TNPSC Thervupettagam

வாய்க்கால் வழியோடும் வன்முறைக் கலாசாரம்

June 24 , 2020 1492 days 664 0
  • அண்மைக்காலமாக பத்திரிகைகளைத் திறந்தால், ரத்த வாடை வீசுகிறது; சின்னத்திரையை விலக்கினால், சுடுநாற்றம் வீசுகிறது. ஜனநாயகத்தின் நுழைவுவாயிலாகப் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் வாக்குரிமையும் இருக்கும்போது, அராஜகத்தையும் தீப்பந்தத்தையும் கையில் ஏந்துவானேன்? அதனால், இங்கு வன்முறைக் கலாசாரம் வாய்க்கால் வழியோடி, வரப்புகளிலும் வரம்பு கட்டி நிற்கிறது.

சக்தியையும் காலத்தையும் ஆக்கப் பணிகளில் செலவிட வேண்டிய நிர்வாக இயந்திரம், இப்போது காக்கும் பணியில் சுழன்று கொண்டிருக்கிறது.

"துயரிலாது இங்கு

நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்

அமரத்தன்மை எய்தவும்,

இங்கு நாம் பெறலாம்; இஃது உணர்வீரே'

என மகாகவி பாரதியார் பாடியது மறந்து போய்விட்டதா?

  • தீவிரவாதமும், பயங்கரவாதமும் அந்நிய நாடுகளுக்குப் பழக்கப்பட்டதாக இருக்கலாம்; ஆனால், அவை இந்தப் புண்ணிய பூமிக்கு (இந்தியா) பொருத்தமல்லவே! பாண்டியன் முன் நின்ற கண்ணகியை அவளுடைய நாடு எதுவென்று கேட்டபோது, ஒரு புறாவுக்காக தன்னையும், ஒரு பசுவுக்காக மகனையும் கொடுத்த மன்னர்கள் வாழ்ந்த நாடு என்றல்லவோ, அந்தப் பத்தினித்தெய்வம் பதிலிறுத்தது.

சங்ககாலத்தில்..

  • செல்லும் நாடனைத்தும் வெல்லும் நாடாக்கி வந்த சேரன் செங்குட்டுவனை, "மறக்கள வேள்வி செய்யாது அறக்கள வேள்வி செய்வாய்' என அறிவுறுத்தி, அம்மன்னனை மடைமாற்றம் செய்த மாடல மறையோன் வாழ்ந்த மண்ணல்லவா இது.
  • சங்க காலத்தில் கோவூர்கிழார் என்றொரு புலவர் இருந்தார். தன் எதிரி மலையமான் திருமுடிக்காரியைப் போரிலே தோற்கடித்துக் கொன்றதன் பின்னரும், ஆத்திரம் தீராமல், அவனுடைய பச்சிளம் பாலகர்களைப் பிடித்துக் கொணர்ந்து, அவர்களைக் கழுத்தளவுக்குப் பூமியில் புதைத்து, யானையை ஏவி, அவர்களுடைய தலைகளை உருட்ட இருந்தான் சோழ மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
  • செய்தியறிந்து விரைந்த கோவூர்கிழார், அம்மன்னனுக்கு இம்மண்ணின் மகிமையை எடுத்துக்கூறி, நிகழவிருந்த அராஜகத்தைத் தடுத்தார். அந்தப் புனித பூமியிலே இன்று ரயில் பெட்டிகள் எரியலாமா?
  • ராமாயணத்தில் ராவண வதம் முடிந்த பிறகு, அந்தச் செய்தியைச் சீதாபிராட்டியிடம் சொல்லப் போகிறான், அனுமன்.
  • அந்த நேரத்தில் அங்கு சூழ்ந்திருந்த அரக்கியர்கள் இழைத்த இன்னல்களை எல்லாம் எண்ணிப் பார்த்து, அவர்களைக் கொல்வதற்குச் சீதாபிராட்டியிடம் அனுமதி கேட்கிறான். அதற்குப் பிராட்டி கூறியது என்ன தெரியுமா?
  • "யான் செய்த முன்னைத் தீவினைகளால் அல்லவா எனக்கு இந்த இடர்கள் வந்து சேர்ந்தன; அரக்கியர்கள் செய்தார்கள் என்று எண்ணலாமோ? இவர்கள் கூனியை விடக் கொடியவர்களா? அவளையே நாம் மன்னித்தோமே!
  • அதனால், உன்னுடைய கெட்ட எண்ணத்தைப் போக்குவாய், அனுமா' எனச் சீதாபிராட்டி கூறியதில், இந்த மண்ணின் மணம் கமழவில்லையா? அந்த அறக்கருணையை இன்று பட்டுப் போகவிடலாமா?
  • சகிப்புத் தன்மையின் சாரம் நிறைந்த பூமி பாரத பூமி என்பதை, மகாகவி பாரதியார், "கர்ணன் இருந்த கருணை நிலம்' என்பார். இந்தப் புனித பூமியின் பெருமையை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார், மகாபாரதத்திலே அற்புதமாகப் பாடியிருக்கிறார்.
  • வீமனுடைய கதையால் அடிபட்ட துரியோதனன் பதினெட்டாம் நாள் போரிலே உயிருக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவனிடம் சென்ற அசுவத்தாமன், பழிக்குப் பழி வாங்குவதற்கு பஞ்சபாண்டவர்களின் தலைகளை தான் கொய்து கொண்டு வருவதாகச் சொல்லிச் செல்கிறான். அப்படிச் சென்றவன், இரவு நேரமாகையால் பாண்டவர்கள் என நினைத்து, பாண்டவர்களின் புதல்வர்களாகிய உபபாண்டவர்களின் தலைகளை, அந்தக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் கொய்து கொண்டுவந்து, துரியோதனன் முன் நிற்கிறான். (உபபாண்டவர்களின் பெயர்கள் வருமாறு: விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன், சயசேனன்).
  • நடு இரவு என்றாலும், உபபாண்டவர்களை நன்கறிந்த துரியோதனன், "அசுவத்தாமா! வேதங்களில் வல்ல பண்டிதனா நீ! பாதகம்! பாதகம்! பரம பாதகம்! பஞ்சமா பாதகத்தைச் செய்துவிட்டு வந்து நிற்கிறாயே! குருகுலத்தின் கொழுந்தினையே கிள்ளிவிட்டாயே! இதற்குப் பிராயச்சித்தம் ஏது? எங்கேயாவது போய், தவம் செய் போ' என வெகுண்டுரைக்கிறான்.
  • துஷ்ட சதுஷ்டர்களின் தலைவன் துரியோதனன் என்றாலும், பச்சிளம் குழந்தைகளைக் கொல்லும் கொலை வெறியை ஆதரிக்கவில்லை. உயிர் போகும் நிலையிலும் அறக்கருணை பேசிய இந்தச் செவ்விய மண், சிவந்தமண் ஆகலாமா?

