TNPSC Thervupettagam

விளையாட்டு மட்டுமல்ல ஒலிம்பிக்!

July 26 , 2024 7 hrs 0 min 3 0
  • ஆதி மனிதர்கள்​ தங்கள்​ வேட்டை​யாடும் திறனையும், சண்டை​யிடும் திறனையும் வளர்த்​துக்​கொள்ள விளையாட்டை ஒரு பொழுதுபோக்​காகத்​தான் தொடங்​கினர். விளையாட்டு நிறுவனமயப்​படுத்​தப்பட்ட பின்னர் பதக்கங்​கள், பயிற்​சிக்கான தேவைகள், அதுதொடர்பான வணிகம் எனப் பல்வேறு அம்சங்கள்​ சேர்ந்து​கொண்டன. ஒலிம்​பிக் போட்டிகள் அவற்றின் உச்சம். வெற்றி தோல்வி​களைத் தாண்டி பயங்கர​வாதம், பாகுபாடுகள், நோய்கள் என ஏகப்பட்ட பிரச்​சினைகளை​யும் கடந்து​வந்​திருக்​கிறது ஒலிம்​பிக்​கின் பயணம்.

ஒற்​றுமைக்கான தலம்:

  • ஒலிம்​பிக்​கைப் பொறுத்​தவரை, பதக்கம்​ வெல்வதைவிட​வும் பங்கேற்ப​தே மிகப் பெரிய வாய்ப்பு. எந்த நாட்டைச் சேர்ந்​தவராக இருந்​தா​லும் சரி, போட்டி நடக்கும் தருணத்​தில்​தான் ஒருவரையொருவர்​ விஞ்ச மோதிக் ​கொள்வதெல்லாம். போட்டி முடிந்​ததும் வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாகப் பழகுவார்​கள்.
  • ஒருவருக்​கொருவர்​ ஒத்தாசை செய்து ​கொள்​வார்​கள். கால்பந்து, கிரிக்​கெட், ஹாக்கி, எல்லா​ விதமான விளையாட்டுப் போட்டிகளி​லும் இது இயல்பான விஷயம்​தான் என்றாலும், பல்வேறு விளையாட்டுகளின் தொகுப்பாக, சர்வதேச அளவில் நிகழும் ஒலிம்​பிக் திருவிழா​வில்​தான் உலகின் வெவ்வேறு வண்ணங்கள்​ சங்கமித்து ஒற்றுமை என்னும் ஒரு புதிய நிறம் உருவாகும்.
  • முதன்​முறையாக, பொ.ஆ.மு. (கி.மு.) 776இல் கிரேக்​கத்​தின் ஒலிம்​பியாவில் ஒலிம்​பிக் போட்டிகள் வானம் - மின்னலின் கடவுளான ஜீயஸை வழிபடும் விதமாக, ஒரு மதத் திருவிழாவாகத்​தான் தொடங்கின. கொண்டாட்டம்​தான் அந்த விழாவின் முக்கிய நோக்கம். நவீன ஒலிம்​பிக் போட்டிகள் சர்வதேச அளவில் விரிவடைந்​தபோது அது வணிகரீதி​யாகப் பல மாற்றங்​களைக் கண்டது.
  • ஒலிம்​பிக் போட்டிகளை நடத்தும் நாடுகள் அதனால் பொருளாதார ரீதியாகப் பெரும் பலன்களை அடைந்து​ விடுவதில்லை. ஒலிம்பிக் போட்டிகளுக்​கென்றே பிரத்​யேகமாக உருவாக்​கப்​படும் மைதானங்​கள், தங்கும் விடுதிகள்​ உள்ளிட்ட கட்டிடங்கள்​ போன்றவற்​றுக்​கும் இதர ஏற்பாடுகளுக்​குமான செலவுகள்​ மிக அதிகம்.
  • அடிப்​படைத் தேவைகளை​விட​வும் விளையாட்டுக்கு முக்கியத்​துவம்​ தருவதா எனப் போராடிய​வர்கள்​ உண்டு. 1968இல் மெக்ஸிகோ ஒலிம்​பிக்​குக்கு எதிராகப் போராடிய​வர்கள்​ மீது ராணுவம் நடத்திய துப்பாக்​கிச்​ சூட்டில் 200க்​கும் மேற்பட்டோர் உயிரிழந்​தனர்.
  • அதேவேளை​யில், ஒலிம்​பிக் போட்டிகள் லாபத்தை மட்டும் நோக்க​மாகக் கொண்டு நடத்தப்​படுவதில்லை. சர்வதேச ஒலிம்​பிக் சங்கம் எந்த நாட்டையும் சார்ந்தது அல்ல. ஒவ்வொரு நாட்டின் ஒலிம்​பிக் சங்கங்களும்கூட அரசு சார்ந்தவை அல்ல. சர்வதேச ஒலிம்​பிக் சங்கம் தனக்குக் கிடைக்​கும் வருவாயில் பெரும்​பகுதியை உலக நாடுகளின் - குறிப்பாக வறிய, வளரும் நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களை உருவாக்​கு​வதற்கே முதலீடு செய்கிறது.

