TNPSC Thervupettagam

வால்மார்ட்டின் சமூக பொறுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு ‘கரோலின்ஸ் கார்ட்’!

December 23 , 2024 3 hrs 0 min 6 0

வால்மார்ட்டின் சமூக பொறுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு ‘கரோலின்ஸ் கார்ட்’!

  • பொதுவாக நிறுவனங்களின் சமூகப்பொறுப்பு என்றால் நாம் என்ன நினைப்போம்? ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் அல்லது வருவாயில் 3-4% அளவுக்கு தொகையை சமூக சேவைக்காக செலவிடுவதைத்தானே? ஆனால், உங்களிடம் மிச்சம் மீதி இருப்பதை சமூகத்துக்குக் கொடுக்காமல், சமூகத்துக்கு என்ன தேவையோ, அதனைக் கொடுப்பதுதான் உண்மையான சமூகப் பொறுப்பாக இருக்க முடியும்.
  • மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சவால்களிலேயே மிகப்பெரிய சவால் என்னவென்று நினைக்கிறீர்கள்? பொதுமக்கள் புழங்கும் இடங்களில் தடங்கலின்றி தாங்களும் புழங்க ஏதுவான சூழல் இல்லை என்பதுதான். இது, அரசாங்கம் மட்டும் கவலை கொள்ள வேண்டிய விஷயமன்று. தனியார் நிறுவனங்களும் களத்தில் இறங்க வேண்டும். ஆனால் யதார்த்தம் ஏமாற்றம் தருகிறது.
  • மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் பிரம்மாண்ட கட்டிடங்களில் மட்டுமே அதுபோன்ற வசதிகள் இருக்கின்றன. சிறிய வணிக நிறுவனங்களுக்கும் இது பரவ வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பு ஆகும். இவ்வகையில் சில்லரை வர்த்தக துறையில் சில நிறுவனங்கள் முதலடி எடுத்து வைத்திருக்கின்றன. அந்த வகையில் இத்துறையின் ஜாம்பவானாக விளங்கும் வால்மார்ட், அண்மையில் தனது அனைத்து கிளைகளிலும் கரோலின்ஸ் கார்ட் எனப்படும் ஷாப்பிங் தள்ளு வண்டிகளின் பயன்பாட்டை உறுதி செய்திருக்கிறது.

இது எப்படிப் பயன்படும்?

  • எடுத்துக்காட்டாக, உங்கள் மாற்றுத்திறனாளி குழந்தையை வால்மார்ட் கடைக்கு அழைத்துச் செல்கிறீர் கள் என்று வைத்துக் கொள்வோம். ஷாப்பிங் செய்ய 1-2 மணி நேரம் ஆகலாம். அவ்வளவு நேரமும் குழந்தையை நீங்கள் இடுப்பில் ஏந்திக்கொள்ள வேண்டியிருக்கும்.
  • அல்லது சக்கர நாற்காலியை ஒரு கையிலும் ஷாப்பிங் செய்யும் தள்ளு வண்டியை மற்றொருகையிலும் தள்ளிக்கொண்டே உலவ வேண்டியிருக்கும். கரோலின்ஸ் கார்ட், இதை எளிதாக்குகிறது. உங்கள் குழந்தையை அதில் பாதுகாப்பாக அமர வைத்துக்கொள்ளலாம். குழந்தையின் பின்புறம் உள்ள கூடையில் நீங்கள் வாங்கும் பொருட்களைப் போட்டுக்கொள்ளலாம். நீங்கள் என்ன வாங்குகிறீர்கள் என்பதை உங்கள் குழந்தையும் பார்க்கும்.

அய்ரா செயலி:

