TNPSC Thervupettagam

விந்தையான கைது... கவிஞர் சோஹெல் ஹசன் காலிப்!

March 2 , 2025 2 days 65 0

விந்தையான கைது... கவிஞர் சோஹெல் ஹசன் காலிப்!

  • காதலர் நாளன்று (பிப்ரவரி 14) பூக்கடைகள் யாவும் நாசம் செய்யப்படுகின்றன; குறிப்பாக, அக்கடைகளிலிருந்த ரோஜாக்கள் எல்லாம் தெருக்களில் தூக்கி வீசிச் சிதறடிக்கப்பட்டுக் கனத்த கால்களால் மிதித்து, நசுக்கி அழிக்கப்படுகின்றன; வழிபாடுகள் நடக்கும் நேரங்களில் கோயில்கள் சூறையாடப்படுகின்றன, ஆங்காங்கு, நாடெங்கும்; எதிர்கொள்ளும் அர்ச்சகர்கள்- வயது வேறுபாடுகளில்லாமல்- கொலை செய்யப்படுகிறார்கள், தடுப்பாரின்றி;
  • வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் லாலோன் நினைவு திருவிழா, வசந்த் உத்சவ் போன்ற விழாக்களுக்கு தற்போதைய நிர்வாகத்தின் அனுமதியிருந்தும், அதையும் மீறி அவ்விழாக்களை நடத்தவிடாமல் அராஜகமாக நிறுத்துகிறார்கள், கேட்பாரின்றி;
  • பல்கலைக்கழகங்களின் கட்டடங்கள், துறைகள், நுழைவு வாயில்கள் முதலியவை முஸ்லீம் அல்லாதவர்களின் பெயர்களில் இருந்தால் அவை நீக்கப்பட்டு, வேறு (இஸ்லாமிய) பெயர்கள் சூட்டப்படுகின்றன, காரணங்களின்றி;
  • “தேசத்தின் தந்தை”யாகக் கடந்த ஆகஸ்ட் வரை போற்றப்பட்டு வந்த தியாகத் தலைவரின் அனைத்து அடையாளங்களும் அழித்து அகற்றப்படுகின்றன; அவர் சிலைகள், படங்கள் மட்டுமல்ல, அவர் பரம்பரையாக வாழ்ந்த வீடும் அடித்து, நொறுக்கித் தரைமட்டமாக்கப்படுகிறது, வரலாற்றறிவின் வறட்சியால்.
  • அந்நாட்டில் தற்போது நடைபெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு இடைக்கால (தற்காலிக ஏற்பாட்டு) அரசாங்கம்தான்! ஆனாலும், நாட்டின் வருங்காலத்தில் நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அதிமுக்கியமான விஷயங்களில் தான்தோன்றித்தனமான முடிவுகள் எடுக்கப்பட்டு, நடைமுறைக்கும் வந்துவிட்டன.
  • ‘தவ்ஹிதி முஸ்லீம் ஜனதா ('புரட்சிகர முஸ்லீம் மக்கள்'), அல்லது எளிமையாக தவ்ஹிதி ஜனதா என்பது அந்நாட்டில் எம்முறையும் சாராத ஒரு இஸ்லாமிய அமைப்பு. (பிரிவை உருவாக்கும் எந்தவொரு மக்கள் குழுவையும் இச்சொல் குறிக்கும்.) இந்த குழுக்கள் அந்நாட்டில், குறிப்பாக மத சிறுபான்மையினர் மீதான வன்முறை தாக்குதல்களுக்கென ‘இழிபெயர்’ பெற்றவை.
  • எங்கிருந்தோ வரும் அழுத்தம் காரணமாகப் பலகாலமாகத் தடைசெய்யப்பட்டு, முடக்கிவைக்கப்பட்டிருந்த மதவாத அமைப்புகள் மீதிருந்த தடைகள் - மக்கள் கருத்தறியாமல், எடுக்கப்படும் முடிவின்மீது தேவைப்படுமளவிற்கு மனம் செலுத்தாமல் (non-application of mind) – நன்கு ஆராயாமல் அகற்றப்பட்டன.
  • அவ்வாறு தடை நீக்கப்பட்டிருக்கும் மதவாத அமைப்புகளான தவ்ஹிதி ஜனதா, ஜமாத் - இ - இஸ்லாமி,  போன்ற இயக்கங்களைச் சேர்ந்த அடிப்படைவாதிகள்தான் முன் சொல்லப்பட்டுள்ள அனைத்து நாசகார நிகழ்வுகளுக்கும் காரணம் என்பதை அந்நாட்டின் செய்தி இதழ்களும், காட்சி ஊடகங்களும், இணைய வளங்களும் ஒருமித்த குரலில் எடுத்துரைத்து வருகின்றன.
  • தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாளர் எனக் கருதப்படும் நாடறிந்த கவிஞர் ஒருவரையே - “மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்”, “தீர்க்கதரிசி முகம்மது நபி அவர்களை அவமதிக்கும்” கவிதையை எழுதியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் - பதினைந்து நாள்களுக்கு முன் (பிப்ரவரி 12, 2025) கைது செய்து சிறையில் அடைத்துவைத்திருப்பது குறிப்பிட உரியதாகிறது. தீவிர மத, அடிப்படைவாதிகளின் அழுத்தம் இடைக்கால அரசின்மேல் எவ்வளவு வலுவாக இறங்கி ஆட்டுவிக்கிறது என்பதற்கான குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு இருக்கிறது என்று அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் எழுதி வருகிறார்கள்.
