PREVIOUS
வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான பிரஷாந்த் பூஷன் எதிர்கொண்டுவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது, ‘அவமதிப்பு தொடர்பான சட்டம் தற்போது எப்படி இருக்கிறதோ அப்படியே தொடர வேண்டுமா?’ என்ற கேள்வியை எழுப்புகிறது.
சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, தனிமனிதர்களே ஊடகங்கள்போல ஆகிவரும் யுகம் ஒன்றில் நாம் நுழைந்திருக்கிறோம். ஒவ்வொருவரும் இன்று விமர்சகர்களாக உருவெடுக்கின்றனர்.
ஜனநாயகத்தில் இதெல்லாம் இயல்பாக நடக்கக் கூடியதே. எல்லாக் கருத்துகளையுமே நீதிமன்றங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை என்றாலும், கட்டுக்கடங்காமல் பெருகும் கருத்துகளையெல்லாம் தேடிப்பிடித்துத் தண்டிப்பதில், தனது நேரத்தை நீதிமன்றங்கள் செலவிடுவது உசிதமானது அல்ல என்பதையும் சேர்த்தே யோசிக்க வேண்டியிருக்கிறது.
மேலும், நீதிமன்றம் இயங்கும் முறைகளையும் அவற்றின் முடிவுகளையும் விமர்சிக்கவோ கேள்விகேட்கவோ சுதந்திரச் சூழல் வளர்த்தெடுக்கப்படுதலும் இந்தியாவில் அவசியமான ஒன்று.
உள்நோக்கத்துடன் நீதிமன்றத்தை அவமதித்தல், நீதித் துறையின் நிர்வாகத்தில் தலையிடுதல், நீதிபதிகளுக்கு வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்தல் போன்றவற்றைத் தண்டிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் வேண்டும் என்பதை அநேகமாக யாரும் மறுக்கப்போவதில்லை. நியாயமற்ற தாக்குதல்களிலிருந்து நீதித் துறையைப் பாதுகாக்கவும், பொதுமக்கள் பார்வையில் அதன் செல்வாக்கு திடீரென்று வீழ்ச்சியடைவதைத் தடுக்கவுமான முனைப்புகளைத் தவறு என்று சொல்ல முடியாது.
ஆனால், நீதிபதிகளைச் சூழ்ந்திருக்கும் ‘ஒளிவட்டம்’ குறையக் கூடாது என்று பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டன் கொண்டுவந்த அவதூறுச் சட்டச் சிந்தனையை இன்றும் நாம் தொடர்வது நியாயமாக இருக்க முடியாது.
பிரிட்டனிலேயே அவமதிப்புக் கோட்பாடு வழக்கொழிந்துபோனதால்தான் ‘நீதிமன்றத்தை அவமதித்தல்’ என்ற குற்றத்தையே அந்நாடு நீக்கியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சமகாலத்தைப் பொறுத்தவரை, நீதிமன்றங்கள் பொறுப்பேற்புத்தன்மை தொடர்பில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும் என்று குடிமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீதிமன்றங்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பாரபட்சமற்ற விசாரணைகளின் மூலம் அவை எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய அவதூறுச் சட்டம் என்ற அச்சுறுத்தலைக் கொண்டு அல்ல என்று அவர்கள் கருதினால், அது நியாயம்தான்.
எப்படியும், நீதி அமைப்பின் நடைமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியம். துரதிர்ஷ்டவசமாக, நீதிபதிகள் வழக்கிலிருந்து ஒதுங்கிக்கொள்ளும் காரணம் என்ன என்பதையே தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கான அமைப்பாக இதை நாம் பராமரிக்கிறோம். பாலியல் குற்றச்சாட்டுகள்கூட எவரும் குறைகூற முடியாத வண்ணம் விசாரிக்கப்படுவதில்லை.
இத்தகு சூழலில் அமைப்பைத்தான் நாம் சீரமைக்க வேண்டும். நம்முடைய நீதித் துறை இன்னும் தாராளமாகத் தன் மீதான விமர்சனங்களை அணுகலாம்.
நன்றி: தி இந்து (31-07-2020)