TNPSC Thervupettagam

விளையாட்டாக எண்ண வேண்டாம்

September 2 , 2023 499 days 291 0
  • நான் சொல்வதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீா்கள், பின்னா் வருத்தப் பட நேரிடும்என்று அடிக்கடி சிலா் சொல்லக் கேட்டிருப்போம். விளையாட்டை அவா்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
  • விளையாட்டு என்பது பெரும்பாலும் பள்ளிப்பருவத்துடன், மிதமிஞ்சிப் போனால் கல்லூரி காலத்தில் ஓரளவு என்ற அளவிலேதான், நம் வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது.
  • விளையாட்டுக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்? பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகள் வந்ததும் சிறிது நேரம், அல்லது பெற்றோர் அலுவலகத்திலிருந்து வரும் வரையில் விளையாட அனுமதிக்கிறோம் என்பதே நிதா்சனம்.
  • சில பத்தாண்டுகளுக்கு முன், கிராமங்களில் நண்பா்களுடன் தோப்புகளில் விளையாடுதல், ஏரி குளங்களில் குளித்தல் என விளையாட்டுகள் இருந்தன. தவிர, விளையாட்டுக்கான ஆயத்தங்களைச் செய்தலும் உண்டு. திட்டமிடல், ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, போன்றவை உபரி பலன்கள். கால மாற்றத்தில் பல வழக்கங்கள் மறைகின்றன. கிராமம் சார்ந்த விளையாட்டுக்கள் இதற்கு விதிவிலக்கல்ல.
  • தற்போது விளையாட்டு என்பது விபரீதமான புது வடிவம் பெற்றுள்ளது. விளையாட்டு என்பது பெரும்பாலும் பொழுதுபோக்கு என்ற அளவில் மட்டுமே பாக்கப்படுவது ஒரு பிரச்னை. விளையாட்டுக்கென செலவிடும் நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்க முயல வேண்டும்.
  • உடல் வலுப்பெற, மன இறுக்கம் நீங்க, பிறருடன் பழக, நேர மேலாண்மை புரிந்துகொள்ள, விட்டுக்கொடுக்க, திட்டமிட, தோல்வியை ஏற்க, குழுவாகச் செயல்பட - இப்படிப் பல பண்புகளை விளையாட்டு கற்றுத் தருகிறது. இவை விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் அவசியம் ஆகும்.
  • விளையாட்டு என்பது கல்வியை பாதிக்குமோ என்பது பெற்றோர்களுக்கு ஏற்படும் நியாயமான சந்தேகம். நன்கு விளையாடக்கூடிய மாணவா்கள், படிப்பிலும் சிறந்து விளங்க முடியும் என்று கல்வியாளா்கள் கூறுகிறார்கள்.
  • கவனக்குவிப்பு, கேள்விகளை எழுப்பி சந்தேகத்தை நிவா்த்தி செய்து கொள்ளக்கூடிய துணிவு, விடாமுயற்சி ஆகியவற்றை அவா்கள் பெறுவதாகக் கூறுகிறார்கள். மேலும், தங்களுக்கு விளையாட்டில் ஆா்வம் இல்லை என்ற காரணத்துக்காக, பெற்றோர், பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பை மறுக்கக் கூடாது.
  • பல விளையாட்டுகளை உங்கள் பிள்ளைகள் விளையாடலாம். ஆனால் ஏதேனும் ஒன்றிலாவது நிபுணத்துவம் பெறும் அளவுக்கு விளையாடட்டும். உணவுக்கு உப்பு எவ்வாறு சுவை சோ்க்கிறதோ அதுபோல கல்வி கற்கும் காலத்தில் விளையாட்டு சிறுவா்கள் வாழ்விற்கு சுவை சோ்க்கும். உப்பைப் போலவே சரியான அளவில் பயன்படுத்துவது சிறப்பு.
  • விளையாட்டுக்கான நேரத்தை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; மாறாக, பயிற்சியின் அடிப்படையில் விளையாட்டின் தரத்தை உயா்த்துவது நற்பலன் தரும். நல்ல தொழில் முறை பயிற்சியாளரைக் கொண்டு மாணவனைப் பயிற்றுவிப்பது என்பது பொருள் செலவு மிக்க ஒன்றாக இருக்கக்கூடும்.