  • மத அடிப்படைவாதக் குழுக்கள் ஆட்டுவிக்கிறபடியே ஆடும் ‘அவல அரசாக’, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டாக்டர். முகமது யூனுஸ் அவர்களை இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகக் கொண்டிருக்கும் வங்கதேசத்தில்தான் இவ்வளவும் கடந்த ஆறுமாதங்களுக்குள் அரங்கேற்றமாகி வருகின்றன.
  • “இன்று, காவல்துறை தனது பணிகளைச் சரிவரச் செய்வதில்லை; ஏனெனில் கடந்த காலங்களில் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்தமைக்காக காவல்துறையின்மீது பல வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. தேசியப் பாதுகாப்பு உளவுத்துறை (National Security Intelligence, NSI) அதிவிரைவு செயல்பாட்டு அணி (Rapid Action Battalion, RAB) போன்ற கலவரத் தடுப்பு அமைப்புகளில் (செயல்படுவதா? சும்மா இருப்பதா? என்ற குழப்பங்கள் கவ்விக்கிடக்கின்றன. நாட்டில் சட்டத்தை அமல்படுத்தும் (Law Enforcing Organs of the State) அதிகாரங்கொண்டிருக்கும் அங்கங்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள இந்நிலையில், நாட்டில் அமைதியும், கட்டுப்பாடும், ஒழுங்கும் நிலவச் செய்ய இயலாது; நாடு சீர்குலையும் நிலைக்குச் செல்லும்’’  என்று ‘தன்புலம்பலும்’, இடைக்கால அரசுக்கு எச்சரிக்கையும் கலந்த குரலில் அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் வாக்கர் - உஸ் - ஸமான்  பேசியிருக்கிறார். ( தி ஹிண்டு, 26 பிப். 2025) இதுவே அந்நாட்டின் தற்போதைய ‘எரி நிலை’யை வெளிச்சப்படுத்துவதாக உள்ளது.
  • வாங்க... வங்கதேச நிலைமைகளை ஒரு பருந்துப் பார்வையில் அளந்தறிந்த பின்னர், கவிதைக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதாகியுள்ள கவிஞர் சோஹெல் ஹசன் காலிப்பைச் (Sohel Hassan Galib) சந்திப்போம்.

தற்காலிக அரசு அமையும் வரை வங்கதேசம்

  • இந்திய விடுதலைவரை (1947) வங்காளமாக இருந்த பகுதி, பிரிவினையின்போது, கிழக்கு வங்காளம், மேற்கு வங்காளம் எனப் பிரிக்கப்பட்டு, அக்காலத்தில் 80% முஸ்லீம் மக்கள் வாழ்ந்த கிழக்கு வங்காளப்பகுதி பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. அப்பகுதி 1971 வரை பாகிஸ்தானின் பகுதியாக – கிழக்கு பாகிஸ்தானாக – இருந்து வந்தது என்பது முந்தைய வரலாறு.
  • இந்தியாவின், இந்திய ராணுவத்தின் உதவியின்றி வங்கதேசம் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் 1971-ல் தோன்றியிருக்காது. பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் புரட்சியைத் தீரமுடன் முன்நின்று நடத்திய ஷேக் முஜிப் - உர் - ரஹ்மான் தலைமையில் வங்கதேசத்தின் முதல் அரசு அமைந்தது. அதன்பின் நாடு, ராணுவப்புரட்சி, ஒருகட்சி ஆட்சி, மக்களாட்சி எனப் பலவகை அரசியலில் பயணித்து வந்திருக்கிறது.
  • கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவந்த ஷேக் ஹசீனா (வங்கதேச விடுதலைக்கு முன்நின்ற ஷேக் முஜிப் - உர் - ரஹ்மான் மகள்), முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கான 30% ஒதுக்கீட்டை ஜூன் 2024 இல் மீண்டும் அமலுக்குக் கொண்டு வந்தார். ஏற்கனவே கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நாட்டில், இந்த நடவடிக்கை இளைஞர், மாணவர் கிளர்ச்சியை வெடிக்கச் செய்துவிட்டது.  ஆகஸ்ட் 2024 இல் மாணவர்கள் தொடங்கிய அரசு எதிர்ப்பு இயக்கம், வெளி ஆள்களும் சேர்ந்த வன்முறை ஆர்ப்பாட்டங்களாக மாறி மக்களை, ஆட்சியை மிரள வைத்தது. இறுதியில் ஷேக் ஹசீனா வீழ்ச்சிக்கே இப்போராட்டங்கள் வழிவகுக்கும் என்று யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை.  ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைய நேரிட்டதற்குப்பின் வங்கதேசம் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தில் பயணித்து வருகிறது.