  • அதேபோல வால்மார்ட், அய்ரா (Aira) என்ற மூன்றாம் நபர் இலவச செயலியுடன் கைகோர்த்துள்ளது. வாடிக்கையாளருக்கு அவரைச் சுற்றியுள்ள பொருட்களின் விலைப்பட்டியல், இதர விபரங்களை அந்த செயலி படித்துச் சொல்லிவிடும். தொட்டுணர்ந்தும், செயலியோடு கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள அய்ரா ஊழியரின் உதவியோடும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
  • ‘ஷாப்பிங் என்பது எல்லோருக்குமானது என்பதே எங்கள் நோக்கம்’ என்கிறது வால்மார்ட் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று. “தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள அய்ரா செயலி பயன்பாடு, எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும். அதேவேளையில் அய்ராவின் ஊழியர்கள் எவரும் குறிப்பிட்ட பொருளை வாங்க வேண்டுமென்றோ, வாங்க வேண்டாம் என்றோ பரிந்துரைக்க மாட்டார்கள்” என்கிறார் வால்மார்ட்டின் எளிய அணுகல் துறையின் தலைவரான காயத்ரி அக்னியூ.
  • அய்ரா, பார்வை மாற்றுத்திறனாளிகளின் எளிய அணுகலுக்காக ஒரு தனித்துறையையே வைத்திருக்கிறது. அதன் தலைமை அலுவலர் எவரேட் பேக்கன் என்பவரும் பார்வை மாற்றுத்திறனாளிதான். மேலே சொன்னவை தவிர வால்மார்ட் செய்த இன்னொரு விஷயம்தான் உண்மையிலேயே புரட்சிகரமானது.
  • ஆட்டிசம் முதலிய அறிவுசார் தடை உள்ள குழந்தைகள் பொதுவாக நுண்ணிய உணர்வு கொண்டவர்களாக இருப்பர். சில ஓசைகளை அவர்களால் தாங்க இயலாது. கூட்ட நெரிசல், வெடிச்சத்தம், காதைக் கிழிக்கும் இசை ஆகியவை அவர்களைத் துன்புறுத்திவிடும்.இதுபோன்ற பிரச்சினைகளை சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
  • இந்த இடத்தில் தான் வால்மார்ட் ஒரு நுணுக்கமான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது. ‘சென்ஸரி ஷாப்பிங்’ என்ற கருத்தாக்கத்தை அது நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன்படி, காலை 8-10 மணி அளவில் நாசூக்கான கூருணர்வு கொண்டோர் பொருட்களை வாங்க வரலாம். அப்போது கூட்டம் இருக்காது.
  • அதேபோல, அவர்களைத் தொந்தரவு செய்யும் ஸ்பீக்கர்கள், பின்னணி இசை முதலிய ஓசைகள் அனைத்தும் அணைத்து வைக்கப்படும். அமெரிக்காவுக்கு வெளியில் உள்ள வால்மார்ட் கடைகளுக்கும் இம்முயற்சிகள் விரிவாக்கப்பட்டால் அது இந்திய சில்லரை வணிகத் துறையிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெஸ்ட் பிரைஸ் மாடர்ன் ஹோல்சேல்:

  •  இந்தியாவைப் பொறுத்தவரை வால்மார்ட் நேரடியாக தனது பெயரில் கிளைகளைத் திறக்கவில்லை. மாறாக 'பெஸ்ட் பிரைஸ் மாடர்ன் ஹோல்சேல்' என்ற பெயரில் சுமார் 28 கடைகளை அந்நிறுவனம் நடத்தி வருகிறது. அதற்கு முன்பு பார்தி-வால்மார்ட் என்ற கூட்டு நிறுவனமாக அது இருந்தது. பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியதன் மூலம் அந்நிறுவனம் முழுமையாக வால்மார்ட் வசம் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
  • தற்போதைய கடைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் எளிய அணுகலுக்கான நடைமுறைகளை வால்மார்ட் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கிய வால்மார்ட், இணைய வணிகம் மூலம் இந்திய சில்லரை வர்த்தகத் துறையில் இயங்கி வருகிறது. அங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை வால்மார்ட் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
  • வால்மார்ட் மட்டுமல்ல, எந்த ஒரு தொழில் நிறுவனமும் இதுபோன்ற வசதிகளை அறிமுகப்படுத்துவது அவர்களின் வருவாயை அதிகரிக்கத்தானே என்ற விமர்சனம் வராமல் இல்லை. அதேவேளையில் மாற்றுத்திறனாளிகளின் பார்வையிலிருந்து ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். பிறரைச் சாராமல் தங்கள் பணிகளைத் தாங்களே செய்துகொள்வதற்கான வாய்ப்புகளைத்தான் மாற்றுத்திறனாளிகள் தேடிக்கொண்டே இருக்கின்றனர்.
  • நமக்கு சாதாரணமாக தோன்றும் ஒரு கட்டிடத்தின் படிகள், ஒரு போலியோ மாற்றுத்திறனாளிக்கு மலைபோலத் தோன்றும். நாமெல்லாம் காலால் நடக்கும் தரையில், கையூன்றி நடக்கிறார் ஒரு ‘தவழும் மாற்றுத்திறனாளி’. உயரம் தடைப்பட்ட மாற்றுத்திறனாளியின் பார்வையில் ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தின் உயரத்தைக் கற்பனை செய்யுங்கள். அவ்வாறு பார்க்கும்போது அரசோ, தனியார் தொழில் நிறுவனங்களோ எவராக இருப்பினும் மாற்றுத் திறனாளிகளின் எளிய அணுகலுக்காக மேற்கொள்ளும் சிறிய முயற்சிகூட ஒரு சமூகப் பொறுப்புதான். அதனை ஏற்றுக்கொண்டு, பரவலாக்குவதும் சமூகத்தின் பொறுப்புதான்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 12 – 2024)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்