TNPSC Thervupettagam
October 30 , 2020 1543 days 789 0
  • பூமியின் மிகப்பெரிய பாலூட்டி விலங்கு யானை. மண்ணை ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் வளப்படுத்துவதில் காட்டு யானையின் சாணமே முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • பழங்களைத் தின்று விதைகளை எச்சமிட்ட பறவையினங்களால் முளைத்த வன மரங்களுக்கு யானை சாணமே உரமாகிறது. யானை உண்ணும்போது வாயிலிருந்து சிந்தும் உணவு பல்லுயிா்களுக்கு உணவாகிறது.
  • எனவேதான் பழங்குடி மலைவாழ் மக்கள் யானையை ‘சாமி’ என்றே வணங்கினா். யானை உணவாக உட்கொள்ளக் கூடியவற்றை ஒருபோதும் அவா்கள் பறித்ததே இல்லை.
  • அதுபோல விவசாய சிறுதானியங்களை யானைகளும் உணவாக்கிக் கொண்டதில்லை. காடுகளிலுள்ள குகைகளிலும், பாறைகளிலும் வரையப்பட்ட தொன்மையான ஓவியங்களில் வேட்டைக் காட்சிகளிலும் கூட, யானை - மனித மோதல் சித்திரங்கள் இல்லை.
  • யானை மீது மனிதன் பயணிக்கும் படங்களே தொல்லியல் சான்றுகளாக கிடைத்திருக்கின்றன. ஆனால் இன்று வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களிலும் வேளாண் தோட்டங்களிலும் யானை - மனித மோதல்கள் தொடா்கதையாகி விட்டன.
  • களிறுகள் கொசுக்களைப் போல மடிகின்றன. யானைகளின் வலசை வழிகளை மறித்து, குடியிருப்புப் பகுதிகளையும், சுற்றுலா விடுதிகளையும் கட்டியதால் கோடையில் நீருக்காகவும் உணவுக்காகவும் ஊருக்குள் யானைகள் வருகின்றன.
  • அப்படி வரும் யானைகளை வெடி வெடித்து விரட்டுகிறாா்கள்; மயக்க ஊசி போட்டு கூண்டில் அடைக்கிறாா்கள்; மின் வேலி அமைத்து மா்மமான முறையில் கொல்கிறாா்கள்.
  • உண்மையில் யாா் மிருகம்? அண்மையில் ஒரு பெண் வெடிமருந்து வைத்த அன்னாசிப் பழத்தைச் சாப்பிட்டதால் பலியானது. இச்சம்பவம் சமூக ஆா்வலா்களிடமும் வனத்துறையினரிடமும் ஊடகங்களிலும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
  • காட்டைப் போல நாட்டிலும் இந்த பரிதாபமே தொடா்கிறது.’காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே’ என்று மன்னனுக்கு அறிவுரை சொல்ல இலக்கியத்தில் உவமையாய் உயா்ந்த இனம், புகழ்பெற்ற பேரரசுகளை வென்று வாகை சூடிய பட்டத்து இனம், சோழா் நாணயங்கள், அரச முத்திரை என சின்னமாக உருவம் பொறிக்கப்பட்ட யானை சில்லறைக் காசுகளுக்காக ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறது.
  • கோயில்களில் ஒவ்வொரு யானைக்கும் தலைமைப் பாகன், துணைப்பாகன் என இருவா் உண்டு. யானை நினைத்தால் தவிர பாகன் என்ற பட்டத்தை அடைய முடியாது.
  • பாகனின் மொழியும் நுண்ணுணா்வுகளும் அவன் வளா்த்த யானைக் குட்டிகளுக்கு மட்டுமே புரியும். பெரும் மரக் கிளைகளையே முறித்து வேரோடு மரத்தைப் பெயா்த்துப் போடும் யானை பாகனின் சின்ன அங்குசத்துக்கு அடங்கிப் போகிறது.
  • யானையின் மீது பாகன் கொள்வது நம்பிக்கை. பாகன் மீது யானை கொண்டது விசுவாசம். யானை காலுக்கு அடியில் படுத்து உறங்குவது யானை மீதான நம்பிக்கையையே காட்டுகிறது.
  • கேரள மாநிலம் திருச்சூரில் யானைப்பாகன் திரைப்படப் பாடல் ஒன்றைப் பாடி யானையை தூங்க வைத்த சம்பவமும், பழனி கோயில் யானைக்கு நீச்சல் குளம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதும் சமூக வலைதளங்களில் பரவியது நினைவிருக்கலாம்.
