TNPSC Thervupettagam

வியட்நாமும் வங்கதேசமும் நமக்குச் சொல்லும் பாடங்கள்!

December 2 , 2020 1510 days 728 0
  • வியட்நாமும் வங்கதேசமும் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. சீனாவுக்கு அடுத்த நிலையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஆடை ஏற்றுமதியாளராக வங்கதேசம் மாறியிருக்கும் வேளையில், வியட்நாமின் ஏற்றுமதி கடந்த எட்டு ஆண்டுகளில் 240% வளர்ச்சியடைந்திருக்கிறது.
  • அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது எது? அந்நாடுகளின் வளர்ச்சியிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள முடியுமா?

வியட்நாமின் வெற்றிக் கதை

  • அரசின் தலையீடுகள் இல்லாத வாணிபக் கொள்கை, மிகவும் குறைவான ஊதியத்தில் கிடைக்கும் உழைப்புச் சக்தி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தாராளமான சலுகைகள் ஆகியவை வியட்நாமின் வெற்றிக்குப் பங்களித்திருக்கின்றன.
  • முக்கியமாக, வியட்நாமில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஏற்றுமதி வரிகளை விதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ஜப்பான், தென்கொரியா, இந்தியா போன்ற தன்னுடைய முக்கிய வாணிபக் கூட்டாளிகளுக்கு உறுதியளிக்கும் வகையில் இருதரப்பு சுங்கத் தவிர்ப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அரசின் தலையீடு இல்லாத வாணிபக் கொள்கையை வியட்நாம் பின்பற்றியது.
  • வியட்நாமின் உள்நாட்டுச் சந்தையானது தனது வாணிபக் கூட்டாளிகளின் உற்பத்திப் பொருட்களைச் சுங்க வரிகள் இல்லாமல் அனுமதித்தது. உதாரணத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் 99% உற்பத்திப் பொருட்கள் விரைவில் வியட்நாமில் சுங்க வரி இல்லாமல் அனுமதிக்கப்படவுள்ளன.
  • முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகத் தனது உள்நாட்டுச் சட்டங்களில் மாற்றங்களைச் செய்துகொள்ள வியட்நாம் சம்மதித்தது.
  • வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர்த் தொழில் துறைகளுக்குப் போட்டியாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் கடைகளைத் திறக்க முடியும், சில்லறை வணிகத்தில் நுழைய முடியும், அரசு மற்றும் தனியார்த் துறைப் பொது ஏலங்களிலும் கலந்துகொள்ள முடியும்.
  • மின்சக்தி, மனை வணிகம், மருத்துவமனை, பாதுகாப்பு, ரயில்வே திட்டங்களிலும் அவர்களால் பங்கெடுத்துக்கொள்ள முடியும். இறக்குமதியிலிருந்து விவசாயிகளுக்கும் உள்ளூர்த் தயாரிப்புகளுக்கும் பாதுகாப்பு வழங்காத இந்த முன்மாதிரி இந்தியாவுக்கு சரியாக இருக்க முடியாது.
  • வியட்நாம் ஒரு கட்சி ஆளும் நாடாக இருப்பதாலேயே உள்நாட்டில் எழும் குரல்களை நிராகரிக்க முடிகிறது.
  • பத்து ஆண்டுகளில் அல்லது அதற்கும் மேலாகவே சாம்சங், கேனான், பாக்ஸ்கான், ஹெச்&எம், நைக், அடிடாஸ், ஐகேஇஏ போன்ற பிரபலமான பிராண்டுகள் தங்களது பொருட்களைத் தயாரிப்பதற்காக வியட்நாமில் குவிந்துள்ளன. கடந்த ஆண்டில், வியட்நாம் 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, 2010-ல் 83.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வியட்நாமின் ஏற்றுமதி 2019-ல் 279 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

வங்கதேசத்தின் வெற்றிக் கதை

  • வங்கதேசத்தைப் பொறுத்தவரையில், மிகப் பெரிய அளவிலான ஆடைகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதியாவதே அந்நாடு ஏற்றுமதியில் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம். வங்கதேசம் போன்ற மிகவும் குறைவான வளர்ச்சியடைந்துள்ள நாடுகளிலிருந்து சுங்க வரியில்லாமல் ஆடை மற்றும் இதரப் பொருட்களை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றியமும் அனுமதிக்கிறது.
  • ஆனால், வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் உயர்ந்து, அந்நாடு மிகவும் குறைவான வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலையை இழக்க நேரிடும். அதன் விளைவாக, நான்கிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் இந்த ஏற்றுமதி வாய்ப்பை இழக்க வேண்டியிருக்கும்.
  • வங்கதேசம் தன்னுடைய ஏற்றுமதிப் பொருட்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதில் திறம்படவே பணியாற்றுகிறது. இந்தியா, ஒரு நட்புறவுள்ள பக்கத்து நாடாக, ஆல்கஹால், புகையிலை தவிர்த்து வங்கதேசத்தின் அனைத்துப் பொருட்களையும் சுங்க வரியின்றி அனுமதித்துவருகிறது.
  • வியட்நாமும் வங்கதேசமும் வர்த்தகத்திலிருந்து மிகப் பெரிய அளவில் பலனடைந்திருக்கின்றன. வர்த்தகம் வருமானத்தையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியதோடு கடந்த இருபது ஆண்டுகளுக்குள் பல்லாயிரக்கணக்கானவர்களை வறுமைக்கோட்டிலிருந்து விடுவித்திருக்கிறது.

