TNPSC Thervupettagam

விஞ்ஞான் பிரசார் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்

May 18 , 2023 597 days 402 0
  • இந்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம், விஞ்ஞான் பிரசார். அறிவியல் பரப்புதல், அறிவியல் தொடர்பியல், அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் விதைப்பது ஆகியவற்றுக்காக 1989இல் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு இப்போது முடிவுரை எழுதப்படவிருக்கிறது. இதற்கு மாற்றாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்குள்ளேயே ஒரு சிறு அலகை (Small unit) ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.
  • விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தை மூடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி செலவைக் குறைக்க முடியும் என்கிறது நிதி ஆயோக். ஆனால், இந்தியாவில் அறிவியலைப் பரப்புவதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இந்த அமைப்பை மூடுவதன் மூலம், நாட்டுக்கு நீண்ட காலத்துக்கு ஏற்படும் இழப்பைச் சரிகட்ட முடியாது என்பதே உண்மை.

முக்கியமான அமைப்பு:

  • அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் கொண்டுசெல்வது அரசின் கடமை என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் 51A (h). அதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசு அறிவியல் - தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் பிற நிறுவனங்களைக் காட்டிலும் நாட்டின் வளர்ச்சிக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மகத்தான பங்காற்றியுள்ளது.
  • அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த வட்டார மொழிகளிலேயே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பணியையும், எந்த ஒன்றையும் கேள்வி கேட்கும் சிந்தனையை வளர்த்தெடுக்கும் பணியையும் மேற்கொண்டுவரும் அமைப்பு இது. மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், பெண்கள் எனச் சமூகத்தின் அனைத்து அடுக்குகளில் உள்ள மக்களையும், புவியியல்ரீதியாக எளிதில் அணுக இயலா மக்களையும் நேரடியாக அணுகி, அறிவியல் பரப்புதல் - வளர்ச்சி சார்ந்த பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய அறிவு வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் விஞ்ஞான் பிரசார் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்காற்றியுள்ளது.

குறிப்பிடத்தக்க பணிகள்:

  • Dream 2047’ என்னும் (ஆங்கிலம் - இந்தி) மாத இதழை விஞ்ஞான் பிரசார் வெளியிட்டுவருகிறது. இந்த இதழ் கல்லூரி மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் அறிவுக் கருவூலமாக விளங்குகிறது. இதில் தலைசிறந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து பல்வேறு புத்தாக்க அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகின்றனர்.
  • அறிவியலை அவரவர் தாய்மொழியில் எடுத்துச்செல்லும் வகையில், விஞ்ஞான் பாஷா (Vigyan Basha) திட்டத்தை இந்நிறுவனம் முன்னெடுக்கிறது. இது அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள மொழிகளை மட்டுமல்ல, அதையும் தாண்டி பெரும்பாலான பழங்குடி மக்கள் பேசும் மொழிகளையும் இணைக்கும் உன்னதமான திட்டம் ஆகும்.
  • தவிர, வங்காளம், தமிழ், கன்னடம், உருது, குஜராத்தி, மராத்தி ஆகிய இந்திய மொழிகளில் பல்வேறு அறிவியல் நூல்கள் விஞ்ஞான் பிரசார் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. ‘தஜாசஸ்’ (உருது), ‘அறிவியல் பலகை’ (தமிழ்), ‘பிக்யான் கதா’ (வங்காளம்), ‘குதுகல்’ (கன்னடம்) ஆகிய மாத இதழ்களையும் வெளியிட்டுவருகிறது.
  • இதன் மூலம், அறிவியலைத் தாய்மொழியில் எழுதும் அறிஞர்கள், அறிவியல் பார்வையும் செயல்களையும் உள்ளடக்கிய வல்லுநர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைக்கும் பணியையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது. மேலும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அறிவியல் எழுத்தாளர்கள் எழுதிய 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து வெளிவரும் ஆராய்ச்சி வெளியீடுகளை எளிய அறிவியல் செய்திக் கட்டுரைகளாகவும், எளிதில் மக்களுக்குப் புரியும் கதைகளாகவும் மாற்றி அனைவருக்கும் அறிவியல் செய்தியைக் கொண்டுசேர்க்கும் பணியை ‘India Science Wire’ மூலம் இந்நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. ‘India Science TV’ எனும் ஓடிடி அலைவரிசையையும் நடத்துகிறது.
  • இதன்மூலம் அறிவியல் தகவல்கள் அடங்கிய காணொளிகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு வருகிறது. அரசு சார்ந்து இயங்கும் அறிவியல் - தொழில்நுட்ப அலைவரிசையான இதன் பயன்பாடு, இளைய தலைமுறையினரைப் பெரிதும் ஈர்த்துள்ளது. குறைந்த காலத்தில் (2 ஆண்டுகளில்) 2,000-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணப்படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. புதிய அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த காணொளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. http://www.indiascience.in/ எனும் இணையதளத்தின் மூலம் இந்நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

