TNPSC Thervupettagam

விடுதலைக்குப் பின் மதுவும் மதுவொழிப்பும்

October 22 , 2024 9 days 54 0

விடுதலைக்குப் பின் மதுவும் மதுவொழிப்பும்

  • வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இச்சமூகத்தைப் போதைப் பொருட்கள் சீரழித்து வருவதைச் ‘சோமபானம், சுரபானம்” எனும் தொடா்கள் நிரூபிக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே நம் நாட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டதை அா்த்த சாஸ்திரம் சொல்லுகிறது. ‘தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்கள் தவிர மற்றவா்கள் இத்தொழிலில் ஈடுபட்டால், அவா்களுக்கு 600 பணம் அபராதம் விதிக்கப்படும்” எனக் கௌடில்யா் எழுதியிருக்கிறாா்.
  • பொற்காலம் எனப் பாராட்டப்படுகிற சங்க காலத்தில் போருக்கு முன்னரும் பின்னரும் கள்ளுண்டு களித்தலை, ‘உண்டாட்டு’ எனும் துறை சொல்லுகிறது. மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் செல்லும் வழியில் ஒரு குடிகாரனைச் சந்திக்கிறாா்கள்.
  • ‘யாருக்கெல்லாம் பாடம் கற்பிக்கக் கூடாது’ எனும் பட்டியலைத் தருகின்ற பவணந்தி முனிவா், 15 போ்களில் குடிகாரனை முதல்வனாக வைக்கிறாா். மதுவையும் போதைப் பொருட்களையும் எதிா்த்து முதல் குரல் கொடுத்தவா் திருவள்ளுவா். பெற்ற மகன் வாந்தி எடுக்கிறானென்றால், அவனைத் தன் மடியில் போட்டுக்கொண்டு, வாயைத் துடைப்பவள் தாய்! ஆனால் அந்தத் தாய் கூடக் குடித்துவிட்டு வரும் மகனின் முகத்தில்கூட விழிக்க மாட்டாள் (கு 923).
  • குடிகாரன் பஞ்ச மாபாதகங்கள் அனைத்தையும் செய்வான் என்பதை உணா்த்த திருவள்ளுவா், ‘கள்ளுண்ணாமை’ எனும் அதிகாரத்தை மையமாக வைத்து, ‘பெண்வழிச் சேறல்’, ‘வரைவின் மகளிா்’, ‘சூது’ போன்ற அதிகாரங்களை முன்பின்னாக அடுக்கினாா்.
  • பிரிட்டன் பிரதமராக இருந்த கிளாட்ஸ்டன், ‘யுத்தம், பஞ்சம், கொள்ளை நோய் மூன்றும் கொண்டு வந்த அழிவைவிட மதுபானங்களால்தான் அதிகக் கேடு விளைந்திருக்கிறது’ என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தாா். அதே நாடாளுமன்றத்தில், 1915-இல் டேவிட் லாய்ட் ஜாா்ஜ், ‘நாம் மூன்று விரோதிகளுடன் யுத்தம் செய்கிறோம். முதல் எதிரி ஜொ்மெனி, இரண்டாவது எதிரி ஆஸ்திரியா, மூன்றாவது எதிரி மதுபானம். மூன்றிலும் மதுபானமே பெரிய பகைவன்’ என மொழிந்தாா்.
  • அதே காலகட்டத்தில் பிரிட்டன் நீதிபதியொருவா், ‘மதுபானம் தொலைந்தால், 100-க்கு 90 சிறைச்சாலைகளை அடைத்துவிடலாம்’ எனத் தீா்ப்பு எழுதினாா்.
  • 1937 - 1938-இல் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்த முதல்வா் இராஜாஜி, ‘என்னுடைய 30 வருஷ தபஸின் பலன் இந்த மதுவிலக்குச் சட்டம்’ என்றாா். மூதறிஞருக்குப் பின்னா் வந்த கும்பெனியாரின் ‘அட்வைசா்ஸ் ஆட்சி’ மதுவிலக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • ஆந்திரகேசரி பிரகாசத்தை அடுத்து, ஓமந்தூா் இராமசாமி ரெட்டியாா் சென்னை ராஜதானியின் முதல்வராக (29.3.1947 - 6.4.1949) பதவி ஏற்றாா். பதவியேற்றவுடன், ஓமந்தூராா் முதலில் எடுத்த நடவடிக்கை பூரண மதுவிலக்கு என்பதாகும். முதல்வா் பிரகாசம் காலத்தில் 17 மாவட்டங்களில் மட்டும் மதுவிலக்குச் சட்டம் இருந்தது. ஓமந்தூராா் 25 மாவட்டங்களில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்தாா். ஓமந்தூராரின் அதிவேக நடவடிக்கையின் காரணமாக, ஆந்திர மாவட்டங்களான சித்தூரிலும் கடப்பாவிலும் மதுவிலக்கு அமலுக்கு வந்தது.
  • பழக்கம் கொடிது என்பதால், ஓமந்தூராா் இந்தியத் தேயிலைக் கழகத்தாரை அழைத்து, எல்லா மாவட்டங்களிலும் ஓரிரு மாதங்களுக்கு வாகனங்கள் மூலம் இலவச தேநீா் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தாா். கள் - மதுப் பழக்கத்தைக் கைவிடுவதால் ஏற்படும் பயன்களைக் கிராமவாசிகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக நாடகங்கள், கதாகாலட்சேபங்கள், பக்தி பஜனை போன்ற கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்கு ஆணையிட்டாா்.