  • வங்கதேசத்தின் நிறுவனத் தலைவரான முஜிப் - உர் - ரஹ்மானின் மரபில் நங்கூரமிட்டு நடத்தப்பட்ட ஆட்சி மட்டுமல்ல, முஜிப் - உர் - ரஹ்மானின் பாரம்பரியம், அடையாளம் என யாவும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 5, 2024 இல் டாக்காவில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிஜோய் சரனியில் இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை இடித்து உடைத்ததில் தொடங்கி, அவரைச் சித்திரிக்கும் பொதுச் சுவரோவியங்கள் எங்கிருந்தாலும் அவைகளையும் சிதைத்துத் தொடர்ந்து, முஜிப் - உர் - ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்ட - தற்போது அரசின் நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டுவரும் – அவரது பாரம்பரிய வீட்டையும் தகர்த்துத் தரைமட்டமாக்கி நிற்கிறது. 
  • பிரதமர் ஷேக் ஹசீனா 5 ஆகஸ்ட் 2024 இல் பதவி விலகி இந்தியாவிற்குத் தப்பி வந்ததைத் தொடர்ந்து, மூன்று நாள்களில் (ஆகஸ்ட் 8 இல்) அதுவரை வெளிநாட்டில் வசித்துவந்த முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது; அடுத்தநாள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. திடீர் பொதுத் தேர்தல் நடத்தி, புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை இடைக்கால அமைச்சரவை பதவியில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போதைய இந்த ஏற்பாடு, வங்கதேச அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதொரு அமைப்புதான்!
  • அதிபர் முகமது சகாபுதீன், 8 ஆகஸ்ட் 2024 இல் முகம்மது யூனுஸ் மற்றும் அவரது ஆலோசகர்கள் குழுவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒரு தலைமை ஆலோசகர், 22 ஆலோசகர்கள், தலைமை ஆலோசகர் அலுவலகத்தின் கீழ் 7 சிறப்பு பதவிகள் மற்றும் அமைச்சரின் கீழ் இடைக்கால அரசாங்கத்திற்கு 3 சிறப்பு உதவியாளர்கள் உள்ளனர். ஜமுனா மாநில விருந்தினர் மாளிகை தலைமை ஆலோசகரின் உத்தியோகபூர்வ இல்லமாக செயல்படுகிறது.
  • “தேவையின் கோட்பாடு” (Necessity of Circumstances) அடிப்படையில் நாட்டை நிர்வகிக்க, அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிவர்த்தி செய்ய அவசரத் தேவை உருவாக்கியுள்ள சூழலில் வங்கதேச உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவு, 9 ஆகஸ்ட் 2024 இல் வழங்கிய தீர்ப்பில் இந்த அரசாங்கத்தின் சட்டபூர்வத்தன்மையை உறுதிப்படுத்தியது,
  • இந்த அமைச்சரவையின் முக்கிய உறுதிமொழி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு புதிய, ஜனநாயக அரசியலமைப்பை வரைந்து நிறைவேற்றி அதனடிப்படையில் தேர்தல் நடத்தி ஆட்சி அமையச் செய்வோம் என்பது. ஏற்கனவே அரசியலமைப்புச்சட்டம் இருக்கிறது நாட்டில். நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு இடைக்கால அரசுக்கான வேலையல்ல. புதிய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்குவது.

இடைக்கால, தற்காலிக அரசு முன்னெடுக்கும் நிரந்தர ஏற்பாடுகள்

  • இதுவரையிலும் இந்த இடைக்கால, தற்காலிக அரசு கணிசமான கொள்கை முடிவுகளை எடுத்துள்ளதுடன், அரசு எந்திரத்தின் இயல்பையே அடியோடு மாற்ற முயன்று வருகிறது. நடைபெற்று வரும் இடைக்கால ஆட்சியின் செயல்பாட்டை மேலோட்டமாக ஆராய்ந்தால், அதன் நிர்வாகத்தில் "இடைக்காலம்" என்ற எண்ணம் எதுவும் இல்லை என்பதையே குறிக்கிறது.
  • வங்கதேச அரசியலில் இதுபோன்ற இடைக்கால அரசுகள் அமையச்செய்வது இது முதல் முறை அல்ல. என்றாலும், தற்போதைய இடைக்கால அரசாங்கம் அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறை முன்னோடியில்லாத வகையாக இருக்கிறது. 1971 இல் பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற்றதிலிருந்து, வங்கதேசம் ஒரு கட்சி ஆதிக்கம், ஒரு கட்சி முறையின் குறுகிய காலம், 15 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவ ஆட்சி, நாடாளுமன்ற பிரதிநிதித்துவ ஜனநாயகக் குடியரசு ஆட்சி உள்ளிட்ட பல வகையான அரசாங்கங்களைக் கண்டுள்ளதை முன்னரே குறிப்பிட்டோம்.
