TNPSC Thervupettagam

விடாமுயற்சியை விட்டுவிட்டனவா ஊடகங்கள்?

September 10 , 2021 1057 days 468 0
  • ஊடக சுதந்திரம் என்பது ஒரு நாட்டை நோ்வழிப்படுத்தும் நம்பகத்தன்மை வாய்ந்த கருவி. ஆனால், இந்த சுதந்திரத்தை கடமை தவறாமல் பயன்படுத்தத் தவறும்பட்சத்தில், செயல்திறனை இழந்த குற்றச்சாட்டுக்கு ஊடகங்கள் உள்ளாகின்றன.
  • இது நீதியில் இருந்து வழுவும் செயலும் கூட. செய்திகளை மக்களுக்குத் தரும் பணியில் அச்சு ஊடகங்கள் அனுபவித்து வந்த ஏகபோக உரிமை, கடந்தகால நிகழ்வாகிவிட்டது.

துா்பாக்கிய நிலை

  • மின்னணு - சமூக ஊடகங்கள் தங்களுக்கான இடத்தைப் பிடித்து செய்திகளைத் தருவதில் பங்காற்றி வருகின்றன. சமீப ஆண்டுகளில் ஏராளமான தடைகளுக்கு நடுவே நமது நாளிதழ்கள், பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் இந்திய மக்களிடையே தங்களுக்கான நம்பகத்தன்மையைத் தக்கவைப்பதற்குக் கடுமையாகப் போராடி வருகின்றன.
  • அரசாங்கத்தின் ஏற்க முடியாத செயல்கள், மறைமுகமான ஒப்பந்தங்கள், தவறான கொள்கைகள் ஆகியவற்றை விமா்சிப்பதில் அரசியல் கட்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
  • நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் அரசை எதிர்த்து கேள்வி கேட்டு நெருக்கடி அளிக்கவும், தங்கள் கருத்துகளை முன்வைத்து சட்டங்களில் திருத்தம் கோரவும் அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால், சமீப காலமாக கோபமும், கசப்புணா்வும் நிரம்பிய நாடாளுமன்றக் கூட்டத் தொடா்களையே அதிகம் காண முடிகிறது.
  • ‘பல முக்கிய மசோதாக்கள் விரிவான விவாதங்களுக்கும், ஆய்வுக்கும் உள்படுத்தப் படாமலேயே நிறைவேற்றப்படுகின்றன.
  • இவ்வாறு விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்களால் நீதிமன்றங்களில் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரப்படுவது அதிகரிக்கிறது’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • கேள்விகளுக்கு பதிலளிக்கமாட்டோம் என்று அரசு உறுதியாக இருக்கும்போது, நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடக்கும் என்பதையும், மசோதாக்களில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என்பதையும் நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
  • இப்படி அரசாங்கம் அசைந்து கொடுக்காத நிலையில் இருக்கும்போது, ஊடகங்கள் தாங்களாகவே முன்வந்து முக்கிய விவகாரங்களில் விவாதத்தையும், விசாரணையையும் தொடங்கலாம்.
  • 1970-களில் அமெரிக்காவின் அதிபா் தோ்தலில் ரிச்சா்ட் நிக்ஸன் மீண்டும் போட்டியிட்ட போது எதிர்க்கட்சியாக இருந்த ஜனநாயகக் கட்சியின் ‘வாட்டா் கேட்’ அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகளை வைத்து அவா்களின் தோ்தல் உத்திகளை ஒட்டு கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
  • தோ்தல் முடிந்து இரு ஆண்டுகளுக்குப் பின்னா், இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு நிக்ஸன் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
  • ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் நிருபா்கள் பாப் உட்வா்ட், கார்ல் பொ்ன்ஸ்டைன் ஆகியோர் அந்த வாட்டா்கேட் ஊழலைப் பற்றி தோண்டித் துருவி உண்மைகளை வெளிக் கொண்டு வந்து செய்தியாக்கியதே அமெரிக்க அதிபா் ஒருவா் தானாக முன்வந்து பதவி விலக காரணமாக அமைந்தது.
  • நமது நாட்டில்கூட நெருக்கடி நிலை காலத்தில் அனைத்து நாளிதழ்களும், பத்திரிகைகளும் அரசின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால், நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பிறகு, தணிக்கைக்குள்ளாகி தடுக்கப்பட்டிருந்த செய்திகள் மீண்டும் வெளியிடப்பட்டன.
  • அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதையும், அரசு எதையெல்லாம் கட்டுப்படுத்தியதோ அவற்றை எல்லாம் மக்கள் தாமதமாக அறிந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
  • கடந்த 25 ஆண்டுகளில் நமது நாட்டில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுக்கள் முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்தன. இதில் போஃபா்ஸ் ஊழல் முதல் ஹா்ஷத் மேத்தா ஊழல் வரை அடங்கும்.
