TNPSC Thervupettagam

விருந்தாளிப் பறவைகளும் இந்திய ஆய்வுகளும்

October 19 , 2024 36 days 80 0

விருந்தாளிப் பறவைகளும் இந்திய ஆய்வுகளும்

  • வலசைப் பறவைகள், அதன் வாழிடப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட ‘உலக வலசைப் பறவைகள் நாள்’ ஆண்டுதோறும் மே, அக்டோபர் இரண்டாம் சனிக்கிழமை உலக நாடுகளால் கொண்டாடப்படுகிறது. வலசைப் பறவைகளைக் கண்டுகளிக்க நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதில்லை. நமது வீடுகளின் அருகிலேயே, பலவித வலசைப் பறவைகளைக் காண இயலும். இதற்குக் கூர்ந்த அவதானிப்பும், பறவை நோக்குதலில் ஆர்வமும் இருந்தால் போதும்.
  • பறவைகள் வலசை போதல் இயற்கையின் வியத்தகு செயல் பாடாகும். இதுபற்றிப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், வலசை தொடர்பான பல கேள்வி களுக்கு இன்றளவும் முழுவதுமாகப் பதில் கிடைக்கவில்லை. காந்தப் புலம், நிலவு-நட்சத்திரம் போன்ற வான் சார்ந்த, பெரும் மலைகள், கடலோரப் பகுதி போன்ற நிலம் சார்ந்த அடையாளங்களை வலசை போதலுக்குப் பறவைகள் பயன்படுத்து வதாக அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அசாதாரணக் காலநிலையைத் தவிர்க்க வடதுருவத்தின் பல பகுதிகளிலிருந்து, உகந்த காலநிலை உள்ள தெற்குப் பகுதிகளில் காலத்தைக்கழித்து, பின் இனப்பெருக்கத்திற்காக வடதுருவத்திற்குப் பறவைகள் திரும்பும் தொடர் நிகழ்வே வலசை போதல். வேறுபட்ட அட்சரேகைகளுக்கு இடையே நடைபெறும் இந்த நீண்டதூர வலசை மட்டுமன்றி, உயர்ந்த மலைகளிலிருந்து சமவெளிகளுக்கு வந்துசெல்வது, குறைந்த தொலைவுகளுக்கு வலசை வருவது என இருப்பிடங்களுக்கு ஏற்பப் பறவையினங்கள் வலசை வருவதில் பல வகைகள் உள்ளன. நாள்தோறும் உணவுக்காக உறைவிடத்திலிருந்து சென்றுவருதல், உணவு/ இனப்பெருக்கம் செய்வதற்காக இடம் தேடிப் பறவைகள் இடம்பெயர்தலை வலசை எனக் கூற இயலாது.

அறிவியல்பூர்வ ஆய்வு:

  • வலசை பற்றிய அறிவியல்பூர்வ ஆய்வுகள் தொடங்குவதற்குப் பல நூறு ஆண்டுகள் முன்பே நமது முன்னோர்கள் இதைக் கண்டறிந்து இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர். பறவைகள் 'V' வடிவத்தில் பறப்பதை சங்ககாலத் தமிழ்ப் புலவர்களும், கவிஞர் காளிதாசரும் மலர் மாலையுடன் ஒப்பிட்டுள்ளனர்.
  • தான் ஒருபொழுதும் சந்தித்திராத நண்பரான கோப்பெருஞ்சோழனுக்கு, கன்னியா குமரியிலிருந்து வடக்கேயுள்ள மலைகள் நோக்கிப் பறந்துசெல்லும் கொக்குகள் மூலம் பிசிராந்தையார் செய்தி அனுப்பியதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இது போன்ற உவமைகளுடன் கூடிய இலக்கியங்களை நமது முன்னோர்கள் எழுதியுள்ளது இயற்கையுடன் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு, அவர்களின் கூர்மையான அவதானிப்பு ஆற்றலை நமக்குக் கூறுகின்றன.
  • ஜொஹான்னெஸ் லெச்சே (Johannes Leche) என்கிற அறிவியல் அறிஞர், 1749இல் வலசைப் பறவைகள் வரும் நாள்களை ஆய்ந்தறிந்தது வலசைப் பற்றிய முதல் ஆய்வாக அறியப்படுகிறது. ஹெச்.சி.சி. மார்டென்சன் (Hans Christian Cornelius Mortensen) வலயமிட்ட பறவைகளின் வலசைப் பற்றிய ஆய்வுகளின் முன்னோடி ஆவார் (1899). பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் (BNHS) தான் இந்தியாவில் பறவைகள் வலசை போதல் பற்றிய ஆய்வின் முன்னோடி. இக்கழகம் பறவைகளுக்கு வலயமிடும் ஆய்வுகளை 1927இல் தொடங்கியது.
  • தொடர் ஆய்வுகள் மூலம் இதுவரை 7,00,000 பறவைகளுக்கு மேல் வலயமிடப்பட்டுள்ளது. இவற்றில் 3,500 பறவைகளுக்கு மேல் பல்வேறு நாடுகளில் மற்றவர்களால் பிடிக்கப்பட்டு அல்லது அது பற்றிய தகவல்கள் நம்மிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டதன் வாயிலாக, ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 29 நாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவிற்கு வந்துசெல்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, பி.என்.ஹெச்.எஸ்ஸின் ஆய்வு முடிவுகள் மத்திய ஆசிய வலசை வழித்தடத்தின் (Central Asian Flyway) எல்லையை வரையறுக்கப் பெரிதும் துணைபுரிந்துள்ளது.

