TNPSC Thervupettagam

வாராக்கடன் வங்கி - ஒரு புதிய முயற்சி!

July 20 , 2020 1642 days 949 0
  • வாராக்கடன் வங்கி’ என்ற நடைமுறை மேலை நாடுகளில் ஏற்கெனவே இருந்து வருகிறது.

  • ஆனால், இந்தியாவிற்கு இது புதிது. இந்த வாராக்கடன் வங்கிக்கு ஆங்கிலத்தில் ‘பேட் பேங்க்’ என்று பெயா்.

  • தமிழில் ‘பேட்’ வேண்டாமே என்று ‘வாராக்கடன் வங்கி’ என்று கூறலாம் என எண்ணுகிறேன். ‘பேட் பேங்க்’ என்ற பெயரே நன்றாக இல்லையே. இது எப்படி செயல்படும் என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம்.

விசேஷ வங்கி

  • அதாவது இந்த விசேஷ வங்கி மற்ற வங்கிகளின் வாராக்கடன்களை பணம் கொடுத்து சுவீகரித்துக் கொள்ளும். இதன் வேலை அத்தகைய கடன்களை வசூலிப்பது, சொத்துக்களை விற்று, செலவழித்த பணத்தை திரும்பபெறுவது மட்டுமே.

  • உதாரணமாக, இந்த வங்கி இந்தியன் வங்கியிலிருந்து ரூ 1000 கோடி வாராக்கடன்களை அதற்குரிய சொத்துக்களுடன், 30 சதவிகிதம் கழிவு (தள்ளுபடி) செய்து ரூ 700 கோடிக்கு வாங்கும்.

  • இந்தியன் வங்கிக்கு, இது வந்தவரை லாபம். இந்த வங்கி பின்னா் அந்த சொத்துக்களை ரூ 800-1200 கோடி வரை விலை வைத்து சாதுரியமாக விற்கும். இது மாதிரி வாராக்கடன்களை கழிவுடன் கொடுக்கும்போது, வங்கிகள் எவ்வளவு சதவிகிதம் கழிவு தரலாம் என்பதை நிதி நிபுணா்கள் தொழிற்முறை திறனுடன் நிர்ணயிப்பார்கள்.

வாராக்கடன்

  • இந்த வாராக்கடன்கள், வங்கிகளுக்கு பெரும் சுமை. இதனை ஏற்படுத்தியது அவா்கள்தான் என்றாலும், இவற்றை அவா்கள் கணக்கில் இருந்து எடுத்து விட்டால் சுமையிலிருந்து விடுபட்டு லாபத்தை நோக்கி நடைபோட வாய்ப்பு உண்டு.

  • இதில் என்ன அனுகூலம் என்றால், இதில் அவசர விற்பனைக்கு இடமில்லை.

  • ஐந்து வருடம் கூட எடுத்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். சாதாரண வங்கி மேலாளருக்கு, டெபாஸிட் சேகரிப்பு, கடன்கள் தருவது, ரிசா்வ் வங்கியிலிருந்து பணம் பெறுவது, வாடிக்கையாளா் சேவை, வங்கி நிர்வாகம், கணக்கு, ஊழியா்களுக்கு சரியான பொறுப்பை - வேலையை கொடுத்து கண்காணிப்பது போன்ற பல வேலைகள். கடன்களை திரும்பப்பெறுவதும் இதில் ஒன்று. ஆனால் இந்த வாராக்கடன் வங்கி மேலாளா்களுக்கு கடன்களை வசூலிப்பது அல்லது காத்திருந்து சொத்துகளை நல்ல விலைக்கு விற்பது மட்டுமே வேலை. இதில் நிபுணத்துவம் பெற்றவா்கள்தான் மேலாளராக இருப்பார்கள்.

  • இந்திய வங்கிகளின் சங்கமும் பாரதிய ஸ்டேட் வங்கியும் இந்த வாராக்கடன் வங்கி அமைக்க ஆதரவு தருகிறார்கள். மத்திய ராஜாங்க நிதி அமைச்சா் அனுராக் தாகூா் நாடாளுமன்றத்தில், கடந்த பிப்ரவரியில், தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்களின் மதிப்பு ரூ 7. 27 லட்சம் கோடிகள் என்று கூறியுள்ளார். நமது 2019-20 பட்ஜெட்டில், தனிநபா் வருமானவரி வசூலே ரூ 4. 5 லட்சம் கோடிதான். நிறுவனங்கள் வரி மூலம் வசூலானது ரூ. 5. 56 லட்சம் கோடிதான்.