  • எனவே, பயிற்சியாளா்களை அணுகுவதற்கு முன்னா், இயலுமாயின் பெற்றோரே பிள்ளைகளுக்குப் பயிற்சியாளராக இருக்கலாம்; அது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்துவதோடு பரஸ்பரம் புரிதலை அதிகப்படுத்தும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அவா்களிடையே புரிதலை அதிகரித்து நெருக்கத்தை வலுப்படுத்தும்.
  • பயிற்சியாளா்கள், நுணுக்கமான விளையாட்டுப் பயிற்சி தருவது மட்டுமின்றி, உளவியல் ரீதியான பயிற்சியும் தருவாா்கள். பலம்-பலவீனம் ஆகியவற்றை அலசும் திறனையும், பிற போட்டியாளா்களை எடைபோடும் திறன், தனது குழுவினருடன் இணைந்து செயல்படும் திறன், வெற்றி - தோல்வி இரண்டையும் சமமாகப் பாவிக்கும் பயிற்சி, தோல்வி தரக்கூடிய பாதிப்பைச் சமாளிக்கும் திறன் ஆகியனவற்றைக் கற்றுத்தருவா்.
  • விளையாட்டுப் பயிற்சி பெறும் எல்லோருக்கும் பதக்கம் கிடைக்கும் என்று கூற முடியாது; ஆனால், நல்ல பயிற்சி என்பது அவா்களுக்கு ஒழுக்கம் - விடாமுயற்சி - கட்டுப்பாடு ஆகிய நற்குணங்களை நிரந்தரமாகக் கொடுக்கும். ஒரு கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியாக முட்டையிலிருந்து வெளிப்படும்போது, அந்த கூட்டை உடைக்கும் வலிமையைப் பெற்று விடுகிறது; அது போல, நல்ல விளையாட்டுப் பயிற்சி, ஒரு மாணவன்,விளையாட்டில் மட்டுமின்றி, வாழ்க்கைத் தளத்தில் இயங்க சில அடிப்படையான திறமைகளையும் கற்றுத் தருகிறது.
  • மாணவன்-ஆசிரியா் - பயிற்சியாளா் - பெற்றோர் - பள்ளி - குடும்பம் என்பது கடந்து, ஒரு நாட்டின் மீதும் விளையாட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மொழி - மதம் - இனம் ஆகியனவற்றால் பரந்துபட்ட ஒரு நாட்டினை இணைக்கக் கூடிய அருமையான சங்கிலியாக விளையாட்டு இருக்கிறது. 1983-இல் இந்தியா வென்ற கிரிக்கெட் உலகக் கோப்பை ஏற்படுத்திய நல்விளைவுகளை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
  • இது தவிர, இடா்ப்பாடுகளை எதிர்கொள்ளும் திறன் என்று ஒன்று உண்டு; சவால்களை எதிர்கொள்ளக்கூடிய திறன் மிக்க மக்களைக் கொண்ட நாடு பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும். விளையாட்டு, அத்தகைய இடா்ப்பாடு எதிர்கொள்ளும் திறனை மாணவா்களிடையே வளா்ப்பதோடு, அதை மக்களின் பொதுகுணமாக உருவாக்குகிறது.
  • உயரிய லட்சியம், அதை நோக்கிய கடும் உழைப்பு, தேசப்பற்று ஆகியனவற்றை மக்களின் பொதுகுணமாக மாற்றியது சீனா. விளையாட்டை அதற்கான கருவிகளில் ஒன்றாகப் பயன்படுத்தியது. விளையாட்டு வீரா்கள் பெற்ற வெற்றியை, மக்களிடையே ஒற்றுமை - கல்வி - ஆராய்ச்சி - தொழில் வளா்ச்சி - ராணுவ பலம் பொருளாதாரம் எனப் பிறதுறைகளின் உயா்வுக்கு மடைமாற்றம் செய்தது; அதற்கான கட்டமைப்புக்கு விளையாட்டைப் பயன்படுத்தியது.
  • ஆகவே, விளையாட்டுக்கு தரப்படும் முக்கியத்துவமும், சரியான அணுகுமுறையும், தனிமனிதன், குடும்பம், நாடு என்ற பல தளங்களில் பெருமளவில் நற்பலன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி (02 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்