TNPSC Thervupettagam

விதிகளே இல்லாத போர்கள்

October 30 , 2023 263 days 172 0
  • உலகில் மனித குலம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன; இப்போதுள்ள மனிதனை, ‘மிகவும் அறிவுள்ளவன்’ – ‘நன்கு பக்குவப்பட்டவன்’ என்றெல்லாம் பலவாறாக அழைத்துக்கொண்டாலும், ‘நியாண்டர்தால்’ கால மனிதனைவிட நாம் எந்த வகையிலும் நாகரிகம் அடைந்துவிடவில்லை என்றே அச்சத்துடன் கூற விழைகிறேன். அவர்கள் காலத்தில்தான் தங்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்ட போதெல்லாம் எந்தவித விதியும் கட்டுப்பாடும் இல்லாமல் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டார்கள்.
  • மனித குல வரலாற்றில் விதிகளை வகுத்துக்கொண்டு சண்டையிட்ட காலமும் ஒன்று இருக்கிறதா? நெட்டிமையார் என்ற சங்க காலத் தமிழ்ப் பெண் புலவர் இயற்றிய பாடல் - சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் காலத்தால் முந்தியது – கூறும் தகவல்களைப் பார்த்தால் அறநெறியின் பாற்பட்ட விதிகளை வகுத்துக்கொண்டுதான் தமிழ் மன்னர்கள் போர் புரிந்துள்ளனர் என்பதும், போர் தொடர்பாக முன்னறிவிப்பு செய்துவிட்டு, போருக்குத் தொடர்பில்லாதவர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பிறகே களத்தில் மோதினார்கள் என்பதும் இன்றைக்குப் படித்தாலும் வியப்பாக இருக்கிறது:

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்...

  • என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன், போர்ப் பிரகடனம் செய்த பிறகு போரிட்டிருக்கிறான். பாசறையில் இருக்கும்போதுகூட தன்னை நாடி வருவோருக்கு வாரி வழங்கும் வள்ளல்தன்மை உடையவன் இந்தத் தமிழ் மன்னன்.
  • அந்தக் காலத்தில் சூரிய உதயத்தில் தொடங்கி, சூரியன் மறையும் வரையில் போர் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். போர் முடியவில்லை என்றால், இரவானதும் நிறுத்திவிட்டு அடுத்த நாள் காலையிலிருந்து மீண்டும் போர் செய்வார்கள். இவை மட்டுமல்லாமல் போரில் பிற அற நெறிகளையும் மன்னர்கள் கடைப்பிடித்தனர். தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர், போர்க் களத்திலே ஆயுதங்களை இழந்து தோற்றுவிடும் நிலையில் இருந்த ராவணனைப் பார்த்து, ‘இன்று போய், நாளை வா’ என்று ராமன் கூறி அனுப்பி வைத்ததாக எழுதியிருக்கிறார்.

மண்ணுக்காக வீணே மடியும் உயிர்கள்

  • போர்களை ‘நாகரிகமானவை’ என்று அழைப்பதாக இருந்தால், பழங்காலப் போர்களை மட்டுமே அப்படி அழைக்க முடியும். அவை அனைத்துமே தர்ம-நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடந்தன. ‘நவீன காலம்’ என்று சொல்லப்படும் இப்போது அப்படி நடப்பதில்லை. இரண்டு பெரிய போர்கள் - இப்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலும் நடந்துகொண்டிருக்கின்றன. இரண்டுமே கொடூரமான தாக்குதல்களைக் கொண்டவை. வரம்பில்லாமலும் வகையில்லாமலும் மக்களுடைய வாழிடங்கள் மீது குண்டுகள் மழையாகப் பொழியப்படுகின்றன.
  • உக்ரைனிலும் காசா நிலப்பரப்பிலும் பெரிய நகரங்களும் சிறு நகரங்களும் தொடர் குண்டுவீச்சுகளாலும் பீரங்கித் தாக்குதல்களாலும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி நகரமெங்கும் கட்டிட இடிபாடுகளாலும் நச்சுமிக்க குப்பைக் கூளங்களாலும் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள்கூட விட்டுவைக்கப்படாமல் தரைமட்டமாகிவிட்டன. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என்று அனைத்துத் தரப்பினரும் ஆயிரக்கணக்கில் இந்தப் போர்களில் கொல்லப்படுகின்றனர்.
  • வீடு வாசலை இழந்த மக்கள் வெறுங்கையர்களாக, ‘புகலிடங்கள்’ என்ற பெயர் சூட்டப்பட்ட இடங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அங்கு உணவு, குடிநீர், மருந்து-மாத்திரைகள், உடைகள், படுக்கைகள் என்று எந்த அடிப்படை வசதியும் இல்லை. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கையிருப்புகளைச் செலவழித்துக்கொண்டு கிடைத்த வாகனங்களில் ஏறி வேறு நாடுகளுக்கு அகதிகளாகக் குடிபெயர்ந்துள்ளனர்.
  • ஏராளமான குடும்பங்கள் போரில் சொந்தங்களை இழந்ததல்லாமல், இப்படி இடம் மாற நேர்ந்ததாலும் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளன. சாப்பிடுவதற்கான பண்டங்கள் மிகமிகக் குறைவாகத்தான் கிடைக்கின்றன. மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. மக்களுக்கு உதவ நிவாரணப் பொருள்களை எடுத்துவரும் சரக்கு லாரிகள், ‘சோதனைக்காக’ என்ற பெயரில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றன.