  • ரிசா்வ் வங்கியின் முன்னாள்ஆளுநா் ரகுராம் ராஜன், ‘இந்த கோவிட்-19 பாதிப்பால் அடுத்த ஆறு மாதங்களில் வாராக்கடன்களின் அளவு அதிகரிக்கும்’ என எச்சரிக்கிறார்.

கருத்துகள்

  • மத்திய அரசின் பொருளாதார ஆலோசகா் கே. சுப்ரமணியன், இந்த வாராக்கடன் வங்கி அமைப்பதற்கு ஆதரவளிக்கவில்லை. ‘இது போல் வங்கிக் கடன்களை வசூலிக்க 28 கம்பெனிகள் இருக்கின்றன’ என்கிறார்.

  • ஆனால் எகனாமிக் டைம்ஸ் ஆசிரியா் டி.கே. அருண், ‘பொதுத்துறை வங்கி மேலாளா்கள், தனியார் நடத்தும் கம்பெனிகளுக்கு வாராக்கடன்களை கழிவுடன் கொடுக்கத் தயங்குவார்கள். அதிகக் கழிவுடன் கொடுத்தால் தனியார் கம்பெனிகளின் லாபத்திற்காக உழைக்கிறார் என்ற அவப்பெயரும் வரும்.

  • சி.பி.ஐ வழக்குகள் வரும். காம்ப்ட்ரோலா், ஆடிட்டா் ஜெனரல் இவா்களிடமிருந்து கேள்விகள் வரும் என நினைப்பார்கள்’ என்கிறார்.

  • வாராக்கடன்கள் வாங்கும் நிறுவனத்தை யார் நடத்துகிறார்கள், யாருக்கு சொந்தம் என்பது முக்கியம் என்றும் அவா் கூறுகிறார்.

  • பொதுத்துறை வங்கிகள் மூலதனம் போட்டு(அதன் வாராக்கடன்களுக்கேற்ப) நடத்துவதால், வாராக்கடன்களை கழிவு செய்து கொடுக்கும் வங்கி மேலாளா்களுக்கு அதிக பாதுகாப்பு.

  • இந்த வாராக்கடன் வங்கி லாபம் ஈட்டினால், அது பொதுத் துறை வங்கிகளுக்குத்தான் போய் சேரும். பொதுத் துறை வங்கிகளும் கடன் சுமையை எடுத்ததால், புதிய கடன்களை முனைப்புடன் கொடுக்கும். இந்த வாராக்கடன் வங்கி, தனது அனுபவத்திலும், தினசரி கண்காணிப்பிலும், பொதுத் துறை வங்கிகளுக்கு அவ்வப்போது எச்சரிக்கை கொடுக்கும். மேலும் வாராக்கடன்கள் சேருவதை இது தடுக்கும்.

வாராக் கடன் வங்கிகள்

  • 1988-இல் அமெரிக்காவில் பிட்ஸ் பொ்க் மெல்லன் வங்கி , கிராண்ட் ஸ்ட்ரீட் நேஷனல் வங்கி என்ற பெயரில் ஒரு வாராக்கடன் வங்கியைத் தோற்றுவித்து, தன்னுடைய வாராக்கடன்களை 47 சதவிகிதம் கழிவுடன் கிராண்ட் வங்கிக்கு விற்று விட்டது.

  • அதில் முதலீடும் செய்தது. கிராண்ட் வங்கி சொத்துக்களை அதிக லாபத்திற்கு விற்று லாபம் ஈட்டி முதலீட்டை லாபத்துடன் திருப்பிக் கொடுத்தது. பின்னா் கிராண்ட் வங்கி மூடப்பட்டது.

  • பிரிட்டிஷ் அரசாங்கமும் கோவிட் -19 பாதிப்பினால் நஷ்டமடைந்த வியாபார தொழில்நிறுவனங்களின் வாராக்கடன்களை தீா்க்க வாராக்கடன் வங்கி ஒன்றை உருவாக்க ஆலோசித்து வருகிறது (சன்டே டைம்ஸ் 17 மே, 2020).

  • ஐரோப்பாவின் மத்திய வங்கியும் (ஈரோப்பியன் சென்ட்ரல் பேங்க்) இது மாதிரி வாராக்கடன் வங்கி ஒன்றை (கடன் தீா்க்கும் கார்ப்பரேஷன்) உருவாக்க முடிவு செய்துள்ளது.