  • ஜெனரல் எர்ஷாத் வெளியேற்றப்பட்டு 1990 இல் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், தேர்தல்களை எளிதாக்குவதற்காக கட்சி சாரா இடைக்கால அரசாங்கம் (NPCG) ஒன்று அமைக்கப்பட்டது. நாட்டில் தேர்தல் நடைமுறைகளை சுமூகமாக நடத்தும் நோக்கில், என்.பி.சி.ஜி. ஒரு தலைமை ஆலோசகரின் தலைமையில் இருந்தது. எவ்வாறாயினும், NPCG இன் நடுநிலைமை எப்போதும் கேள்விக்குறிதான். இடைக்கால அரசாங்கங்கள் பெரும்பாலும் தேர்தல்களுக்கு முன்னதாக, ஒரு குறுகிய காலாவதி நாள் (Expiry Date) கொண்டதாக, சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்காகச் செயல்படவேண்டியவை. NPCG 90 நாள்களுக்குள் தேர்தல்களை நடத்தவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கவும் கட்டளையிடப்பட்டிருந்தது என்பது முந்தைய முறை.
  • தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான தற்போதைய இடைக்கால அரசாங்கம் ஆகஸ்ட் 8, 2024 இல் அதிகாரத்தை எடுத்துக் கொண்டது. ஒரு சட்டபூர்வமான அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடு தழுவிய தேர்தல்களை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானது, ஆனால், ஆறுமாதங்கள் கடந்த பின்னும் இதுவரை, தேர்தல்களை நடத்துவதற்கான திட்டவட்டமான காலக்கெடு பற்றிய எந்த அறிகுறியும் இல்லை. விரைவில் தேர்தல்களை நடத்துமாறு இடைக்கால அரசாங்கத்தை அரசியல் கட்சியினர் ஏற்கனவே வலியுறுத்தத் தொடங்கிவிட்டனர்.
  • பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆணைக்குழு, நீதித்துறை மறுசீரமைப்பு ஆணைக்குழு, போலீஸ் நிர்வாக மறுசீரமைப்பு ஆணைக்குழு உள்ளிட்ட ஆறு ஆணைக்குழுக்களை இடைக்கால அரசு அமைத்துள்ளது. வங்கதேச தூதுவர்கள் பலர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்கள், ஆசிரியர்கள் மீது இலக்கு வைக்கப்பட்டுத் தாக்குதல்கள் நடந்தன. பல மருத்துவர்கள் "தேவையற்றவர்கள்" என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை இல்லாமல் போனது; அதையொட்டி, மருத்துவமனைகள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்  நடத்தும் சம்பவங்கள் நிகழ்கின்றன. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் ஆகஸ்டில் ராஜிநாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று டெய்லி ஸ்டார் பத்திரிகை தெரிவித்துள்ளது.
  • சிறுபான்மையினர் மீதும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும்- இஸ்லாமிய சூஃபி பிரிவினரது வழிபாட்டுத் தலங்கள் உள்பட- தாக்குதல்கள் தொடர்கின்றன. மத சார்புள்ள குழுக்கள், அடிப்படைவாதிகள்,  அவர்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் செல்வாக்குடன் நடமாடி வருகின்றன. ஜமாத் - இ - இஸ்லாமி மீதான தடை நீக்கப்பட்டபின் அதன் நடவடிக்கைகள் கட்டுப்படாதவிதமாகத் திரிவதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • வங்கதேசத்தில், அனைத்து மட்டங்களிலும் நிர்வாக எந்திரத்தை நிர்வகிக்கும் நபர்கள் முழுவதுமாகத் தற்காலிக அரசுக்குச் சாதகமான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காகவே ஏராளமான நியமனங்கள் செய்யப்படுகின்றன. முந்தைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சர்வதேச வாக்குறுதிகளுக்கு இடைக்கால அரசாங்கம் கட்டுப்படுமா என்ற கவலை வெளியுலகில் உருவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக, ரூப்பூர் அணுமின் நிலையத்திற்குப் பெற்ற கடனுக்கான வட்டி  630 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை ரஷ்யாவுக்கு செலுத்த வேண்டியுள்ளது; அதானி குழுமத்திற்கு மின்சார விநியோகத்திற்காக வங்கதேச மின் மேம்பாட்டு வாரியம் 800 மில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளது.
  • இவர்கள் வங்கதேசத்திடமிருந்து நிலுவைத் தொகையைக் கறாராகக் கேட்க ஆரம்பித்துள்ளனர். இடைக்கால அரசின் நிச்சயமற்ற போக்கு, சர்வதேச முதலீட்டாளர்களைப் பாதிக்கும் நிலையாகியுள்ளது. வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகள் குறித்து முடிவெடுக்க ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதே பெரிய கேள்வியாக உள்ள நிலையில், தெற்காசிய (சார்க்) கூட்டமைப்பைப் புதுப்பிக்கும் தனது விருப்பத்தை யூனுஸ் வெளிப்படுத்தியுள்ளார்!
  • யூனுஸும் அவரது இடைக்கால அமைச்சரவையும் சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றுக்கிடையேயான அதிகாரப் பகிர்வின் தன்மையை மாற்ற முயன்று வருகின்றன, மேலும், தினமும்  மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையால் வரையறுக்கப்படும் நிதர்சன சூழலில், நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களில் சரியான, நியாயமான முடிவுகள் எடுக்கவும் இயலவில்லை. மொத்தத்தில், தற்போதைய அரசு ஒரு தற்காலிக, இடைக்கால, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமன ஏற்பாடுதான் என்பதை அறவே மறந்து ‘அமைதி நோபல்’ செயல்பட்டு வருகிறது.
