TNPSC Thervupettagam

விடுதலை செய்யும் ஒன்றாகட்டும் இயற்கை விவசாயக் கொள்கை

December 21 , 2022 682 days 420 0
  • தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னோடியாகவும், முற்போக்கானதாகவும் இருந்து வரும் மாநிலம். ஒருவித சமச்சீரான, சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியைக் கொண்ட மாநிலம். இதற்கு முக்கியக் காரணம் இந்த மண் பரப்பு கல்விக்குக் கொடுத்த முதன்மைத் தன்மை. "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே", "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" போன்றவை தமிழ்ச் சமூகம் கல்விக்கு கொடுத்த இடத்தைத் தெரிவிக்கும்.
  • கீழடியின் பானைகளில் உள்ள எழுத்துக் கீரல்கள், தமிழ்ச் சமூகத்தில் கல்வியறிவு முழுதும் பரவலாக இருந்திருந்ததைக் காட்டுகிறது. கல்வி, தமிழ்ச் சமூகத்தின் குருதியில் கலந்துள்ள ஒன்று. இந்தக் கல்வி என்ற தனித்துவமான தன்மை தமிழகத்து இயற்கை விவசாயத்தை விதைப்பதிலும், விளைவிப்பதிலும் இருந்து வருகிறது.
  • தமிழ்ச் சமூகத்தின் வேளாண் அறிவு மிக ஆழமானது, மிக நீண்ட நெடிய மரபுடையது. போரில் இறந்தவர், புலியைக் கொன்றவர், கள்வர்களிடம் சண்டையிட்டு மரணித்தவர் நினைவாக புதிய நெல் ரகங்களை உருவாக்கும் அளவிற்கு அறிவு நுட்பம் வேளாண் சமூகத்தில் இருந்துள்ளது. சமூகத்தின் இந்த நீண்ட நெடிய அறிவு வளத்தைத்தான் இயற்கை விவசாய முறையாக விதைத்தார் நம்மாழ்வார். "அடி காட்டுல – நடு மாட்டுல
  • நுனி வீட்டுல அது என்ன?", "சாயங்காலம் கைபிடித்து, சாமத்தில் கருதரித்து, விடியல்ல தாயையும் பிள்ளையையும் பிரிச்சாச்சு-அது என்ன"என விடுகதைகளில், பழமொழிகளில், பாடல்களில் புதைந்துள்ள அறிவையும் அறிவியலையும் கொண்டு தமிழக இயற்கை விவசாயத்திற்கு அறிவுத் தளம் அமைத்தார் நம்மாழ்வார். தமிழக இயற்கை விவசாயம் இந்த தமிழ்ச் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுத் தளத்தில் இருந்து புதிய வேளாண் அறிவியல், சமூக அறிவியல் கல்வியாக வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்று.
  • வேளாண்மை நமக்கு சுமார் 10,000 ஆண்டு கால கைப் பழக்கம். இத்தனையாயிரம் தலைமுறைகளின் அனுபவங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் அறிவுப் புலத்தின் அடையாளம் நம் விவசாயிகள். இந்த சமூகத்தின் அறிவை, அனுபவத்தை உழவர்களுக்குச் சுட்டிக் காட்டுவதில் தொடங்கி, சமூகத்தின் வேளாண் மரபு அறிவிற்குள் உள்ள அறிவியலை புரிய வைத்தல் மூலம் வளர்த்தெடுத்துள்ளார் நம்மாழ்வார்.
  • நம்மாழ்வார் இயற்கை விவசாயம் மூலம் செய்தது, மூளைக்குள் செய்யப்பட்ட முதலீடு. விவசாயியின் மூளைக்குள் செய்த அறிவு முதலீடு. அனுபவ அறிவில் உள்ள அறிவியல் அறிவைச் சொல்லும் முதலீடு. மீனைப் பிடிக்க சொல்லிக் கொடுத்த வழி.
  • முந்தைய தலைமுறை விவசாயி தன் நிலப்பரப்பின் சூழலைப் பராமரிக்கும் மேலாளராக (Eco-system manager) இருந்து வந்தார். தன் நிலத்திற்கு, தன் ஒவ்வொரு வயலிலும் என்னென்ன விதைக்க வேண்டும், எப்போது விதைக்க வேண்டும் என்ற அறிவைக் கொண்டவராக இருந்தார். இதை இந்தியக் கண்டத்திற்கு அப்பால் இருந்து வந்து சென்றவர்கள் துல்லியமாக கவனித்துள்ளார்கள். அவர்களின் பதிவுகளில் சில இதுவரை சொல்லப்பட்டதை உறுதி செய்யும்.