காதல் முதல் காமம் வரை:

  • ஒலிம்​பிக் போட்டிகளில் சந்தித்​துக் காதல் வயப்பட்ட​வர்​கள், வெற்றிகர​மாகத் திருமணம் வரை சென்றவர்கள்​ பலர். புகழ்​பெற்ற ஸ்விட்​சர்​லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், தனது காதல் மனைவியும் டென்னிஸ் வீராங்​க​னையுமான மிர்காவை முதன்​முதலில் சந்தித்தது 2000 சிட்னி ஒலிம்​பிக்​கின்​போதுதான்.
  • 1988 சியோல் ஒலிம்​பிக் போட்டிகளின்​போதுதான் முதன் முதலில், எச்.ஐ.வி. பரவலைத் தடுக்க விளையாட்டு வீரர்​களுக்கு ஆணுறைகள் வழங்கப்​பட்டன. 2024 பாரிஸ் ஒலிம்​பிக்​கில் விளையாட்டு வீரர்​கள், பயிற்​சி​யாளர்​கள், நடுவர்கள்​ என அனைவருக்​கும் மறுசுழற்சி செய்யப்பட்ட ‘கார்ட்​போர்டு’ (cardboard) அட்டைகளைக் கொண்டு உருவாக்​கப்பட்ட படுக்​கைகள்​தான் ஒதுக்​கப்​பட்டிருக்​கின்றன.
  • அதில் ஒரே ஒரு நபர்தான் படுத்து உறங்க முடியும். பாலியல் உறவு கொள்வதைத் தடுக்​கும் வகையில் இந்தப்​ படுக்​கைகள் - உறுதி​யற்​றவையாக வடிவமைக்​கப்​பட்ட​தாகச் சொல்லப்​படு​கிறது. மிகக் குறுகிய அகலம் கொண்டது என்ப​தால் அதில் ஒருவர்​ படுத்து உறங்குவ​தே சிரமமாக இருப்​ப​தாகப் புகார்​களும் எழுந்​திருக்​கின்றன.
  • உண்மையில், 2020 டோக்கியோ ஒலிம்​பிக்​கின்போதே இத்தகைய படுக்​கைகள் அறிமுகப்​படுத்​தப்​பட்டன. ஆனால், அப்போது கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்​ப​துதான் நோக்கமாக இருந்தது. அவை பாலியல் உறவைத் தடுப்​ப​தற்கான படுக்​கைகள் என்று பரப்பப்பட்ட தகவல்கள்​ தவறானவை என ‘ஃபோர்ப்ஸ்’ இதழும் தெளிவுபடுத்​தியது.
  • 1988 சியோல் ஒலிம்​பிக்​கில் அமெரிக்​கா​வின் நீச்சல்​ வீரர் க்ரெக் லோகேனிஸுக்​குத் தலையில் அடிபட்டு நீச்சல்​ குளத்தில அவரது ரத்தம்​ கசிந்து பரவியது. காயத்​துடன் அந்தப்​ போட்டி​யில் தங்கம்​ வென்றாலும் சர்ச்​சைக்​குரிய நபராக அவர் மாறினார். காரணம், அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தது.
  • அதை மறைத்து போட்டி​யில் கலந்து​கொண்​டதாக அவர் மீது குற்றச்​சாட்டுகளும் எழுந்தன. தன்பாலீர்ப்​பாளரான க்ரெக் எச்.ஐ.வி. பாதிப்​புக்​குப் பின்னரும் நீண்டகாலமாக ஆரோக்​கியமாக வாழ்ந்து​வரு​கிறார். எய்ட்ஸ் நோயாளி​களுக்கு நம்பிக்​கையூட்டும் செயற்​பாட்டாளராகவும் இயங்கிவரு​கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

