TNPSC Thervupettagam

விலைவாசியைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை தேவை

March 17 , 2022 873 days 447 0
  • ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் யுத்தம், உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை விளைவித்துள்ளது.
  • பணவீக்கத்தின் காரணமாக, அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துவகையான பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை உயர்வு இதற்கு முக்கியக் காரணம்.
  • இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் விலை உயர்வையும் கீழிறங்கிக்கொண்டிருக்கும் பண மதிப்பையும் இந்தியா எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
  • நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான மதிப்பீடுகளின்படி, எரி பொருட்களின் விலையும் உணவுப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றன.
  • ஜனவரியில் 6.01% ஆக இருந்த சில்லறை விற்பனை பணவீக்கமானது பிப்ரவரியில் 6.07% ஆக அதிகரித்துள்ளது.
  • சில்லறை விற்பனை பணவீக்கத்துக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச அளவு இது; மார்ச் 2026 வரையில் 4% என்ற அளவிலேயே நிலையாகப் பராமரிக்க வேண்டும். அதிகபட்சமாக 2% கூடவோ குறையவோ செய்யலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • ஜனவரியில் 5.43% ஆக இருந்த நுகர்வோர் உணவுப்பொருட்கள் விலைக் குறியீட்டெண்ணும் பிப்ரவரியில் 5.85% ஆக அதிகரித்துள்ளது.
  • சமையல் எண்ணெய் மட்டுமல்லாது காய்கறிகள், பழ வகைகள், மாமிசம், மீன், முட்டை, மளிகைப் பொருட்கள் என்று அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்த படியே உள்ளது.
  • இந்நிலையில், பணவீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
  • இதுபோலவே, ஜனவரியில் 12.96% ஆக இருந்த மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம், பிப்ரவரியில் 13.11% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் இது 4.83% ஆக இருந்தது.
  • ஏப்ரல் 2021 தொடங்கி, தொடர்ந்து 11 மாதங்களாக இந்தப் பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே தொடர்ந்துவருகிறது. கச்சா எண்ணெய், அடிப்படை உலோகங்கள் மற்றும் வேதிப் பொருட்களின் உலகளாவிய விலை உயர்வு இதற்குக் காரணம்.
  • இந்தியாவுக்கு இறக்குமதியாகும் சூரியகாந்தி எண்ணெயில் ஏறக்குறைய 90% ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிலிருந்து பெறப்பட்டுவந்த சூழலில், தற்போது அது தடை பட்டுள்ளது.
  • விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதிக் கலப்புரங்களில் ஏறக்குறைய 60 சதவீதமும் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கான பொருட்களில் ஏறக்குறைய 30 சதவீதமும் ரஷ்யாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது.
  • தவிர, அடிப்படை உலோகங்களான அலுமினியம், நிக்கல், எஃகு ஆகியவற்றின் உலகளாவிய விலையும் அதிகரித்தபடியே உள்ளது. இவ்வுலோகங்களின் விலை உயர்வு, வீட்டு மின்சாதனப் பொருட்களின் விலையேற்றத்துக்கும் காரணமாகிவிட்டது.
  • அதிகரித்துவரும் விலைவாசியானது நுகர்வு, முதலீடு இரண்டிலுமே நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
  • பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களைப் போலத் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியும் குறைக்கப் பட்டிருப்பது அதிருப்தி அலைகளையும் உருவாக்கியுள்ளது.

நன்றி: தி இந்து (17 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்