  • 1590ல் வந்த போர்த்துக்கீசிய பயணி டோமினிங்கோ , “அவர்கள் (இந்திய விவசாயிகள்) ஒவ்வொரு வகையான மண்ணைப் பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும், அவைகளின் திறன்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்துள்ளனர்” என்றார். 
  • எடின்பரோ பல்கலையின் வேளாண்மை மற்றும் ஊரகப் பொருளாதாரத் துறை பேராசிரியரான ராபர்ட் வாலெஸ் 1887ல் (Robert Wallace), "இந்திய விவசாயிகள் தன்னைச் சுற்றி இருக்கும் சாதாரணமானவைகளையும் கூர்ந்து நோக்கும் அபாரமான திறமை கொண்டவர்கள். சாதாரணமான விவசாயி தன்னைச் சுற்றி இருக்கும், கண்ணில்படும் ஒவ்வொரு தாவரங்களின் தன்மைகளை, பயன்களை, தனக்குத் தேவையானதா இல்லையா என்பதையெல்லாம் தன் தலைக்குள் வைத்திருக்கிறார்" என்றார்.
  • பொருளாதார தாவரவியல் செய்தியாளரான சர். ஜியார்ஜ் வாட் (Sir. Geroge Watt), "ஆயிரக்கணக்கான வயல்களில் இருக்கும் நெல் ரகங்களில் உள்ள வேறுபாடுகள், அவைகளில் உள்ள தன்மைகள் மற்றும் சிறப்பியல்புகளை அறிந்துள்ளனர். இந்தத் தனித் தன்மைகள் மற்றும் சிறப்பியல்புகளை இந்திய விவசாயிகள் தங்களின் முன்னோர்களின் சாகுபடி முறைகளில் இருந்து பெற்றுள்ளனர். இவைகளைத் தேர்ந்த தாவரவியல் விஞ்ஞானியால் கூட விளக்கிட முடியாது” என 1891ல் பதிவு செய்கிறார்.
  • இங்கிலாந்துப் பேரரசின் விவசாய ஆய்வு நிலையத்தில் பொருளாதாரத் தாவரவியல் அறிஞராக இருந்தவரும், இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தை உருவாக்கியவருமான சர். ஆல்பர் ஓவர்ட் (1905-24), “இவர்கள் செய்யும் வேலையை கவனிப்பதும், அவர்களின் அறிவை வேகமாக பெற்றுக் கொள்வதைத்தவிர நான் வேறு எதையும் செய்யக் கூடாதென முடிவு செய்தேன். அவர்களை எனது விவசாயப் பேராசிரியர்களாகக் கொண்டேன். அவர்கள் செய்யும் முறைகளைக் கடைபிடித்தால் பயிர்களுக்கு நோயே வராத நிலை உருவாகும்” எனத் தெரிவிக்கிறார்.
  • இவர்கள் வியப்பாகப் பார்த்த தன்மைகளின் பாரம்பரிய நீட்சியாக இருந்தவர்கள் நம் விவசாயிகள். பச்சைப் புரட்சி தொழில்நுட்பம் இவர்களின் இந்த அறிவை புறந்தள்ளியது. இந்த அறிவின் மீது தூசு படிந்தது. “நாங்கள் சொல்வதை மட்டுமே செய்யுங்கள்” என்று விவசாயிகளிடம் சொல்லப்பட்டது. சாகுபடி குறிப்புகள் (Package of Practices) என்ற முறை மூலம் இந்த அறிவு வளம் புறந்தள்ளப்பட்டது. பயிர் வளர்ப்பு என்பது அந்தந்த வயல்களின் உள்ளூர் தகவமைப்பு சார்ந்த ஒன்று. ஆகவே, இந்த சாகுபடிக் குறிப்பு முறை என்பது பொருத்தமற்ற ஒன்று.
  • தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 37ல் நெல் சாகுபடி உள்ளது. ஆற்றுப் பாசனம், ஏரி, கண்மாய் பாசனம், கிணற்றுப் பாசனம், மானாவாரி நெல் சாகுபடி என விதவிதமான பாசன முறைகள், வெவ்வேறு நில வகைகள் உள்ள எல்லா இடங்களிலும் அந்தந்த இடத்தின் இயற்கைத் தன்மைக்கு ஏற்ப நெல் விளைவிக்கப்படுகிறது. இத்தகைய வேறுபாடுகளை கருத்தில்கொள்ளாமல் தமிழகம் முழுமைக்குமான ஒரு சாகுபடி முறை எப்படி பொருத்தமான ஒன்றாக இருக்கும். வேளாண்மை என்பது அந்தந்த பண்ணையின் உள்ளூர் தகவமைப்பு சார்ந்த ஒன்று. அந்தந்த விவசாயிகள் குடும்பத்தின் சமூகப் பொருளாதார நிலை சார்ந்த ஒன்று.(Location Specific – Individual Specific).
  • இந்த அடிப்படையை விவசாயிகளுடன் வேலை செய்ததன் மூலம் நன்கு உள்வாங்கிய நம்மாழ்வார், விவசாயிகளின் அறிவு வளத்தை மேம்படுத்தியதன் மூலம் இயற்கை விவசாயத்தை விதைத்து விளைவித்து செயல்படுத்தினார். இயற்கை விவசாயத்தின் அடிப்படைக் கூறுகள், அதன் அறிவியல், பசுமைப் புரட்சியின் போதாமைகள், பாதிப்புகள், உணவரசியல் எனப் பலவற்றையும் விளக்கும் கல்வியாக வடிவமைத்தார். அதுவும் அவர்கள் மொழியில் எந்தவொரு இடத்திலும் நெல்லை, கரும்பை, வாழையை, கம்பை, சோளத்தை எப்படி இயற்கை வழியில் பயிர் செய்வது என்று பேசவில்லை. அவற்றை அந்தந்த வட்டாரத்தில் இயற்கை வழியில் செய்த விவசாயிகளை தங்களின் அனுபவங்களைப் பகிரச் செய்தார். இவ்விரண்டு கூறுகளையும் கேட்ட விவசாயிகள் யோசிக்கத் தொடங்கினர். விவசாயிகள் அல்லாதவர்களையும் இந்தக் கல்வி ஈர்த்தது. அவர்கள் ஒவ்வொரு ஊராக நம்மாழ்வாரை இழுத்துச் சென்றனர். தமிழகத்தில் புதிய விவசாய மலர்ச்சி மலர்ந்தது. இதற்குக் காரணம் கல்வியாக இயற்கை விவசாயம் பரவியதே.
  • சமூகத்திற்குள் பகிரப்பட்ட இயற்கை விவசாயக் கல்வி அறிவை விவசாயிகள் தங்களுடையதாக்கிக் கொண்டனர். தங்கள் விவசாயத்தை தங்களின் தேவைகளுக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப, விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டனர். தாம் பெற்ற இக்கல்வியை, அறிவு விடுதலையை மற்றவர்களுக்கு பகிரத் தொடங்கினர். விவசாயி கற்பிப்போரானார். இதன் காரணமாகவே தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணைகள் ஒவ்வொன்றும் தனித்துவமாக உள்ளன. சரியான கல்வி எப்போதும், என்றும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனித்துவத்தை வெளிக்கொணரும். இதுவே தமிழக இயற்கை விவசாயத்தை பிற மாநிலத்து இயற்கை விவசாயத்துடன் வேறுபடுத்தி வைத்துள்ளது.
  • கடந்த 30 ஆண்டுகளில் இயற்கை விவசாயம் ஆலமரமாக விரிந்து பரந்து விழுதுகள் விட்டு வளர்ந்துள்ள விதம் வியக்கத்தக்கது. இதை செய்து காட்டியவர்கள் விவசாயிகள். தான் பெற்ற விடுதலையை, அறிவு வெளிச்சத்தை எல்லோருக்குமானதாக மாற்றுவது தமிழ் சமூகத்தின் தனித் தன்மை. இந்த வளர்ச்சி அரசின் எவ்வித உதவியுமின்றி வளர்ந்துள்ளது. வேளாண் தளத்தில் நடந்து வரும் இந்த மாற்றங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்துள்ளன.
