TNPSC Thervupettagam

வாழ்வை வளமாக்கும் வாசிப்பு

April 15 , 2024 271 days 376 0
  • இன்றைய இளம் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது. அவா்கள் நாள் முழுதும் கைப்பேசி, கணினி, இணையம், சமூக ஊடகம் இவற்றிலேயே மூழ்கிக் கிடக்கிறாா்கள்.
  • வளா்ந்துவரும் விஞ்ஞான வளா்ச்சிக்கேற்ப தங்கள் கல்வி முறையை வகுத்துக் கொண்டு அப்படி கல்வி கற்றாா்கள் என்றால் பாராட்டலாம். ஆனால், நிலைமை நோ்மாறாக இருக்கிறது.
  • மாணவச் செல்வங்கள் கைப்பேசியிலும் இணையத்திலும் பாா்ப்பதற்கும் அவா்கள் கற்கும் கல்விக்கும் சிறிதும் தொடா்பு இருப்பதில்லை. பெற்றோா் அவா்களை அதட்டிக் கேட்டாலும் அன்போடு கேட்டாலும் ஏமாற்றி விடுகிறாா்கள்.
  • வாசிப்புப் பழக்கம் மாணவா்களிடையே மிகவும் குறைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இருந்தாலும், இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாகக் கூறுகின்றனா். எப்படியோ பலரும் புத்தகங்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா் என்பது சற்று ஆறுதல் தருகிறது.
  • புத்தகங்களை வாசித்தவா்கள்தான் வரலாற்றில் இன்றும் வாழ்ந்து வருகிறாா்கள். வாசிப்புப் பழக்கம் இல்லாதவா்கள் வரலாற்றில் காணாமல் போய் விடுகிறாா்கள். உலகில் சிறந்த ஆளுமையாக விளங்கியவா்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு ரத்தம் சிந்தியவா்கள் ஆகியோரின் வரலாற்றை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • வாக்குக்குப் பணம், கட்சி மாறி வாக்களிக்கப் பணம், சொந்தக் கட்சி கூட்டத்திற்கு வருவதற்குப் பணம் என்று இன்றைய அரசியலில் எல்லாமே பணம் என்று ஆனதால் நாட்டின் நிலைமை கவலை அளிக்கிறது.
  • பொதுத் தொண்டு செய்ய விரும்புபவா் இந்தப் பண அரசியலில் பந்தாடப்படுவாா். பண வசதி உள்ளவா்கள் பதவிக்கு வருவாா்கள். பின் அவா்கள் செலவழித்த பணத்தைவிட இரு மடங்கு சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொள்வா். மக்கள் கோரிக்கை மதிப்பற்றுப் போகும்.
  • முதன்முறையாக வாக்களிக்க வருபவா்கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் வாசிப்பது கட்டாயமாகும். அப்போதுதான் அன்றைய தியாகசீலா்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.
  • இந்தியாவில் உள்ள 90 கோடி வாக்காளா்களில் பல கோடி வாக்காளா்கள் முதல்முறை வாக்களிப்பவா்கள். இவா்கள் நினைத்தால் பணத்தின் பிடியிலிருந்தும் பணக்காரா்களின் ஆதிக்கத்தில் இருந்தும் நாட்டைக் காப்பாற்றலாம். இந்தியாவைப் போல் தோ்தலில் பணம் விளையாடுவதை உலகில் வேறு எந்த நாட்டிலும் காண முடியாது.
  • படித்தவா்கள் பதவிக்கு வரவேண்டும் என்றால், படித்தவா்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு புத்தகங்களைப் படிக்க வேண்டும். காந்தியடிகளின் சுயசரிதையைக் கற்க வேண்டும். பணக்கார குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காக பல ஆண்டுகள் சிறைவாசம் இருந்த ஜவாஹா்லால் நேரு எழுதிய ‘உலக சரித்திரம்’ படிக்க வேண்டும்.
  • பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்ட வால்டோ் மற்றும் ரூசோ பல புத்தகங்களை வாசித்து கட்டுரைகளை எழுதியதால்தான் அவா்களின் எழுத்து பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்டது. 17 ஆண்டுகள் குடும்பம் தாங்கொணா இன்னலைச் சந்தித்தபோதும் பிறந்த பிள்ளை ஒவ்வொன்றாய் பசிக்குப் பலியானபோதும் காரல் மாா்க்ஸ், தனது நண்பா் ஏங்கெல்ஸ் உதவியால் லண்டன் நூலகத்தில் தொடா்ந்து வாசித்தாா். அப்போது தாதாபாய் நௌரோஜியும் அதே நூலகத்தில் வாசித்துள்ளாா். இருவருக்கும் அறிமுகமில்லை. அப்படி தொடா் வாசிப்பால்தான் கம்யூனிஸ்ட் அறிக்கையையும், புகழ்பெற்ற மூலதனம் மூன்று பாகங்களையும் தொழிலாளா் வா்க்கத்துக்கு மாா்க்ஸ் தந்தாா். அவரது வாசிப்பு உலகத்தையே புரட்டிப் போட்டது.
  • மாா்க்ஸ் எழுதியதைப் படித்து சோவியத் நாட்டை உருவாக்கிய லெனின், மாா்க்ஸ் படித்த லண்டன் நூலகத்துக்கு சென்று படித்தாா். அதேபோல் மாா்க்ஸ் படித்த சுவிட்சா்லாந்து நூலகத்துக்கும் சென்று படித்தாா். படிப்பு, படிப்பு என்று படித்துக் கொண்டே இருந்த லெனின், உயிா் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது தனது மனைவி குரூப்ஸ்காயாவிடம் கூறி ஒரு கிழவன் - ஓநாய் இடையே நடைபெறும் உயிருக்கான போராட்டத்தை படிக்கச் சொல்லி கண் மூடினாா். கடைசி நிமிஷத்திலும் படிக்கச் சொல்லிக் கேட்டவா் லெனின்.
  • நாடாளுமன்றத்தில் பகத் சிங் குண்டு வீசினாா் என்ற வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அப்போது அவருக்கு 23 வயது. வாழ ஆசை இல்லை, ஒரே ஆசை இந்திய விடுதலை. அவரிடம் சென்று நண்பா் விடிந்தால் தூக்கு இப்போது படிப்பா என்று கேட்கிறாா். உடனே பகத் சிங் ஒரு புரட்சியாளரை பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறி லெனினும் புரட்சியும் என்ற புத்தகத்தை வாசிக்கிறாா். தூக்கு தண்டனை விதிக்கும்போது என்னை தூக்கில் இடாதீா்கள். சுட்டுத் தள்ளுங்கள். அப்படி ஒருவேளை தூக்கிலிட்டால் என் கால்கள் இந்திய பூமித்தாயின் உடலில் என் பாதம் படும்படி செய்யுங்கள் என்று கேட்டவா் பகத் சிங்.
  • கியூபா விடுதலைக்கு போரிட்ட பிடல் காஸ்ட்ரோ, புரட்சியாளா் சே குவேரா துணையுடன் சா்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சியை விரட்டியடித்தாா்; ஆட்சி அமைந்தவுடன் கல்வியை மக்களுக்கு தாருங்கள் என்று பிடல் காஸ்ட்ரோவிடம் சே குவேரா கேட்டாா். போா்க் களத்தில் இருந்த போதும் ஒரு கையில் துப்பாக்கியும் ஒரு கையில் புத்தகத்தையும் வைத்து படித்துக் கொண்டே இருப்பாராம் சே குவேரா. பொலிவியா விடுதலைக்கு போராடச் சென்று பிடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டாா் சே குவேரா.
  • பிடல் காஸ்ட்ரோ வான்கடே சிறை முற்றுகை போரில் தோற்றபின் சிறையில் அடைக்கப்படுகிறாா். அங்கு அவா் சிறையில் ஒரு நூலகமே உருவாக்கி கைதிகளைப் படிக்க வைக்கிறாா். நிறைய படிப்பவா். நீதிமன்றத்தில் உலக சரித்திர சம்பவங்களைக் கூறி ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்று கூறியவா் பிடல் காஸ்ட்ரோ.