உக்ரைனில் உக்கிரம் ஏன்?

  • இவ்விரண்டு போர்களும் எதற்காக நடக்கின்றன? ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர், யார் ஆதிக்கம் மிக்கவர் என்பதைக் காட்டுவதற்காக. 1922 முதல் 1991 வரையில் சோவியத் ஒன்றியத்தில் இணைந்த நாடாகத்தான் உக்ரைன், ரஷ்யாவுடன் இணைந்தே இருந்தது. ரஷ்யர்கள் ஆயிரக்கணக்கில் உக்ரைனில் குடியேறி உள்ளூர் மக்களைவிட அதிக அதிகாரம் செல்வாக்குடன் வாழத் தொடங்கினர்.
  • உக்ரைன் தனி நாடாகி சுதந்திரம் அடைந்த பிறகு, அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ (வட அட்லான்டிக் ஒப்பந்த நாடுகள்) ராணுவக் கூட்டு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில், நிலப்பரப்பில் ‘இடைத்தாங்கு நாடாக’ சிக்கியிருக்கிறது. ‘நேட்டோ’ அமைப்பில் உக்ரைன் உறுப்பு நாடாகிவிட்டால், தங்களுடைய எல்லை வரையில் ‘நேட்டோ’ படைகளை உக்ரைன் கொண்டுவந்துவிடும் என்று ரஷ்யா அஞ்சுகிறது.
  • நேட்டோவில் சேராத நடுநிலை நாடாக உக்ரைன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ரஷ்யா, ரஷ்யர்கள் அதிகம் குடியேறி வசிக்கும் உக்ரைன் பகுதிகளைத் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டுவிடவும் விரும்புகிறது. இந்தப் போரானது உக்ரைனின் நிலத்துக்காகவும், உக்ரைன் தனக்கு எதிராகத் திரும்பிவிடாமலிருக்க அதைத் தாக்கி வலுவிழக்க வைப்பதற்காகவும்தான் ரஷ்யாவால் மேற்கொள்ளப்படுகிறது.

பாலஸ்தீனத்தில் ஏன்?

  • இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான போரும் நிலத்துக்காகத்தான் நடக்கிறது. பாலஸ்தீனர்கள் அனைவருமே, தங்களுக்குச் சொந்தமான நிலத்தைத்தான் யூதர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்; பாலஸ்தீனர்களில் கணிசமானவர்கள் ஹமாஸ் இயக்கத்திலும் இருக்கின்றனர் அல்லது ஆதரிக்கின்றனர். பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட நிலப் பகுதி ஒரு காலத்தில் அராபியர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் சேர்ந்து வாழும் இடமாக இருந்தது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவின்படி, ‘இஸ்ரேல்’ என்ற புதிய நாடு 1948இல் உருவாக்கப்பட்டது, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த யூதர்கள் அங்கே குடியமர்த்தப்பட்டனர். இப்போதைய இஸ்ரேல் நாடானது ராணுவ வலிமை மிக்கது, மிகவும் நவீனமான அறிவியல் – தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. விரோத மனப்பான்மை மிக்க பக்கத்து நாடுகளின் தாக்குதலை முறியடிக்கும் அளவுக்கு ராணுவ வலிமை மிக்கது.
  • அந்தப் பகுதியிலேயே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு அது ஒன்றுதான். வரலாறு என்னவோ பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், நடந்துவிட்ட சம்பவங்களால் அங்கு நிலைபெற்றுவிட்ட இஸ்ரேல் என்ற நாட்டை இனி அங்கிருந்து அகற்றவே முடியாது.

செயலிழந்து விட்டது ஐ.நா.