  • இதை வெகு முன்பாக உணர்ந்து கொண்ட கட்சிகள் தி.மு.க வும் அ.தி.மு.க வும். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் தங்களது ஆட்சிக் காலத்தில் இயற்கை விவசாயக் கொள்கையை உருவாக்கிட முனைந்தனர். இந்த இரண்டு ஆட்சிக் காலத்திலும் வரைவு அறிக்கை வரை நகர்ந்தது அந்த முயற்சிகள். ஆனால், என்ன காரணத்தாலோ அரசாணையாகவில்லை, நல்லவேளையாக அறிவிக்கப்படவில்லை. வெளியாகியிருந்தால் இந்திய அளவில் நகைப்பிற்குள்ளாகியிருக்கும். அவற்றை உருவாகியவர்கள் தமிழகத்து இயற்கை விவசாயத்தை சிறிதும் உள்வாங்கிடாமல் உருவாக்கிதே காரணம்.
  • கொள்கையை உருவாக்குபவர்கள் சில அடிப்படையானவைகளை மனதில் இருத்தி உருவாக்குவது சிறப்பாக அமையும். ஒரு புறநானூற்றுப் பாடல். "தலையாணங்கானத்து செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன்.." என்ற அரசனுக்கு கூறிய பாடல்.
  • வேந்தன் புகழ் நீண்ட காலத்திற்கு நிலைத்து நீடித்திருக்கச் செய்ய வேண்டியவைகள் பற்றிய குடப்புலவியனார் என்ற சங்கப் புலவர் பாடிய பாடல். அன்றைய வேந்தர்களுக்கு மட்டுமல்ல இன்றைய அரசுகளுக்கும் பொருத்தமான ஒன்று.
  • அப்பாடலின் ஒரு பகுதி...

'நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசி னோரே'

  • உணவு என்பது நிலத்தோடு நீர் புணருவதால் உருவாவது. இந்த உணவுதான் அனைவருடைய உடல், உயிர். உணவை உருவாக்குவோர் உயிரை உருவாக்குபவர்கள். நிலமும் நீரும் புணரச் செய்தவர்கள் உடலையும் உயிரையும் படைத்தவர்கள் ஆகவே மன்னா, நிலமெங்கும் நீர்நிலை பெருக்குக என்கிறார்.
  • அடுத்த 30-40 ஆண்டு காலத்தில் இம்மண்ணில் வாழும் மக்களின் உணவையும் உயிரையும் தரும் வேளாண்மையும் உணவும் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதே அரசு உருவாக்கும் கொள்கையின் மூலமாக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றம் உருவாக்கும் பாதிப்புகள், அதனால் வாழ்விழந்து  இடம் பெயரும் கடலோர மக்களுக்கான வாழ்விடம் உள்ளிட்டவைகளும், பச்சைப் புரட்சியால் உளமிழந்து மண், 1000 அடிகளுக்கு கீழே சென்றுள்ள நிலத்தடி நீர் எனப் பல சிக்கல்களுக்கும் தீர்வாக இந்தக் கொள்கை வரைவு அமைவது காலத்தின் தேவை. இந்தப் புரிதலுடன் கூடுதலாகச் சில புரிதல்களையும் உள்வாங்கிக் கொள்வது சிறப்பாக இருக்கும்.
  • 1). வேளாண்மை என்பது உள்ளூர் தவமைப்பு சார்ந்தது, அந்தந்த விவசாயக் குடும்பத்தின் சமூகப் பொருளாதார தன்மை சார்ந்தது.
  • 2) ஒவ்வொரு பண்ணையும் தனித்தன்மையுள்ள ஒரு உயிரினம் போன்றது. (Farm is an Organism – Lord Northen Bourne 1940ல்) ஒவ்வொரு விவசாயியும் அவர் வசமுள்ள நிலப்பரப்பின் சூழல் மேலாளர். (Eco system Manager), இயற்ஃகை வள ஆதாரங்களின் பாதுகாவலர்.
  • 3) வேளாண் பல்கலை.யில் உள்ளோருக்கும், வேளாண் விரிவாக்க அலுவலகங்களில் பணிபுரிவோருக்கும் தமிழக இயற்கை விவசாயிகள் உள்வாங்கியுள்ள அறிவியலையும், புரிதல்களையும் உள்வாங்கிச் செயல்படும் நிர்வாக முறைகளை உருவாக்க வேண்டும்.
