TNPSC Thervupettagam

வாழ்வின் பொருளியல் மதிப்பு என்ன

December 5 , 2023 405 days 230 0
  • 2023 ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேச புக்கர் விருது’ பெற்ற ‘டைம் ஷெல்டர்’ (Time Shelter) நாவலில், அதன் ஆசிரியர் ஜியார்ஜி கொஸ்பொடினவ் இவ்வாறு எழுதியிருப்பார்: ‘பொருள்களின் விலைகள் அதிகரிக்கும்போது வாழ்வின் மதிப்பு குறைந்துவிடுகிறது.’ இதை வாசிக்கும்போது ஓர் உண்மையைச் சட்டெனக் கண்ணெதிரே பார்த்த உணர்வு மேலிட்டது. நமது வாழ்வு விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருள்களாலும், சேவைகளாலும் இடைவிடாது பிணைந்திருக்கிறது. ஒருவகையில், நம் கைவசம் இருக்கும் பொருள்கள், நம்மால் பெறக்கூடிய சேவைகளைக் கொண்டே நம் வாழ்வின் மதிப்பை நாம்அளவிடும் சமூகச் சூழலும் தனிநபர் சூழலும் நிலவுகிறது.
  • மதிப்புமிகுந்த ஒரு பொருளைக் கைக்கொள்ளத் தவறுதல் என்பது பின்தங்கிவிடுகிற உணர்வையும், அதனால் தன்மதிப்பும், தான் வாழும் வாழ்வின் மதிப்புமே சற்றுக் குறைவானது என்கிற எண்ணம் தற்காலத்தில் நம் எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்திருக்கிறது. ஒரு பொருளுக்கான அல்லது சேவைக்கான மதிப்பு எவ்வாறு உருவாகிறது என்பதை இங்கே பேசப்போவதில்லை. அது ஆழமான பொருளாதார விவரிப்புகளைக் கோருவது.

மத்தியதர உலகு

  • தாராளமயத்துக்குப் பிறகு இவ்வுலகே மத்தியதர உலகாக மாறிவிட்டிருக்கிறது. நம்முடைய கனவுகள் ஒன்றுபோலவே இருக்கின்றன. வாழ்க்கை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாக மாறியிருப்பதால், நமக்குப் பல்வேறு அனுபவங்களின் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது என்பார் மெய்யியலாளர் ஹன்ஸ் கடமெர் (Hans-Georg Gadamer). இதனை வேறு வகையில் சொன்னால், வாழ்வு தனித்தனியாகப் பிரிந்திருக்கும் ரயில் பெட்டிகளில் நிகழ்வதாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ஒவ்வொரு விதத்தில் இயங்குவதாக இருக்கிறது. உணவு, உடை, உறைவிடம் மட்டுமல்ல... கல்வியும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நம் நாட்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஒருவர் உயர்கல்வி கற்று, குறிப்பாகத் தொழில்நுட்பக் கல்வி கற்றுத் தேர்ந்தால், சந்தை அவரது வாழ்வைப் பார்த்துக்கொள்ளும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
  • பொருளாதாரரீதியாக வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் சந்தை வழங்கியிருக்கிறது என்றால், சந்தையில் நுழைவதற்கான கடவுச்சீட்டைக் கல்வி வழங்கியிருக்கிறது. நான்காவது அடிப்படைத் தேவையும் உருவாகிவிட்ட பிறகு, ஐந்தாவதாக உடல்நலமும் இவற்றோடு இணைந்திருக்கிறது.

