TNPSC Thervupettagam

விஜய் குப்தாவின் மீன் வளப் புரட்சி!

September 15 , 2024 73 days 119 0

விஜய் குப்தாவின் மீன் வளப் புரட்சி!

  • ‘பசுமைப் புரட்சி’ செய்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனை எல்லோருக்கும் தெரியும், மீன் வளத்தைப் பல மடங்காக்கிய விஞ்ஞானி எம்.விஜய் குப்தாவை எத்தனை பேர் அறிவார்? இந்தியாவின் தனித்துவமான ‘பத்து விஞ்ஞானிக’ளில் அவரும் ஒருவர்.

யார் இந்த விஜய் குப்தா?

  • மொடாடுக்கு விஜய் குப்தா அன்றைய மதறாஸ் மாகாணத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாபட்லாவில் 1939 ஆகஸ்ட் 17இல் பிறந்தார். தந்தை நாகேந்திர குப்தா வழக்கறிஞர், தாயார் ராஜ்யலட்சுமி. சூரியலங்கா கடற்கரை அவர்களுடைய வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்தான் இருந்தது. சிறுவனாக இருந்தபோது அடிக்கடி தன்னுடைய தந்தையுடன் அந்தக் கடற்கரைக்குச் செல்வார் விஜய். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகிய காட்சிகளைக் காண ஏராளமானோர் அங்கு வருவர். சிறுவர்கள் கடற்கரை மணலில் கோட்டைகளையும் வீடுகளையும் கட்டி மகிழ்வார்கள்.
  • குப்தாவும் அப்படிப் போகும்போதெல்லாம் கடல் கரையோரமாக தந்தை உடன் வர நீரில் நீந்துவார். தலையை தண்ணீருக்குள் மூழ்கவைத்து கண்ணைத் திறந்தபடி நீந்தும்போது மிகவும் சின்னஞ்சிறிய மீன் குஞ்சுகள் உடன் நீந்துவதைப் பார்த்து வியப்பார். பிறகு தந்தையிடம் அதைப் பற்றிச் சொல்ல, மீன்களின் வகைகளையும் பெயர்களையும் படிப்படியாக அறிந்துகொண்டார். ஒரு நாளாவது உயிருள்ள மீனைப் பிடித்துக்கொண்டுபோய் அம்மாவிடம் காட்ட வேண்டும் என்று விஜய்க்கு ஆசை. ஆனால் சிறுவனான விஜயால் மீனைப் பிடிக்கவே முடியவில்லை.
  • ஒருநாள் எலும்பும் தோலுமான கருத்த ஒரு பெரியவர் ஏராளமான மீன்கள் வலையில் துள்ளிக்கொண்டிருக்க, வலையை இழுத்துக்கொண்டே சென்றதைப் பார்த்து வியந்தார். அவர் மீனவர், மீன் பிடிப்பதுதான் அவர்களுடைய தொழில், மீன்களை விற்றுக் கிடைக்கும் பணத்தில்தான் அவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதைத் தந்தையிடமிருந்து தெரிந்துகொண்டார்.
  • அவர் ஏன் அப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறார் என்று கேட்டார் விஜய். இந்தத் தொழிலில் ஆண்டு முழுவதும் வருவாய் கிடைக்காது, மீன்பிடிப் பருவத்தில் கிடைக்கும் வருவாயும் குடும்பத்துக்குப் போதாது என்று பதில் அளித்தார் தந்தை. இந்த மீனவரைப் போல உள்ள அனைத்து மீனவக் குடும்பங்களும் வயிறார உண்ண, எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு ஏற்பட்டது. விஜய் வீட்டில் சைவர்கள் - மீன் சாப்பிட மாட்டார்கள்.

இந்தத் துறைக்குள் வந்த கதை!