  • இடைக்கால அரசுக்கு இரண்டொருநாள் முன்பு ராணுவத் தளபதி விடுத்திருக்கும் எச்சரிக்கையின் தொனியைக் கவனித்தால், அந்நாடு மீண்டுமொருமுறை ராணுவ ஆட்சியின் கீழ் வரக்கூடும் என்ற யூகத்தை சரியாக்கும்போலத் தெரிகிறது. எது எப்படியிருப்பினும், வங்கதேச இடைக்கால அரசின் வரையறை தாண்டிய முயற்சிகளின் விளைவுகளுக்கு காலம் என்ன பதில் சொல்லப்போகிறதோ?
  • வாங்க... நாம் கவிஞர் சோஹெல் ஹசன் காலிப்பைச் சந்திக்கலாம்.
  • முகமது யூனுஸின் ஆலோசனைத் தலைமையில் தற்போது இயங்கும் வங்கதேசத்தில் ஜமாத், தவ்ஹிதி ஜனதா போன்ற அடிப்படைவாதிகள் அடங்காமல், அடக்க ஆளில்லாமல் அட்டூழியம் செய்துவருவது குறித்து அறிந்து வந்திருக்கிறோம். இந்த ‘தவ்ஹிதி ஜனதா’வுக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் 'ஆட்சேபனைக்குரிய' கவிதைகளை முன்பு எப்போதோ வெளியிட்டதற்காக வங்கதேசத்தின் தற்போதைய தலைமுறையின் முக்கியமான கவிஞரான சோஹெல் ஹசன் காலிப்பைச் சிறையில் அடைக்கச் செய்துள்ளார்கள்.
  • இவ்வளவுக்கும் சோஹெல், வங்கதேசத்தில் ஹசீனா அரசுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் கிளர்ச்சியை ஆதரித்தவர். மேலும், ‘தற்காலிக’ இடைக்கால அரசின் ஆதரவாளர். பிறகு எப்படி இது நடந்தது? இந்தக்  கேள்வி கடந்த இரண்டு வார காலமாகப் வங்கதேச செய்தி ஏடுகளில், அந்நாட்டின் தொலைக்காட்சி விவாதங்களில் சூடான பேசுபொருளாகியுள்ளது
  • கவிஞர் சோஹெல் கைது செய்யப்பட்ட இந்த ஒரு நிகழ்வே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, வங்கதேசப் பொருளாதார வல்லுநரான முகம்மது யூனுஸ் தற்போது அரசின் ஆலோசனைக் குழுத்தலைவராக இருக்கும் நிலையில், இஸ்லாமிய மத தீவிரவாதிகளின் பிடிக்குள் சிக்கி ஆட்டுவிக்கப்படுகிறாரோ என்ற வலுவான ஐயத்தை அரசியல் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
  • வாங்க... கொஞ்சம் கூடுதலாக விவரமறியலாம்.
  • வங்கதேசத்தின் சமகால கவிதை உலகில் குறிப்பிடத்தக்க பெயர், கவிஞர் சோஹெல் ஹசன் காலிப். நவம்பர் 15, 1978 இல் தங்கைலில் பிறந்த இவர், ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் வங்க மொழியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார். தற்போது, தேசிய கல்வி மேலாண்மை அகாதெமியில் (NAEM) இணைப் பேராசிரியராகவும், பயிற்சி நிபுணராகவும் பணியாற்றி வருகிறார்.  பல ஆண்டுகளாக இலக்கியம் பயிற்றுவித்தலுடன், பிற கல்விசார் நடவடிக்கைகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருபவர். நாடறிந்த கவிஞராக மட்டுமல்ல, கட்டுரையாளர், விமர்சகர், பேச்சாளர் என்று பன்முகங்கொண்டவர்.
  • “நானொரு நூல், நூல்பந்து,
  • உருண்டுகொண்டேயிருக்கிறேன்
  • ஏதாவதொன்றை நெய்ய”
  • என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்ளும் காலிப்பின் கவிதைகள் அதன் அழகியல், மொழிவளம், சிந்தனை ஆழம், புதிய கற்பனை ஆகியவற்றுக்காகக் குறிப்பிடத்தக்கவை. வெளியிடப்பட்டுள்ள அவரது கவிதைத் தொகுப்புகளில் குறிப்பிடத்தக்கவை "அறுபது சிறகுகளின் விமானம்" (2007), "துவைபாயன் பெட்னார் தே" (2009), "ரக்தா மெமோராண்டம்" (2011), "ஆங் ரூப்பர் தேஷ்" (2014), "திமிரே தரானா" (2017) மற்றும் "ஃபூ" (2020).  
  • மேலும், தனது கவிதைப்பயணத்தின் முதல் பத்தாண்டுகளில் வெளியானவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பை "ஒன்றுமில்லாத கவிதைகள்" (2008) என்ற தலைப்பில் வழங்கியுள்ளார்.
  • நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் படித்த இளைஞர்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஷேக் ஹசினா அரசு, முடக்கிப்போட்டிருந்த 30% இட ஒதுக்கீட்டை வங்கதேச விடுதலைப் போராட்ட வீர்ர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் வாரி வழங்கியதைக் கொள்கை அளவில் எதிர்த்ததால், ஆகஸ்ட் 2024 இல் வெடித்த மாணவர் போராட்டத்தைத் தார்மீகமாக ஆதரித்து வந்தவர். மதப்பற்றாளர்தான். ஆனால் மதவாதியல்ல; மதவாத அமைப்புகளை ஆதரிப்பவரில்லை; அத்தகைய மதவாத அமைப்புகளின் அடிப்படை வாதத்தை, சட்டத்திற்கு அடங்காத அவர்களது செயல்பாடுகளைத் தன் கைவசமுள்ள கவிதைச் சாட்டையால் அடிக்கடி சொடுக்குபவர்.
  • முன்பொருமுறை சமூக வலைத்தளத்தில் மதவாத அமைப்பொன்றின்மீது அவர் வீசிய கவிதைச் சாட்டையடிதான் பதினைந்து நாள்களுக்குமுன் (பிப்ரவரி 13, 2025 இல்) அவர் கைது செய்யப்படக் காரணமாகிவிட்டது.
  • காரணம் பழைய கவிதை, ஆனால், கைது செய்யப்படக் காட்டப்பட்ட ‘குற்றக் கவிதை’ வேறு.
  • அது என்ன? இதுவரை ஆறு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ள கவிஞர் சோஹெல் நவம்பர் 2024 இல் "அமர் குத்பா குலி" என்ற தலைப்பூச் சூடிய ஏழாவது வங்க மொழிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் (கட்டுரைகளும்) “பெரும்பாலும் சமூக, அரசியல் மற்றும் மத கருப்பொருள்களை ஆராய்கின்றன. கவிதை, நையாண்டி, விவாதம், விமர்சனம், சுயவிமர்சனம், பாராட்டு, கண்டனம் எனப் பல்வகைகளும் இந்நூலில் பரிமாறப்பட்டுள்ளன’’ என்றும், இந்த படைப்பின் மூலம் ஆசிரியர் “நம் காலத்தின் வலிமையான மற்றும் பலவீனமான மக்களை நமக்குத் தெரியச் செய்கிறார்; நம் காலம், சமூகம், அரசு, உலகம் ஆகியவற்றின் வடிவம், வடிவமின்மை, அசிங்கம், வெறுப்பு ஆகியவற்றை ‘உள்ளது உள்ளபடி’  ஆவணப்படுத்துகிறார்.
  • கலை, இலக்கியம், அழகு என அத்தனை சுவைகளும் நிரம்பிய இந்நூலைப் படிக்கும்போது விழிப்புணர்வும் இலக்கிய இன்பத்துடன் இணைந்து கிடைக்கிறது; நூலிலுள்ள தலைப்புகளின் அடிப்படையிலோ அல்லது நடையை வைத்தோ இன்ன விஷயத்தைப் பற்றித்தான் எழுதப்பட்டுள்ளது என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது. மாறாக, எளிதாக சொல்லக்கூடியது என்னவென்றால் - அத்தனை விஷயங்கள் அடங்கி இருப்பதால் -  “எது இல்லை இந்த நூலில்?” என்பதுதான்.” என்றும் நடுநிலையான நூல் விமர்சகர்கள் இந்நூலைப்பற்றி இலக்கிய இதழ்களில் எடுத்துரைத்துள்ளார்கள்.
  • உஜான் பதிப்பகத்தால் சந்தைப்படுத்தப்பட்டுள்ள சோஹெல் ஹசன் காலிப்பின் தொகுப்பிலுள்ள கவிதைகளில் பல 2024 இல் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சோஹெல் ஹசன் காலிப் தனது கவிதை ஒன்றின் மூலம் கேலி செய்வதாக” முதலில் நெட்டிசன்கள் சிலர் கொளுத்திப்போட்டனர்.
  • கவிஞர் சோஹெல் சில இஸ்லாமிய குழுக்களைத் தாக்கிச் சமூக ஊடகங்களில் முன்பு கவிதை எழுதியற்காக அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் சீற்றம் கொண்டு சினம் வளர்த்து வந்தனர் அல்லவா?. நம்நாட்டில் மதவாதக் குழுவினர் சிலர் தற்போது “அகத்தீயப் புதுக்கரடி”யைக் கிளப்பிக் குதூகலித்து வருவதுபோல, யாரோ நெட்டிசன்கள் கொளுத்திப்போட்ட விஷயத்தை ஊதிப்பெரிதாக்கி, கவிஞர் சோஹெல் ஹசன் காலிப்பைக் குறிவைத்து, ஒரு ‘கரடியை’ அவிழ்த்துவிட்டனர். கவிஞரின் "அமர் குத்பா குலி" கவிதைத் தொகுதியில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் கவிதைகள் இருப்பதோடு, கவிதைகள் குறிப்பாக நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகவும் உள்ளன” என்பதுதான் வங்கதேசத்தில் அண்மையில் மதவாத அமைப்புகளால் அவிழ்த்துவிடப்பட்ட புதுக்கரடி!