  • 1936 ஒலிம்​பிக் போட்டிகளுக்​குப் பின்னர், 1972இல்​தான் ஜெர்மனியில் மீண்டும் ஒலிம்​பிக் போட்டிகள் நடத்தப்​பட்டன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்​கப்​பட்டிருந்த மேற்கு ஜெர்மனியின் மியூனிக் நகரை மையமாகக் கொண்டுதான் ஒலிம்​பிக் நடந்தது. அப்போது பாதுகாப்​புக் கெடுபிடிகள் அதிகம்​ இல்லாததைப் பயன்படுத்​திக்​கொண்டு இஸ்ரேல் வீரர்​களைப் பாலஸ்தீன பயங்கர​வாதிகள்​ கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவம் உலகை அதிரவைத்தது.
  • அதன் பின்னர்​தான் ஒலிம்​பிக்​கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்​கப்​பட்டன. 1972 மியூனிக் ஒலிம்​பிக்​கின்போது கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்​களுக்கு நினைவஞ்சலி செலுத்​தும் நிகழ்ச்சி திட்ட​மிடப்​பட்டிருக்​கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல்​ காரணமாக இந்நிகழ்வு ரகசியமான இடத்தில் நடக்கும் என இஸ்ரேல் ஊடகங்கள்​ தெரிவித்​திருக்​கின்றன. காஸா போருக்கு எதிரான போராட்டங்​களும் நடைபெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அரசியலின் தாக்கம்​:

