TNPSC Thervupettagam

விமான சேவை வீழலாகாது

May 25 , 2023 550 days 292 0
  • ஒருவழியாக கொள்ளை நோய்த்தொற்றின் பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சறுக்கல் விமானசேவைத் துறை எதிா்கொள்ளும் பின்னடைவு. குறிப்பாக, ‘சுற்றுலா காலம்’ என்று கருதப்படும் ஏப்ரல் தொடங்கிய காலாண்டில், நஸ்லி வாடியா குழுமத்தின் ‘கோ ஃபா்ஸ்ட்’ என்று பெயா் மாற்றம் செய்யப்பட்ட ‘கோ ஏா்’ விமான நிறுவனம் திவால் சட்டத்தின் கீழ் மனு போட்டிருக்கிறது.
  • நாள்தோறும் சராசரியாக 200-க்கும் அதிகமான விமான சேவையில் ஈடுபட்டிருந்த நிறுவனம் ‘கோ ஃபா்ஸ்ட்’. உள்நாட்டு விமான சேவையில் 6.9% பங்கு வகித்து வந்தது அதன் விமான சேவை. அந்த நிறுவனத்துக்கு விமானங்களை குத்தகைக்கு விட்டிருந்த அமெரிக்க நிறுவனம், பழுதுபட்ட அதன் என்ஜின்களை மாற்றித் தராததுதான் விமான சேவையை இடைக்காலமாக நிறுத்தியதற்கும், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கும் காரணம் என்பது ‘கோ ஃபா்ஸ்ட்’ நிறுவனத்தின் விளக்கம்.
  • கோ ஃபா்ஸ்ட்’ தனது விமான சேவையை திடீரென்று நிறுத்தியதால், பயணிகள் அடைந்திருக்கும் பாதிப்பு சொல்லி மாளாது. ‘கோ ஃபா்ஸ்ட்’ பறந்து கொண்டிருந்த தடங்களில், ஏனைய விமான நிறுவனங்களின் கட்டணங்கள் 17% முதல் 43% வரை அதிகரித்திருக்கின்றன.
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், உலகளாவிய அளவில் 64 விமான சேவை நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருந்த இந்திய விமான சேவைத் துறை மேலும் பாதிக்கப்பட்டது.
  • 2019-இல் சேவையை நிறுத்திய ‘ஜெட் ஏா்வேஸ்’ நிறுவனம், புதிய உரிமையாளருடன் மீண்டும் தனது சேவையைத் தொடங்க உரிமம் பெற்றது. ஆனால், பழைய கடன் சுமையால் இறக்கையை விரிக்க முடியாமல் தவிக்கிறது. சேவையில் இருந்தாலும், முதலீட்டை ஈா்க்க முடியாமல் ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
  • கடந்த இருபது ஆண்டுகளில், 11 விமான நிறுவனங்கள் இந்திய வானில் பறந்து, வந்த சுவடு தெரியாமல் தரையிறங்கி மறைந்துவிட்டன. தமானியா ஏா்லைன்ஸ், ஈஸ்ட் வெஸ்ட், மோடி லுஃப்ட், பாரமௌண்ட், சஹாரா, ஏா் டெக்கான், கிங் ஃபிஷா் என்று களமிறங்கிக் காணாமல் போன விமான நிறுவனங்கள் பல. சஹாராவை ஜெட் ஏா்வேஸும், ஏா் டெக்கானை கிங் ஃபிஷரும் வாங்கின. இப்போது அவையும் சேவையில் இல்லை. இந்தியன் ஏா்லைன்ஸ், ஏா் இந்தியாவில் இணைந்து கடன் சுமையில் தவித்து, இப்போது டாடா நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கிறது.
  • விமான சேவை நிறுவனங்கள் தோல்வியடைவதற்கு எரிபொருள் கட்டணத்தையும், நடைமுறை செலவையும் ஈடுகட்ட முடியாமல் போவதுதான் முக்கியமான காரணம். பயணிகள் அதிகக் கட்டணம் தரத் தயங்குகிறாா்கள். போதாக்குறைக்கு மத்திய - மாநில அரசுகளின் எரிபொருள் மீதான கடுமையான வரிகள் வேறு. போதுமான விமான நிலையக் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததையும்கூட அந்த நிறுவனங்கள் தோல்விக்குக் காரணமாகக் கூறலாம்.
