TNPSC Thervupettagam

விருதுக்கும் பெருமை! - அமிதாப் பச்சனுக்கான 'தாதாசாகேப் பால்கே' விருது

September 27 , 2019 1931 days 912 0
  • அரை நூற்றாண்டு கால திரையுலக பங்களிப்புக்கு அங்கீகாரமாக அமிதாப் பச்சனுக்கு 2018-க்கான 'தாதாசாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • 1969-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் பெருமைக்குரிய 50-ஆவது திரையுலக சாதனையாளர் என்று வரலாற்றில் இடம் பிடிக்கிறார் அமிதாப் பச்சன்.
முழுநீள திரைப்படம்
  • துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்கிற தாதாசாகேப் பால்கேதான் இந்தியாவுக்கு முதன்முதலில் முழுநீள திரைப்படத்தை வழங்கியவர்.
  • 1913-ஆம் ஆண்டு அவர் தயாரித்த "ராஜா ஹரிச்சந்திரா' என்கிற மராத்தி திரைப்படம்தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம். அதைத் தொடர்ந்து, அவர் 95 முழுநீள திரைப்படங்களையும், 27 குறும்படங்களையும் வழங்கியிருக்கிறார்.
  • அவரது பெயரில்தான் இந்திய திரைக் கலைஞர்களுக்கு மிக உயரிய விருது வழங்கப்படுகிறது.
  • 1969-இல் முதலாவது "தாதாசாகேப் பால்கே' விருது நடிகை தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னால் விருது பெற்ற அனைவருமே தங்களது திரையுலகப் பங்களிப்பை முடித்துக் கொண்டு ஓய்வு பெற்றுவிட்ட நிலையில்தான் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
  • அமிதாப் பச்சன் இப்போதும் தனது கலைப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 
திரையுலகப் பங்களிப்பு
  • இதற்கு முன்னால் விருது பெற்றவர்களில் யாருமே அமிதாப் பச்சன் அளவுக்கு நீண்டகாலத் திரையுலகப் பங்களிப்பை நல்கியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதேபோல, அமிதாப் பச்சன் அளவுக்கு அகில இந்திய அளவில் குக்கிராமங்கள் வரை சென்றடைந்திருப்பார்களா என்பதும் சந்தேகம்தான்.
  • அந்த வகையில், தனிச்சிறப்புடன் இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் உலக திரையுலக வரலாற்றில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகராக அமிதாப் பச்சன் திகழ்கிறார்.
  • இன்றைய பிரயாக்ராஜ்  என்று அழைக்கப்படும் அன்றைய அலாகாபாத் நகரில், 1942-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி பிறந்த அமிதாப் பச்சனுக்கு திரையுலகில் முகம் காட்டுவதற்கு முன்பாகவே முகவரி இருந்தது.
  • பிரபல ஹிந்தி கவிஞரும், இலக்கியவாதியுமான ஹரிவன்ஷ்ராய் பச்சனின் மகன் என்பதுதான் அது. இடதுசாரி சிந்தனைக் கவிஞரான ஹரிவன்ஷ்ராய் பச்சன், தனது மகனுக்கு சூட்டிய பெயர் இன்குலாப் ஸ்ரீவாஸ்தவா என்பது. நவீன கவிதை, இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஹரிவன்ஷ்ராய் பச்சன் மட்டுமல்ல, அவரது மனைவி தேஜி பச்சனும் அரசியல், சமூக வட்டாரங்களில் குறிப்பிடத்தக்கவராக வலம்  வந்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மிக நெருங்கிய தோழிகளில் ஒருவர். 
  • தனது மகன் ராஜீவ் இத்தாலியப் பெண்ணான அன்டோனியா மைனோ என்பவரைக் காதலிக்கிறார் என்பது தெரிந்ததும், அவருக்கு இந்தியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி விரும்பினார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது தனது தோழி தேஜி பச்சனைத்தான். 