வலயமிடும் ஆய்வு:

  • நாம் உபயோகிக்கும் வலயங்கள் அலுமினியத்தால் ஆனவை. பறவை களின் கால் அளவிற்கேற்ப வலயத்தின் அளவு மாறுபடும். வலயத்தில், அதன் அளவை குறிக்கும் ஆங்கில எழுத்து, தனிப்பட்ட எண், பி.என்.ஹெச்.எஸ்ஸுக்குத் தகவல் தெரிவிக்கவும் (inform Bombay Natural History Society) என்பது போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
  • ஞெகிழியாலான கழுத்துப்பட்டைகள் (நீண்ட கழுத்து கொண்ட வாத்து வகைகளுக்கு), காலில் அணிவிக்கப்படும் கொடிகள் (உள்ளான் போன்ற நீர்ப்பறவைகளுக்கு) போன்றவை இந்தியாவில் இப்பொழுது பயன்பாட்டில் உள்ளன. உலோக வலயங்களுடன் இவையும் அணிவிக்கப்படுகின்றன. வலயம் மட்டுமே பொருத்துவதன் மூலம் கிடைப்பதைவிட மிக அதிகமாக பலனளிக்கக்கூடியதாக இவை உள்ளன. காரணம் இவை எளிதில் தென்படுவது (தொலைநோக்கி அல்லது ஒளிப்படம்) மூலம். இருந்தபோதும் இவை மூலம் கிடைக்கும் தகவல்கள் முழுமையானதாக இருப்பதில்லை.
  • இந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய அறிவியலாளர்கள் கண்டு பிடித்ததுதான் டெலிமெட்டரி. செயற்கைக்கோள் சமிக்ஞைகள் மூலம் செயல்படும் டெலிமெட்டரி மூலம் பறவை பறக்கும் வேகம், உயரம், இடையில் நின்று செல்கிறதா அல்லது இடைவிடாத பயணமா, பயணிக்கப் பயன்படுத்திய முழுமையான வழி போன்ற பல்வேறுபட்ட தகவல்களைப் பெற இயலும். அதேவேளை, இவற்றின் விலை-பயன்பாட்டில் ஏற்படும் தோல்வி விகிதம் போன்றவை அதிகப் பயன்பாட்டுக்கு இயலாத சூழலை ஏற்படுத்தியுள்ளன.
  • இதுவரை, இந்த நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி 15 வகையைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பறவைகளில் பிஎன்ஹெச்எஸ் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. கோடியக்கரையில் அமைந்துள்ள பிஎன்ஹெச்எஸ்ஸின் வலசைப் பறவைகள் ஆய்வு மையம் மூலம் பல ஆண்டுகளாகத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீப காலமாக, இந்திய வனஉயிரின நிறுவனமும் (Wildlife Institute of India) வலசைப் பறவைகள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

வழித்தட ஒருங்கிணைப்பு:

  • வலசைப் பறவைகள் பல நாடுகளைக்கடந்து பயணிப்பதால், வேட்டையாடப்படுதல், மோசமான வானிலையை எதிர்கொள்ளுதல், வாழிட இழப்பு எனப் பல சவால்களை எதிர்கொள்கின்றன. வலசைப் பறவைகள், அவற்றின் வாழிடப் பாதுகாப்பு என்பது ஒரு நாடு மட்டுமே சார்ந்ததாக இருப்பதில்லை. எனவே, இவற்றின் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாக உள்ளது. வலசை போகும் நீர்ப்பறவைகளின் 9 வழித்தடங்கள் உலகெங்கும் அறியப்பட்டு, அதிலுள்ள நாடுகள் ஒன்றிணைந்து பறவைகள், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்க முயற்சி களை எடுத்துவருகின்றன.
  • இவற்றுள், 30 நாடுகளை உள்ளடக்கிய மத்திய ஆசிய வலசை வழித்தடமானது மிகவும் சிறியது. மற்ற வழித்தடங்களுடன் ஒப்பிடும்போது, இவ்வழித்தடத்தில் அனைத்துநாடுகளுக்குள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தற்போது இல்லை.இருப்பினும், மற்ற நாடுகளை ஒருங்கிணைப்பதிலும், உள்நாட்டுச் செயல்பாடுகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
  • இதுவரை, மத்திய ஆசிய வலசை வழித்தட தேசிய செயல்திட்டத்தை உருவாக்கிய ஒரே நாடு இந்தியாதான். வலசைப் பறவைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழிடப் பாதுகாப்பு, வன அதிகாரிகளின் திறன் வளர்ச்சி, மற்ற பங்குதாரர்களின் திறன் வளர்ச்சி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சர்வதேச ஒத்துழைப்பு போன்ற ஆறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்தச்செயல்திட்டம் 2018ஆம் ஆண்டு இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்த முயற்சிகள் அனைத்திலும் அரசுக்கு அறிவியல்பூர்வ தகவல்களை வழங்கி பிஎன்ஹெச்எஸ் பெரும் பங்காற்றிவருகிறது.

சிறந்த பொழுதுபோக்கு:

  • தொலைக்காட்சிப் பெட்டி அல்லது திறன்பேசியுடனே முடங்கியுள்ள நமது தலைமுறைக்குப் பறவை நோக்குதல் ஒரு சிறந்த வெளிப்புறச் செயல்பாடாகும். மேலும் இப்பொழுதுபோக்கு, நமது கூர்ந்த அவதானிப்புத் திறனை வளர்ப்பதுடன், சுற்றுச்சூழல் பற்றிய அறிவை அதிகரிக்கிறது. இயற்கை நோக்குதலில் ஈடுபடும் குழந்தைகள் கல்வியிலும் சிறந்து விளங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இவை மட்டுமன்றி நீங்கள் கண்டறியும் பறவைகள் குறித்த பதிவுகளை www.ebird.org போன்ற வலை தளங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் மக்கள் அறிவியல் செயல்பாடுகளிலும் பங்காற்றி, இவற்றின் பாதுகாப்பிற்கு முக்கியப் பங்காற்றலாம். நீண்ட தூரத்திலிருந்து வலசை வரும் நீர்ப் பறவைகள் வந்தடையும் இடங்களாகத் தமிழகத்தில் பழவேற்காடு, கழுவேலி, கோடியக்கரை, கரைவெட்டி, மன்னார் வளைகுடா, கன்னியாகுமரிச் சதுப்பு நிலங்கள் புகழ்பெற்றவையாக உள்ளன.அக்டோபர் முதல் மார்ச் மாதம்வரை இப்பறவைகளை இங்கு காண இயலும்.
  • வலயங்களோ அல்லது வேறு அடையாளங்களோ கொண்ட பறவையை யாராவது காண நேர்ந்தால், அது பற்றிய விவரத்தை பிஎன்ஹெச்எஸ்க்கு bands@bnhs.org என்கிற மின்னஞ்சல் மூலம் தெரிவித்து, அது பற்றிய விவரங்களை நீங்களும் அறிந்து மகிழலாம். வலசைப் பறவைகள், வலசை பற்றிய ஆய்வுகள் பற்றி அறிந்த நாம், பற்பல நாடுகளிலிருந்து விருந்தினராக நம் நாட்டிற்கு வலசை வரும் பறவைகள், அவற்றின் வாழிடங்களை ஒன்றுகூடிப் பாதுகாத்திடுவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்