  • நாடே, காடுபோல - ராணுவத் தலைமைத் தளபதி புலம்புவது போல்- ஒழுங்கும், கட்டுப்பாடும்  இல்லாதிருக்கும் நிலையில், கவிஞர் காலிப் மீது பழிசுமத்தி அவிழ்த்துவிடப்பட்ட ‘அபாண்டக் கரடி’  நாடெங்கும் ஓடியது; முஸ்லீம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கவிஞர் காலிப் எழுதியுள்ளார் என்ற புரளி காடுபோல் மண்டியது, நாட்டில். கவிஞர் காலிப்பைக் கைது செய்து அவருக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க மதவாத இஸ்லாமிய குழுக்கள் வெளிப்படையாகவும், வேறுவடிவிலும் கொடுத்த அழுத்தம் அதிகமானதாகச் செய்திகள் வந்தன. மதக் குழுக்களின் செல்வாக்கு சில நேரங்களில் அரசியல் இணைப்புகளை விட எடை அதிகமாக இருப்பது பின்வந்த நடவடிக்கைகளால் தெரிய வந்துள்ளது.

அதிகாரிகள் மீதான மதவாதக் குழுக்களின் அழுத்தம் காரணமாக:

  • டாக்கா பெருநகர (லால்பாக் சரக) காவல்துறையின் துப்பறியும் பிரிவு, (Deductive Branch) பிப்ரவரி 13, 2025 இரவு 8.30 மணியளவில், நாராயண்கஞ்ச் நகரின் கீழ் உள்ள ஃபதுல்லாவிலிருந்து சோஹெல் ஹசன் காலிப்பை கைது செய்தது. காலிப்பைக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 54 இன் கீழ் கைது செய்தனர். ஏன்? இந்தச்சட்டப் பிரிவு (54), சில அவசியமான சந்தர்ப்பங்களில் யாரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்து  தடுத்து வைக்க அனுமதிக்கிறது, அதனால்தான்!
  • டாக்காவில் உள்ள தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (சி.எம்.எம்) நீதிமன்றம், முதற்கட்டமாகக் காலிப்பை விசாரணைக்காக இரண்டு நாள் காவலில் வைத்தது. காலிப் சார்பில், அவரது வழக்குரைஞரால் தாக்கல் செய்யப்பட்ட விளக்கமறியல் மனு (எதற்காகக் கைது? என அறிய), பிணை மனுக்கள் இரண்டையுமே நீதிமன்றம் நிராகரித்தது. “கவிதையின் உள்ளடக்கம் மிகவும் உணர்திறன் (Sensitive) வாய்ந்ததாகவும் மதத்தின் மீதான தாக்குதலாகவும் கருதப்படுவதால், சமூக அமைதியின்மை பரவுவதைத் தடுக்க, பொது ஒழுங்கை பராமரிக்க இந்த விஷயத்தை முழுமையாக விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை” நீதிமன்றம் வலியுறுத்தி, குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக விசாரணைக்கு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அவ்லாத் ஹுசைன் முகமது ஜுனைத் உத்தரவிட்டார்.
  • இதனைத் தொடர்ந்து, சோஹெல் ஹசன் காலிப்பை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி வங்கதேச காவல்துறையின் துப்பறியும் பிரிவு (டி.பி) நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாக உதவி ஆய்வாளர் ஸ்வபன் குமார் தெரிவித்துள்ளார்.
  • கவிஞர் காலிப் - திடீரென வாரண்ட்கூட இல்லாமல் - கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டதை, வங்கதேச எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை இயக்கச் செயற்பாட்டாளர்கள், மதக்குழுக்களைச் சாராத நடுநிலையாளர்கள் எனப் பலரும் இணைந்து  ஆர்ப்பாட்டம் செய்து கண்டித்து வருகின்றனர், இதுவரை; நிபந்தனையின்றிக் காலிப்பை விடுவிக்கக் கோரிவருகின்றனர். கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பென்(PEN) வங்கதேசம் மற்றும் பிற மனித உரிமை அமைப்புகளும் கவிஞர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அறவே கைவிடப்பட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளன.
  • சோஹெல் ஹசன் காலிப் கைது செய்யப்பட்டதற்கு முதன்மையான காரணம் அவரது கவிதைத் தொகுப்பான "அமர் குத்பா குலி"யின் உள்ளடக்கம் என்று சொல்லப்படுகிறது. அவ்வுள்ளடக்கத்தில் உள்ள கவிதைகள் ‘மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், குறிப்பாக நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும்’ கூறப்பட்டுள்ளதேயொழிய அந்தத் தொகுப்பில் எந்தக் கவிதை? எப்படி குற்றச்சாட்டில் கூறியுள்ளபடி சொல்லியுள்ளது என்ற விவரமே இல்லை.
  • கவிதைதான் குற்றம்! (எந்தக்கவிதை எனத் தெரியாது. விந்தை!)
  • ஆம், கவிதைதான் குற்றம்.
  • எந்தக் கவிதை?
  • அதில் என்ன குற்றம்
  • ம்ஹூம், விடையேதுமில்லை.