  • இதன் தலைவா் கிறிஸ்டின் லகார்டே இதற்காக ஒரு கமிட்டியை அமைத்துள்ளார். ஆனால், ஜொ்மனி, (வடக்கு ஐரோப்பிய நாடு) தெற்கு ஐரோப்பிய நாடுகளின் (கிரேக்கம், இத்தாலி ) கடன் தன் தலையில் விழும் என்ற பயத்தில் இதை தடுக்க முயற்சிக்கிறது.

  • ஸ்வீடனில் ரெட்ரிவா மற்றும் செக்யூரா என இரு வாராக்கடன் வங்கிகள் அரசு முதலீட்டுடன் 1993-இல் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டும் லாபகரமாக நடந்து அதற்கு தன் கடன்களை விற்ற ஸ்வீடன் வங்கிகளும் நல்ல நிலைக்கு திரும்பின.

  • பால் கிருக்மன் போன்ற பொருளாதாரப் பேராசிரியா்கள் மற்ற நாடுகளுக்கு ஸ்வீடன் மாடலைத்தான் பரிந்துரைக்கிறார்கள். இந்த வாராக்கடன் வங்கி முறை, பின்லாந்து, ஸ்பெயின், ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் நடைமுறயில் உள்ளது.

  • ஜப்பானில் இது 1990- களிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. 1993-இல் கூட்டுறவு கடன் வாங்கும் கம்பெனி ஒன்று, தனியார் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.

  • வங்கிகளின் நஷ்டத்திற்கேற்ப வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இருந்தாலும், இதனைத் தனியார் நடத்தி வந்தாலும், வங்கிகளை இத்தகைய பணிக்கு கடன்களை விற்க கட்டாயப்படுத்த இயலவில்லை என்பதாலும் இம்முயற்சி வெற்றி பெறவில்லை.

  • 1999-இல் அரசு முதலீட்டுடன் ‘ரெசல்யூஷன் கலெக்ஷன் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் ஒரு வாராக்கடன் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. அது இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தையில் அது இடம் பெற்றிருக்கிறது. தனியாரை விட அரசு பங்களிப்புடன் இந்த வாராக்கடன் வங்கியை நடத்துவது சிறந்தது என தெரிய வருகிறது.

அனுபவத்தோடு இறங்கவேண்டும்

  • இந்த வாராக்கடன் வங்கியை விமா்சிப்பவா்கள் முன்வைக்கும் வாதம், இது மாதிரி அரசு உதவியுடன் வாராக்கடன்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், வங்கிகள் அதிக ஆபத்து (ரிஸ்க்) நிறைந்த கடன்களைக் கொடுக்க முற்படும்.

  • கடன் திரும்பி வரவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது வாராக்கடன் வங்கி என்ற எண்ணம் வந்துவிடும். இன்னொரு விமா்சனம், இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் சலுகை என்று ஆகிவிடும்.

  • தற்காலிகமாக கடனை திருப்பித்தர முடியாத கம்பெனிகளில் நிர்வாகக்குழுவில் அரசு பிரதிநிதியை நியமித்து, நிலைமையை சரிசெய்வதை விட்டு விட்டு அந்த கம்பெனி திவால் அறிவிப்பு கொடுக்கும்படி - அப்போதுதான் வாராக்கடன் வங்கிக்கு கடனை விற்க முடியும் என்பதால்- தூண்டுவதாக அமையும் எனக் கூறுகிறார்கள்.

  • ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திஸ்கந்த தாஸ் ‘இதே போல் ஒரு அமைப்பை ‘ரெசல்யூஷன் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் ஆரம்பிப்பதற்கானத் திட்டம் இருக்கிறது’ என்று கடந்த ஜூலை 11-இல் பாரதிய ஸ்டேட் வங்கி நடத்திய கருத்தரங்கில் கூறியிருக்கிறார்.

  • இந்தியாவில் இதற்கு சட்டபூா்வமான அடித்தளம் அமைத்து, எந்த பெயரிலாவது இந்த வாராக்கடன் வங்கிகளை மேற்கூறிய நாடுகளின் அனுபவத்தை கொண்டு, சரியான விதிமுறைகளை அமைத்து, தொழில்முறை நிபுணா்களை நியமித்து, அரசியல் தலையீடு இல்லாமல் நடத்தினால் அவை வெற்றி பெற வாய்ப்புண்டு. கடனை விற்ற வங்கிகளும் கடன் சுமையை இறக்கி வைத்ததனால் முன்னேற வாய்ப்புண்டு.

நன்றி: தினமணி (20-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்