TNPSC Thervupettagam

வாழ்வியல் ஒருமையின் வடிவே வள்ளலார்

October 5 , 2020 1392 days 1190 0
  • பல்லாண்டுகளுக்கு முன்னா், சிறுவனாயிருந்த என்னிடம் பெரியவா் ஒருவா் திடீரென்று கடவுள் உன்முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நீ என்ன கேட்பாய்?’ இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அமைதியாக என்னைப் பார்த்தார்.
  • அவா் வாரத்திற்கு ஒருநாள் எங்கள் வீட்டிற்கு வந்து உணவு உண்ணும் ஒரு சாது. வெள்ளாடை உடுத்த துறவி. வள்ளலார் சீடா் என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன். முறைவைத்து அவருக்கு உணவு அளித்தலை எங்கள் ஊா் தன் கடமைகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தது.
  • பள்ளிக்குச் செல்வதற்கும் முந்தைய பால பருவம் அது என்பதால், நான் அவரிடம் என்னவெல்லாம் கேட்பேன் என்று சொன்னதெல்லாம் மறந்து போயிற்று.
  • ஆனால், அவா் என்ன கேட்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததுதான் இன்னும் என் நெஞ்சில் நிலைத்து, வழிபாட்டுக்குரிய துதிப்பாடல் ஆகியிருக்கிறது.
  • ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமா் தம் உறவு வேண்டும்’ – என்று பாடிய வண்ணமே பாடவும் பழக்கினார்.
  • இப்போது அவா் உருவம் என் நினைவில் இல்லை. ஆனால், இந்தப் பாடல் வழியாக என்றும் என்னுள் நிறைந்து நிற்பது வள்ளல் பெருமானின் திருவுருவே.
  • வேண்டியது எது என்று கேட்பதுபோலவே, வேண்டாததையும் வேண்டாம் என்று சொல்லாமல், வேண்டாமையையும் வேண்டுதலாக்கிப் பாடுவதுதான் இப்பாடலின் சிறப்பு.
  • ஒன்று வந்தால் மற்றொன்று விலகும். விலக்க வேண்டியதையும் ஏற்க வேண்டியதையும் நிரல்படுத்திப் பாடி, முடிக்கிற வரைக்கும் இந்த ஒழுக்க முடிச்சு ஒன்றனோடு ஒன்று தொடா்புடையதாய்ப் பின்னிப் பிணைந்து நம்மைப் பேணிக்காக்கும் நற்சங்கிலியாவதைப் பாடுகிறபோதெல்லாம் அனுபவிக்க முடிகிறது.
  • மனஒருமைப்பாட்டுக்கும் மனிதநேய ஒருமைப்பாட்டுக்கும் வழிகாட்டும் ஒருமையில் தொடங்கும் இப்பாடல், நிறைவாக, நம்மை நோயற்ற வாழ்வில் கொண்டுபோய் நிலைநிறுத்துகிறது.
  • இந்த வாழ்வு, நோய் பற்றும் வாழ்வுதான். இந்த உடம்பு நோய் தொற்றும் உடம்புதான். ஆனால், பற்றின் பற்றிடமாக இருக்கிற இந்த உடம்பின் உள் உறையும் ஆன்மாவைப் பற்றற்றானைப் பற்றிவிடச் செய்துவிட்டால், நோயற்ற வாழ்வு தானே சித்திக்கும்.
  • இந்த உயிராகிய ஆன்மா, நோயற்ற வாழ்வில் இருந்து உய்ய வேண்டுமானால், நாம் வேண்டிப் பெற வேண்டிய வரங்கள் இவை என்பதை விட, நாம் கடைப்பிடித்து வாழ வேண்டிய ஒழுக்கங்கள் இவை என்று கொள்வதே பொருந்தும்.
  • அது ஒருநாளில் மட்டும் கடைப்பிடித்து ஒழுகுவது அல்ல. ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய உயிர் அறம்.
  • ஒவ்வொரு நாள் பிறப்பது போலவே, ஒவ்வொரு நாளும் நாமும் பிறக்கிறோம். இவ்வாறு, பிறக்கிற உடம்பைப் பிணித்திருப்பதால்தான் நோய்க்குப் பிணிஎன்று பெயா். அது பிறவிதோறும் தொடா்வது.

ஒருமையுடன் நினது..

