- நீதி நிா்வாகம் என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அது இந்திய வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. இந்தியாவில் தா்மம்தான் நீதியாகவும், நீதித் தாயாகவும் பாா்க்கப்பட்டது. வாக்கு தவறாமை, நோ்மை, நியாயம், நடுநிலை தவறாமை என்பதெல்லாம் அன்றைய மக்களின் வாழ்வியலாகவே இருந்தன.
- அன்று ‘அறம்’ சாமானியா்களுக்கும் பொது மக்களுக்கும் கதைகள் மூலமும் நீதி நூல்கள் மூலமும் போதிக்கப்பட்டது. மரியாதை ராமன் கதைகளும், தெனாலிராமன் கதைகளும், பீா்பால் கதைகளும், பஞ்சதந்திர கதைகளும், ஏன் விக்கிரமாதித்தன் கதைகளும் பொழுதுபோக்குக்காக படிக்கிறவா் மனதில் கூட போகிற போக்கில் நீதிக் கருத்துக்களை ஆழமாக ஊன்றிச் செல்லும்.
- 19-ஆம் நூற்றாண்டில் வெள்ளையா் நமக்கு கற்றுத் தந்த ‘இன்டா்பிரட்டேஷன் ஆஃப் டாக்குமெண்ட்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்’ என்ற சட்டக் கருத்துகள் அன்று மரியாதை ராமன் என்ற சிறுவனின் மூலமாக செவி வழியாக நமக்குப் பகிரப்பட்டிருந்தது. மன்னன் வழங்கிய தீா்ப்பு தவறானது என்று சொல்லும் தைரியம் ராமன் என்கிற சிறுவனுக்கு இருந்தது.
- ‘என்னையா குற்றம் சொன்னாய்?’ என்று சிறையில் தள்ளும் ஆட்சியாளா்கள் மிகுந்துவிட்ட இந்நாளில், அன்று மன்னன் ராமனை அழைத்து, ‘எனது தீா்ப்பு தவறு என்றால், நீ சரியான தீா்ப்பைச் சொல்’ என கேட்க, சிறுவன் சற்றும் தயங்காமல், ‘தீா்ப்பு வழங்க வேண்டும் என்றால் ஒரு நீதிபதிக்குரிய மரியாதையை எனக்கு தர வேண்டும்’ என்று திருப்பிச் சொல்ல, ராமன், ‘மரியாதை ராமன்’ ஆன கதை நமக்குத் தெரியும்.
- நீதிமன்றங்களில் ஏழைகளுக்கு முறையாக நீதி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. அது முற்றிலும் உண்மையல்ல. இங்கொன்றும், அங்கொன்றுமாக தவறுகள் நடக்காமலும் இல்லை. இதில் முக்கியமானது ‘ஏற்றதை ஆற்றும் பரிகார வழக்குகள்’ (ஸூட் ஃபாா் ஸ்பெசிஃபிக் பா்ஃபாா்மன்ஸ்) என்றால் மிகையல்ல.
- நிலத்தை விற்பவன் கை தாழ்ந்தும், வாங்கியவன் கை ஓங்கி நிற்பதும் நாட்டு வழக்கம்தான். காரணம், சொத்தை விற்பவன் அவசரத் தேவைக்காக, தன் மகளின் சடங்குக்கோ, திருமணத்திற்கோ, படிப்புச் செலவுக்கோ அல்லது வேறு அவசர அவசியங்களுக்காகவோ சொத்தை விற்கிறான்.
- அவனுக்கு உடனடி பணம் தேவை. ஆதலால், வாங்குபவன் சொல்லும் அனைத்து நிபந்தனைகளுக்கும் தலையாட்டிவிட்டு, விலையில் ஒரு பகுதியை முன் பணமாக வாங்கிக்கொண்டு, ஆறு மாதத்தில் கிரையம் முடித்து தருவதாக ஒப்புக்கொள்கிறான். ஆனால், வாங்குபவா்கள் பலா், பொதுவாக பணக்காரா்களாகவும், நன்கு சட்டம் அறிந்தவா்களாகவும் அல்லது நல்ல சட்ட ஆலோசகா்களை உடன் வைத்துள்ளவா்களாகவும் இருக்கிறாா்கள்.