  • ஒலிம்​பிக் போட்டிகளில் அரசியல், சமூகப் பிரச்​சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்​களின் அடிப்​படை​யில் தாக்கங்கள்​ ஏற்பட்டதுண்டு. ஹிட்லர்​ ஆட்சிக்​காலத்​தில் 1936இல் ஜெர்மனியில் ஒலிம்​பிக் போட்டிகள் நடந்த​போது, அவரது நாஸி அரசின் இனவெறிக் கொள்கைகளைக் கண்டித்து பல ஐரோப்பிய நாடுகள் அந்தப்​ போட்டிகளைப் புறக்​கணித்தன. இரண்டாம் உலகப்​ போருக்​குப் பின்னர் 1948இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்​பிக் போட்டிகளில், ஜெர்மனியும் ஜப்பானும் தடைசெய்​யப்​பட்டிருந்தன.
  • எனினும், போட்டிகளைப் புறக்​கணிப்​ப​தைவிட​வும், அவற்றில் பங்கேற்று வெவ்வேறு வடிவங்​களில் தங்கள்​ எதிர்ப்​பைப் பதிவுசெய்​வதுதான் சிறந்த வழி என்று அனுபவம் மிக்க பல வீரர்கள்​ பதிவுசெய்​திருக்​கிறார்​கள். அதன் மூலம் உலகத்​தின் கவனத்​தையும் ஈர்க்க முடியும் என்பது அவர்களின் வாதம்.
  • 1968 மெக்ஸிகோ ஒலிம்​பிக்​கில் தடகளப் போட்டிகளில் பதக்கம்​ வென்ற டாம்மி ஸ்மித், ஜான் கார்லோஸ் ஆகிய ஆப்ரிக்க அமெரிக்க வீரர்கள்​ தங்கள்​ நாட்டில் நிலவும் இனவெறிக்கு எதிர்ப்புத் தெரிவிக்​கும் விதமாகப் பதக்க மேடையில் கறுப்​புக் கையுறை அணிந்த கைகளை உயர்த்தி நின்றனர்.
  • ஒலிம்​பிக்​கில் பதக்கம்​ வென்ற ஜெர்மனி தடகள வீரர் தாமஸ் பாஹ், 1976 மான்ட்​ரியால் ஒலிம்​பிக்​கில் பங்கேற்​றபோது ஆப்ரிக்க நாடு ஒன்றின் வீரர்​கள், தங்கள்​ நாட்டு அரசு கடைசி நேரத்​தில் ஒலிம்​பிக்​கைப் புறக்​கணிப்​பதாக அறிவித்​ததைத் தொடர்ந்து கண்ணீருடன் புறப்​பட்டுச் சென்றதைப் பார்த்து மிகுந்த வருத்​தமடைந்​ததாக ‘தி கார்டியன்’ இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவுசெய்​திருக்​கிறார். பின்னாள்​களில், மேற்கு ஜெர்மனியின் தடகள ஆணையத்​தின் தலைவராக இருந்​த​போது, 1980 மாஸ்கோ ஒலிம்​பிக்​கைப் புறக்​கணிப்​பதாக மேற்கு ஜெர்மனி அரசு அறிவித்ததை எதிர்த்​துக் குரல் கொடுத்​தவர் இவர்.

கனவைக் கலைத்த போர்:

  • பாலஸ்தீனத்​தைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் முகமது ஹமடா (2020 டோக்கியோ ஒலிம்​பிக்​கில் பாலஸ்தீனத்​தின் தேசியக்​ கொடியை ஏந்திச் சென்றவர்), காஸா போரின் காரணமாக பாரிஸ் ஒலிம்​பிக் போட்டிகளில் பங்கேற்​கும் உடல்தகுதியை இழந்து​விட்டார்.
  • இஸ்ரேலின் தாக்குதலில் நிலைகுலைந்து​வரும் காஸாவில், தனது குடும்​பத்​துக்​காகத் தினமும் நெடுந்​தொலைவு சென்று 500 லிட்டர் தண்ணீர் எடுத்​துவந்த ஹமடா, அதன் மூலம் தனது உடல் வலிமை அதிகரிக்​கும் என்றும் நினைத்​திருந்​தார். ஒருவழியாக காஸாவிலிருந்து வெளியேறி​விட்டார். ஆனால், சத்தான உணவுக்கு வழியில்​லாததால் அவரது உடல் எடை குறைந்துபோனது. விளைவாக, அவரது ஒலிம்​பிக் கனவு தகர்ந்து​விட்டது.
  • பாலஸ்தீனத்​தைச் சேர்ந்த எட்டு வீரர்கள்​ பாரிஸ் ஒலிம்​பிக்​கில் பங்கேற்​கின்​றனர். அவர்களும் போரின் காரணமாக உரிய பயிற்​சி​யும் போதிய ஊட்டச்​சத்து உணவும் கிடைக்​காதவர்​கள்​தான். ரமல்​லா​வைச் சேர்ந்த குத்​துச்​சண்டை வீரரான வசீம் அபு சல், “நான் இங்கு வெறுமனே பங்​கேற்க மட்டும் வர​வில்லை. களமாட வந்​திருக்​கிறேன்” என்று கூறி​யிருக்​கிறார். இதுவரை பாலஸ்தீனத் தடகள வீரர்கள்​ ஒலிம்​பிக்​கில் பதக்கம்​ வென்​றதில்லை. இந்த முறையேனும் அந்தக்​ கனவு பலிக்​கட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்