  • நாடு விடுதலை அடைந்த காலம் என்பதால் எல்லாக் குழந்தைகளையும்போல, தேச சேவையில் ஈடுபட வேண்டும், ஏழைகளுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று விரும்பினார் விஜய். அதற்கு மருத்துவம் படியேன் என்றார் தந்தை. விஜய்யின் எண்ணமோ வேறாக இருந்தது. பாபட்லாவில் பள்ளிப்படிப்பை முடித்த விஜய் குப்தா, கல்லூரியில் உயிரியலை முதன்மைப் பாடமாகத் தேர்வுசெய்தார். மீன்கள் குறித்து விரிவாக ஆராய்ச்சிசெய்ய விரும்பியே அந்தப் படிப்பைத் தேர்வுசெய்தார்.
  • அடுத்த சில ஆண்டுகள் குண்டூரிலும் பனாரஸிலும் (காசி) கல்லூரிப் படிப்பை முடித்தார். அசாம் மாநிலத்தின் சிவசாகர் மாவட்டத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகவும் பிறகு விலங்கியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். அத்துடன் அசாமில் மீனவர் குடியிருப்புகளுக்குச் சென்று அவர்களுடைய தொழில் குறித்தும் குடும்ப நிலை குறித்தும் உரையாடி நிறையத் தகவல்களைச் சேகரித்தார். மீனவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை விரிவாக அறிந்துகொண்டார்.
  • மீனவர்களிடம் பொருளாதார வசதி இல்லாததால், அவர்களுக்குத் தேவைப்படும் உணவையும் வாங்க முடிவதில்லை, மீன்களை வளர்க்க சொந்தமாக குளத்தையோ குட்டையையோகூடப் பெற முடிவதில்லை என்று தெரிந்துகொண்டார். அவர்களுமே சாப்பாட்டில் மீனைத் தவிர சத்துள்ள வேறு எதையும் சேர்க்க முடியாமல் ஊட்டச்சத்து இல்லாமல் வாடியிருப்பதையும் கண்டார். அந்தக் காலத்தில் பெண்கள், குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவாலும் ரத்த சோகையாலும் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழையில்லாமல் ஏற்பட்ட வறட்சிகளாலும் இரண்டாவது உலகப் போர் காரணமாகவும் மக்களுக்கு உண்ண உணவு தானியங்கள் கிடைக்கவில்லை. எனவே எல்லோரும் அரைப்பட்டினி, முழுப்பட்டினியுடன் காலம் தள்ளினர்.
  • சுதந்திர இந்தியா மெல்ல மெல்ல பொருளாதார வளர்ச்சி பெற்றாலும், கோடிக்கணக்கான ஏழைகள் உண்ண உணவு இல்லாமலும், கிடைக்கும் உணவும் ஊட்டம் போதாமையாலும் வாடுவதை குப்தாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை உணவுக்குக்கூட அல்லல்படும் மக்களுடைய துயரம் வெறும் உணவுப் பிரச்சினை மட்டுமல்ல என்று கருதினார். இந்தக் குறை தீர தன்னால் இயன்றதைச் செய்ய விரும்பினார். மக்கள் எளிதில் மலிவாக வாங்கும் விலையில் சத்துள்ள உணவு அவர்களுக்குக் கிடைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். மீன்தான் இயற்கையான சத்துணவு என்பது அவர் அறிந்ததே.

மீனளமே தீர்வு

  • இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, மீன் வளர்ப்பில்தான் இருக்கிறது என்று முடிவுசெய்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆராய்ச்சிசெய்து டாக்டர் பட்டம் பெற்ற பிறகு 1962இல் கல்கத்தாவிலேயே இருந்த இந்திய வேளாண் ஆய்வுப் பேரவையில் வேலைக்குச் சேர்ந்தார். மீன்களைப் பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார்.
  • உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க மீன்வளத்தைப் பெருக்கப்போகிறேன் என்று அவர் கூறியபோது மற்றவர்கள் வியந்தனர். நாட்டு மக்களில் கணிசமானவர்கள் பெரும்பாலும் சைவ உணவையே நாடும்போது மீன் வளர்ப்பை அதிகப்படுத்துவது பயன் தருமா என்பது அவர்களுடைய கேள்வி. ஆனால், குப்தா தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
  • தனது ஆய்வின் தொடக்க கட்டமாக, நாட்டில் அப்போது மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் என்ன என்று ஆராய்ந்தார். அந்த உத்தி சரியில்லாததால்தான் மீனளம் வளமாக இல்லை என்பதைத் தெரிந்துவைத்திருந்தார். சோதனைக் களத்தில் அவர் செய்த ஏற்பாடுகளால் மீன்களின் பெருக்கம் நான்கு மடங்கானது. ஆனால், மீன் பண்ணைகளிலும் வேறிடங்களிலும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியபோது மீன்களின் எண்ணிக்கை அந்த அளவுக்குப் பெருகவில்லை. மேலும் அதைச் செய்ய அதிகம் செலவிட வேண்டியிருந்தது. அவ்வளவு செலவிட்டும் போதிய மீன்கள் கிடைக்கவில்லை என்றால் என்னாவது என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் ஓய்வு – உறக்கம் இன்றி மீன் பண்ணையிலேயே சதா காலமும் சிந்தனையோடு உழன்றார்.

