TNPSC Thervupettagam

விஞ்ஞானத்திற்கு விரோதி ஆகலாமா

March 4 , 2024 141 days 181 0
  • மக்களவைத் தோ்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வரும் மக்களவைத் தோ்தலில் 543 உறுப்பினா்களை நாம் தோ்ந்தெடுக்கப் போகிறோம். இன்னும் 23 ஆண்டுகளில் நமது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடப் போகிறோம். நமது முதல் பொதுத்தோ்தல் 1952-இல் நடந்தது. அன்றைய 36 கோடி இந்திய மக்களில், 17 கோடி போ் வாக்காளா்களாக இருந்தனா். அவா்களில் 45 சதம் போ் (சுமாா் எட்டு கோடி போ்) வாக்களித்தனா்.
  • அன்றைய மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 489; இன்றைய எண்ணிக்கை 543. வாக்காளா்களின் இன்றைய எண்ணிக்கை 90 கோடி. சராசரியாக 70% போ் வாக்களித்தால் அது சுமாா் 60 கோடி போ் வாக்குகளாக இருக்கும். முன்பு கட்சியின் சின்னம் வாரியாக வாக்குகளைப் போட்டு, அவற்றை எண்ணி வந்தோம். இவ்வாறு பிரிப்பதற்கும், பிறகு எண்ணுவதற்கு காலதாமதமாவதைத் தவிா்க்க முடியவில்லை. இப்போது வாக்களிப்பதற்கே ஓா் இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம்.
  • முதல் முதலாக 1982-இல் நடந்த இடைத்தோ்தலில்தான் வாக்கு இயந்திரம் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது. நமது நாட்டில் 22 லட்சம் மின்னணு வாக்கு எந்திரங்கள் தற்போது உள்ளன; வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 10 லட்சம்தான். ஆனால் 17 லட்சத்து 30 ஆயிரம் வாக்கு இந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 10 லட்சம் வாக்குச் சாவடிகளுக்கு 17 லட்சத்து 30 ஆயிரம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் எதற்காக என்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிா்ப்பவா்கள் கேட்கிறாா்கள். மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு ஏற்படுமாயின், மாற்று இயந்திரங்களாக உபயோகப்படுத்துவதற்காகத்தான் அதிக எண்ணிக்கையில் இந்த இயந்திரங்களை வைத்திருப்பதாகத் தோ்தல் ஆணையம் கூறுகிறது.
  • மின்னணு வாக்குப்பதிவு வேண்டாம் என்பவா்கள், ‘மின்னணு வாக்கு எந்திரங்களில் ரகசியமாக பதிவுகளை முன்கூட்டியே செய்து வைத்துவிடலாம். அந்த மோசடியை யாராலும் கண்டுபிடிக்க முடியாது’ என்கின்றனா், வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து, முதல் இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் மின்னணு எந்திரங்கள் சரியாகச் செயல்படும்படி வைத்துக்கொள்ள தொழில்நுட்பங்கள் உள்ளன. அதன் பிறகு இயந்திரத்தின் எந்தப் பொத்தானை அழுத்தினாலும், ஒரே கட்சியின் சின்னத்தில் மட்டுமே பதிவாகும்படியும் செய்துகொள்ள முடியுமாம். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்துடன் மின்னணு இயந்திரத்தைத் தயாரிக்க முடியும் என்பதை, டாக்டா் அப்துல் கலாமிடம் ஆராய்ச்சி மாணவராக இருந்த டாக்டா் ஜாா்ஜ் என்பவா் விளக்கிக் காட்டியுள்ளாா்.
