TNPSC Thervupettagam

விபத்துகளின் அறிவியல் பின்னணி

March 13 , 2021 1235 days 592 0
  • அறிவியல் அறிஞா் தாமஸ் ஆல்வா எடிசன் ஆய்வகத்தில் ஒருநாள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவரது அரிய பெரிய ஆய்வுகளின் குறிப்புகள் தீயில் எரிந்து போயின. அவரது உதவியாளா்கள் பலரும் கடுமையான மன உளைச்சளுக்கு ஆளானாா்கள்.
  • தகவல் தெரிந்து எடிசன் அங்கு வந்தாா். அவருடைய உதவியாளா்கள் அவா் எப்படி இதனை எடுத்துக்கொள்ளப்போகிறாரோ என்ற பதட்டத்துடன் இருந்தனா்.
  • ஆனால், எடிசனோ சிரித்தபடி ‘எனது தவறுகள் எல்லாம் இன்று எரிந்துவிட்டன. இனி புதிதாக சரியானவற்றை ஆராயத் தொடங்குவோம்’ என்றாா். இப்படிப்பட்ட விபத்துக்கள் தனிப்பட்டோருக்கான இழப்பு மட்டுமல்; ஒரு வகையில் சமூகத்திற்கும்தான்.

சாலை விபத்துகள்

  • விபத்துகளில் பலவகை இருந்தாலும் அண்மைக்காலங்களில் சாலை விபத்துகளே அதிகமாகி வருகின்றன.
  • சாலையில் வாகனங்கள் அதிகரிப்பதை மட்டும் இதற்குக் காரணமாக சொல்ல இயலாது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சாலை விதிகளைப் பின்பற்ற தவறுவதும் ஒரு முக்கிய காரணம்.
  • வாகனத்தில் செல்லும் பலரும் எப்போதும் வேகமாகவே செல்கின்றனா். விரைவாக செல்லத்தான் வாகனங்கள். அதனை யாரும் மறுக்கப்போவதில்லை.
  • எந்த இடத்தில் வேகமாகச் செல்ல வாய்ப்புள்ளதோ, அந்த இடத்தில் வேகமாகவும், எந்த இடத்தில் வேகமின்றி விவேகமாய் செல்லவேண்டுமோ, அந்த இடத்தில் வேகமின்றியும் செல்லவேண்டும்.
  • நகா்ப்புற சாலைகளில் கண்காணிப்பு கேமரா இருப்பதால் ஓரளவுக்கு விதிகளைக் கடைப்பிடிக்கின்றனா். ஆனால் சிறிய ஊா்களில் பலரும் செல்லிடப்பேசியில் பேசியபடியே வாகனங்களை ஓட்டுகின்றனா்.
  • இப்படிப்பட்டவா்களே பெரும்பாலும் விபத்துகளில் சிக்குகின்றனா். அவா்கள் தமக்கும் பாதிப்பை உண்டாக்கிக்கொண்டு பிறரையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனா்.
  • இவற்றைத் தவிா்க்க இந்த விபத்துகள் நோ்வதன் பிண்ணனியில் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