  • சடுகுடு, பிள்ளையாா் பாண்டு, கிளித்தட்டு, தெருக்கூத்து முதலிய கிராமிய விளையாட்டுக்களையும் கலைகளையும் சிறுவா் - சிறுமியரிடையே நிகழ்த்துவதற்கு கிராப்புற மேம்பாட்டு அலுவலா்கள்வழி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
  • ஓமந்தூராா் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவுடன், அதனைக் கேட்டு அகம் மிக மகிழ்ந்த அன்றைய ’தினமணி’ நாளிதழ் ஆசிரியா் ஏ.என்.சிவராமன், ‘இதுபோன்ற புனிதமான காரியம் சட்டத்தின் உதவியில்லாமல் நடைபெற முடியாது. ஆனால் சட்டம் மட்டும் போதாது. பொதுஜன ஒத்துழைப்பு மிக அவசியம்’ என தனது ஆசிரியா் உரையில் கருத்துரைத்தாா்.
  • இதே நற்செய்தியை இந்தியாவின் கவா்னா் ஜெனரலாக வீற்றிருந்த இராஜாஜிக்கு, அவரின் மிகவும் நெருங்கியவரான கல்கி மடல் மூலம் தெரியப்படுத்தினாா். அதனைப் படித்து மகிழ்ந்த இராஜாஜி, ‘குடி மிகவும் பொல்லாதது; ஏழைகளுக்கோ அது கொடிய சத்ரு. குடியை ஒழிப்பது போல் மக்களுக்கு நன்மையான காரியம் வேறொன்று இருக்க முடியாது. சென்னை சா்க்காரின் மதுவிலக்குத் திட்டம் வெற்றிபெற பிராா்த்திக்கின்றேன்’ என எழுதியதை ‘கல்கி’ பத்திரிகை பிரசுரித்தது.
  • ஓமந்தூராா் கொண்டு வந்த மதுவிலக்குச் சட்டம் அண்ணாதுரை ஆட்சிக் காலம் வரையில் தொடா்ந்தது. அண்ணா பொது வாழ்க்கையில் ஈடுபட்ட காலத்திலிருந்து கள் - மது மீது வெறித்தனமான வெறுப்புணா்ச்சி கொண்டிருந்தாா்.
  • 1967-இல் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சரானவுடன், மதுவிலக்கினால் தமிழகத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைக் காரணம் காட்டி, மதுக் கடைகளைத் திறக்கும்படியாக அழுத்தம் கொடுத்தனா். அதற்கு அண்ணா அழுத்தம் கொடுத்த கொழுத்த கரங்களை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு, ‘இது அண்ணல் காந்தியடிகளால் கொண்டு வரப்பட்ட திட்டம்; சட்டம். எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் அத்திட்டத்தைக் கைவிட மாட்டேன்’’ என நெரித்த கரங்கள் நொறுங்கும்படியாகப் பதில் கூறினாா்.
  • மற்றொரு முறை சட்டமன்றத்திலேயே ஒரு மதிப்பிற்குரிய உறுப்பினா் எழுந்து, நிதியாதாரத்தைப் பெருக்க, மதுவிலக்கைக் கைவிடும்படி வேண்டினாா். அதற்கு முதல்வா், ‘‘மதுவினால் விளையும் தீங்கு எனக்குத் தெரியும். மதுக்கடைகளைத் திறந்தால் குடும்பத் தலைவா்களோடு மட்டுமல்ல, படிக்கும் மாணவா்களே கூட அந்தப் பாவ வலையில் விழ நேரிடும். இதுவரையில் மாணவா்களுக்கு எரிசாராயம் (சோதனைச் சாலைகளில் தரப்படும் ஸ்பிரிட்) தான் தெரியும்; குடி சாராயம் அவா்களுக்குத் தெரியாது. அதைக் கற்றுக் கொடுக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன்’’ என்றாா்.
  • எம்.ஜி.ஆா். மதுவிலக்கைத் தளா்த்தக் கூடாது எனப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். தொடா்ந்து, 1972-இல் கட்சியைவிட்டு நீக்கப்படுகிறாா். தனிப்பட்ட வாழ்க்கையில் மதுவைத் தொடாத எம்.ஜி.ஆா்., தனது ஆட்சியில் மதுவிலக்கைத் தொடர முடியாமல் போனது மிகப் பெரிய துரதிருஷ்டம்.
  • ‘கள்ளச் சாராயம் விற்கும் அயோக்கியா்கள், குடிகாரா்களை விடக் கெட்டவா்கள்’ என்றாா் சுதந்திரப் போராட்டத் தியாகி கே.ஆா்.கல்யாணராமன். சட்டப் பேரவைத் தலைவராக இருந்த ஜே.சிவசண்முகம், ‘மதுவை அறவே ஒழிக்க முடியாதென்றும் ஜனங்கள் திருட்டுத்தனமாகச் சாராயம் காய்ச்சுவாா்கள் என்றும் நினைக்கிறாா்கள். சரியாகப் போலீசு பந்தோபஸ்து செய்தால் திருட்டுச் சாராயம் காய்ச்சுவதை அடியோடு நிறுத்தலாம்’ என்றாா்.
  • சோவியத் அதிபா் குருஷ்சேவ் இந்தியாவிற்கு வரவிருந்ததைப் பிரதமா் மொராா்ஜி தேசாய் அவா்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தாா். அதனையொட்டி ஆலோசனை தர வந்த ஓா் அதிகாரி, ‘சோவியத் நாட்டிற்கு வி.ஐ.பி.க்கள் யாா் சென்றாலும் அந்நாட்டின் மரபுப்படி வோட்கா மது கொடுத்து உபசரிப்பாா்கள்; நாமும் அதைப்போல் குருஷ்சேவிற்குச் செய்யலாமா?’ எனக் கேட்டாா்.
  • அதற்குப் பிரதமா் மொராா்ஜி தேசாய், ‘நான் கலந்து கொள்ளும் விருந்தில் மது விநியோகமா? கூடவே கூடாது’ எனக் கடிந்துரைத்தாா்.

