- திருப்பூர் அருகே சில நாட்களுக்கு முன்னால் நடந்த விபத்தில் 19 பேர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் அவ்வவ்போது சாலை விபத்துகள் நடப்பதையும், அதில் பல உயிர்களை இழப்பதையும் வெறும் செய்தியாகக் கடந்துபோகப் பழகிவிட்டோமா என்று நினைக்கத் தோன்றுகிறது.
சமீபத்தில் நடந்த விபத்து
- பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற பேருந்து கேரள அரசுக்குச் சொந்தமானது. சரக்குப் பெட்டக லாரியை ஓட்டுநர் தனியாக ஓட்டியிருக்கிறார். அசதியில் அவர் கண்ணயர்ந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதாக முதல் கட்ட விசாரணை தெரிவிக்கிறது.
- அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேல் பாரம் ஏற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. அந்த லாரியில் உதவியாளர் இருந்திருந்தால் ஓட்டுநருக்குத் தூக்கக் கலக்கம் ஏற்பட்டபோதோ, வாகனம் தடுமாறியபோதோ எச்சரித்து விபத்தைத் தவிர்த்திருக்கக்கூடும். தற்போது சாலைகளில் வாகனப் பெருக்கம் அதிகரித்திருக்கிறது.
- பகலுக்கு நிகராக இரவிலும் சாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சாலை வழியிலான பயணம் என்பதே - குறிப்பாக, இரவுப் பயணம் - உயிரைப் பணயம் வைப்பதற்கு நிகராகப் பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. பயணிகளுடைய பாதுகாப்பை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் வாகன உரிமையாளர்களும் உறுதிசெய்வதில் முனைப்பு காட்ட வேண்டும்.
மோட்டார் வாகனச் சட்டம்
- விபத்துகளைக் குறைக்கும் நோக்கில்தான் மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டது. தவறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம், சிறைத்தண்டனை ஆகியவை அதிகரிக்கப்பட்டன. அபராதம் பல மடங்காக்கப்பட்டது பெரும் எதிர்ப்புக்கு உள்ளானது. உயர்த்தப்பட்ட அபராதங்களை நாங்கள் வசூலிக்க மாட்டோம் என்று சில மாநில அரசுகள் அறிவித்தன.
- நல்ல நோக்கத்தில் சட்டம் திருத்தப்பட்டது என்றாலும் அது செயல்படுத்தப்பட்ட முறையில் போதாமைகள் இருந்தன.
- அவை களையப்பட்டு மீண்டும் அதற்குப் புத்துயிரூட்ட வேண்டும். ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த உலக அளவிலான போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ‘விபத்துகளைக் குறைப்போம்’ என்று உறுதியளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.
சாலை விபத்துகள்
- இந்தியாவில் சாலை விபத்துகளில் இறப்போரில் 69% பேர் 18 வயது முதல் 45 வயது வரையில் ஆனவர்கள். மிதிவண்டி ஓட்டிகள், இருச்சக்கர வாகன ஓட்டிகள், சாலையைக் கடக்கும் பாதசாரிகள்தான் விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
- இத்தகைய விபத்துகள்தான் மொத்த விபத்தில் 54% ஆக இருக்கிறது. 2018-ல் மட்டும் இந்தியச் சாலைகளில் விபத்தால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 1,51,417.
- இந்த எண்ணிக்கையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள்ளாவது குறைக்க வேண்டிய எண்ணத்தோடு ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் திட்டங்கள் வகுக்க வேண்டும். இந்தியச் சாலை விபத்துகளை 50% என்ற அளவில் குறைப்பதற்கு ரூ.7,65,000 கோடி நிதியும் பத்து ஆண்டுகளும் தேவைப்படுவதாக மதிப்பிடப்படுகிறது.
- விபத்துகளைத் தடுக்க தேசிய அளவில் சாலை பாதுகாப்பு வாரியம் போதிய அதிகாரங்களுடன் அமைக்கப்பட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து அம்சங்கள் குறித்தும் மாநில அரசுகளுக்கு அது ஆலோசனைகளை வழங்க வேண்டும். சாலைப் பாதுகாப்புக்கு மாநில அரசு முகமைகள் பொறுப்பாக்கப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (27-02-2020)