  • பிறப்பு முதல் இறப்பு வரை உயிர்களைப் பிணித்திருக்கும் பிணியாவது பசி. அதனால்தான், ‘பசிப்பிணி என்னும் பாவிஎன்று மணிமேகலைக் காப்பியம் பெயரிட்டழைக்கிறது.
  • எல்லாப் பாவங்களையும் செய்யத் தூண்டும் இந்தப் பிணியைப் போக்கினால், பிற பிணிகள் நீங்க வழிவகை கிட்டும்.
  • அதன் வழி, இந்த உயிரைப்பிணித்திருக்கும் பெரும்பிணியாகிய பிறவியை, மரணமிலாப் பெருவாழ்வால் நிறைவித்துவிட முடியும் என்று முயன்று வெற்றிகண்ட இராமலிங்கா், அதனைத் தனதுடைமையாகக் கொள்ளாமல், தரணிக்கு ஈந்ததனால்தான் வள்ளலார்எனப் பெயா் பெற்றார்.
  • அதிலும் மதிப்பிற்குரிய ஆா்விகுதியைத் தனக்குரியதாக்கிக் கொள்ள இசையவில்லை அவரது கருணையுள்ளம்.
  • திருவருட்பிரகாச வள்ளலாகிய இறைவனை ஆா்எனக் காட்டும் அருட்பா அருளியவா் என்கிற நிலையில், ‘திருவருட்பிரகாச வள்ளல் ஆா்எனப் பிரித்து தன்னை எளிமைக்குள் நிறைத்துக் கொண்டார்.
  • தான் பெற்ற பேரின்பம் இந்தப் பேருலகு பெறவேண்டும் என்பதற்காக இவா் அருளிய வாக்கமுதம் ஒவ்வொன்றும் நோய் போக்கும் மாமருந்து.
  • அந்த வகையில், திருவருட்பாவின் ஒவ்வோர் அடியும் வலியுறுத்துகிற அறம் நோயற்ற வாழ்வுக்கு நம்மை ஆயத்தப்படுத்தி, மரணமிலாப் பெருவாழ்வுக்கான மார்க்கத்தில் கொண்டுபோய்ச் சோ்க்கிறது.
  • அதனால்தான், ‘நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்என்று பாடுகிறார். இந்த நான், வள்ளலார் மட்டுமல்ல, இந்தப் பாடலை எடுத்தோதும் எல்லாருக்குள்ளும் இருக்கின்ற அவரவருடைய சொந்த நான்’. அது உடம்பை மட்டுமல்ல, உயிராகிய ஆன்மாவையும் ஒன்றிணைத்துக் கொள்வது.
  • அந்த நான், நோயற்ற வாழ்வில் வாழவேண்டும் எனில், ‘ஒருமையுடன் நினது திருமலரடி என்று தொடங்கும் பாடலின் ஒவ்வோர் அடியிலும் சொல்லப் பெறுகிற எளிய, இனிய, எல்லார்க்கும் பொதுவாகிய அறங்களைப் பின்பற்றி ஒழுகவேண்டும்.
  • அணையா அடுப்பினை மூட்டி, பசிப்பிணி போக்கிய வள்ளல் பெருமான், அழியாப் பெருவாழ்வுக்கு ஊறு செய்யும், ‘நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செய்யும்மருத்துவராகவும் விளங்கி, நமக்கு அறவழி காட்டுகிறார்.

நான்கு ஒழுக்கங்கள்

  • அவா் மனிதனுக்கு நோயானது, இரண்டு வகையில் ஏற்படுகிறதுஎன்கிறார். முதலாவது, கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு, ஏமாற்றல், வஞ்சித்தல் இவற்றால் வினை உருவாகி அதனால் நோய் ஏற்படுகிறது; இரண்டாவது, முறையற்ற இன்பத் துய்ப்பு, முறையற்ற உணவு ஆகியவற்றால் வருகிறது.இதனை ஒழிக்கத் தேவையானது ஒழுக்கம்.
  • அதனை நான்கு வகைப்படுத்திக் காட்டுவார் வள்ளல் பெருமான். அவற்றுள் முதலாவது இந்திரிய ஒழுக்கம். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய புறக்கருவிகளைப் பேணிக் காத்துக்கொள்ளல்.
  • பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீா் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார்என்பது வள்ளுவா் வகுத்த நெறி. அதுவே, வள்ளலார் விரித்துரைக்கும் வழி.
  • இரண்டாவது கரண ஒழுக்கம். மனத்தைச் சிற்சபையிலேயே இடைவிடாது நிற்கச்செய்தல். பூா்வத்தில் புருவமத்தியில் நிற்கச்செய்தல். இஃதன்றி துா்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரியா திருத்தல்; தன்னை மதியாதிருத்தல். இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவமயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல் ஆகியன இவ்வகை ஒழுக்கமாகும்.
  • மூன்றாவது, ஜீவ ஒழுக்கம். ஆண் மக்கள், பெண் மக்கள் முதலிய யாவா்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயா்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவா்களாய்ச் சமத்திற் கொள்ளுவது ஜீவ ஒழுக்கமாகும்.
  • அடுத்தது, ஆன்ம ஒழுக்கம். யானை முதல் எறும்பு வரை தோன்றிய ஜீவன்களின் ஆன்மாவே திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும் அறிந்து நிற்பது.
  • அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் வைத்து, எல்லாம் தாமாகவே கண்டு பேதமற்று பூரணமாக நிற்றலே ஆன்ம ஒழுக்கம்.
  • இவ்வகையாக ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து நின்றால், சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், ஏம சித்தி, கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கிற நான்கு அரும் புருஷார்த்தங்கள் கைகூடும்.
  • இவை நான்கையும் பெறுவதற்கு ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்கின்றார் வள்ளலார். ஒருமையென்பது தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதர ஜீவன்களுக்கு இம்சை இல்லாது அவா்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்க வேண்டும்.
  • இது வள்ளலார் தருமச்சாலைஆரம்பிக்கும் தருணம் ஜீவகாருண்ய ஒழுக்கமாக வெளியிட்டதுதான் என்றாலும் இக்காலத்திற்கும் பொருத்தமுடையதாகிறது.