இரட்டை உத்தி

  • மீன் வளத்தைப் பெருக்க அவர் இரட்டை உத்தியைக் கையாண்டார். முதலில், தன்னுடைய மீன் வளர்ப்புமுறையைப் பண்ணைகளில் அமல்படுத்துவதற்கு, ஏழை மீனவர்களுக்குத் தன் மீது முழு நம்பிக்கை வர வேண்டும் என்று தீர்மானித்து அதற்காக நிறைய நேரம் செலவிட்டார். இரண்டாவதாக, மீன் இருப்பு – வளர்ப்பு குறித்து மீனவர்களிடமிருந்தே தரவுகளைச் சேகரித்தார். இப்போது எவ்வளவு மீன்கள் கிடைக்கின்றன, எந்தப் பருவத்தில் அதிகம் - எப்போது குறைவு, எங்கே அதிகம் – எங்கே குறைவு என்றெல்லாம் மீனவர்களிடம் பேசியே தரவுகளைத் திரட்டிக்கொண்டார். மீன்களின் பெருக்கத்தை அதிகப்படுத்த அவர்கள் கையாளும் வழிமுறைகளையும் கேட்டுக்கொண்டார்.
  • இந்த அளவுக்கு ஒருவர் தங்களுடனேயே நேரத்தைச் செலவிடுகிறாரே என்று மீனவர்களுக்கு அவர் மீது அன்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அவர் சொன்ன மீன் வளர்ப்பு யோசனைகளை அப்படியே பின்பற்றினர். மீதமான அரிசி, கோதுமை உள்ளிட்ட நவதானியங்கள், வீடுகளில் சமைத்து மீந்த உணவுகள், மீன்கள் விரும்பி உண்ணும் கடல் தாவரங்கள் – களைகள், சில இயற்கை உரங்கள் ஆகியவற்றை மீன்களின் குட்டைகளில் – மீன் வளர்ப்பு நீர்நிலைகளில் அதிகம் சேர்க்கச் சொன்னார். அதன் பிறகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களின் அளவையும் தரத்தையும் அளவிட்டு பதிவுசெய்தார்.
  • அவருடைய திட்டத்தை அமல்செய்த முதலாண்டில் ஒரு ஹெக்டேர் மீன் பண்ணையில் (சுமார் 2.5 ஏக்கர்) மீனுற்பத்தி இரண்டு மடங்காக (200%) உயர்ந்தது. மீனவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வெகு விரைவிலேயே அந்த உற்பத்தி ஏழு மடங்கானது (700%). படிப்படியாக அந்தத் தொழில்நுட்பம் நாடு முழுவதும் சிறு மீனவர்களால் பின்பற்றப்பட்டது. 1970களில் ஆண்டுக்கு 75,000 டன்களாக இருந்த மீனுற்பத்தி, 2014இல் 40 லட்சம் டன்களுக்கும் மேல் அதிகரித்தது. இந்தியாவின் நீலப் புரட்சிக்கு மிகப் பெரிய உந்துவிசையைக் கொடுத்துவிட்டார் விஜய் குப்தா. அது ஒரு தொடக்கம் மட்டுமே.
  • மீன் வளர்ப்பில், பணம் படைத்தவர்கள் எல்லாம் அதிக செலவுபிடிக்கும் தொழில்நுட்பங்களையும் வழிகளையும் பின்பற்றினர், ஏகப்பட்ட பொருள் செலவில் மிகப் பெரிய விளம்பரங்களுடன் இறால் பண்ணைகளைக் கடலோரம் நிலங்களில் தொடங்கினர். விஜய் குப்தாவோ ஏழை விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் தொழில்நுட்பத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார். ஒரே குட்டையில் பலரக மீன்குஞ்சுகளை விட்டு வளர்ப்பது, விவசாய நிலங்களில் மீன் குஞ்சுகளை உடன் வளர்ப்பது என்ற அவருடைய தொழில்நுட்பத்தால் ஏழை மீனவர்களுக்கு வருவாய் பல மடங்கு பெருகியது.
  • மீனவர்களுடன் நிறுத்திவிடாமல், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் ஏழு அல்லது எட்டு பேர் கொண்ட குழுவாகத் திரட்டி, தரிசாகக் கிடந்த நிலங்களில் மழைக்காலங்களில் நீரை நிரப்பி அவற்றிலும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டார். மீன் என்றால் மீன் மட்டுமல்ல நண்டு, நத்தை என்று இதர நீர்வாழ்வனவும் பெருகின. விவசாயிகள் சிறிய மீன் பண்ணைகளை அமைக்கவும் மீனளத்தில் ஈடுபடவும் கடன் உதவிகளையும் அரசு மூலம் பெற்றுத்தந்தார்.

நன்றி: அருஞ்சொல் (15 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்