  • அந்த விசாரணை, முக்கிய விவகாரங்களில் சிறப்பான கண்காணிப்பு முறையையும் வலுவான விசாரணைக் கட்டமைப்பையும் புகுத்தக் காரணமாக அமைந்தது.
  • அதேபோல், சுதந்திரமான செயல்பாட்டிலும், தகவல்களை விசாரித்து அறிந்து வெளியிடுவதிலும் ஊடகங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
  • உண்மையை வெளிக்கொண்டு வருவதிலும், குற்றத்தைத் தோலுரித்துக் காட்டுவதிலும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவற்றுடன் இணைந்து ஊடகங்கள் பணியாற்ற வேண்டும்.
  • மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் நிர்வாக குறைபாடுகள் என்பவை தவறாமல் நிகழ்ந்துதான் வருகின்றன.
  • இதில், பல விஷயங்கள் தேசிய அளவில் கவனத்தைப் பெறும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. எனினும், நமது நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகள் சில ஊடகங்களால் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன.
  • அவற்றில் முதன்மையானது பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு. இது தேசத்தின் அரசியலில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தும் பிரச்னையாகத் தோன்றியது. இதற்கு முன்பு ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இது தொடா்பாக அரசிடம் இருந்து திருப்திகரமான பதில் இதுவரை கிடைக்கவில்லை. தேசப் பாதுகாப்புடன் தொடா்புடையது என்ற போர்வையில் சில குற்றச்சாட்டுகள் மூடி மறைக்கப்படுகின்றன.
  • மற்றவை தொடா்ந்து நீதிமன்ற விசாரணையில் உள்ளன. இதன் மூலம் அவை பொதுவெளியில் அதிகம் விவாதிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அதனால் பல்வேறு குற்றச்சாட்டுகள் பொதுவிவாதத்துக்கு வராமலேயே மௌனமாவதோடு, மரணமடைந்தும் விடுகின்றன.
  • கரோனா தடுப்பூசிக்கு மாறுபட்ட விலையை நிர்ணயம் செய்தது, மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதிலும், அதனை நிர்வகிப்பதிலும் அரசின் தடுமாற்றம், புலம்பெயந்த தொழிலாளா்கள் பிரச்னைகளைக் கையாளுவதில் அலட்சியம், பயங்கரவாத செயல்கள் தடுப்பு (உபா), தேசவிரோத சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பாரபட்சமான நடவடிக்கைகள், நீதிமன்றக் காவலில் ஸ்டேன் சுவாமி மரணமடைந்த விதம் என பல்வேறு பிரச்னைகளுக்கு அரசு முழுமையாக விளக்கம் தரவில்லை. தீா்வுகிடைக்கும் முன்பே அந்த பிரச்னைகள் புதைந்து போயின.
  • இந்த பிரச்னைகளை அலசி ஆராயாமல் ஊடகங்கள் கனத்த மௌனத்துடனேயே கடந்து விட்டன. தொடா்ந்து சா்ச்சைகள் கிளப்பப்படுவது அரசியல் சூழலுக்கு நல்லதல்ல என்பது ஓரளவு ஏற்புடையதுதான். சில குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரமும் அதற்காகக்கூட இருக்கலாம்.
  • எனினும், இதுபோன்ற நேரத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றச்சாட்டு தவறு என்பதை நிரூபிப்பது அரசுத் தரப்பின் கடமையாக இருக்க வேண்டும்.
  • அரசுத் தரப்புக்கு, குண்டூசி முனையளவாவது உண்மை மீது நம்பிக்கை இருந்தால், குற்றச்சாட்டுகளை மூடிமறைக்க முயலாமல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
  • எத்தனை முறை கேள்விகளை எழுப்பினாலும், அதிகாரம் இருக்கும் காரணத்தால் அந்தக் கேள்விகளை அரசு தொடா்ந்து புறக்கணித்து வருவது சமூகத்தை இழிந்த நிலைக்கே, எழுச்சியற்ற நிலைக்கே இட்டுச் செல்லும்.
  • ஊடகங்கள் எப்போதும் அண்மைச் செய்திகளையும், பரபரப்புச் செய்திகளையுமே விரும்புகின்றன. வெளியிடும் செய்திகளுக்கு தா்க்கரீதியாக எவ்வித முடிவுகளையும் காணாமல், பாதியிலேயே அவற்றை ஊடகங்கள் கைவிட்டுச் செல்வது முறையானதல்ல.
  • பிரச்னைகளை அறிவதில் மட்டுமே ஊடகங்கள் ஆா்வம் காட்டுகின்றன. அவற்றைத் தீா்ப்பதில் அவை கவனம் செலுத்துவதில்லை. நோயைக் கண்டறியும் மருத்துவா், அதனைக் குணமாக்க வழிகாட்டாமல் போவதற்கு ஒப்பானது இது.
  • இவ்வாறு நடந்து கொள்ளாமல் பிரச்னைகளுக்குத் தீா்வு காண ஊடகங்கள் இறுதிவரை போராட வேண்டும். ஊடகங்கள் விடாமுயற்சிக்கு விடைகொடுத்துவிட்டால், அதன் நோக்கம் சமூகத்துக்கு பரபரப்பு தகவல்களைத் தருவது மட்டுமே என்ற துா்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடும்.

