வானவில் அடையாளத்தை மதிப்போம்!
- அண்மையில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். கலை நிகழ்ச்சிக்காக மாணவர்கள் நடனம் பழகிக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு மாணவர், பயிற்சிக்கு நடுவில் பேசிக்கொண்டிருந்த இரண்டு மாணவர்களை நோக்கி, “டேய், வானவில் பாய்ஸ், நான் சொல்றதக் கேளுங்கடா” என்றார். அதிர்ச்சி அடைந்தேன். பால் புதுமையினர் குறித்துச் சமூக ஊடகங்களிலும் பொறுப்பற்ற முறையில் கிண்டல்கள் பகிரப்படுவதைக் காண முடிகிறது.
- நகைச்சுவை முகமூடியுடன் வரும் இப்படிப்பட்ட வெறுப்பு உரையாடல்களால் பிரிவினையும், வெறுப்பும், கலவரங்களும் உருவாவதை எண்ணற்ற ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனாலும் பாலின, சாதிய, மொழிச் சிறுபான்மையினரின் அடையாளங்கள் மீது நகைச்சுவை வடிவில் பாகுபாடுகளும், சமூக அநீதிகளும் பரப்பப்படும்போது பலரும் சிரித்து ஆதரிக்கிறார்கள். இது ஆபத்தானது!
‘வானவில்’ வரலாறு:
- அமெரிக்க வரலாற்றில், தானொரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்து, தேர்தலில் வென்ற முதல் நபர் ஹார்வி மில்க். இந்த வரலாற்றுச் சாதனையை, பன்முகத்தன்மை உடைய ஓர் அடையாளத்தின் மூலம் கொண்டாட விரும்பினார் கில்பர்ட் பேக்கர். இவரும் தன்பாலின ஈர்ப்பாளரே. இயற்கையின் கொடையான வானவில்லை கில்பர்ட் தேர்ந்தெடுத்தார்.
- 1978இல் எட்டு நிறங்களில் வானவில் கொடியை வடிவமைத்தார். சில ஆண்டுகள் கழித்து, தயாரிப்புக் காரணங்களால் ஆறு நிறங்களுடன் உருவாக்கினார். மேலும், “நாம் உண்மையுடன் வாழ்வதற்கு, நமது பொய்யான வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் பார்க்கும்படி வெளியே வர வேண்டும். அதைச் சொல்வதற்கு மிகச் சரியான கருவி கொடி” என்றார். 1978, ஜூன் 25இல் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தன்பாலின ஈர்ப்பாளர்களின் சுதந்திரப் பேரணியில் முதல் முறையாக வானவில் கொடி பறந்தது. ஆனாலும், வெளி உலகத்தின் கவனத்தைப் பெறவில்லை.
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 1994இல் ஸ்டோன்வால் கிளர்ச்சியின் வெள்ளிவிழா ஏற்பாடுகள் தொடங்கின. 1969இல் நியூயார்க் மாநிலத்தில், ஸ்டோன்வால் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள், பால் புதுமையினரைக் கொடூரமாகத் தாக்கி, அதன் விளைவாகப் பால் புதுமையினர் பல நாள்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு அமைப்பாக இணைந்த வரலாற்றின் கொண்டாட்டம் நடைபெற்றது.
- வெள்ளி விழாப் பேரணிக்காக ஒன்றரை கி.மீ. நீள வானவில் கொடியை கில்பர்ட் உருவாக்கினார். பால் புதுமையினரின் கைகளில் வானவில் கொடி உயர்ந்து சாலை முழுவதையும் அழகுபடுத்தியது. உலகளவில் கவனம் பெறத் தொடங்கியது. பால்புதுமையினரின் அடையாளமாகவும் மாறியது.
அடையாளங்களை இகழ்தல்:
- அமெரிக்காவைச் சேர்ந்த சமூக உளவியல் பேராசிரியர் தாமஸ் ஃபோர்ட், “ஒரு சமூகக் குழுவையோ அல்லது அதன் பிரதிநிதிகளையோ இழிவுபடுத்திச் சிரிப்பதில் (Disparagement Humor) வெளிப்படையான வெறுப்பும் முன்தீர்மான எண்ணங்களுமே பொதிந்துள்ளன. ஆனால், நகைச்சுவை என்னும் பெயரில் சொல்லப்படுவதால், இது வெறுப்பாகவோ முன்தீர்மான எண்ணமாகவோ வெளியில் தெரிவதில்லை” என்று அதன் முரணைச் சுட்டிக்காட்டுகிறார். இதைக் கருத்துச் சுதந்திரம் என ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
- பிறர் மீது வெறுப்பும் முன்சார்பு எண்ணமும் கொண்டவர்கள், தங்களின் உண்மையான குணத்தைப் பெரும்பாலும் மறைத்து வைத்திருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் உரையாடும்போதும், நம்மை யாருக்கும் அடையாளம் தெரியாது என்னும் சூழலிலும் எளியவர்களை இகழ்ந்து பேசிச் சிரித்துக்கொள்கிறார்கள்.
- கேலிக்குரிய வார்த்தைகளால் அடையாளப்படுத்தப்பட்ட மாற்றுப் பாலினத்தவரைத் ‘திருநங்கைகள்’ எனும் தூய சொல்லால் அடையாளப்படுத்தினார், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. இதனால், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டது. அதே அக்கறையை அனைத்து பால் புதுமையினர் மீதும் காட்டி, அவர்களின் வானவில் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் சமூகத்துக்கும் இருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2024)