- இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள ஒருவர் ஈரானின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, இனிமேல் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து இப்போதே விவாதங்கள் தொடங்கிவிட்டன.
- ஈரானின் தலைமை நீதிமன்ற நீதிபதியாக இருந்த 60 வயது இப்ராஹிம் ரைசி, புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேற்கு வல்லரசு நாடுகளுடன் இணக்கமாகப் போக முயன்ற மிதவாதியான அதிபர் ஹசன் ரெளஹானியின் பதவிக்காலம் ஆகஸ்டில் நிறைவு பெறும்போது இப்ராஹிம் ரைசி அதிபராகப் பதவி ஏற்பார்.
- தற்போது அதிபராக இருக்கும் ஹசன் ரெளஹானி, மிதவாதிகள், சீர்திருத்தவாதிகளின் ஆதரவைப் பெற்றவர்.
- ஈரானிய அரசியல் சட்டத்தின்படி தொடர்ந்து மூன்றாவது முறை அதிபர் பதவியில் தொடர முடியாது என்பதால் போட்டியில் கலந்துகொள்ளவில்லை.
- அவர் மட்டுமல்ல, மிதவாதிகளான நாடாளுமன்றத் தலைவர் அலி லைரிஜானியும், துணை அதிபராக இருக்கும் இஷாக் ஜஹாங்கிரியும் அதிபர் பதவியில் போட்டியிடுவதற்கு ஈரானின் அதிகாரக் கேந்திரமான காபந்துக் குழு (கார்டியன் கெளன்சில்) ஒப்புதல் வழங்கவில்லை.
- அதிபர் தேர்தலில் யார் போட்டியிடலாம் என்பதை ஈரானின் 12 உறுப்பினர்கள் கொண்ட காபந்துக் குழுதான் முடிவு செய்யும்.
- அதன்படி, ஏழு பேர் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இப்ராஹிம் ரைசி மட்டுமே.
- ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகமான வேறு இரு வேட்பாளர்களும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, இப்ராஹிம் ரைசியின் வெற்றி உறுதி செய்யப் பட்டது.
ஈரானின் புதிய அதிபர்
- அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக இப்ராஹிம் ரைசி அறிவிக்கப்பட்டாலும்கூட, தேர்தல் நடத்தப்பட்ட விதமும், தேர்தலில் மக்கள் பங்கேற்ற விதமும் அவரது வெற்றி பாராட்டும்படியானதல்ல என்பதை உரக்கவே எடுத்தியம்புகின்றன.
- தேர்தலை புறக்கணிக்கும்படி மக்கள் மத்தியில் வேண்டுகோள் எழுப்பப்பட்டு அதற்கு பெரும் வரவேற்பும் காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
- வாக்களிக்கத் தகுதியுள்ள 5.9 கோடி வாக்காளர்களில் 2.89 கோடி வாக்காளர்கள்தான் வாக்குப் பதிவில் பங்கு பெற்றனர்.
- அவர்களிலும் 37 லட்சம் வாக்காளர்களின் வாக்குகள் செல்லாதவையாக காணப்பட்டன. பெரும்பாலான மக்கள் தேர்தல் நடத்தப்பட்ட விதத்தையும், வேட்பாளர்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைதான் வாக்குப்பதிவு உணர்த்துகிறது.
- ஈரானைப் பொருத்தவரை ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பதும், கொள்கை முடிவுகளை எடுப்பதும் அந்த நாட்டின் உன்னதத் தலைவராகக் கருதப்படும் அயதுல்லா அலி கமேனிதான்.
- அந்த நாட்டில் அதிபராக யார் இருந்தாலும்கூட, வாழ்நாள் சர்வாதிகாரியாக அவர் கருதப் படுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் நடத்தும் பொம்மலாட்டம்தான் ஈரானில் நடைபெற்று வருகிறது.
- ஈரான் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர் அயதுல்லா ருஹல்லா கொமேனி. ஈரான் இஸ்லாமிய குடியரசின் இரண்டாவது உன்னதத் தலைவராக 1989-இல் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன்பு அயதுல்லா அலி கமேனியும் இரண்டு முறை ஈரானின் அதிபராக இருந்தவர்தான்.
- அயதுல்லா அலி கமேனியின் நம்பிக்கைக்குரிய வளர்ப்பு மகன் என்று இப்ராஹிம் ரைசியைக் குறிப்பிடுகிறார்கள்.
- 1960-இல் புனித நகரமான மாஷாத்துக்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்த இப்ராஹிம் ரைசி, அயதுல்லா அலி கமேனியின் நம்பிக்கைக்குரியவராக இருந்ததால்தான் 2019-இல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக, அவருக்குப் பிறகு உன்னதத் தலைவரை தேர்ந்தெடுக்கும் 88 உறுப்பினர்கள் கொண்ட குழுவின் துணைத் தலைவராகவும் அவர் நியமிக்கப் பட்டிருக்கிறார்.
- அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் இப்ராஹிம் ரைசி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள இருக்கிறார்.
- இஸ்ரேலின் புதிய ஆட்சியாளர்கள் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் தாக்குதலும் நடத்தலாம்.
- மேலை நாடுகளின் பொருளாதாரத் தடையின் காரணமாக ஈரான் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கிறது. வேறுவழியில்லாமல் சீனாவுடனும், ரஷியாவுடனும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஈரான் தள்ளப்பட்டிருக்கிறது.
- கடந்த மாதம் சீனாவுடன் 25 ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் மேற்கொண்டிருக்கிறது. அதன் மூலம் மேற்கு ஆசியாவில் தனது காலை சீனா பதித்திருக்கிறது.
- அந்த ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய - ஈரான் உறவு பாதிக்கப்படலாம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுமானால், ரஷியா - சீனா - ஈரான் கூட்டணியின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் போகக்கூடும். அதுவும் இந்தியாவை பாதிக்கக்கூடும்.
- ஈரானின் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், இப்ராஹிம் ரைசி ஆட்சியில் என்னவாகும் என்பதும் கேள்விக்குறி.
- இப்ராஹிம் ரைசியை வறுமை, ஊழல், வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரத் தடை என்று பல சவால்கள் எதிர்நோக்குகின்றன.அவர் தேர்வு செய்யப்பட்ட விதமே கேள்விக்குள்ளாகிறது என்னும் நிலையில், மக்களின் பேராதரவுடனான ஆட்சியாக அவரது ஆட்சி இருக்கப் போவதில்லை.
- ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை 1988-இல் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதற்கு உத்தரவிட்ட மரண ஆணைய உறுப்பினராக இருந்த இப்ராஹிம் ரைசியின் ஆட்சியில், சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் எதிர்பார்க்க முடியாது என்கிற குற்றச்சாட்டை அவர் உறுதிப்படுத்துவாரா அல்லது புதிய பாதையில் பயணிப்பாரா என்பதை, ஈரான் மட்டுமல்ல உலகமே உற்று நோக்குகிறது.
நன்றி: தினமணி (30 - 06 - 2021)