  • இந்த முக்கியமான குறைபாட்டையும் சுட்டிக்காட்டி, காலிப் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வானது, வங்கதேசத்தில் கருத்து சுதந்திரம் மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கு இடையில் மோதலாகவும், பதற்றத்தை  ஏற்படுத்துவதாகவும் இருக்கிறதென்பதை இடைக்கால அரசின் உயர்மட்டத்தில் எடுத்துரைத்துக் கவிஞரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகோள் அளிக்கப்பட்டிருக்கிறது.
  • இதற்கிடையில், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காலிப் தற்போது வகித்துவரும் தேசிய கல்வி மேலாண்மை நிலையப் பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு, சத்கிராவில் உள்ள ஷியாம்நகர் அரசு மொஹ்சின் இளநிலைக் (டிகிரி) கல்லூரியில், (குறிப்பிட்ட வேலையில்லாத)  சிறப்புப்பணி அலுவலர் (ஓ.எஸ்.டி) என்ற நிலையில் இணைக்கப்பட்டிருப்பதாகக் கல்வித்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. அவரது நூலை வெளியிட்ட பதிப்பகத்தின் விற்பனை அரங்கு தற்போது மூடப்பட்டுள்ளது என்பதும் நிலவரத்தைக் காட்டும் கூடுதல் தகவல்.
  • சற்றுமுன்னர் இங்கு குறிப்பிடப்பட்ட டாக்கா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (சி.எம்.எம்) நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், விசாரணை அதிகாரி ஏழு நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததைக் குறிப்பிட வேண்டும்.
  • ஏழுநாட்கள் கடந்து போயின.
  • சமீபத்திய தகவல்களின்படி, மேலும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. (அப்படிச் சொல்வதுதானே வழக்கம்?) இன்னும் இறுதித் தீர்ப்போ, தண்டனையோ வழங்கப்படவில்லை; நிலைமை இன்னும் வளர்ந்து வருகிறது; மேலும் விசாரணை முன்னேறும்போது கூடுதல் புதுத்தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இன்றும்,  காலவரையற்ற சிறைவாசத்தில் கவிஞர்!
  • கவிஞரைக் கைது செய்ததை எதிர்த்து நடைபெற்ற உணர்ச்சிகரமான ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது, சக கவிஞர்களில் ஒருவரான சஞ்சல் அஷ்ரப், "சோஹல் ஹசன் காலிப் திருடவில்லை; ஊழல் செய்யவில்லை; கோவில்களை இடிக்கவில்லை; அர்ச்சகர்களைக் கொலை செய்யவில்லை. இதையெல்லாம் செய்து வரும், அமைதிச் சமூக எதிரிகளும், பெரிய திருடர்களும் குற்றவாளிகளும் நாட்டில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும்போது, இலக்கியம் பேசிக் கவிதைகளோடு வாழும் கவிஞரை எதற்காகக் கைது செய்து ரிமாண்டில் வைத்துள்ளீர்கள்?'’ என்று கேள்வி அனலை வீசினார். பதிலில்லை, தற்போதுவரை.
  • காதல், இயற்கை, சமூகம், தத்துவம் ஆகியவற்றின் ஊடாட்டம் வெளிப்படும் கவிதைகள் பல படைத்த கவிஞர், "உரிமைகள்" என்ற கவிதையில்-
  • “முழு உலகமும் அல்ல,
  • நான் வேண்டுவது
  • எனக்கு
  • ஒரு புல்லின் இதழுக்கான
  • முழு உரிமை போதும்.
  • தேன் தென்றலுடன் நொடியேனும்
  • முழுதாக வாழ்ந்துவிடுவேன்”
  • எனப்பாடிய கவிஞர் சோஹல் ஹசன் காலிப் காலவரையற்ற சிறைவாசத்தில்!
  • [பி.கு:- கவிஞர் சோஹல் எழுதிய கவிதைதான் குற்றமென்கிறார்கள். ஆனால் எந்தக் கவிதை? அதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது, என்ற தகவலை எப்படியாவது கட்டுரையில் இணைத்துவிடவேண்டும் எனும் முயற்சியில் இணையப் பரப்பெங்கும், தேடினேன், தேடினேன், இக்கட்டுரையை முடிக்கும் நேரம்வரை. எதுவும் கிட்டவில்லை உருப்படியாக. சரி, A.I. இடம் ஒருவார்த்தை கேட்டுவிடலாம் என்று கருதிக் கேட்டால், அது நமக்குத் தெரிந்த தகவல்களையே திரும்பத் திரும்ப அளித்துவிட்டுக், கடைசியாகக் ‘கழுவுற மீன்ல நழுவுற வகையாக’ ‘காப்புரிமை, உணர்வதிகமுள காரணங்களால் சோஹெல் காலிப் கவிதை வரிகளைத் தர இயலவில்லை.’ (Unfortunately, I cannot provide the exact text of the poem due to copyright and sensitivity concerns.) என்று தப்பித்துக்கொண்டது. A.I. பண்டகசாலையிலும் ‘சரக்கு’ (அக்கவிதைவரிகள்) இல்லை என்பது தெரியாதா என்ன நமக்கு?]

நன்றி: தினமணி (01 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்