- தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடைகள் மூலம் அவை பொதுமக்களுக்கு இலவசமாகவும் குறைந்த விலைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
- இப்படி பொதுமக்கள் வாங்கும் பொருட்கள் மறுவிற்பனைக்கு வருவதைத் தமிழகம் முழுவதும் காணமுடிகிறது. நியாயவிலைக் கடையில் வழங்கும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், இலவச வேட்டி, சேலை மட்டுமல்லாது, அரசு அவ்வப்போது இலவசமாகக் கொடுக்கும் தொலைக்காட்சிப் பெட்டி, மடிக்கணினி, சைக்கிள் போன்றவையும் கூட விற்பனைக்கு வருகின்றன.
- இவற்றுள் அரிசி வியாபாரம் பிரதானமாக இருக்கிறது எனலாம். இதைத்தான் கடத்தல் என்றும் பதுக்கல் என்றும் அதிகாரிகள் ஆங்காங்கே மடக்கிப் பிடிக்கின்றனர். இப்படி வெளிப்படையாகக் கொள்முதல் செய்து விற்பதைக் கடத்தல் அல்லது பதுக்கல் என்று கூற முடியுமா? கொள்முதல் செய்தவர் குற்றவாளி என்றால் அதனை விற்றவரும் குற்றவாளிதானே!
- நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களை விற்கும் திட்டம் நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ளது. அரிசியை இலவசமாக வழங்கும் திட்டம் காலப்போக்கில் உருவானது.
- மத்திய அரசும், மாநில அரசும் அரிசியை வழங்குகின்றன. ஒரு குடும்பத்துக்கு முப்பதிலிருந்து ஐம்பத்தைந்து கிலோ அரிசிவரை இலவசமாகக் கிடைக்கிறது. மக்கள் பசியின்றி வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது இலவச அரிசித் திட்டம். அது கடத்தலுக்கும் பதுக்கலுக்கும் வழி வகுத்துவிட்டது.
- நியாயவிலைக் கடையில் வாங்கிய அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவோர் சிலரே. பலர் அதனை விற்பனை செய்துவிடுகின்றனர். ஒரு மூதாட்டி, "நாங்கள் ஒருநாளும் ரேஷன் அரிசியைப் பொங்கியதில்லை. ஐம்பத்தைந்து கிலோ அரிசி கிடைக்கும். அதை அப்படியே விற்றுவிட்டு, கடையில் நாற்பது ரூபாய்க்கு நல்ல அரிசி வாங்கித்தான் பொங்குவோம்' என்று கூறினார். அந்தப் பாட்டி மட்டுமல்ல, அரிசி அட்டைதாரர்கள் பலரும் இதைத்தான் செய்கின்றனர்.
- அவர்களிடம் இருந்துதான் மேலே சொன்ன நபர்கள் வாங்குகின்றனர். நியாயவிலைக் கடைக்காரர் நேரடியாகக் கொடுப்பதும் உண்டு என்கின்றனர். ரேஷன் அட்டைக்குப் பொருட்கள் வாங்கிவிட்டதாக, பொருள் வாங்காத சிலருக்குக் குறுஞ்செய்திகள் வருவதாக எழும் புகார்கள் இதைப் புலப்படுத்தும். ரேகை வைத்தால்தான் பொருள் வாங்கமுடியும் என்ற நிலை இருக்கும்போது இது எப்படிச் சாத்தியமாகும் என்பதும் புரியவில்லை.
- அரசு குவிண்டால் 2,200 ரூபாய்க்கு நெல்லைக் கொள்முதல் செய்கிறது. பின் அது ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக்கப்படுகிறது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு 50 கிலோ அரிசி கிடைத்தாலும் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 40-க்கு மேல் ஆகிறது. ஈரப்பதம், சேதாரம் போன்றவற்றைக் கணக்கிட்டால் இன்னும் விலை அதிகமாகும். இப்படி நாற்பது ரூபாய்க்கு மேல் அசலாகும் அரிசியைத்தான் அரசு இலவசமாக வழங்குகின்றது.
- இந்த அரிசி கிலோ நான்கு ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் கைமாறுகிறது என்பது வேதனையான விசயம். இப்படிக் கைமாறுவது அரசுக்கும் தெரியும்; அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனாலும் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் இது வாக்குவங்கி விவகாரம். இதில் தலையிட்டால் வாக்கு கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். இதை மறைப்பதற்குத்தான் கடத்தல், பதுக்கல் என்று ஒரு சிலரைக் கைது செய்து, அதைப் பத்திரிகை செய்தியாக்கிவிடுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
- அரிசி கடத்தலையும் பதுக்கலையும் தடுக்க வேண்டுமானால், அரசு சில செயல்களை முன்னெடுக்க வேண்டும். அரிசி அரைவையில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும். வெளிச்சந்தையில் விற்பனையாகும் அரிசியின் தரத்துக்கு ஈடாக ரேஷன் அரிசி அரைவை இருக்க வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும்.
- அரசு கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் இருந்துதான் தனியார் ஆலையினரும் நெல்லைக் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் ரேஷன் அரிசிக்கும் தனியார் தயாரிக்கும் அரிசிக்கும் நிறம், வாசம், தரம், வேகும் நேரம் என நிரம்ப வித்தியாசம் உள்ளது. இது எப்படி உண்டானது? இலவச அரிசிதானே, எப்படி இருந்தால் என்ன என்ற எண்ணம் இருக்கக் கூடாது.
- நியாயவிலைக் கடை அரிசியை வாங்குபவர் மீது கடத்தல், பதுக்கல் என்று வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது போல அதை விற்கும் ரேஷன் அட்டைதாரர் மீதும் நடவடிக்கை எடுப்பது அடுத்துச் செய்ய வேண்டியதாகும்.
- அடுத்ததாக, பொருளாதாரத்தில் நலிந்துள்ள, உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களைக் கண்டறிந்து, அதைப் பயன்படுத்தும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே அரிசி இலவசமாக விநியோகம் செய்யும் நடைமுறையை உருவாக்க வேண்டும். உண்மையான ஏழைகள் யார் என்பதை அடையாளம் காண்பதில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பின்பற்றும் அளவுகோல்கள் வித்தியாசமாக உள்ளன.
- இப்போது தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான அரிசி அட்டைதாரர்கள் இருப்பதாகத் தெரிகிறது. உண்மையிலேயே இலவச அரிசி சிலருக்கு வரப்பிரசாதமாகத்தான் உள்ளது. அதைச் சமைத்துத்தான் உண்கின்றனர். ஆனால் பெரும்பாலோர் இந்த அரிசியைச் சமைப்பதில்லை. வியாபாரிகளிடம் விற்றுவிடுகின்றனர். இந்த உண்மையை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்வரை அரிசி கடத்தலும் பதுக்கலும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
நன்றி: தினமணி (22 – 12 – 2022)