TNPSC Thervupettagam

விசாரணைக் கைதிகளுக்கு விடிவு அளிக்கும் முடிவு!

August 30 , 2024 136 days 112 0

விசாரணைக் கைதிகளுக்கு விடிவு அளிக்கும் முடிவு!

  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தில், விசாரணைக் கைதிகளைப் பிணையில் விடுவிக்க வழிவகுக்கும் சட்டப் பிரிவு, சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தைய காலத்துக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
  • இதன் மூலம், புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த 2024 ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பிருந்தே விசாரணைக் கைதிகளாக இருந்தவர்களில் கணிசமானோர் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) சட்டத்தின் பிரிவு 479, விசாரணைக் கைதிகளை எவ்வளவு காலம் சிறையில் வைத்திருக்கலாம் என்பது தொடர்பானது.
  • விசாரணைக் கைதிகளாகச் சிறையில் இருப்போர், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்சத் தண்டனைக் காலத்தில் சரிபாதியைக் கழித்திருந்தால் அவர்களைப் பிணையில் விடுவிக்கலாம் என்று பிரிவு 479இல் கூறப்பட்டுள்ளது.
  • விசாரணைக் கைதி இதற்கு முன்பு எந்த வழக்கிலும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படாதவர் (first time offender) என்றால், தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கழித்திருந்தால் போதுமானது. அதே நேரம் மரண தண்டனை, ஆயுள் தண்டனை அளிக்கப்படக்கூடிய கொடிய குற்றங்களுக்கு இது பொருந்தாது. ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் விசாரணைக் கைதியாக இருப்பவர்களுக்கும் இந்தப் பிரிவின்படி பிணை வழங்க முடியாது.
  • இப்போது நீக்கப்பட்டுவிட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் 436 (ஏ)இன்படி விசாரணைக் கைதிகள், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கக்கூடிய அதிகபட்சத் தண்டனைக் காலத்தில் ஒரு பாதியைச் சிறைச்சாலையில் கழித்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்குப் பிணை வழங்கலாம். புதிய சட்டம், முதல் முறை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கூடுதல் சலுகை வழங்குகிறது.
  • இந்தியச் சிறைகளில் அவற்றின் கொள்ளளவைவிட அதிக சிறைவாசிகள் இருப்பது தொடர்பான பொதுநல மனு மீதான விசாரணையில், உச்ச நீதிமன்றம் பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 479 குறித்த மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. விசாரணையின்போது மத்திய அரசு வழக்கறிஞரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதன்படி உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள சிறைக் காப்பாளர்களிடம் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் தொடர்பான பட்டியலைக் கூடுமானவரை மூன்று மாதங்களுக்குள் தருமாறு கேட்டுள்ளது.
  • இதன் மூலம், சிறையில் பிணை கிடைக்காமல் இருக்கும் விசாரணைக் கைதிகளுக்குப் பிணை கிடைக்க வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியா முழுவதும் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை குறையவும் சிறைச்சாலை நிர்வாக மேலாண்மையில் முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
  • இந்தியச் சிறைகளின் கொள்ளளவு 100 என்று வைத்துக்கொண்டால், ஒவ்வொரு சிறையும் சராசரியாக 130 கைதிகளால் நிரப்பப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிலைக் குழு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சிறைகளில் இருப்போரில் 60%க்கு மேற்பட்டோர் விசாரணைக் கைதிகள் என்பது வருத்தத்துக்குரியது.
  • இதனால், சிறைக் கைதிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூடச் சரியாகக் கிடைக்காத சூழல் நிலவுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதியாகவே நீண்ட காலம் சிறையில் வாடுவது மனித உரிமை நோக்கிலும் அவலத்துக்குரியது.
  • எனவே, பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 479இன்படி பிணைக்குத் தகுதிபெறும் விசாரணைக் கைதிகள் விரைவாக விடுவிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்