இந்தியா பின்பற்ற வேண்டியவை

  • உடனடியாக விற்பனை அளவை அதிகரிக்க வேண்டும் என்றால் பெரிய நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் வங்கதேசத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முதன்மைப் பாடம்.
  •  ஒரு பிராண்ட்டைக் கட்டமைப்பது, தர நிர்ணயங்களைச் சமன்செய்வது, சந்தைப்படுத்துவது என பெரிய நிறுவனங்களால்தான் முதலீட்டில் சிறப்பான ஒரு நிலையை எட்ட முடியும்.
  • பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிப் பொருட்களை விநியோகிப்பவர்களாகத் தொடங்கப்படும் சிறு நிறுவனங்கள் படிப்படியாக வளரும். முதலீட்டாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே வியட்நாம் தனது உள்நாட்டு விதிமுறைகளை மாற்றிக் கொண்டது.
  • இதுவரையிலும், வியட்நாமின் பெரும்பான்மையான ஏற்றுமதி ஐந்து துறைகளிலேயே நடந்துவருகிறது. மாறாக, இந்தியாவின் ஏற்றுமதி என்பது மிகவும் பல்வகைப்பட்டது.
  • பொருளாதாரச் சிக்கல்நிலைக் குறியீட்டில் (இசிஐ), ஒரு நாடு வகிக்கும் இடம், அந்நாட்டிலிருந்து உற்பத்தியாகி பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் பல்வகைப்பட்ட தன்மையையும் சிக்கல்களையும் விளக்கிக்காட்டுகிறது.
  • இந்தக் குறியீட்டில் சீனா 32-வது இடம் வகிக்கிறது. இந்தியா 43, வியட்நாம் 79, வங்கதேசம் 127. இந்தியா, வியட்நாமைப் போலன்றி வளர்ச்சியடைந்த உள்ளூர்ச் சந்தையையும் முதலீட்டுச் சந்தையையும் கொண்டது.
  • உற்பத்தியையும் முதலீட்டையும் மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றால், இந்தியா அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பகுதிகளில் துறைவாரியான தொழில் மண்டலங்களை உருவாக்கலாம். அப்போது, ஒரு தொழில் நிறுவனம் மிகச் சில வாரங்களிலேயே தனது செயல்பாடுகளைத் தொடங்கலாம்.
  • நிலத்தைத் தேடி அலையவும் பல்வேறு வகையான ஒப்புதல்களைப் பெறவும் தேவையிருக்காது. பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் முதலீடுகளே வியட்நாமில் உடனடியாக ஏற்றுமதி அதிகரிக்கக் காரணமானது.
  • ஆனால், அதன் மின்னணுச் சாதனங்கள் ஏற்றுமதியில் பெரும் பகுதி, வேறெங்கோ தயாரான பொருட்களைப் பொருத்தி முழு வடிவம் கொடுப்பது மட்டுமே. அத்தகைய சமயங்களில், தேசிய ஏற்றுமதி பெரிதாகத் தோன்றினாலும், கிடைக்கும் நிகர வருமானம் மிகவும் குறைவானதுதான். சீனாவும்கூட இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் கவனம்

  • ஒரு நாடு மற்ற தொழில் துறைகளுக்கான செலவில் வர்த்தகத் துறையை ஊக்கப்படுத்தலாமா? இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஏற்றுமதியை மட்டுமின்றி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளியேற்றப்படும் வாயுக்களின் மறுசுழற்சி (இஜிஆர்) அளவையும் பார்க்க வேண்டும்.
  • வியட்நாமின் இஜிஆர் 107%. அவ்வாறு ஏற்றுமதியையே பெரிதும் சார்ந்திருப்பது அந்நியச் செலாவணியை அளித்தாலும் நிலையற்ற உலகப் பொருளாதாரச் சூழலில் நாட்டை மிகவும் பாதிப்புக்கு ஆளாக்கிவிடவும் செய்யும்.
  • மிகப் பெரும் பொருளாதார அல்லது ஏற்றுமதி நாடுகளின் இஜிஆர் விகிதம் மிகவும் குறைவானதே. அமெரிக்காவின் இஜிஆர் அளவு 11.7%, ஜப்பான் 18.5%, இந்தியா 18.7%. சீனாவிலும்கூட அத்தனை வர்த்தகப் பிரச்சினைகளுக்கு நடுவிலும் அதன் இஜிஆர் 18.4% ஆக உள்ளது.
  • இந்தியா உள்ளிட்ட இதுபோன்ற நாடுகள், அரசு தலையீடுகள் இல்லாத வர்த்தகக் கொள்கையைப் பின்பற்றி சுங்கத் தவிர்ப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும், நேர்மையற்ற இறக்குமதியைக் கட்டுப்படுத்தவே செய்கின்றன.
  • வெற்றிகரமான உள்ளூர்த் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் இரண்டையும் கொண்ட ஆரோக்கியமான கலவையாகவே அவை இருக்கின்றன. ஏற்றுமதிக்கு முன்னுரிமை கொடுத்தபோதும், பொருளாதாரத்தின் இதர துறைகளைப் பலவீனப்படுத்தி அதைச் செய்வதில்லை.
  • புதுமை, போட்டித் திறன் ஆகியவற்றின் வழியாக உயிர்ப்பான பொருளாதார வளர்ச்சியிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. புதுமைகளை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களாலும், தொழில் நிறுவனங்களின் மொத்தச் செலவைக் குறைப்பதாலுமே சிறந்த முதலீடுகளை இந்தியா ஈர்க்கிறது; உலக பொருளாதாரத்துடன் மேலும் தன்னை ஒருங்கிணைத்துக்கொள்கிறது.

நன்றி : இந்து தமிழ் திசை (02-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்