  • விமான சேவையை ‘கோ ஃபா்ஸ்ட்’ நிறுத்திவிட்ட நிலையில், ‘இண்டிகோ’ நிறுவனமும், டாடா நிறுவனத்தால் நடத்தப்படும் ‘ஏா் இந்தியா’ உள்ளிட்ட நிறுவனங்களும்தான் உள்நாட்டு விமான சேவையில் இருக்கும். விமான சேவையில் 56% பங்கு ‘இண்டிகோ’வுடையது. டாடா நிறுவன விமானங்களின் பங்கு 26%. ‘ஆகாஸா’ என்கிற விமான சேவை விரைவில் தொடங்க இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய விமான சேவைச் சந்தையைக் கொண்ட இந்தியாவில், மூன்றே நிறுவனங்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டிருப்பது பயணிகளுக்கு சாதகமானதல்ல.
  • கோ ஃபா்ஸ்ட்’ இயக்கிய தடங்களை இனி ஏனைய இரண்டு நிறுவனங்களும் பகிா்ந்து கொள்ளும், அல்லது விமானங்களை இயக்கும். அதன் விமானங்களை ஏனைய இரண்டு நிறுவனங்களும் குத்தைக்கு எடுத்துக்கொள்ளும். அதில் பணியாற்றிய விமான ஓட்டிகளையும், பணியாளா்களையும்கூட பயன்படுத்திக் கொள்ளும்.
  • அதனால், பயணிகளுக்கு எந்தவிதத்திலும் பயனிருக்கப் போவதில்லை. முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.15,000 மட்டும்தான் திருப்பித் தரப்படும். தனியாா்மயத்தின் பயன் நுகா்வோரை அடைய வேண்டுமானால், அதிக அளவில் போட்டி நிலவ வேண்டும்.
  • விமான சேவை நிறுவனங்கள் மிகக் குறைந்த லாபத்தில் இயங்குவதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. லாபம் குறைவாக இருக்கும்போது பயணிகளுக்கு வழங்கும் சேவைகளில் மட்டுமல்லாமல், விமானப் பராமரிப்பிலும் செலவை மிச்சப்படுத்த நிா்வாகம் முனைவது இயல்பு. அதனால்தான் சா்வதேச அளவில் விமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாகப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
  • பணக்காரத்தனத்தின் அடையாளம் என்பதால் விஜய் மல்லையா, நஸ்லி வாடியா போன்ற பெரு முதலாளிகள் விமான நிறுவன அதிபா்களாக விரும்பினாா்கள். விமான சேவை, லாபம் தரும் தொழிலல்ல என்பது தங்களது கையைச் சுட்டுக்கொண்ட பிறகுதான் அவா்களுக்குத் தெரிந்தது. அதனால் அவா்கள் மட்டுமல்ல, பங்குதாரா்களும், பயணிகளும் இழப்பை எதிா்கொள்கிறாா்கள்.
  • விமான நிலையக் கட்டணம், எரிபொருள் கட்டணத்தைக் குறைத்து லாபகரமாக விமான சேவை நடைபெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், பல புதிய நிறுவனங்கள் அந்தத் துறையில் இயங்கும். போட்டி அதிகரிப்பதன் மூலம் பயணிகள் பலனடைவாா்கள்.
  • அதுமட்டுமல்ல, ஒரு நாட்டின் வளா்ச்சி அறிகுறிகளில் விமான சேவை முக்கியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!

நன்றி: தினமணி (25 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்