TNPSC Thervupettagam

விடை தேடும் அறிவியல் - 48: மனிதர்கள் சாகாவரம் பெற முடியுமா

April 3 , 2024 289 days 282 0
  • மரணம் என்பது மனிதர்களை அச்சுறுத்தும் இயற்கை நிகழ்வு. மரணத்தை வெல்ல வேண்டும் என்பது மனிதர்களின் நீண்ட நெடிய கனவு. ஆயினும், மரணத்தை வெல்வது என்பது விடை அறியாக் கேள்வியாகவே இருக்கிறது.
  • மருத்துவத் துறை என்னதான் முன்னேறியிருந்தாலும் இறப்பை மட்டும் மனிதனால் தடுக்க முடியவில்லை. ஆனால், மரணத்தை வெல்வதற்கு வழிகாட்டும் சில உயிரினங்கள் பூமியில் இருக்கவே செய்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.
  • உயிரினங்கள் அனைத்தையும் வெப்பமும் காலமும் கட்டுப்படுத்துகின்றன. உயிரினங்களின் வாழ்வு நீரின் கொதிநிலை, நீரின் உறைநிலை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வெப்பத்தைக் கொண்ட சுற்றுப்புறத்தில்தான் அமைந்துள்ளது.
  • உயிரினங்கள் நீரின் உறைநிலைக்குக் குறைவான வெப்பம் உள்ள இடத்தில் வாழ் நேரிடும்போது அவை இறந்துவிடுகின்றன அல்லது ஆழ் உறக்கத்துக்குள் (Hibernate) சென்றுவிடுகின்றன. அதுவே உயிரினங்களை அதீத வெப்பத்திற்கு உள்படுத்தினாலும் இறக்க நேரிடும்.
  • அதேபோல வெப்பத்துடன் இணைந்து காலமும் உயிரினங்களின் வாழ்க்கையில் அங்கம் வகிக்கிறது. உயிரினங்களின் உடலுக்குள் நடைபெறும் வேதிவினையில் காலம் ஆதிக்கம் செலுத்துகிறது.
  • ஒரு வேதிவினையை வெப்பம், காலம் இரண்டும் கட்டுப்படுத்துகின்றன. சராசரி வெப்பத்தில் ஒரு வேதிவினை நடைபெறுவதற்குக் குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்கொள்கிறது என்றால், வெப்பம் குறையும்போது அதே வேதிவினை நடைபெறக் கூடுதல் நேரம் எடுக்கும்.
  • அதாவது சராசரி வெப்பத்தில் நடைபெறும் வேதியியல் வினை, வெப்பம் 10 டிகிரி செல்சியஸ் வரை குறையும்போது, முன்னர் எடுத்துக்கொண்ட காலத்தைவிட இரட்டிப்பு நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
  • உதாரணமாக நாம் சாப்பிடும் உணவை எடுத்துக்கொள்வோம். உணவுப் பொருள்கள் கெடுவது வேதிவினையால் நிகழ்கிறது. சில நேரம் நுண்ணுயிரிகள் தாக்கத்தாலும் உணவு கெடுவது உண்டு. வேதிவினையால் கெடுவதற்கு வெப்பம் அவசியம்.
  • சாதாரண வெப்பநிலையில் ஓர் உணவுப் பொருள் கெடுவதற்குச் சில மணி நேரம் ஆகிறது என்றால், அதே உணவுப் பொருளை வெப்பம் குறைவான குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது சில நாள்கள், ஏன் சில மாதங்கள் வரைகூடக் கெடாமல் இருக்கிறது அல்லவா? இதற்குக் காரணம் குறைந்த வெப்பத்தில் வேதிவினை தாமதமாக நடைபெறுவதால், உணவு கெட்டுப்போவதும் தாமதமாக நடக்கிறது. இதுவே அதிக வெப்பம் இருந்தால் என்ன ஆகும்? வேதிவினை மிக வேகமாக நடைபெறும், அதனால் உணவும் சீக்கிரம் கெட்டுவிடும்.
  • இதேபோன்ற வேதிவினைதான் உயிரினங்களின் உடலுக்குள்ளும் நடைபெறுகிறது. இதனால் அதிகக் குளிரோ, அதீத வெப்பமோ அந்த வேதிவினையைப் பாதிக்கும்போது உயிரினங்களின் உடலிலும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • உதாரணமாக நாம் மூச்சை உள்ளிழுத்துச் சுவாசிக்கிறோம். இந்தச் செயல்பாடு பூமியில் ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் நடைபெறுகிறது. இதுவே மைனஸ் 200 டிகிரி செல்சியஸில் மனிதனைக் கொண்டுபோய்விட்டால், காற்றை உள்ளிழுப்பதற்கே சில மாதங்களோ வருடங்களோ ஆகும். அப்போது மனிதனால் உயிர் வாழ முடியுமா?