மாறிப்போன தலைமுறை

  • நிதித் தேவை எந்தத் தலைமுறையைக் காட்டிலும் 2000-த்துக்குப் பிறகு, இளம்பருவத்தைக் கடக்கத் தொடங்கிய தலைமுறைக்குப் பெருகியிருக்கிறது. இந்தியா சர்வதேச நிதியங்களிடம் வாங்கிய கடன்களை விடுங்கள், இந்தியாவில் வழங்கப்பட்டிருக்கும் கடன் அளவு ஏறக்குறைய ரூ.154 லட்சம் கோடி. அதிகப்படியாக வீட்டுக்கடனும் அதற்கு அடுத்த இடத்தில் தனிநபர் கடனும் இருக்கின்றன. வயதுவாரியாகப் பார்த்தால் 40% தனிநபர் கடன் பெற்றவர்களின் வயது 35க்கும் குறைவு (ஆதாரம்: crifhighmark.com). திருமணம், உடல்நலச் செலவுகள் செய்யப்பட வேண்டிய வயதை எட்டுவதற்கு உள்ளாகவே தங்களது செலவுகளுக்காகத் தனிநபர் கடன்களை நாடுகின்றவர்கள் அதிகம்.
  • வீட்டுக்கடனைப் போல் அல்லாமல் தனிநபர் கடனில் இருந்து வருவாய் ஈட்டும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. ஏனெனில், அக்கடனுக்கான வட்டி அதிகம். சுற்றுலா, பங்குச் சந்தை முதலீட்டுக்கு, கைச்செலவுக்கு எனப் பெரும்பாலும் அவ்வப்போதைய நிதித் தேவைக்கு மட்டுமே தனிநபர் கடன்கள் பெறப்படுகின்றன. டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகள் பெருகிய பிறகு வெறும் இருநூறு ரூபாய் கடன் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்திருக்கிறது.
  • நம் பெற்றோர்களின் தலைமுறையோடு இதனை ஒப்பிடுவோம். அவர்களது காலத்தில் தனிநபர் கடன், கடன் அட்டை, வாகனக்கடன், வீட்டுவசதிப் பொருட்களுக்கான கடன் என எதுவுமே இவ்வளவு பரவலாக இல்லை. தொழில் தொடங்குவதற்கான கடன்களை வழங்கும் நிறுவனங்கள் இருந்தன. அதைச் சமூகத்தில் மிகச் சிலர் மட்டுமே பெற்றுவந்தனர்.
  • ஆனால், தற்போது கல்லூரியில் இருந்து வெளியேவரும் மாணவர் ஒன்று பல லட்சங்களைத் தீர்த்தவராக இருப்பார் அல்லது கடன் உடையவராக இருப்பார். இவை இரண்டுமே அவர் செய்தவை அல்ல என்றாலும், அவர் தலையில் கட்டப்பட்டவை. நாம் வருமானத்தை உற்பத்தி செய்பவர்களாக மட்டும் இல்லாமல், வட்டியை உற்பத்தி செய்பவர்களாகவும் மாறியிருக்கிறோம். செலவுகளைப் பட்டியலிடுவதைத் தாண்டி, இன்னின்ன கடனுக்கு இன்னின்ன வட்டி எனப் பட்டியலிட வேண்டிய நிலை.

உளத்துணிச்சல் அவசியம்

  • முன்னைக் காட்டிலும் சேமிப்பின் அவசியம் உணரப்பட்டபோதும், சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவருகின்றன. முதலீடுகளுக்கான வழிமுறைகள் எளிதாக மாறியிருப்பினும் நம்மில் பெரும்பாலானோரால் ஏன் சேமிக்கவோ முதலீடுகள் செய்யவோ முடியவில்லை? வருவாய் இடைவெளி பெருகியிருப்பதால் செல்வம் சேர்க்கும் வாய்ப்பு ஒருசிலருக்கே சாத்தியம் ஆகியிருக்கிறது. குறைவான வருவாய் உடையவர்கள் சேமிப்பதற்கு மட்டுமல்ல, தங்களது அன்றாடத் தேவைகளை ஈடுகட்டவே போராட வேண்டியிருக்கிறது. ‘டைம் ஷெல்டர்’ நாவலில் சொல்லப்பட்டிருப்பதைப் போலத்தான், உணர்வுகள் என்பதைச் சோதிக்க நமக்குத் தனிக்கருவிகள் தேவையில்லை.
  • நிதிச்சுழலில் இருந்து நம்மால் தப்பிக்க முடியுமா? தற்போதைய சூழலில் அதற்கு அசாத்திய உளத்துணிச்சல் தேவைப்படும். இச்சூழல் பலரையும் தவறான முடிவுகளால் சிக்கலுக்கு உள்ளானவர்களாக மாற்றியிருப்பதை நாம் பார்க்கலாம். ஒரு தொடக்கத்தின் தன்மையைத் தீர்மானிப்பது அதன் முடிவுதான் என்பதால், நமது நிதித் தேவைக்காக நாம் நாடும் வழிமுறைகளின் இறுதிக்கட்டத்தைக் கணக்கிடுதல் ஒரு நல்ல வழிமுறை. கடன் பெறாமல் இருப்பது சாத்தியமில்லை எனினும், கூடுமானவரை நாம் போகத் தேவையில்லாத இடமாக அதைக் கருதுவது நல்லதுதான்.

நன்றி: தி இந்து (05 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்