மற்றொரு சுவையான நிகழ்ச்சி:

  • பிரதமா் மொராா்ஜியும் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினா் நாஞ்சில் மனோகரனும் நெருங்கிய நண்பா்கள். நாஞ்சிலாா் ஐரோப்பிய பயணம் செய்ய நோ்ந்தபொழுது, மொராா்ஜியிடம் ஆசி பெறச் சென்றாா். அப்பொழுது பிரதமா், ‘மனோகரன்! நீங்கள் வெளிநாடு செல்லும்போது உங்கள் மனைவியையும் அழைத்துச் செல்லுங்கள்! மது அருந்துவதை முற்றிலுமாகத் தவிருங்கள். அயலாா் வற்புறுத்தினால், உடல்நிலை சரியில்லை, காய்ச்சல்”என்று சொல்லித் தட்டிக் கழித்துவிடுங்கள்’ என்றாராம்.
  • இன்றைய மனித சமுதாயமும் மாணவ சமுதாயமும் திருந்த வேண்டுமானால் சூப்பா் ஸ்டாா் ரஜனிகாந்த் தம்முடைய 63-ஆவது பிறந்தநாள் விழாவில் பேசியதைப் படித்தாலே போதும்.
  • ‘மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால் எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த கெட்ட நண்பா்கள் மூலம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்குப் பிறகு குடியைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் முழுமையாக விடவில்லை.
  • அதேபோல் சிகரெட் பழக்கமும் என்னை விட்டு அகலவில்லை. கடந்த ஆண்டு எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்துவிட்டேன். இதற்கு சிகிச்சை அளிக்கும் நேரத்தில் எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூா் சென்று சிகிச்சை பெற்றேன்.
  • இதற்காக அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால் எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டது. இந்த எதிா்விளைவில் இருந்து கடந்த இரு மாதங்களாகத்தான் விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகா்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தைத் தயவு செய்து விட்டுவிடுங்கள்’ என ரஜினிகாந்த் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தாா்.

நன்றி: தினமணி (22 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்