  • அதேபோல அதீத வெப்பத்தில் நாம் விடப்பட்டால் செல்கள் இயக்கம் அதிவேகமாகி இறந்துவிடுவோம். இதனால், இப்போது பூமியில் நாம் இருக்கும் வெப்பம்தான் உயிரினங்கள் வாழ்வதற்கான சராசரி வெப்பம். மனிதர்கள் வாழவும் ஏற்ற வெப்பம். ஆனால், மேற்கூறிய வெப்பத்திற்கும் காலத்திற்கும் கட்டுப்படாத உயிரினங்களும் பூமியில் இருக்கின்றன. அவற்றை அதீதவிரும்பிகள் (Extremophiles) என்கிறோம்.
  • இந்த அதீதவிரும்பிகள் உச்சபட்சச் சூட்டிலோ, கடும் குளிரிலோ, உச்ச அமிலத்தன்மை வாய்ந்த இடங்களிலோ, உச்சக் காரத்தன்மை வாய்ந்த பகுதிகளிலோ வாழ்கின்றன.
  • நீர்க்கரடி (Tardigrades) எனும் அதீதவிரும்பி நுண்ணுயிரி உள்ளது. 2007ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வாளர்கள், இந்த நீர்க்கரடிகளை எடுத்துச் சென்று விண்வெளியில் பூமியின் தாழ் வட்டப்பாதையில் 12 நாள்களுக்கு விட்டுவந்தனர். அங்கே இந்த உயிரினம் சாகாமல் இருந்தது.
  • அதேபோலக் காற்றே இல்லாத வெற்றிடத்திலும் அதீத அண்டக்கதிர்வீச்சு நிரம்பிய பகுதியிலும் இந்த நீர்க்கரடிகள் பயணம் மேற்கொண்டன. ஆனால், இவை எதுவுமே அவற்றைக் கொல்ல முடியவில்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த நீர்க்கரடிகள் பல நாள்களாக நீர் இல்லாமலேயே உயிருடன் இருந்தன என்பதுதான்.
  • மனிதர்களோ மற்ற உயிரினங்களோ நீரில்லாமல் விடப்பட்டால், நமது செல்களில் இருக்கும் நொதிகளும் டி.என்.ஏவும் சுருங்கிச் செயல்பாட்டை நிறுத்திவிடும். நீர் இல்லாமல் ஒரு வாரமோ பத்து நாள்களோ கடந்தால் நாம் சடலமாகிவிடுவோம். ஆனால், நீர் இல்லாத நேரத்தில் இந்த நீர்க்கரடிகள் உடலுக்குள் நடைபெறும் ஒட்டுமொத்த இயக்கங்களையும் நிறுத்திவிடுகின்றன. பிறகு சாதகமான சூழல் வந்தவுடன் மீண்டும் இயங்குகின்றன.
  • இந்த நீர்க்கரடிகள் குறித்த ஆய்வு பல்வேறு சாத்தியங்களை மனித இனத்திற்கு வழங்குகிறது. முதலில், இந்த அதீதவிரும்பி உயிரினங்களை ஆய்வுசெய்வதன் மூலம் மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிகளை நாம் கண்டடையலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதீதவிரும்பிகள், நம் செல்களின் இயக்கம் குறித்த மாறுபட்ட புரிதலைத் தருவதாகவும் அவற்றின் மூலம் நம் உடலை அழிவற்றதாக மாற்றக்கூடிய வழிகள் பிறக்கும் எனவும் நம்புகின்றனர்.
  • அதற்காக இந்த அதீதவிரும்பி உயிரினங்களுக்கு மரணமே கிடையாதா என்பதல்ல. ஒன்று அழிவதால்தான் மற்றொன்று பிறக்கிறது என்பது இயற்கையின் நியதி. அந்த வகையில் அதீதவிரும்பி உயிரினங்களின் உடல் இயக்கங்கள், அவற்றை மரணத்தை நோக்கித்தான் அழைத்துச் செல்கின்றன.
  • ஆனால், புறச்சூழல் ஆதிக்கத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் அவற்றின் ஆற்றல்தான் மனிதர்களுக்கும் உதவ இருக்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் மனிதர்களின் சராசரி ஆயுள் 30 ஆண்டுகள்தாம். ஆனால், இன்றைக்கு நமது சராசரி ஆயுள் 72ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
  • இதேபோல நமது ஆயுளை மேலும் கூட்டவும், மரணத்தைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கும் பாதையையும் இந்த அதீதவிரும்பி உயிரினங்கள் காட்டலாம். ஆனால், மனிதர்களின் இறுதி இலக்கான சாகாவரம் எனும் கனி இன்னும் எட்டாத தூரத்தில்தான் இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (03– 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்