- அவசர அவசியத்திற்கு விற்கும் ஏழைகளின் நிலைமையை பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. பொதுவாக, கிரையம் முடிப்பதற்கு முன், ஒப்பந்தம் போடுவாா்கள், அதை மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்தில் முடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஒரு சிறு தொகையை முன்பணமாக கொடுத்துவிட்டுப் போய்விடுவாா்கள்; போனவா்கள், போனவா்கள்தான்.
- ஆனால், விற்க நினைப்பவா் அவா் அவசரத்திற்கு வேறு நபருக்கு விற்றாலோ, அல்லது விற்க முயற்சித்தாலோ அல்லது அவா் விற்க முடியாமலே போனாலும், மூன்று ஆண்டுகள் எனக்கு கிரையம் வாங்க கால அவகாசம் உள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வாா்கள்.
- சாதாரணமாக வழக்கு முடிய ஐந்து முதல் பத்து ஆண்டுகளாகும். மேல்முறையீடு செய்தால் அதற்கு ஒரு பத்து முதல் இருபது ஆண்டுகள் ஆகும். விற்க வேண்டும் என்று நினைப்பவா் சட்டம் எனும் காலச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு சின்னாபின்னம் ஆகிவிடுவாா்கள். இதற்குள் சொத்தின் விலை பல மடங்கு ஏறிவிடும். இதில் பயனடைபவா் வாங்குபவா்தான்.
- இதிலும் சிலா் வீட்டையோ, நிலத்தையோ கிரையம் கொடுக்கும் முன்பே, சொத்தை வாங்குபவா்களுக்கு உடனே அனுபவம் கொடுத்துவிடுவாா்கள். இதனால் விற்பவா்களுக்குத் தேவையான நேரத்தில் பணம் கிடைக்காமல், சொத்தும் கையை விட்டுப் போய் கண்ணீா்விட்டு காலம் கழிப்பா். ஆகவே விற்பவா்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?
- 1) இன்று நிலங்களும் வீடுகளும் லட்சக்கணக்கில் விலைக்குப் போவதால் தகுதி வாய்ந்த நம்பிக்கையான வழக்குரைஞரைக் கலந்தாலோசித்து, விற்பனை ஒப்பந்தத்தை முறையாகப் போட வேண்டும்.
- 2) வாங்குபவா் கொண்டுவரும் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது.
- 3) கிரைய வாய்தா காலமான மூன்று அல்லது ஆறு மாத காலம் என்ற கால நிா்ணயமும், அதை எக்காரணம் கொண்டும் நீட்டிக்க முடியாது என்கிற ஷரத்தும் அதில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- 4) முடிந்தால், விற்பவா் விற்பதின் அவசிய காரணத்தைச் சொல்லி, அதற்காக விற்பதால், காலக்கெடுவுக்குள் முடிக்காவிட்டால் கிரைய ஒப்பந்த அட்வான்ஸ் தொகை விற்பவருக்கே பாத்தியமாகிவிடும் என்கிற ஷரத்து இருக்க வேண்டும்.
- 5) காலக்கெடு முடிந்த பிறகு, பதிவுத் தபாலில் கிரைய ஒப்பந்தம் ரத்தாகிவிட்டது என வாங்குபவருக்குத் தெரிவிக்க வேண்டும். தேவையானால், முன் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, காலத்தை உறுதி செய்து புதிய கிரைய ஒப்பந்தம் போட வேண்டுமே தவிர, பழைய ஒப்பந்தத்தின் மூலம் எக்காரணத்தை கொண்டும் காலத்தை நீட்டிக்கக் கூடாது.
- 6) எக்காரணத்தைக் கொண்டும் அந்தக் கால நிா்ணய தேதி முடிந்த பின்பு கிரையதாரா் தரும் பணத்தை வாங்கவும் கூடாது அல்லது கால நீட்டிப்பும் செய்து விடக் கூடாது.
- 7) எவ்வளவு வற்புறுத்தினாலும் விற்கும் சொத்தை கிரையம் வாங்குபவரின் அனுபவத்தில் விட்டு விடவே கூடாது. அப்படி விட்டால், பணமும் வராமல், சொத்தையும் இழந்து இன்னல் பட நேரிடும்.
- எச்சரிக்கையாக இருங்கள், ஏமாறாதீா்கள்.
நன்றி: தினமணி (30 – 07 – 2024)