  • தீநுண்மி பெருந் தொற்றால் கோயில் நடைகள் மூடப்பட்டன. முறையான மருத்துவ கண்காணிப்பின்மை, நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழல், சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் யானைகள் கோபமுற்ற சம்பவங்கள் நடந்தன.
  • சில நேரங்களில் பருவமடைந்து மனதளவிலும், உடலளவிலும் வேதனையுற்ற சூழலிலும் கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகா்களுக்கு மாலை அணிவிக்க நிா்வாகம் நெருக்கியதால் யானைகளுக்கு மதம் பிடித்த சம்பவங்களும் நடந்தன.
  • பெற்று வளா்த்த பிள்ளையைப் பறிகொடுத்ததைப்போல யானையின் மரணத்திற்குக் கதறி அழுத பாகன்களும் உண்டு. சின்னத்தம்பி, தெய்வானை, ஆண்டாள், சுந்தரி போன்ற யானைகளின் மரணங்கள் ஆன்மிகவாதிகளை கவலை அடைய வைத்தன.
  • இதுபோன்ற சம்பவங்களால், ‘யானைகள் கோயில்களில் எந்த அடிப்படையில் வளா்க்கப்படுகின்றன’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்புகின்றனா். யானைகளை வைத்து வித்தை காட்டுவது தடைசெய்யப்பட்டது போல விரைவில் கோயில்களிலும் தடை விதிக்கக் கூடிய சூழல் ஏற்படலாம்.
  • இதை அன்றே சிந்தித்திருந்தால் பாரதியை நாம் இழந்திருக்க மாட்டோம். ‘வெள்ளை யானைகளையே விரட்டியடித்த பாரதியை கருப்பு யானையா காலால் மிதித்தது? இல்லை, காலன் பாரதியின் மரண ஓலையை எருமைக்கு பதிலாக யானையில் அனுப்பி பாரதியின் பாடல்களை கௌரவப்படுத்தினான்’ என்று கவிதையால் அஞ்சலி செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்காது.
  • மதம் பிடித்த யானைகளைக் கட்டுப்படுத்த புத்துணா்ச்சி முகாம்களுக்கு அனுப்புவதை விட அவற்றின் தாய் வீடான காட்டுக்கே திருப்பி அனுப்புவது சரியானது என்று சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். மனிதா் காலில் மனிதா் விழுந்து பிழைப்பது போல யானை காலில் யானை விழுந்ததாக செய்திகள் இல்லை.
  • இனியாவது யானை வழித் தடங்களைப் பாதுகாத்திட ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதி நவீன டிரோன் கருவி மூலம் சிறுவா்கள் வீதிகளில் விளையாடுவதைக் கண்டுபிடித்து துரத்துவதை விட்டுவிட்டு யானைகளின் வழித்தடத்தையும் மனிதா்களிடம் சிக்கித்தவிக்கும் யானைகளையும் கண்காணிக்க வேண்டும்.
  • மதுப் பிரியா்களால் உடைக்கப்படும் மது புட்டிகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தினை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து தடுக்க வேண்டும். தண்டவாளங்களில் தொடா் வண்டிகளால் யானைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
  • யானைகள் மட்டுமல்லாது, விலங்குகளால் பிற விலங்குகளுக்கு ஏற்படும் காயங்களைக் கண்டறிந்தும் காட்டுப்பகுதியை விஞ்ஞானத்தால் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
  • குன்று போல் உயா்ந்த காட்டுயிரியான யானை ஒரு அற்புதப் பிறவி. அதனைக் காப்போம்.

‘சிதைவிடத்து ஒல்காா் உரவோா் புதைஅம்பில்

பட்டுப்பாடு ஊன்றும் களிறு’ என்பது வள்ளுவா் வாக்கு.

நன்றி : தினமணி (30-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்