விபத்தில்லா சாலைப் பயணம் சாத்தியமே!
- சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற உலக பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி , 2019-ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தங்களின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது விதிக்கப்படும் அபராதத் தொகை உயர்த்தப்பட்டபோதிலும், சாலை விதிமீறல்கள் அதிகரித்துதான் வருகின்றன என்றும், வாகன ஓட்டிகளின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டாலொழிய விபத்துகளைக் குறைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
- பெருநகரங்களில் போக்குவரத்து காவல் துறையினரின் கண்காணிப்பு, தானியங்கி சிக்னல்கள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றால் சாலை விபத்துகள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால், கட்டுப்பாடுகள் அதிகமில்லா புறநகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் சாலை விபத்துகள், அதிகமாக நிகழ்கின்றன.
- ஓட்டுநர் உரிமம் இல்லாத 18 வயதுக்குட்பட்டவர் இரு சக்கர மோட்டார் வாகனங்களை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ள போதிலும், இவர்கள் அந்த வகை வாகனங்களை ஓட்டுவது கிராமப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதில் உள்ள விபரீதத்தை உணராமல் பெற்றோர் சிலரும் சட்டத்துக்கு புறம்பான தங்கள் பிள்ளைகளின் இச் செயலுக்கு ஒத்துழைப்பது வேதனை அளிக்கிறது.
- இரு சக்கர மோட்டார் வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து விதிகள் வலியுறுத்துகின்ற போதிலும், போக்குவரத்துக் காவல் துறையினர் விதிக்கும் அபராதத் தொகைக்கு பயந்து தலைக் கவசம் அணியும் வாகன ஓட்டிகளே நம்மில் அதிகம். நம் நாட்டில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதால் கடந்த 2022-ஆம் ஆண்டில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் 50,029 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சில மாதங்களுக்கு முன்னர், ஹரியாணா மாநிலம், மஹேந்திரகர் மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயணித்த பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த துயர விபத்துக்கு பேருந்து ஓட்டுநர் மது அருந்திவிட்டு அதிவேகத்தில் பேருந்தை இயக்கியதுதான் காரணம் என விசாரணையில் தெரிய வந்தது. தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும் இளம் சிறார்களின் பாதுகாப்பில் பள்ளிகள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
- பள்ளிப் பேருந்துகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டாது, அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் தமது பள்ளிப் பேருந்து பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, சாலை விபத்துகளைத் தவிர்க்க முன்வர வேண்டும்.
- "இந்தியாவில் சாலை விபத்துகள் -2022' என்ற அறிக்கையை நம் நாட்டின் தரைவழி போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 70% அதிவேகமாக வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்டவை எனத் தெரியவருகிறது.
- சாலைகளில் வாகனங்கள் அதிக வேகமாக செல்வதைத் தடை செய்ய வேகத் தடைகள் அமைக்கப்படுகின்றன. வேகத் தடைகள் குறித்த அறிவிப்பின்மை மற்றும் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு இவற்றாலும் சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது.
- உலகின் சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளின் வரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. 2022-ஆம் ஆண்டில் நம் நாட்டில் நிகழ்ந்த 4,61,312 சாலை விபத்துகளில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர்.
- வாகனங்கள் உற்பத்திக்கேற்ப சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள், புறவழிச் சாலை என வாகன நெரிசல் மற்றும் விபத்துகளை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வாகன ஓட்டிகளின் கவனக் குறைவு, சாலை விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படாமை ஆகியவற்றால் சாலை விபத்துகள் நிகழ்வது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.
- வாகன ஓட்டிகள் கைப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்குவது சாலை விபத்துகளில் பெரும் பங்கு வகிக்கிறது. கைப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்க வேண்டாமென வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதைக் கடைப்பிடிப்பதில்லை.
- மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 185-இன் கீழ் குடிபோதையில் வாகனங்களை இயக்குவது சட்டவிரோதம். இதற்கு தண்டனையாக சிறைத் தண்டனையோ, அபராதமோ விதிக்கலாம். எனினும், சாலை விதிகளை மீறுவோருக்கு பெரும்பாலும் அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால், சாலை விதி மீறலை வாகன ஓட்டிகள் பெரிதாகக் கருதுவதில்லை. எனவே, சாலை விதிகளை மீறுவோருக்கு சிறைத் தண்டனை என்று கடுமையான சட்டம் கொண்டுவரப்படுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிப்பது நல்லது.
- பண அபராதத்தைவிட, சிறைவாசம் என்ற தண்டனை எழுப்பும் அச்சம் வாகன ஓட்டிகளை கவனத்துடன் செயல்படத் தூண்டுகோலாக இருக்கும். ஒருவரின் கவனக் குறைவால் ஏற்படும் சாலை விபத்து என்பது, வாகன ஓட்டிக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்துவதோடு நிற்பதில்லை; தவறு செய்யாத இன்னொரு வாகன ஓட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம். நடந்து செல்லும் அப்பாவியான சாலைப் பயன்பாட்டாளரின் வாழ்க்கையையேகூட ஒரு விபத்து புரட்டிப் போட வல்லது.
- வாகனங்களுக்கு ஏற்படக் கூடிய சேதம் மட்டுமல்ல; உடல் உறுப்பு இழப்பு, உயிரிழப்பு என குடும்பத்தையே கலக்கிவிடக் கூடியது. சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முறையாகப் பின்பற்றினால் விபத்தில்லா சாலைப் பயணம் சாத்தியமே!
நன்றி: தினமணி (26 – 09 – 2024)