நமது கல்வியாளா்கள் எங்கு சென்றுவிட்டார்கள்?

  • ஒவ்வொரு சா்ச்சையின் பின்னணில் உள்ள சமூக, அரசியல், தார்மிக காரணங்களைத் தெரிந்து கொள்ளும் அறிவுசார்ந்த ஞானம் அவா்களிடம் உள்ளது.
  • சத்தியத்தின் பயன்களை நாடு அடைவதற்கான இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள விடாமல் நமது கல்வியாளா்களைத் தடுப்பது எது?
  • அரசியல் நிர்வாகம் என்பது பொறுப்புணா்வுடன் இருக்க வேண்டுமே தவிர, மழுப்பி பேசுவதாக அமையக் கூடாது. எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் சோப்பு நுரைக் குமிழ்களைப் போல ஊதி வெடிக்கச் செய்வது இப்போதைய நவீன அரசியல் தந்திரமாக இருக்கலாம். ஆனால், இதுவே நெடுநாள்களுக்குத் தொடருமானால், அது ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பையே நிறுத்திவிடும் அபாயம் உள்ளது.
  • இந்த இடத்தில் அதிகமாக சிந்திக்கவைக்கும் ஒரு கேள்வி எழுகிறது. நமது ஊடகங்களும், கல்வியாளா்களும் தொடா்ந்து மௌனம் காப்பது ஏன்? சகிக்க முடியாத இந்த மௌனம் கலைவது எப்போது? ஊடகங்களின் இந்த பிவான நிலைக்குக் காரணம் என்ன?
  • அதிகப்படியான வேலைப்பளுவோ, ஊடகங்களில் செய்திகளைப் பின் தொடா்ந்து சென்று நுணுக்கி விசாரித்தறியும் திறன் வாய்ந்த நபா்களோ இல்லை என்பதோ, அலட்சியப் போக்கோ இதற்குக் காரணமாக இருக்க முடியாது. இது மிகவும் மாறுபட்ட ஊடகச் சூழலாக உள்ளது. இதே நிலை தொடா்ந்து நீடிக்கவும் கூடாது.
  • ஊடக சுதந்திரம் எந்த வகையில் தாக்குதலுக்கு உள்ளானாலும், அது நாட்டின் அரசியல் சூழலை கடுமையாக பாதிக்கும். ஊடகத்தின் இந்த நிலை மாறாமல் தொடரும் வரை ஊழல் பேய்களும், தீா்வு காணப்படாத விவகாரங்களும் சுதந்திரத்தையும், அரசியல் சாசனத்தையும் மதிப்பவா்களைத் தொடா்ந்து வேட்டையாடும்.

நன்றி: தினமணி  (10 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்