TNPSC Thervupettagam

வானூர்தி விபத்துகள்

May 29 , 2024 229 days 223 0
  • காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமாக நடந்துவரும் சூழலில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது சர்வதேசச் சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
  • மே 19, 2024 அன்று, அஸர்பெய்ஜான் எல்லையில் அணை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரெய்சி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் தலைநகர் தெஹ்ரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணித்த ‘பெல் 212’ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இப்ராஹிம் ரெய்சி உள்பட அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர்.
  • மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், விபத்து ஏற்பட்டதற்கான உறுதியான காரணம் இதுவரை தெரியவில்லை.

வரலாற்றில்...

  • வானூர்தி (விமானம், ஹெலிகாப்டர்) விபத்துகளில் உலகத் தலைவர்கள் உயிரிழப்பது வரலாற்றில் முக்கிய நிகழ்வாகவே பதிவாகி வருகிறது. கடந்த காலத்தில் இத்தகைய விபத்தில் உலகத் தலைவர்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
  • இதற்கு முன்பு ஸ்வீடன் பிரதமர் அர்விட் லிண்ட்மேன் (1936), பராகுவே பிரதமர் ஜோஸ் ஃபெலிக்ஸ் எஸ்டிகாரிபியா (1940), பிலிப்பைன்ஸ் பிரதமர் ரமோன் மகசேசே (1957), பிரேசிலின் இடைக்கால அதிபர் நெரேயு ராமோஸ் (1958), இராக் அதிபர் சலாம் அரிஃப் (1966), பிரேசில் அதிபர் ஹம்பர்டோ டி அலென்கார் காஸ்டெலோ பிராங்கோ (1967), பொலிவிய அதிபர் ரெனே பேரியண்டோஸ் (1969), யூகோஸ்லாவியா அதிபர் டிஜெமல் பிஜெடிக் (1977), ஈக்வடார் அதிபர் ஜெய்ம் ரோல்டோஸ் அகுலேரா (1981), மொசாம்பிக் அதிபர் சமோரா மிச்செல் (1986), லெபனான் பிரதமர் ரஷித் கராமி (1987), பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக் (1988), ருவாண்டா அதிபர் ஜுவனல் ஹப்யரிமனா (1994), மாசிடோனியா அதிபர் போரிஸ் டிராஜ்கோவ்ஸ்கி ( 2004), போலந்து அதிபர் லெக் காசின்ஸ்கி (2010), சிலே முன்னாள் அதிபர் செபாஸ்டின் பினேரா (2024) ஆகியோர் வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில்...

  • இந்தியாவிலும் வானூர்தி விபத்தில் அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள் எனப் பலரும் உயிரிழந்துள்ளனர். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மகனும் மக்களவை உறுப்பினருமான சஞ்சய் காந்தி 1980 ஜூன் 23 அன்று விமான விபத்தில் காலமானார்.
  • 2009 செப்டம்பர் 2ஆம் தேதி, ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பயணித்த ‘பெல்’ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக கர்னூல் அருகே விபத்துக்குள்ளானது. இதில் ராஜசேகர ரெட்டி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 2021 டிசம்பர் 2இல், தமிழ்நாட்டின் குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வானிலை துல்லியம்:

  • 2021ஆம் ஆண்டு, அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் அளித்த தரவில், மோசமான வானிலை காரணமாகவே 28% ஹெலிகாப்டர் விபத்துகள் ஏற்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் கனமழை, பனி அடர்த்தி அதிகமுள்ள நேரத்தில் வானில் தோன்றும் காட்சிப் பிழைகள் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
  • இவ்வாறான ஆபத்தான வானிலைச் சூழலில் வானூர்தியை ஓட்டும் விமானி, வானிலையைத் துல்லியமாக அறிந்திருப்பதும், ஆபத்தான காலநிலையில் வானூர்தியைச் சிறப்பாகச் செலுத்தப் பயிற்சி பெற்றவராக இருப்பதும் அவசியமாகிறது.

விமானம் - ஹெலிகாப்டர்:

  • ஹெலிகாப்டரைக் காட்டிலும் விமானமே பயணத்துக்குக் கூடுதல் பாதுகாப்புடையதாகக் கருதப்படுகிறது. காரணம், விமானத்தில் இடம்பெற்றுள்ள தானியங்கித் திறன்கள் விமானிக்கு கவனச் சிதறல்கள் ஏற்படும் தருணங்களில் அவற்றை ஈடுசெய்கின்றன.
  • ஆனால், பெரும்பாலான ஹெலிகாப்டர்களில் இப்படியான ஏற்பாடுகள் இல்லை. இதனால், ஹெலிகாப்டர்களைச் செலுத்தும் விமானிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
  • அது மட்டுமில்லாமல் மோசமான வானிலையின்போது எதிரே இருக்கும் தடையை விமானிகள் பார்ப்பதும், கணிப்பதும் மிகக் கடினம். மோசமான வானிலையின்போது வானூர்திக் குழு எடுக்கும் முடிவை பயணிகள் யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். மாறாக, அந்தச் சூழ்நிலையில் கட்டாயமாக வானூர்தியை இயக்கக் கூறுவது இதுபோன்ற மோசமான விபத்துகளுக்கு வழிவகுக்கலாம்.
  • முக்கியத் தலைவர்கள், உயரதிகாரிகள் வானூர்தி விபத்துகளில் சிக்கும்போது நடத்தப்படும் விசாரணைகள் சரியான காரணத்தைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் அது போன்ற விபத்துகளைத் தடுக்கக் காரணமாக அமையும். ஆனால், பெரும்பாலான விசாரணை அறிக்கைகள் வெளிப்படையாகத் தவறுகளை ஒப்புக்கொண்டு எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை.

பராமரிப்பு:

  • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழப்பைப் பொறுத்தவரை, அவர் பயணித்த ஹெலிகாப்டர் மிகப் பழமையானது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் ‘தி நேஷனல்’ என்கிற நாளிதழ், இப்ராஹிம் ரெய்சி பயன்படுத்திய ‘பெல் 212’ ஹெலிகாப்டர், அநேகமாக 1970களில் ஈரான் மன்னர் ஷாவின் ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரெய்சி பயன்படுத்திய ஹெலிகாப்டர் உரிய பராமரிப்புடன் இயங்கியதா என்கிற கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன.
  • மேலும், வானூர்தி விபத்துகளின் தரவைப் பராமரிக்கும் ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் (Aviation Safety Network) என்கிற இணையதளம், 2017 முதல் ‘பெல்’ நிறுவனம் தொடர்பான விமானங்களும் ஹெலிகாப்டர்களும் 30 முறை விபத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் 8 விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை:

  • விமான உதிரி பாகங்களைத் தயார்செய்வதில் 100% தன்னிறைவு அடைந்துள்ளதாக ஈரானின் அறிவியல், தொழில்நுட்பத் துறை சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. ஆனால், இதில் ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் குறித்துக் குறிப்பிடவில்லை.
  • 1970களிலிருந்தே அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட விமானம் / ஹெலிகாப்டர்களைத்தான் ஈரான் முதன்மையாகப் பயன்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பழுதடைந்த விமானம் / ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை காரணமாக ஈரானால் அமெரிக்காவிடமிருந்து வாங்க முடியவில்லை.
  • ஒருவகையில் அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் எதிர்கொண்டுவரும் பொருளாதாரத் தடைகள் இவ்விபத்துக்கு மறைமுகக் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்