TNPSC Thervupettagam

விமானப் போக்குவரத்து, விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு

August 27 , 2022 712 days 342 0
  • நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் விமானப் போக்குவரத்திலும், விமான நிலையங்களின் கட்டமைப்பிலும் தற்போதைய மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தெளிவான திட்டமிடலும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும், திட்டத்தை முனைந்து செயல்படுத்தும் ஆற்றலும் இணையும்போது இலக்குகள் நிச்சயம் நிறைவேறும். தில்லியில் அண்மையில் அசோசெம் நிகழ்ச்சியில் பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விமானப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள உள்நாட்டு விமான நிறுவனங்களிடம் 1,200 விமானங்கள் இருக்கும். வரும் பத்தாண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சிறிய ரக விமானங்கள் தரையிறங்கக் கூடிய விமானநிலையங்கள் உள்பட 220 விமானநிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
  • உள்நாட்டு விமான நிலையங்களை அதிகரிக்க "உதான்' என்ற வட்டார இணைப்புத் திட்டம் 2017-இல் தொடங்கப்பட்டது. 2016-இல் 70-ஆக இருந்த உள்நாட்டு விமான நிலையங்களின் எண்ணிக்கையை 2018-க்குள் 150 -ஆக உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இத்திட்டம் முன்னேற்றப்பாதையில் இருந்தாலும், எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை.
  • இதுவரை கூடுதலாக 38 உள்நாட்டு விமானநிலையங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் பல நிலைகளில், பல இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில் நேரிடும் தாமதத்துக்கு மாநில அரசியல் சூழல்கள், நிதி பற்றாக்குறை, தொழில் முனைவோரிடம் காணப்படும் தயக்கம், அதிகார வர்க்கத்தின் அசட்டை ஆகியவை காரணமாகக் கூறப்படுகின்றன. விமானப் போக்குவரத்து சந்தையில் ஈடுபட்டுள்ள சில பெருநிறுவனங்களின் நலிவு, புதிய தொழில் முனைவோருக்கு ஏற்பட்ட தயக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம்.
  • கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் விமான சேவை மூலமாக 13.1 கோடி பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 10 கோடி பேர் உள்நாட்டுப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு போல வசதியானவர்கள் மட்டுமே பயணிக்கும் நிலை மாறி, நடுத்தர மக்களும் பயன்படுத்தும் போக்குவரத்து வசதியாக விமானப் பயண சேவைகள் தற்போது மாறி வருகின்றன. இது வருங்காலத்தில் விமானப் போக்குவரத்துத் துறையில் பலத்த மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் சுமார் 800 விமானங்கள் உள்ளன. சர்வதேச விமானத் தயாரிப்பு நிறுவனமான "போயிங்' 2015-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 1,760 விமானங்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு விமானத் தயாரிப்பு நிறுவனமான "ஏர்பஸ்' வெளியிட்டுள்ள கணிப்பின்படி, அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், கடந்த 2019 ஜனவரி 15-இல் வெளியிட்ட "விஷன் 2040' என்ற தொலைநோக்குத் திட்டம், இத்துறையை வலுப்படுத்தத் தேவையான பல சிந்தனைகளைக் கொண்டதாக உள்ளது. அதன்படி, 2040-இல் நமது நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை 160 கோடி பயணிகளைக் கையாளும் நிலை உருவாகும். தவிர 1.7 கோடி டன் சரக்குகளைக் கையாள வேண்டிய நிலையும் ஏற்படும். அப்போது நாட்டிலுள்ள விமானங்களின் எண்ணிக்கை 2,359-ஆக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
  • அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் இந்திய அரசுக்கு அளித்த வேண்டுகோளில், இந்தியாவின் எட்டு நகரங்களிலிருந்து வாரம் 50,000 பயணிகள் சென்றுவரும் வகையில் அமீரக விமானங்களை இயக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் ஒன்பது நகரங்களிலிருந்து வாரந்தோறும் 65,200 பயணிகள் சென்றுவரும் வகையில் அமீரக விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக, துபையில் மட்டும் 14 லட்சம்  இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களைக் கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோளை ஐக்கிய அரபு அமீரகம் முன்வைத்திருக்கிறது. அந்த வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சம், கடந்த எட்டு ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து சந்தை இந்தியாவில் பல மடங்கு வேகமாக வளர்ந்திருக்கிறது என்பதுதான்.
  • விமானங்கள், விமான சேவை வழங்கும் நிறுவனங்களுடன், விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்திய விமானப் போக்குவரத்து சந்தையின் எதிர்காலம்  பிரகாசமாக உள்ள சூழலில், அவற்றைக் கையாளும் தரம் வாய்ந்த, பாதுகாப்பான ஓடுதளங்களைக் கொண்ட விமானநிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம்.
  • மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரின் தெளிவான இலக்குகள், நமது பொருளாதார வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை. "வரப்புயர நீர் உயரும்' என்பது போல இத்துறையில் உள்கட்டமைப்பு மேம்படுவது நமது எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

நன்றி: தினமணி (27– 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்