- இந்தியாவில் உள்ள அறிவியல் நிறுவனங்கள் தங்களுடைய திறனைச் சூழலுக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டியதுடன் அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டுக்குச் செலவிடப்பட்டுவரும் நிதியை அதிகப்படுத்த வேண்டிய தேவையையும் இந்தப் பெருந்தொற்றுக் காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
- சமீபத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட, விரைவானதும் செலவு குறைந்ததும் உயர்ந்த தரம் கொண்டதுமான இரண்டு சோதனை முறைகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
- இதன் வாயிலாக தினசரி சோதனைகளை அதிகப்படுத்த முடியும் என்பதோடு துல்லியத் தன்மை கொண்டதாகவும் இச்சோதனைகள் இருக்கும்.
- கடந்த சில வாரங்களில் நாளொன்றுக்கு 10 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்ட இந்தியாவில், அக்டோபர் 21 அன்று முதல் தடவையாக ஏறக்குறைய 15 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.
- இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்டுவந்த சோதனைகளில் பெரும்பாலானவை டெல்லியில் அமைந்துள்ள சி.எஸ்.இ.ஆர். நிறுவனமான மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனைகளே, அவற்றின் வாயிலாக விரைவாக முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது என்றாலும் அவற்றின் தரம் குறைவானதாகவே இருந்தது.
- இந்நிலையில், காரக்பூர் ஐஐடி மேலும் துல்லியமான சோதனைகளை நோக்கி மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாத மனித இயக்கம், தொழில் துறைகள் மீண்டும் தொடக்கம், பண்டிகைக் காலத்தின் வருகை இவற்றோடு குளிர்காலமும் நெருங்கிவரும் நேரத்தில் விரைவில் முடிவுகளை அளிக்கக்கூடியதும் செலவு குறைவானதும் அதிகத் துல்லியத் தன்மை கொண்டதுமான பரிசோதனைச் சாதனங்களின் தேவை அதிகரித்துள்ளது.
- இந்நிலையில், செப்டம்பர் 4 அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியபடி மாநிலங்கள் தேவை ஏற்படும்போது உடனடியாகப் பரிசோதனைகளைச் செய்வதற்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிகத் தரம் கொண்டதும் விலை குறைவானதுமான பரிசோதனை முறைகள் மிகவும் உதவியாக இருக்கும்.
- தற்போது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்டுள்ள புதிய பரிசோதனை முறைகள் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளைக் காட்டிலும் தரம் உயர்ந்ததாக விளங்குகின்றன.
- அதே நேரத்தில், இந்தப் பரிசோதனை முறைகள் இரண்டுக்குமே பரிசோதனை மாதிரிகளிலிருந்து தொற்றுநோய்க்குக் காரணமான நுண்கிருமிகளைப் பிரித்தெடுப்பதற்குக் குறைந்தபட்ச ஆய்வுக்கூடக் கட்டமைப்பு அவசியமானதாக இருக்கிறது.
- எனவே, இந்தியா இன்னும் ஆய்வுக்கூட வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் ஆன்டிஜென் சோதனைகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. எனினும், இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களால் மேம்படுத்தப்பட்டுள்ள இந்தப் பரிசோதனைகள் வணிகரீதியாகவே அமைந்திருந்தாலும் ஆய்வுக்கூடக் கட்டமைப்பு வசதிகள் இருக்கும் இடங்களில் வெகுவிரைவில் ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கு மாற்றாக அமையும்.
- சளிக்குப் பதிலாக எச்சிலில் இருந்தே நோய்த்தொற்றைக் கண்டறியும் சோதனைகளை மேம்படுத்தும் முயற்சியில் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒருவேளை வெற்றிபெற்றுவிட்டால் கிராமப்புறங்களிலும் விரைவான முடிவுகளுக்கான ஆன்டிஜென் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறைந்துவிடும்.
- இதனால், பயிற்சிபெற்ற மருத்துவப் பணியாளர்களின் தேவையைக் குறைப்பதோடு அவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகளையும் குறைக்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (29-10-2020)