உயர் நேயம்

  • போதிமரத்துப் புத்தர் கடற்கரை ஓரமாக நடந்து வருகிறார். அப்போது ஒரு மீனவன், விலை மதிக்க முடியாத முத்தைத் தாங்கிய ஒரு சிப்பியைக் கொணர்ந்து, புத்தருக்கு முன் நீட்டுகிறான்.
  • ஆனால், புத்தர் அதனை ஏற்க மறுக்கிறார். காரணம் என்னவென்று அறிய விரும்புகிறான், அந்த அப்பாவி பக்தன்.
  • அதனால், புத்தர், "அன்பா! இதற்குள்ளே ஒரு விலையுயர்ந்த முத்து இருக்கிறது என்பதை நானும் அறிவேன். அதனை அன்போடு நீ தருகிறாய் என்பதையும் அறிவேன்.
  • ஆனால், நான் இந்தச் சிப்பியின் உயிரைக் கொன்று அல்லவா, முத்தை எடுக்க வேண்டும். நான் எந்த உயிரையும் கொல்லும் பாவத்தைச் செய்ய மாட்டேன்! நீயே எடுத்துக் கொண்டு போய் கடலில் விட்டுவிடு' என்கிறார். அந்தப் புத்தன் வாழ்ந்த மண், நெறி கலங்கி நிற்கலாமா?
  • இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரத் தியாகிகளின் மனைவியர் சிலர், லட்சாதிபதி வீட்டுப் பெண்களாக இருந்தாலும், பட்டுப் புடவை அணிய மறுத்தனர்.
  • காரணம், பல பட்டுப் பூச்சிகளின் உயிரைக் கொன்று அல்லவா, ஒரு பட்டுப் புடவை நெய்யப்படுகிறது.
  • விளக்கேற்றிய பிறகு உணவை உண்டால், அந்த விளக்கில் பல பூச்சிகள் சிக்கிச் சாகும் என்பதற்காகப் பிற்பகலிலேயே இரவு உணவையும் உண்ணுகின்ற சாவக நோன்பிகள் (சமணர்கள்) வாழுகின்ற மண், இந்திய மண்.
  • அந்தச் சமணர்கள் தரையில் நடக்கும்போது, புழு பூச்சிகள் மிதிபட்டுச் சாகக் கூடாது என்பதற்காக மயில்தோகையால் தரையைப் பெருக்கிக் கொண்டே நடந்த காலம் ஒன்றிருந்தது. இன்றைக்கு மனித உயிர்கள் அல்லவா அநியாய மரணம் எய்துகின்றன.

அகிம்சை வழி

  • மகாகவி பாரதி தேசியகவியாக இருந்து பாடியபோது, பொல்லாதவர்களைப் பாரத மாதா விழுங்கிவிடுவாள் என்ற எண்ணம் உடையவராக இருந்தார். தேசிய கவியாக இருந்து ஆத்திரத்தோடு ஆவேசத்தோடும் பாடிய மகாகவி பாரதி, ஆத்திரம் ஆவேசம் எல்லாம் அடங்கிய பிறகு, அருட்கவியாக மாறி, "பலகாலம் பொறுமை காத்த தருமர், இன்னும் கொஞ்ச காலம் பொறுமை போற்றியிருந்தால், பாரதப் போரைத் தவிர்த்திருக்கலாமே! பல உயிர்கள் அநியாய மரணம் எய்த அவசியம் ஏற்பட்டிருக்காதே' எனச் சித்தராக இருந்து, தருமர் மீது மெத்த வருத்தப்படுகிறார்.