அறிவியல் திருவிழாக்கள்:

  • சர்வதேச அளவிலான அறிவியல் திருவிழாக்களை (India International Science Festival) ஒவ்வோர் ஆண்டும் ஒருங்கிணைத்து விஞ்ஞான் பிரசார் நடத்துகிறது. ஐநா அவையால் அங்கீகரிக்கப் பட்ட சர்வதேச ஒளி ஆண்டு, சர்வதேச வானியல் ஆண்டு, சர்வதேச உயிர்ப் பன்மைப்பாதுகாப்பு ஆண்டு போன்ற ஆண்டுகளின் முக்கியத்துவத்தை நிகழ்வுகளாகப் பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தி வெற்றிகண்டுள்ளது.
  • இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட அறிவியல் நாள், கணித நாள், சுற்றுச்சூழல் நாள் போன்றவற்றையும் மக்களிடையே எளிய முறையில் வட்டார மொழியில் கொண்டுசெல்லும் பணியை மேற்கொண்டுள்ளது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம், நிழல் இல்லா நாள், கோள்களின் ஒருங்கமைவு, வெள்ளி இடைநகர்வு என்பன போன்ற அரிய வான் நிகழ்வுகளை மக்களிடையே அறிவியல்பூர்வமாகக் கொண்டுசென்றதில் விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் பங்கு அளப்பரியது.

நம்பகமான அறிவியல் தகவல்கள்:

  • அகில இந்திய வானொலி மூலம் நாடகங்கள், கதைகள் வாயிலாக அறிவியல் பரப்புவது இந்நிறுவனத்தின் முக்கியப் பணி. நாடு முழுவதும் உள்ள 118 வானொலி நிலையங்களிலும் 19 தேசிய மொழிகளில் 1,040 நிகழ்வுகளை விஞ்ஞான் பிரசார் நடத்தியுள்ளது. தற்போது செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை, தகவல்களைமதுரை வானொலி நிலையம் மூலம் விஞ்ஞான் பிரசார் நடத்தி வருகிறது.
  • பெருந்தொற்றுக் காலத்தில் நம்பகமான, அறிவியல்பூர்வமான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை விஞ்ஞான் பிரசார் மேற்கொண்டது. தடுப்பூசித் தயாரிப்பு பற்றிய உண்மைத் தகவல்களை நேரடியாக அறிவியல் ஆய்வகங்களிலிருந்து பெற்று வெளியிடும் பணியை முன்னெடுத்தது.
  • பள்ளி, கல்லூரிகள் - உள்ளூர் அளவிலான சிறு அறிவியல் குழுக்களை [VIPNET - Vigyan Prasar Network of Science Clubs] மூலம் நாடு முழுவதும் இணைத்து, அறிவியல் பரப்புதலில் சாதனை படைத்த இந்நிறுவனம், அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல் மன்றங்களை அமைத்து வெற்றி கண்டுள்ளது.
  • துறை சார்ந்த நிபுணத்துவம், திறன் வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கி வளர்ந்த இந்நிறுவனம், யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் அறிவியல் பரப்புதலுக்கான ‘கலிங்கா’ விருது, அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருது, இந்திரா காந்தி அறிவியல் விருது, சிறந்த அறிவியல் நூல்களுக்கான ஆத்மாராம் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளது.

தவறான முடிவு:

  • இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, தேசக் கட்டுமானத்தில் பெரும் பங்காற்றியுள்ள அறிவுசார்ந்த அமைப்பைக் கலைப்பது தேசத்தின் அடுத்தகட்ட முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக அமையும். அறிவியல் பரப்புதலை ‘அவுட்சோர்சிங்’ முறையில் செய்யும்போது, அதற்கான உண்மையான பலன் கிட்டாமல் போய்விடும். விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தை மூடும் முடிவு தொலைநோக்குப் பார்வையற்றது; நாட்டு நலன்கள் - வளர்ச்சிக்கு எதிராகவே இந்நடவடிக்கை அமையும்.
  • அனைத்து மொழிகளிலும் அறிவியல் தொடர்பியல் வலுப்படுத்தப்பட வேண்டும். அறிவியல் தொடர்பியலை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டியது நாட்டின் அறிவுத் தேவையைப் பூர்த்திசெய்ய ஏதுவாக இருக்கும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் அரசியல் சாசனக் கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே, விஞ்ஞான்பிரசார் நிறுவனத்தை அரசு கைவிட்டுவிடக் கூடாது!

நன்றி: தி இந்து (18 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்