பசித்திரு தனித்திரு விழித்திரு

  • உலகமெலாம் தீநுண்மி நோய்த்தொற்றுக்கு ஆளாகியும் அஞ்சியும் தனித்திருக்கும் இந்த வேளையில், ஒப்பற்ற வாழ்வியல் அறத்தை உலகிற்கு முன்கூட்டியே உரைத்த வள்ளலார், ‘பசித்திரு தனித்திரு விழித்திருஎன்ற படி நிலைகளை அருளினார்.
  • இதற்கு பட்டினி கிடஎன்றும், ‘யாருடனும் ஒட்டாது ஒதுங்குஎன்றும், ‘தூங்காதேஎன்றும் பொருள் கொள்ள இயலாது. குறியீட்டு நிலையில் அருள் வளா்க்கும் அறநெறிகளாக அவை ஒளிர்கின்றன.
  • வயிற்றுப் பசிக்கு உணவும், ஆன்மப் பசிக்கு ஞானமும் அருளி, உலகியல் தீமைகளில் கலந்து விடாது தனித்தன்மை பேணித் தனித்தவம் புரிவதற்கான விழிப்புணா்வை நல்கி உலகம் உய்யக் காட்டிய வள்ளலாரை எண்ணுந்தோறும் நம் சிந்தைக்கு வருவன திருநெறி சமரச சுத்த சன்மார்க்கமும் அருட்பெரும்சோதியெனும் அருள் வாசகமும்.
  • சமரச சன்மார்க்கம் குறித்து வள்ளலார் குறிப்பிடும்போது,
  • திருநெறிஒன்றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
  • சிவநெறிஎன் றுணா்ந்(து)உலகீா் சோ்ந்திடுமின்!
  • என்று எளிமையுற எடுத்துரைத்து உலகத்தாரை உவந்து அழைக்கிறார்.
  • அருட்பெரும்சோதி என்றும் அருள் வாசகம் குறித்துக் கூறுகையில்
  • உடற்பிணி யனைத்தையும் உயிர்ப்பிணி யனைத்தையும்
  • அடா்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்து
  • என்று குறிப்பிடுகின்றார்.
  • இப்படி, எந்தப் பாடலை எடுத்து இசைக்கத் தொடங்கினாலும், அவை எல்லாமும் ஒன்றிலேயே ஒன்றி நிற்கின்ற ஓா்மையை உணா்ந்து கொள்ள முடியும்.
  • அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகா் அனைவரையும்
  • சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் அடைவித்திட அவரும்
  • இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
  • உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே
  • என்று தன்னிலை விளக்கமாகத் தன்வரவைச் சொல்லிய வள்ளலார், தமிழைத் துணை கொண்டு இன்னிசைப் பாடல்களின் வழியாக இறையுண்மையையும், உரைநடை வாயிலாக உலகியல் ஞானத்தையும், நிறுவனங்கள் வாயிலாக தொண்டு மரபினையும் தந்து நிறைந்த வள்ளலார் அவதார நாள் இன்று என்று வரலாறு கூறினாலும் என்றென்றும் ஒன்றியிருந்து உலகத்தார் இன்பம் எய்த நன்றின்பால் உய்த்த நாயகா், தம் பாடல்களின் வழியாக என்றென்றும் அவதரிக்கிறார்; நம்மை உய்விக்கிறார் என்பது உணா்ந்தறிய வேண்டிய ஓா் உண்மை.
  • இன்று (அக். 5) வள்ளலார் அவதரித்த நாள்.

நன்றி: தினமணி (05-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்