தாதாசாகேப் பால்கே விருது

  • இந்திராவின் மருமகளாகப் போகும் இத்தாலியப் பெண்ணான அன்டோனியா மைனோவுக்கு சோனியா என்கிற இந்தியப் பெயரை தேர்ந்தெடுத்துக் கொடுத்தது பச்சன் தம்பதியர்தான்.
  • திருமணத்திற்கு முன்னால் சுமார் ஆறு மாத காலம் பச்சன் குடும்பத்தில் இந்தியக் கலாசாரத்தைக் கற்றுக்கொள்வதற்காக சோனியா தங்க வைக்கப்பட்டார்.
  • ராஜீவ் - சோனியா திருமணத்திற்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர், இப்போது "தாதாசாகேப் பால்கே' விருது பெறும் 76 வயது அமிதாப் பச்சன்.
  • இந்தியத் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று கொண்டாடப்படும் மிருணாள்  சென்னின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர் அமிதாப். 1969-இல் வெளிவந்த அவரது "புவன் ஷோம்' திரைப்படத்தில் பின்னணி குரல் வழங்குவதன் மூலம்தான் திரையுலகுடனான இன்குலாப் ஸ்ரீவாஸ்தவாவின் தொடர்பு ஏற்பட்டது.
  • அதே ஆண்டில் கே.ஏ. அப்பாஸ் தயாரித்த "சாத் ஹிந்துஸ்தானி' என்கிற திரைப்படம்தான் அவரை அமிதாப் பச்சனாகத் திரையில் அறிமுகப்படுத்தியது. "இந்த உயரமான இளைஞனுக்கு இணையான கதாநாயகி நமது திரைப்படத்தில் இல்லையே' என்று தான் யோசித்ததாக கே.ஏ. அப்பாஸ் பதிவு செய்திருக்கிறார்.
  • ஆனால், உயரம் அமிதாபுக்குத் தடையாக இருக்கவில்லை. மாறாக, எல்லோரையும் அதிவிரைவாகத் தாண்டி முன்வரிசையில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள உதவியாக இருந்தது.
  • அமிதாப் பச்சன் திரையுலகில் நுழைந்த காலம் அன்றைய முன்னணிக் கதாநாயகர்களான திலீப் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த், ராஜேந்திர குமார் ஆகியோரின் காலகட்டம் முடிகின்ற தருணம்.
  • ராஜேஷ் கன்னாவும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்த ஆனந்த், நமக்ஹராம் உள்ளிட்ட திரைப்படங்கள் கதாநாயகனுக்கு நிகரான வாய்ப்பை அவருக்கு வழங்கின. 
வெற்றிப் பயணம்
  • "சாத் ஹிந்துஸ்தானி'யில் தொடங்கிய அமிதாப் பச்சனின் திரையுலக வெற்றிப் பயணம், பா, பிகு, பிங்க் என்று நூற்றாண்டைக் கடந்து இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது.
  • வெள்ளித் திரை, சின்னத் திரை, விளம்பரப் படங்கள், அரசியல் என்று இந்தியக் கலையுலகின் தனிப்பெரும் ஆளுமையாக அமிதாப் பச்சன் வலம் வந்துகொண்டிருக்கிறார். 
  • மரணத்துடனான அவரது போராட்டம், திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட சூழல் என்று அவர் கடந்த நெருப்பு ஆறுகள் ஏராளம் ஏராளம். ஆனாலும்தான் என்ன? அன்றும், இன்றும், என்றும், ஏன் அவர் வாழும் காலம் மட்டும் அவரது இடத்துக்கு இன்னொருவர் இல்லை என்பதுதானே உண்மை. 
  • வெற்றிகரமாக வலம் வரும்போதே "தாதாசாகேப் பால்கே' விருதை வழங்கி அவரை கெளரவித்திருப்பதைப் பாராட்ட வேண்டும்.

நன்றி: தினமணி (27-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்