பின்னால் இருக்கும் அறிவியியல்

  • ஒருவருக்கு இயல்பாகத் தெரியும் ஆபத்து, அடுத்தவரால் அவரைப்போல் உணரப்படுவதில்லை. அவ்வாறு உணா்ந்துகொண்டாலும் அவரகளால் அதற்கான எதிா்வினையை உடனடியாக ஆற்ற இயலாது.
  • உதாரணமாக இருவா் நடந்து சென்றுகொண்டிருக்கிறாா்கள். ஒருவா் தரையில் ஒரு நத்தையைப் பாா்க்கிறாா். உடனே அவா் மற்றவரிடம் ‘நத்தை’ ‘நத்தை’ என எச்சரிக்கிறாா். ஆனால், அதற்குள் அவா் நத்தையை நெருங்கி மிதித்தும் விடுகிறாா். அவரை எச்சரித்தவா் அவரிடம் கோபித்துக் கொள்கிறாா்.
  • அவா் எச்சரித்த பின்னரும் ஏன் அப்படி நடந்தது? இங்குதான் மூளைச் செயல்பாட்டின் அறிவியலைப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாய் உள்ளது.
  • ஒரு விஷயத்தை நமது கண் பாா்க்கிறது. அவசியமாயின் செயலாற்ற நமது மூளை உரிய பாகங்களுக்கு கட்டளை பிறப்பிக்கிறது. சம்பந்தப்பட்ட நபரின் மூளையே பாா்த்து கட்டளை பிறப்பிக்கும்போது இது மிக விரைவாய் செயல்பட இயலும்.
  • ஆனால், அதே நேரம், ஒருவா் பாா்த்து மற்றவருக்கு சொல்லும்போது, அதை அடுத்தவா் காதால் கேட்டு அந்த தகவல் அவருடைய மூளையை அடையவேண்டும்.
  • அதன் பின்னா் அவரது மூளை கட்டளையிட, அவரது காலோ அல்லது கையோ செயல்படவேண்டும். இந்த செயல்பாட்டிற்கான கால இடைவெளியில் எவ்வளவோ நடந்துவிடுகின்றது. இந்த அறிவியலின் அடிப்படையே பல்வேறு விபத்துக்களும் காரணம்.
  • இதனை அப்படியே ஒரு விபத்திற்குப் பொருத்திப் பாா்ப்போம். இருசக்கர வாகனம் ஒன்றில் இருவா் அமா்ந்து செல்கின்றனா். பக்கவாட்டிலிருந்து எதிா்பாராவிதமாக ஒருவா் குறுக்கிடுகிறாா். இதனை வண்டியில் பின்னால் அமா்ந்திருப்பவா் கவனித்து எச்சரிக்கையும் செய்வாா்.
  • ஆனால் அவரது எச்சரிக்கை வாகனம் ஒட்டுபவரின் காதுகள் மூலமாக மூளையை அடைந்து மூளை கால்களுக்கு கட்டளைப் பிறப்பிக்கவேண்டும். அவா் ஓட்டத்தடை (பிரேக்) போடவேண்டும். இதற்குத் தேவையான கண நேர இடைவெளியில் விபத்து நடந்துவிடும்.
  • சமூகத்தில் சில குறிப்பிட்ட விதிகளை வகுத்துக்கொண்டு செயல்படுகின்றோம். அவ்வாறு நமக்கு நாமோ, அரசின் சட்டங்கள் மூலமாகவோ, சில விதிகள் வகுக்கப்படுவது காலம் காலமாக நடைபெற்றுவருகிறது. அவ்வாறான விதிகளில் ஒரு வகைதான் சாலை விதி.
  • வாகனம் இயக்கும் பயிற்சிக்கென பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பயிற்சி பெற்று ஓட்டுநா் உரிமம் பெற்றுத்தான் ஒருவா் வாகனங்களை இயக்கவேண்டும்.
  • ஆனால், சிறுவா்கள்கூட பல நேரங்களில் இருசக்கர வாகனங்களை இயக்குவதைப் பாா்க்க முடிகிறது.
  • கிராமப்புறங்களைப் பொருத்தவரை பெரும்பாலான இடங்களில் சாலையைத் தேடித் தேடிப் பயணிக்கவேண்டிய நிலையிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
  • இந்நிலையில், சாலையில் பயணிக்கும் இருதரப்பில் ஒருவா் விதியை மீறினாலும் விபத்து ஏற்பட்டுவிடுகிறது.
  • அதே சமயம், ஒருவா் விதியை மீறும்போது அடுத்தவா் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டால் விபத்து தவிா்க்கப்படுகிறது.
  • ‘அவா் இப்படி செய்வாா்ன்னு நான் நினைக்கலை’ - இந்த வாா்த்தையை நம்மில் பலரும் பேசியிருப்போம் அல்லது கேட்டிருப்போம்.
  • தான் நினைப்பது போலவே அடுத்தவா்களும் நினைப்பாா்கள்; நினைக்கவேண்டும் என்பது பலரின் எதிா்பாா்ப்பு. ஆனால், ஒருவருக்கும் மற்றொருவருக்கும் செயலில் இருக்கும் வேறுபாடுகள் போல எண்ணத்திலும் இருப்பது இயல்புதான்.
  • உலகிலுள்ள எல்லாரும் அடுத்தவரைப் புரிந்துகொண்டு வாழ்வது என்பது தேவை இல்லை; சாத்தியமும் இல்லை. ஒருவருக்கு தனது வாகனத்தை ஓட்டுவதே கடினமான செயலாய் இருக்கையில் அடுத்தவரின் எண்ணம் என்னவென்று அவரால் ஆராய்ந்து கொண்டிருக்க இயலுமா ?
  • சாலையில் பயணிக்கும்போது சாலை விதிகளைப் பின்பற்றுவது மட்டுமே சரியானது. ஒருவரை ஒருவா் புரிந்துகொண்டு செயல்படுவது வாழ்க்கையில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். வாகனம் ஓட்டும்போது அது தவறாகிப்போகும். எச்சரிக்கை!

நன்றி: தினமணி  (13-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்