  • ஐக்கிய நாடுகள் சபை என்று அழைக்கப்படும் உலக நிறுவனம் இப்போது செயலிழந்துவிட்டது. உலகில் சமாதானமும் ஒற்றுமையும் நிலவ வேண்டும், இனி போர்களே கூடாது என்ற உன்னத லட்சியங்களோடு உருவாக்கப்பட்டு, அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட சமாதான உடன்படிக்கைகள், போர் நடைபெறாமல் தடுக்கும் வழிமுறைகள், போர் ஏற்பட்டுவிட்டால் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நெறிமுறைகள் போன்றவற்றை அதனால் அமல் செய்யவே முடிவதில்லை.
  • நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க ராணுவத்தைப் பயன்படுத்தக்கூடாது, பேச்சுவார்த்தைகளில்தான் ஈடுபட வேண்டும் என்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மீறப்படுகிறது. இப்போது போர் செய்யும் முறைகளே மாறிவிட்டன. மனிதர்கள் மனிதர்களோடு மோதும் ‘துவந்த யுத்தம்’ இப்போது மறக்கப்பட்ட வரலாறாகிவிட்டது.
  • சக்திவாய்ந்த கனரக இயந்திரங்கள் – இயந்திரங்களோடு அதிக அழிவாற்றலோடு மோதுகின்றன; ஏவுகணைகளை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘டுரோன்கள்’ இடைமறித்துத் தாக்குகின்றன. ஏவுகணைகளை வெட்டி வீழ்த்த ஏவுகணை எதிர்ப்புக் கணைகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன.
  • இரு நாடுகளுக்கு இடையிலான நிலப் பிரச்சினையைத் தீர்க்க வழிமுறை காணப்படாவிட்டால் இனி போரைத் தவிர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல்களும் நிலம் தொடர்பானவைதான்; தீவிர வலதுசாரிகள் இதையே ‘இந்து’ இந்தியாவுக்கும் ‘இஸ்லாமிய’ பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலாகத் திரிப்பதைச் சுலபமாகச் செய்துவிடுகின்றனர். இது மிகவும் விஷமமான கூற்று.
  • இரு நாடுகளுமே பிரிவதை ஏற்றுக்கொண்டு, தனித்தனி சுதந்திர நாடுகளாகும் சட்டத்தையும் ஒப்புக்கொண்டன. பாகிஸ்தானின் பேராசையால்தான் அது இந்தியாவுக்குச் சொந்தமான நிலத்துக்காகத் தொடர்ந்து போரிடுகிறது. சீனத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல்களுக்கும் காரணம் நிலம்தான். அது மிகவும் சிக்கலானது காரணம், இரு நாடுகளுக்கும் இடையிலான பகுதிகள் எவருடையவை என்பது நீண்ட காலத்துக்கும் முன்பிருந்தே தெளிவாக வரையறுக்கப்படாததால் உரிமை கோருவதில் சிக்கல்களும் மோதல்களும் தொடர்கின்றன. இதிலிருந்து மீள ஒரே வழி பேச்சுவார்த்தைதான், போர் அல்ல. பிரதமர் மோடி கூறியதைப்போல, ‘இது போருக்கான சகாப்தம் அல்ல’.

நடுவர் மன்றமே நன்மை தரும்

  • ‘போர் வேண்டாம் - சமாதானமாகப் போங்கள்’ என்று ரஷ்யா -உக்ரைனுக்கும், இஸ்ரேல் – ஹமாஸுக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸ் பல முறை வேண்டுகோள் விடுத்துவிட்டார், யாரும் அதை செவிமடுக்கவே இல்லை. அவருக்கு முன்பிருந்த போப்பாண்டவரும் ‘இனிமேல் போர் கூடாது – போரே இனி எப்போதும் கூடாது’ என்று கசிந்துருகி வேண்டினார். அந்த வேண்டுகோள்களும் கேளாக் காதினர்களின் செவிகளில்தான் மோதி விழுந்தன!
  • பெருங்கடல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை ஆதரவில் உலக மாநாடு நடத்தி, பொதுவான சட்டம் இயற்றப்பட்டு (1982) அது 150க்கும் மேற்பட்ட நாடுகளால் ஏற்கப்பட்டு அமலுக்கு வந்துவிட்டது. அதன்படி கடல்பரப்பில் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படும் எவ்வித மோதல்கள் அல்லது பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து தீர்ப்பளிக்க, உலக நடுவர் மன்றமும் ஏற்படுத்தப்பட்டது.
  • இத்தாலி நாட்டைச் சேர்ந்த ‘என்ரிகா லெக்ஸி’ என்ற கப்பலில் வந்த இரண்டு கடற்படை வீரர்கள் சுட்டதில் இந்தியர் ஒருவர் இறக்க, அது பெரிய பிரச்சினையாகி அந்தக் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டதல்லாமல் அவ்விருவரும் கைதுசெய்து விசாரணைக்கும் உள்படுத்தப்பட்டனர். சர்வதேச கடல்பரப்பில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறிய இத்தாலி, சர்வதேச நடுவர் மன்றத்தில் முறையிட்டது.
  • பின்னர் நடுவர் மன்றம் அளித்த சமரசத் தீர்வை இரு நாடுகளும் ஏற்றதால் பிரச்சினை பெரிதாகாமல் முடிவுக்கு வந்தது. அப்படியொரு அணுகுமுறை இல்லாவிட்டால் உயிர்ச் சேதங்களும் அழிவுகளும் தவிர்க்க முடியாதவைகளாகிவிடும்.

நன்றி: அருஞ்சொல் (30 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்