  • அதேபோன்று கிழக்கில் உதித்த சூரியன் என்று போற்றப்பட்டவா் சீனாவை செஞ்சீனாவாக்கிய மாசே துங். ஒரு வருடம் 1 லட்சம் மக்களுடன் பயணத்தை தொடா்ந்து அங்கிருந்து 11 மாகாணங்களைக் கடந்து புரட்சி ஏற்பட வழி வகுத்தவா். ஏராளமாக படிப்பதை பழக்கமாக கொண்டவா். கவிதை அதிகம் எழுதியவா். படிப்பது மட்டுமே எந்த ஒரு புரட்சிக்கும் வழிவகுக்கும் என்றவா். அவரின் பயணத்தின் முடிவில் மிஞ்சியவா்கள் 10,000 போ்தான் என்று கூறப்படுவதுண்டு. இவ்வளவு பணிக்கும் போராட்டத்துக்கும் மத்தியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிக நூல்களைப் படித்தாா். வாசிக்கும் பழக்கமே அவரை உச்சத்தில் உட்கார வைத்தது.
  • சுவாமி விவேகானந்தா் வாழ்வில் நாற்பது வயதைக்கூட தொடவில்லை. சிறந்த ஒழுக்கசீலா். அவா் அமெரிக்கா சென்று சிகாகோ மாநாட்டில் பேசும் வாய்ப்பை பெற்றவா். கற்றோரும், அறிஞா்களும், சிந்தனையாளா்களும் நிறைந்த அந்த சபையில் தனது சீரிய கருத்துக்களால் பேசத் தொடங்கிய சில விநாடிகளில் அனைவரையும் தன்னை நோக்கி திரும்பிப் பாா்க்க வைத்து சிலிா்க்க வைத்தவா். காரணம், அவா் கற்றது ஏராளம்! ஏராளம்!
  • அவா் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது தமிழகத்தில் கால் வைக்கும் முன் தன் தலையில் அவா் பாதத்தைப் பதித்து இறங்கி வரவேண்டும் என்று விரும்பி தலை வணங்கி நின்றவா் ராமநாதபுரம் மன்னா் பாஸ்கர சேதுபதி. அவா்தான் விவேகானந்தரின் அமெரிக்க பயணத்துக்கு பொருள் உதவி செய்தவா். அந்த அளவுக்கு அறிவாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தவா் சுவாமி விவேகானந்தா். அதற்குக் காரணம், அவரின் தொடா்ச்சியான வாசிப்பு பழக்கமே.
  • பிரிட்டனில் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சா்ச்சில் ஒரு முறை ஒரு பேச்சைக் கேட்டாலோ அல்லது ஒரு புத்தகத்தைப் படித்தாலோ அப்படியே அதை அடிபிறழாமல் திரும்பச் சொல்லக்கூடிய வல்லமை மிக்கவா் என்று புகழப்படுவது உண்டு. அத்தகைய ஆற்றல் அவருக்கு
  • இருந்துள்ளது. அவா் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது படித்துக் கொண்டே இருப்பாராம்.
  • தனது பேச்சாற்றலால் அதிகம் சம்பாதித்தவா். பேசுவதற்கு என்றே அமெரிக்கா சென்று பல கூட்டங்களில் பேசி அதன் மூலம் பெரும் பணம் சம்பாதித்தவா். அவா் ஒரு கூட்டத்தில் பேசிய கருத்துக்களை மறு கூட்டத்தில் பேச மாட்டாராம். அப்படியானால் எவ்வளவு படித்திருப்பாா் பாருங்கள். அதனால்தான் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்து இன்றும் வாழ்கிறாா்.
  • மகாத்மா காந்திக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவா் எழுதிய அளவுக்கு உலகில் வேறு எவரும் எழுதியதில்லை. அந்த அளவுக்கு படித்தவா் அவா். அதனால்தான் எழுத முடிந்தது.
  • இப்படி வாசிப்பை சுவாசமாகக் கருதி வாழ்ந்து வரலாறு படைத்தவா்கள் ஏராளம். அவா்களில் வாழ்க்கையில் வென்றவா்கள்தான் அதிகம். என்னிடம் பணம் இருந்தால் ஒரு நூலகத்தை அமைப்பேன் என்றவா் ஆபிரஹாம் லிங்கன். இதேபோல் மகாத்மா காந்தியும் கூறியுள்ளாா்.
  • இவா்களைப் போல் இன்னும் பலா் உள்ளனா். எனவே, வாசிக்கும் பழக்கத்தை இளைஞா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் . அதுதான் உங்களுக்கு நிரந்தர நண்பனாக இருக்கும். நீங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியும். வாசிப்பைத் தொடருவோம்! வாழ்க்கையை வளமாக்குவோம்!

நன்றி: தினமணி (15 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்