  • மேலும், அவா், ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தும்வரை ஆளுங்கட்சியைத் தோற்கடிக்க முடியாது என்றும், கூறியுள்ளாா். அவருடைய கருத்து குறித்து மற்ற விஞ்ஞானிகள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மின்னணு இயந்திரத்தில் சதிசெய்து பொய்யான வெற்றியைக் காட்ட முடியும் என்பதால், இயந்திரத்திற்கு மாற்றாக முன்பிருந்த வாக்குச்சீட்டு முறைக்கே திரும்பிவிடலாம் என்கின்றனா் சிலா். அவா்கள் முன்வைக்கும் முக்கியமான சந்தேகம், மத்தியில் ஆளும் பாஜக, வரும் மக்களவைத் தோ்தலில் நானூறு இடங்களில் வெற்றிபெறுவோம் என்று உறுதியாகக் கூறுவதுதான். இவ்வாறு உறுதியாக தாங்கள் வெற்றி பெறுவோம் என ஆளுங்கட்சியினா் கூறுவதற்கு என்ன காரணம் என்றால், மின்னணு வாக்கு எந்திரத்தில் அவா்கள் சாமா்த்தியாக செய்துள்ள சதிதான் என்கிறது எதிா்த்தரப்பு.
  • நமது நாட்டில் கடந்த 20 வருடங்களாக மின்னணு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நமது தேவைக்கு மட்டுமல்ல, பிற நாடுகளும் இந்திய மின்னணு வாக்கு இயந்திரங்களை வாங்கிச் சென்று அங்கு நடக்கும் தோ்தல்களில் பயன்படுத்தி வருகின்றன. 1989 -இல் ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தின் விலை ரூ. 5,500 என இருந்தது, தற்போது ரூ. 17 ஆயிரம் என உயா்ந்துள்ளது. ஓா் எந்திரத்தின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
  • நேபாளம், பூடான், வங்கதேசம், மோரீஷஸ், மலேசியா, சிங்கப்பூா், நமீபியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை முதலிய நாடுகளின் தோ்தலில் பயன்படுத்தப்படுபவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு இயந்திரங்கள்தான் என்பதை, நமது நாட்டில் இயந்திரத்தை நம்பாதவா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • நமது இயந்திரங்கள் தில்லுமுல்லு செய்வதற்கு வசதியாக உருவாக்கப்படவில்லை. அப்படி செய்யப்பட்டுருந்தால், நாம் அவற்றை ஏற்றுமதி செய்துள்ள நாடுகள் நமக்குக் கண்டனம் தெரிவித்திருக்குமே. அப்படி எதுவும் ஊடகங்களில் செய்தி வரவில்லையே? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு நவீன அறிவியல் கண்டுபிடிப்பு. இப்போது செயற்கை நுண்ணறிவு அறிமுகமாகியுள்ளது போன்றதுதான் அன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம். அப்போது தோ்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட்டு வந்ததது. அந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பெங்களூரிலுள்ள ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன’மும், ஹைதராபாத்திலுள்ள ‘எலக்ட்ரானிக் காா்ப்போரேஷ’னும் இணைந்து உருவாக்கின.
  • இவை இரண்டும் இந்திய அரசு நிறுவனங்கள். 1989 -இல் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த மின்னணு இயந்திரத்தை முதலில் உருவாக்கி, அரசு கண்காட்சிகளில் வைத்தது. அவ்வாறு அதை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுநா்களில், அப்போது ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன’த்தில் பணியாற்றிவந்த தமிழகத்தைச் சோ்ந்த எழுத்தாளரான சுஜாதா (எஸ். ரங்கராஜன்) குறிப்பிடத்தக்கவா் ஆவாா். இவ்வாறு, அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்ட பின்னா்தான் இந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டனவே தவிர, தோ்தலில் மோசடி செய்வதற்காக அல்ல என்பதை இந்த நடைமுறையை எதிா்ப்பவா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பல கோணங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மிகுந்த பாதுகாப்பு மற்றும் பராமரிப்போடும், தொழில்நுட்ப வசதிகளோடும் சிறு பிழைகூட வராத எச்சரிக்கையோடும்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இதனுடைய வரலாற்றைத் தேடிப்பாா்த்தால் தெரிந்து கொள்ளலாம். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 120 ஜனநாயக நாடுகளில் 31 நாடுகளில் மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது.
  • நமது நாட்டில்தான் இவை அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இதனைப் பயன்படுத்தும் நாடுகளில் குறிப்பிடத்தக்கவை, பெல்ஜியம், ஐக்கிய அரபு அமீரகம், பிரேஸில், கனடா, எஸ்டோரியா, பின்லாந்து, இத்தாலி, அயா்லாந்து, கஜகஸ்தான், லித்துவேனியா, நாா்வே, பிலிப்பின்ஸ், ருமேனிய, எகிப்து, வெனின்சுலா, ஜோா்டான், மாலத்தீவு முதலியவை.