இந்திய விடுதலை கூட அறவழியிலும், அகிம்சை வழியிலும் வரவேண்டும் என விரும்பிய மகாகவி பாரதியார்,

"பொறுமையினை, அறக்கடவுள்

புதல்வன் என்னும்

உதிரட்டிரனும் நெடுநாள்

இப்புவிமேல் காத்தான்

இறுதியிலே பொறுமை

நெறி தவறி விட்டான்

ஆதலால் போர்புரிந்தான் இளையா ரோடே;

பொறுமை யின்றிப் போர்செய்து

பரத நாட்டை

போர்க்களத்தே அழித்துவிட்டுப்

புவியின் மீது

வறுமையும் கலியினையும் நிறுத்தி விட்டு,

மலைமீது சென்றான்பின் வானம் சென்றான்;

ஆனாலும் புவியின் மிசை

உயிர்கள் எல்லாம்

அநியாய மரணம் எய்தல்

கொடுமை யன்றோ'

என அருட்கவியாய் மாறி பாடியிருக்கிறார்.

  • கத்தியோடு ரத்தத்தோடும் போரிட்டு, வெற்றி பெற்ற நாடாக இருந்தாலும், பின்னர் வறுமையும் கலியும்தான் அங்கு ஓங்கி நிற்கும் என்பதை வரலாற்றுப் பூர்வமாகச் பாடியிருக்கிறார் மகாகவி.
  • இந்திய விடுதலைப் போராட்டத்தின் விதையாகவும், விளைச்சலுமாகவும் இருந்த மகாத்மா காந்தியடிகள், அகிம்சை வழி ஒன்றிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். "பலாத்கார வழியில் கிடைக்கும் சுதந்திரத்தைவிட, அகிம்சை வழியில் போராடி அடிமையாக இருப்பதே நல்லது' என்றார் தேசப் பிதா!
  • அகிம்சை வழியே பிரதானம் என்பதை வட்டமேஜை மாநாட்டில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார். "இந்தியாவிலுள்ள 35 கோடி மக்களும் உயிரை வாங்கும் கட்டாரியை ஏந்தத் தயாராக இல்லை; ஆளைக் கொல்லக்கூடிய நச்சுக்கோப்பையை ஏந்தவும் அவர்கள் தயாரில்லை; தலையைச் சாய்க்கக்கூடிய வாளேந்தவும் அவர்கள் தயாரில்லை; வேல் அல்லது துப்பாக்கி ஏந்தவும் தயாரில்லை; நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை' என்று சொல்லுகின்ற உள்ள உறுதிதான் தேவை; அதைச் சொல்லுகின்ற திறன் அவர்களுக்குத் தேவை; எங்கள் மக்கள் அப்படிச் சொல்ல வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்' எனக் காந்தியடிகள் திட்டவட்டமாகப் பேசியது, ஆங்கிலேய ஆதிக்கத்தை அலற வைத்தது.
  • இந்திய விடுதலைக்குப் பிறகு வின்ஸ்டன் சர்ச்சிலைப் பார்த்து ஒரு பத்திரிகை நிருபர் "உலகத்தின் காப்பாளர் என்று உங்களுக்குப் பெயர். அப்படியிருந்தும் காந்தியடிகளை ஏன் உங்களால் வெல்ல முடியவில்லை? எனக் கேட்டார். அதற்குச் சர்ச்சில், "காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால், நான் துப்பாக்கி ஏந்தியிருப்பேன்; அவர் துப்பாக்கி ஏந்தியிருந்தால், நான் பீரங்கியை இயக்கியிருப்பேன்; ஆனால், அவர் அஹிம்சையை அல்லவா ஏந்தினார். அதனை என்னால் வெல்ல முடியவில்லை' எனப் பதில் அளித்தாராம்.
  • கியூபாவின் புரட்சிக்காகப் புறப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ தம் தந்தைக்குச் சொந்தமான கரும்புத் தோட்டங்களைத்தான் எரித்தாரே தவிர, பொதுச் சொத்துக்களை அழிக்கவில்லை.
  • மகாத்மா காந்தியடிகளுடைய அறவழியைப் பின்பற்றி வெற்றி கண்ட நெல்சன் மண்டேலா, விடுதலை பெற்று பதவியேற்கும்போது, காந்தியடிகள் வாழ்ந்த இந்தியாவை நோக்கிக் தெண்டனிட்டு வணங்கியதே, அகிம்சைக்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.
  • இனியாவது, தேசப் பிதாவின் நெறியைப் பின்பற்றினால், அமரர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கண்ட வல்லரசாக, இந்தத் தேசம் உலக அரங்கில் கொடிகட்டிப் பறக்கும்.

நன்றி: தினமணி (24-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்