  • 4) ஒரு குறிப்பிட்ட கால வரைகளுடன் தமிழக வேளாண் பல்கலைக்கழகம் முழுமையான இயற்கை விவசாயப் பல்கலை.யாக மாற்றியமைக்க வேண்டும். (ஏனெனில் ஒரு பிரச்னைக்கு இயற்கை விவசாயத்துறை ஒரு பரிந்துரையை வழங்கும். பல்கலை.யின் பிறிதொரு துறை ரசாயன வழிமுறையைப் பரிந்துரைக்கும் நிலை ஏற்படும்.)
  • 5) இயற்கை வழியில் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பதற்கான பயிற்சி, உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுவது குறித்து குறிப்பிட வேண்டும்.
  • 6) இயற்கை விவசாயிகள் சூழல் மேம்பாட்டிற்குச் செய்யும் சேவைகளுக்கு (குறைந்த நீர்ப் பயன்பாடு, குறைந்த மின்சாரப் பயன்பாடு, குறைந்த எரி சக்தி செலவு, நஞ்சுகளைப் பயன்படுதாதலால் மேம்படும் நீர், நில வளம், நிலத்தில் சேர்க்கும் கரிம சத்துகள் (CO2), நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை) சேவைத் தொகை வழங்குவதை கொள்கை அறிவிப்பாக இருக்க வேண்டும். (ஒவ்வொரு சூழலைக் கெடுக்கும் உணவை நஞ்சாக்கும் ரசாயன விவசாயத்தில் ஒவ்வொரு விவசாயியும் மறைமுகமாகப் பெறும் மானியம் ஏக்கருக்கு ரூ. 6,000)
  • 7) பல வகையான இயற்கை விவசாய முறைகள் உள்ளன. இயற்கை வேளாண்மை(organic Farming) பில் மோலிசனின் நிரந்தர வேளாண்மை(Perma culture) ருடால்ப் ஸ்டெய்னரின் உயிர் சக்தி வேளாண்மை(Bio dynamic Farming), தபோல்கரின் நேச்சு ஈகோ விவசாயம் (Natu-Eco Farming), சுபாஷ் பாலேகரின் முறை எனப் பல முறைகள் உள்ளன. தமிழகத்தில். இவை அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கை வரைவாக இது அமைய வேண்டும். இவையனைத்தையும் உள்ளடக்கும் விதமாக “உயிர்ச் ஊழல் வேளாண்மைக் கொள்கை” (Agro Ecological Farming Policy) என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.
  • 8) இயற்கை விவசாய விளைபொருட்களுக்கு சான்று என்பது மாறி பண்ணைகளை சான்றளிக்கும் முறையை உருவாக்குவது அவசியம். இயற்கை விவசாயத்தை பரப்புவதிலும், விளைபொருட்களை மதிப்பு கூட்டுவதிலும், சந்தைப்படுத்துவதிலும் உள்ளாட்சி அரசுகளுக்கு உள்ள பங்கை உறுதிப்படுத்த வேண்டும்.
  • 9) இயற்கை விவசாயத்தைப் பரப்புவதில் விவசாயிகளின் அனுபவங்களைப் பயன்படுத்த வேண்டும். விளைவிக்க வைப்பது என்ற பெருஞ்சுமையை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டுள்ள அரசு அதை அனுபவ விவசாயிகளிடம் கைமாற்றிட வேண்டும். வேளாண் துறை, விளைவிக்கப்பட்டவைகளை மதிப்பு கூட்டலில், உள்ளூர் மற்றும் தொலைதூர சந்தைகளை அடையச் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்கள் உரிய விலை கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் துறை இயங்க வேண்டும்.
  • 1890ல் சென்னை வேளாண்துறையின் இயக்குனர் தெரிவித்த கருத்து இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதிலாவது மனதில் இருக்கட்டும்.
  • விவசாயி ஒருவர் அவர் செய்யும் ஒரு வேலையை எந்தப் புரிதலில் செய்கிறார், ஏன் செய்கிறார் என்பதை கவனமாகக் கேட்டறிந்துகொள்ளாமல் விவசாயிக்குச் சொல்லிக் கொடுக்கும் வேலையை நாம் கைவிட வேண்டும்”

நன்றி: தினமணி (21 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்