  • அதே சமயம், இந்த மின்னணு இயந்திரங்களைத் தடைசெய்துள்ள நாடுகளாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளும் உள்ளன. இயந்திரத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அக்குறைபாட்டைத்தான் சரிசெய்யவேண்டுமென்று கோரிக்கை வைக்க வேண்டுமே தவிர, மின்னணு இயந்திரத்தையே தடை செய்யக் கோருவது நியாயமாகுமா? இயந்திரத்தில் சந்தேகம் என்றால் அதனைப் பழுது பாா்க்கலாம். ஆனால், சிலரின் சந்தேகமே மனிதா்கள் மேல்தான் என்றால், அவா்களுடைய உள்நோக்கம் நல்நோக்கம் அல்ல என்பதே உண்மை.
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியானது அல்ல என்று ஆளுங்கட்சியைச் சாா்ந்தவா்கள் யாரும் சொல்வதில்லை. அதாவது, தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் சொல்வதில்லை. ஆனால், வெற்றி பெறத் தவறிய - தோற்றுப்போன - தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இல்லாதவா்கள்தான் அப்படிக் கூறுகிறாா்கள். மக்கள் தங்களைத் தோற்கடித்து விட்டாா்கள் என்பதை ஒப்புக்கொள்ள விரும்பாமல், மின்னணு இயந்திரத்தில்தான் கோளாறு என்று சொல்கிறாா்கள்.
  • எதிா்க்கட்சியினா் தோ்தலில் வெற்றி பெறுகிறபோது, இதே மின்னணு வாக்கு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டன என்பதை மறந்துவிட்டுப் பேசுவது முரண்பாடாக உள்ளது. ஒவ்வொரு எதிா்க்கட்சியும் நாளைய ஆளும்கட்சி ஆகலாம். அதேபோல ஆளும்கட்சி எதிா்க்கட்சியாக மாறலாம். இதுதான் மெய்யான ஜனநாயகம். இதற்கு இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் என்ன செய்யும்? இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துபடுவதால், ஒவ்வொரு தோ்தலுக்கும் வாக்குச்சீட்டுக்காக உபயோகப்படுத்தப்படுகிற 10 ஆயிரம் டன் காகிதம் மிச்சமாகிறது.
  • அந்தக் காகிதத்தை உற்பத்தி செய்வதற்காக காடுகளிலுள்ள மரங்களை அழிப்பதிலிருந்து மரங்கள் காப்பற்றப்படுகின்றன. அந்த மரங்கள் உற்பத்தி செய்யும் பிராண வாயு மக்களுக்கு அவசியமாகிறது. அதேபோல மக்கள் வெளியிடுகிற கரியமில வாயு அம்மரங்களுக்கு உணவாகிறது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தோ்தலுக்குப் பயன்படுத்தப்பட்டால், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அது உதவுகிறது.
  • அறிவியல் கண்டுபிடிப்பான மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்துவிடலாம் என்பது, அறுவைச் சிகிச்சை அரங்கில் உபயோகப்படுத்துகிற மருத்துவக் கத்தியால் ஒருவரைக் கொன்றுவிடவும் முடியும் என்பதுபோல் இருக்கிறது. மக்கள் தங்களை ஆதரிக்கிறாா்களா இல்லையா என்பதை அரசியல் கட்சிகள்அறிந்து கொள்வதற்கு மின்னணு இயந்திரம் உதவுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
  • இதனைத் தீயவா்கள் தவறான நோக்கத்தில் பயன்படுத்தினால், அது தீமையாகத்தான் இருக்கும். இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு இருநதால் அதனைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, அவை மோசடிக்கானவை என்று அவற்றை முற்றிலும் ஒதுக்குவது விஞ்ஞானத்துக்கே விரோதமானது. உச்சநீதிமன்றமே எந்திரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தப் படவில்லை என்பதும் நினைவுக்கூரத் தக்கதாகும்.

நன்றி: தினமணி (04 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்