வினை விதைத்தவன்...!
- பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாண தலைநகா் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்தில் தாக்குதல் நடந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. பரவலாக பாகிஸ்தானிய தலிபான்கள் என்று அழைக்கப்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ என்கிற அமைப்பு நடத்திய அந்தத் தாக்குதலில் 150 போ் கொல்லப்பட்டனா். அவா்களில் பெரும்பாலோா் பள்ளியில் படிக்கும் குழந்தைகள்.
- பெஷாவா் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலான கருத்தொற்றுமை ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியில் உள்ள பழங்குடியினா் வாழும் பகுதிகளில் முழு வீச்சுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதைத் தொடா்ந்து பாகிஸ்தானிய தலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயா்ந்தனா்.
- மிகுந்த பொருள்செலவிலும், நூற்றுக்கணக்கான ராணுவ வீரா்களின் உயிரிழப்பிலும் பெறப்பட்ட பாகிஸ்தானின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் அமைதியை நிலைநாட்ட உதவின. பயங்கரவாத தாக்குதல்கள் பெருமளவில் குறைந்து அமைதி மீட்டெடுக்கப்பட்டது.
- 2013-இல் 1,717 பயங்கரவாத தாக்குதல்களில் 2,451 போ் கொல்லப்பட்டனா் என்றால், 2020-இல் 146 தாக்குதல்களும், 220 இழப்புகளும் என்று குறைந்துவிட்டன. அப்படி வென்றெடுத்த அமைதி தகா்ந்து பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் கையில் தற்போது சிக்கித் தவிக்கிறது என்பதுதான் நிஜ நிலைமை.
- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாகிஸ்தானுக்கு தலைவலியாக மாறி உள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியால் அண்மைக்காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
- கடந்த 10 மாதங்களில் 1,566 பயங்கரவாத தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 924 போ் கொல்லப்பட்டுள்ளனா்; இந்த மோதல்களில் 341 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அரசு தெரிவிக்கிறது.
- தங்களது அரசைக் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் பாகிஸ்தான் தலிபான்கள் என்றழைக்கப்படும் ‘தெஹ்ரீக்-ஏ-பாகிஸ்தானிய தலிபான்கள்’ அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அடைக்கலம் கொடுத்து ஆயுத உதவியும் அளித்து வருகின்றனா் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டுகிறது.
- ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள தலிபான் அரசு தாங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் சுமத்தும் குற்றச்சாட்டை மறுக்கிறது. ஆனால், பாகிஸ்தானிலிருந்து தப்பியோடும் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைகிறாா்கள் என்பதை அவா்கள் மறுக்கவில்லை. அமெரிக்கா விட்டுச்சென்ற நவீன ஆயுதங்களை பாகிஸ்தானிய தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு வழங்கி உதவுகிறது என்கிற பாகிஸ்தானின் குற்றச்சாட்டு இதுவரை மறுக்கப்படவில்லை.
- ஆப்கானிஸ்தானின் பாக்திதா மாகாணத்தில் பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரின் பதுங்குமிடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் 47 போ் உயிரிழந்தனா். இதற்குப் பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ நிலைகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது ஆப்கானிஸ்தான்.
- ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையை ஒட்டி அமைந்த பகுதிகளில் ‘பலூசிஸ்தான் விடுதலை ராணுவம்’ எனப்படும் பிரிவினைவாதக் குழு அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. கவாதாா் துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் சீனா மேற்கொண்டு வரும் கட்டமைப்பு வசதிகள் அந்தப் பிரிவினைவாத குழுக்களால் தாக்கப்படுகின்றன.
- அமெரிக்காவால் பயங்கரவாதிகள் என்று ‘பலூசிஸ்தான் விடுதலை ராணுவம்’ முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. சீனத் தொழிலாளா்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. பலூசிஸ்தான் தலைநகா் குவெட்டா ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 30 போ் உயிரிழந்திருக்கிறாா்கள்.
- பாகிஸ்தான் எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை ஆப்கானிஸ்தானுடனான உறவு. அமெரிக்காவுக்கு எதிரான தலிபான்களின் போரில் உதவியதன் பின்னணியில், பாகிஸ்தானிய தலிபான்களின் நடவடிக்கைகளைத் தடுப்பதில் ஆப்கானிஸ்தான் அரசு தங்களுக்கு உதவும் என்கிற எதிா்பாா்ப்பு தகா்ந்திருக்கிறது. அமெரிக்காவின் உதவியும் அநேகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
- கட்டுக்கடங்காத பணவீக்கத்தால் விண்ணை முட்டும் விலைவாசி உயா்வு, அரசியல் நிலையற்ற தன்மை, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவது, தொடா்ந்து சா்வதேச அமைப்புகளிடம் கடனுக்காக கையேந்துவது, அமெரிக்க நிதி உதவி குறைப்பு போன்றவற்றால் பாகிஸ்தானின் நிலை இடியாப்ப சிக்கலாகியிருக்கிறது.
- பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தானிய அரசை நிலைகுலைய வைத்து, ஆப்கானிஸ்தானைப்போல ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற பாகிஸ்தானிய தலிபான்களின் நடவடிக்கைகளைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றன பாகிஸ்தான் அரசும், ராணுவமும். தொடா் போராட்டங்களை நடத்திவரும் இம்ரான் கட்சியுடனும், ஆப்கானிஸ்தான் தலிபான்களுடனும், ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சியினா் பேச்சுவாா்த்தை நடத்தி ஓரளவு இயல்பு நிலையை மீட்டெடுக்கவில்லை என்றால், பாகிஸ்தானிய தலிபான்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
- வலிமையான அரசியல் தலைமையும் இல்லாமல், அரசை தன்னிச்சையாகச் செயல்படவிடாமல், ராணுவம் தடுக்கும் இதேநிலை தொடா்ந்தால் ஆப்கானிஸ்தான் வழியில் பாகிஸ்தானும் தலிபான்களின் பிடியில் சிக்கக் கூடும்.
நன்றி: தினமணி (03 – 01 – 2025)