிலும் எளியவர்களை இகழ்ந்து பேசிச் சிரித்​துக்​கொள்​கிறார்கள்.
  • கேலிக்​குரிய வார்த்​தைகளால் அடையாளப்​படுத்​தப்பட்ட மாற்றுப் பாலினத்​தவரைத் ‘திருநங்​கைகள்’ எனும் தூய சொல்லால் அடையாளப்​படுத்​தினார், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. இதனால், சமூகத்தில் விழிப்பு​ணர்வு ஏற்பட்டது. அதே அக்கறையை அனைத்து பால் புதுமை​யினர் மீதும் காட்டி, அவர்களின் வானவில் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் சமூகத்​துக்கும் இருக்​கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்