- தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதம் கொந்தளிப்பான ஒரு மாதமாகக் கடந்திருக்கிறது. முதல் வாரத்தில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்ட நிலையில், மூன்றாம் வாரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, 39 இடங்களில் ‘அதி கனமழை’ பதிவானது. காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழையும், எட்டு இடங்களில் 50 செ.மீ. மழையும் பதிவானது.
- 2021 நவம்பர் 7 அன்று சென்னையில் அதிகாலையில் பெய்த 21 செ.மீ. மழை, அதே ஆண்டு டிசம்பர் 30 அன்று ஒருசில மணி நேரத்தில் 15 செ.மீ-க்கு மேல் பெய்த மழை, 2023 அதி கனமழை உள்ளிட்ட சமீபகால நிகழ்வுகள், வானிலை முன்னறிவிப்பிலும், பேரிடர் மேலாண்மையிலும் நிலவும் போதாமையைச் சுட்டுகின்றன. தமிழ்நாட்டைத் திகைக்கச் செய்த தற்போதைய மழையின் அளவு-விரிவு குறித்து வானிலை ஆய்வு மையம் ஏன் துல்லியமாகத் தெரிவிக்கவில்லை என்கிற கேள்வி புறக்கணிக்க முடியாதது. டிசம்பர் 14 முதல் 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் (24 மணி நேரத்தில் 21 செ.மீ.க்கு மேல் மழை) என்று எச்சரிக்கை விடுத்திருந்ததாக வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டுகிறது.
- இந்திய வானிலை ஆய்வு மையம் அதன் 150ஆம் ஆண்டினைக் கொண்டாடவிருக்கும் நிலையில், வானிலை முன்கணிப்பு உள்ளிட்ட அடிப்படை அம்சங்களில் நிலவும் பின்னடைவு துரதிர்ஷ்டவசமானது. வெப்பமண்டலப் பகுதி என்பதாலும் கடல் அருகில் இருப்பதால் உடனடி மாற்றங்களின் விளைவுகளாலும் ஏற்படும் இத்தகைய எதிர்பாராத பெருமழைப் பொழிவுகளை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளின் வானிலை மாதிரிகளால்கூடக் கணித்திருக்க முடியாது என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கமளிக்கிறது.
- எனினும், ‘மேம்பட்ட வானிலை முன்னறிவிப்புகளுக்குக் கூடுதல் ஆய்வு மையங்களுக்கான தேவை நிலவுகிறது’ என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் வானிலையைத் துல்லியமாகக் கணிப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் தனி கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என 2022-23நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
- முதல் கட்டமாக, ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் அந்தக் கட்டமைப்பில், வானிலை பலூன் அமைப்பு, 2 வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள் உள்ளிட்டவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு ரேடார்கள் நிறுவப்பட இருப்பது தெற்கு, மேற்கு மாவட்டங்களில் வானிலையைத் துல்லியமாகக் கணிக்க உதவும் என்று சொல்லப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கு அரசு விரைவில் செயல்வடிவம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- சென்னையில் உள்ள விஞ்ஞானிகள் உலகத் தரத்தில் வானிலையைக் கணிக்கின்றனர். ஆனால், டெல்லி கணிப்பதையே அறிவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை துறையில் நிலவுவதால் வானிலை முன்னறிவிப்புகளில் பெரும் பின்னடைவு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.
- வளர்ந்துவரும் அறிவியல் மேம்பாடுகளைக் கைக்கொண்டு, அரசியல் மாச்சரியங்களைக் கடந்து, மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, துல்லியமான வானிலைக் கணிப்புகளை மேற்கொண்டு இயற்கைப் பேரிடர்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 12 – 2023)