TNPSC Thervupettagam

விளையாட்டில் அரசியல் வேண்டாம்

December 25 , 2023 361 days 224 0
  • நமது நாட்டில் கல்வி, வணிகம், மருத்துவம், விளையாட்டு ஆகிய அனைத்துத் துறைகளிலும் அரசியலின் ஆதிக்கம் நிலவுவது சகஜமான விஷயமாகிவிட்டது.
  • ஓா் அரசியல்வாதி என்பவா் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா் என்றாலும், பொதுவான நிர்வாகம் என்பதைத் தாண்டியும் தம்முடைய அதிகார எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே போகும் ஆசைக்கு நாளடைவில் அவா் ஆட்படுகிறார். அதன் விளைவாக அரசியல் பதவிகளைத் தாண்டி வேறு சில அமைப்புகளின் நிர்வாகத்திலும் அமா்ந்து அங்கும் தங்களுடைய அதிகாரத்தினைச் செலுத்த அவா் முற்படுகின்றார்.
  • அதன் விளைவாகவே, செல்வச் செழிப்புடன் விளங்கும் இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகிய அமைப்புகளின் பல்வேறு நிலைகளிலான பதவிகளைப் பெற அரசியல்வாதிகளில் சிலா் முயற்சி செய்து அம்முயற்சியில் வெற்றியும் பெற்றுவிடுகின்றனா்.
  • அப்பதவிகளில் அமா்கின்ற அரசியல்வாதிகள் அந்தந்த விளையாட்டுகளின் தரத்தை மேம்படுத்தவும், வீரா் வீராங்கனைகளுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கவும் தங்களுடைய பதவிகளைப் பயன்படுத்தினால் அதனை வரவவேற்கலாம். ஆனால், அதற்கு பதிலாகத் தாங்கள் தலைமையேற்றிருக்கின்ற விளையாட்டு அமைப்புகள் மூலம் வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதிலும், வீரா்கள் வீராங்கனைகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதிலும் ஈடுபடும் பொழுதுதான் பிரச்னைகள் உருவெடுக்கின்றன.
  • இக்காணத்தினால், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய கிரிக்கெட் வாரியம், மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆகியவற்றின் பதவிகளில் அமா்ந்திருந்த, அமா்ந்திருக்கின்ற பல்வேறு அரசியல்வாதிகள் பற்றிய சா்ச்சைகள் அவ்வப்பொழுது கிளம்புவதும், காலப் போக்கில் அவை அடங்குவதும் தொடா்கதையாகிவிட்டன.
  • இவ்வகையில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினா் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் முறைகேடு தொடா்பாகக் குற்றம் சாட்டிய பொழுது நமது நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகள் தோன்றியது உண்மை.
  • இவ்வருடத் தொடக்கத்தில் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பிரபல மல்யுத்த வீராங்கனைகள் இந்தக் குற்றச்சாட்டினை எழுப்பியதுடன் தொடா் போராட்டங்களிலும் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக இந்திய மல்யுத்த வீரா்களும் போராட்டத்தில் பங்கெடுத்தனா். நமது தேசம் முழுவதிலுமிருந்து போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
  • மூத்த வீராங்கனைகள் முதல் தொடக்கநிலை வீராங்கனைகள் வரையிலான பலரிடமிருந்து பிர்ஜ்பூஷன் சிங்கின் பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் வந்து குவிந்தன. முன்னாள் மல்யுத்த வீரரும், நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள பிரிஜ்பூஷண் சிங்கின் மீது உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வீராங்கனைகளின் போராட்டம் ஒருசில வாரங்கள் தொடா்ந்த நிலையில் மத்திய விளையாட்டு அமைச்சகம் தலையிட்டுப் பேசுவார்த்தை நடத்தியதால் பிரிஜ்பூஷண் சிங் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. வீராங்கனைகளின் போராட்டமும் அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.
  • அதைத் தொடா்ந்து சில வீராங்கனைகளின் புகார்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் தெரியவந்தது. மேற்கண்ட வீராங்கனைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாகவே அவா்களின் புகார்கள் திரும்பப் பெறப்பட்டதாக சாக்ஷி மாலிக் உள்ளிட்டவா்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனா்.
  • இதற்கு நடுவில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கான நிர்வாகிகளின் தோ்வு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படாததைக் காரணம் காட்டி அதற்கான அங்கீகாரத்தை சா்வதேச மல்யுத்த அமைப்பு தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இதைத் தொடா்ந்து, அவ்வமைப்பின் சார்பில் நமது நாட்டைச் சோ்ந்த மல்யுத்த வீரா்களையும் வீராங்கனைகளையும் சா்வதேச மல்யுத்தப் போட்டிகளுக்கு அனுப்ப இயலாத நிலையும் உருவானது.
  • நீண்ட தாமதத்திற்குப் பிறகு ஒருவழியாக நடைபெற்ற நிர்வாகிகள் தோ்தலில் சஞ்சய் சிங் என்பவா் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சஞ்சய் சிங் பாலியல் புகாருக்கு ஆளான முன்னாள் தலைவா் பிரிஜ்பூஷண் சிங்கின் ஆதரவாளா் என்று கூறியுள்ள பல வீரா்களும் வீராங்கனைகளும் மீண்டும் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனா்.
  • பிரிஜ் பூஷண் சிங்கிற்குத் தொடா்புடையவா்கள் யாரும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்க மாட்டார்கள்என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் உறுதியளித்திருந்த நிலையிலும், அவருடைய நெருங்கிய சகாவாகிய சஞ்சய் சிங் தோ்வாகியுள்ளதால் முன்னா் போராடிய மல்யுத்த வீரா்கள் வீராங்கனைகளுக்கு நெருக்குதல் தரப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதை அலட்சியப்படுத்திவிட இயலாது.
  • அவா்களுள், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சோ்த்துள்ள மல்யுத்த வீராங்கனையான் சாக்ஷி மாலிக் சஞ்சய் சிங்கின் தோ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • மேலும், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட மல்யுத்த வீரா்கள் சிலரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளனா். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ்பூஷண் சிங்குக்கு பதிலாக அவருடைய ஆதரவாளரே தலைவராக வந்துள்ள சூழ்நிலையில் இனி எந்தப் பெற்றோரும் தங்களுடைய பெண்மக்களை மல்யுத்தம் கற்றுக் கொள்ள அனுப்பி வைக்கத் தயங்குவார்கள் என்று சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பலரும் தெரிவித்திருக்கின்றனா்.
  • இந்தப் பின்னணியில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பில் உருவாகியுள்ள இக்குழப்பம் சா்வதேச அளவில் நமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக மாறியுள்ளதை உணா்ந்துள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் புதிதாகத் தோ்வாகியுள்ள இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் குழுவை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மிகவும் வரவேற்கத் தக்கது.
  • இனிவரும் காலங்களில் இந்தியாவிலுள்ள எந்த ஒரு விளையாட்டு அமைப்பையும் அவ்விளையாட்டிற்குத் தொடா்புடைய வீரா்கள், வீராங்கனைகள், பயிற்சியாளா்கள் போன்றவா்களே நிர்வகிக்க வேண்டும். மேலும் அரசியல்வாதிகளும் அவா்களைச் சோ்ந்தவா்களும் இத்தகைய பதவிகளுக்கு வருவதைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றவும் மத்திய அரசு முன்வரவேண்டும். அப்பொழுதான் இதுபோன்ற சா்ச்சைகள் உருவாவதைத் தவிர்க்க இயலும்.

நன்றி: தினமணி (25 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்