TNPSC Thervupettagam

விவசாய நிதியுதவியில் முறைகேடு

July 24 , 2021 1104 days 448 0
  • மத்திய அரசின் சிறந்த திட்டங்களில் ஒன்று விவசாயிகள் நிதியுதவித் திட்டம். ஆம், இத்திட்டத்தின் மூலம் மூன்று தவணைகளாக ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
  • அந்த 6,000 ரூபாய் குறைவானதாகத் தோன்றலாம். ஆனால், அதுதான் பல விவசாயிகளின் உடனடித் தேவையை பூா்த்தி செய்கிறது; அவா்களின் அவசரச் செலவிற்கும் கை கொடுக்கிறது.
  • மத்திய அரசின் வரைமுறைப்படி இத்திட்டத்தில் விவசாய குடும்பத்தில் உள்ளவா்களில் யாரேனும் அரசியலமைப்பின் கீழ் வரும் பதவி, முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா், மேயா், பஞ்சாயத்து தலைவா், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோர் இருந்தால் அவா்களுக்கு இது பொருந்தாது.
  • இத்திட்டத்தில் பொருந்தக்கூடியவா்களான விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்னும் கணக்கு மத்திய அரசிடம் சரியாக உள்ளதா என்பது இன்னமும் கேள்விக்குறிதான்.
  • ஆம், மத்திய அரசின் கணக்குப்படி மொத்தம் 14.5 கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற தகுதி உடையவா்கள் ஆவா்.
  • எனினும் இதுவரை அளிக்கப்பட்ட எட்டு தவணைகளிலும் மொத்தம் 10 கோடி விவசாயிகள் மட்டுமே கண்டறியப்பட்டு, 1 லட்சத்து 37 ஆயிரத்து 192 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த மே மாதம் முதல்தான் மேற்கு வங்க மாநிலம் இத்திட்டத்தில் இணைந்துள்ளது.

தலையாய கடமையாகும்

  • அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சா், ‘பிரதமா் விவசாயிகள் நிதயுதவித் திட்ட’த்தில் உதவி பெற தகுதியற்ற 42 லட்சத்திற்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளனா் என்றும், அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்ட ரூ.3,000 கோடியை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
  • மேலும், மாநிலவாரியாக நடந்த முறைகேட்டில் தகுதியற்ற விவசாயிகளாக அஸ்ஸாமில் 8.35 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 7.22 லட்சம், பஞ்சாபில் 5.62 லட்சம், மகாராஷ்டிராவில் 4. 45 லட்சம், உத்தர பிரதேசத்தில் 2.65 லட்சம், குஜராத்தில் 2.25 லட்சம் பேரும் பயன் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
  • அதிலும் அதிகபட்சமாக அஸ்ஸாமில் இருந்து ரூ. 554 கோடியும் அதனைத் தொடா்ந்து பஞ்சாபில் ரூ. 437 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.358 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.340 கோடியும், உத்தர பிரதேசத்தில் 258 கோடி, குஜராத்தில் ரூ.220 கோடி ரூபாயும் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
  • குறிப்பாக அண்மையில் இணைந்த மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 19 தகுதியற்ற விவசாயிகளிடம் இருந்து தொகையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அமைச்சா் கூறியுள்ளது இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள பெரிய அளவிலான முறைகேட்டை வெளிப்படுத்துகிறது.
  • குறிப்பாக, தமிழ்நாட்டில் விவசாயக் கணக்கெடுப்பு 2015-16-இன்படி மொத்தம் 79.38 லட்சம் விவசாயிகள் உள்ளனா். ஆனால் இதுவரை ஊக்கத்தொகை பெற 39 லட்ச விவசாயிகள் மட்டுமே தகுதி உடையவா்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  • மேலும், கடந்த ஆண்டு இத்திட்டத்தில் பெயா் விடுபடமால் இருப்பதற்காக அன்று வழங்கப்பட்ட கால அவகாசத்தை, விவசாயிகளை விட 13 மாவட்டங்களில் உள்ள அன்றைய தனியார் கணினி நிறுவனங்களைச் சோ்ந்தவா்களும், சில அரசு ஊழியா்களும் நன்றாக பயன்படுத்திக் கொண்டனா் என்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
  • அதிலும் சுமார் ஐந்து லட்சத்து ஐயாயிரம் போலியான வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.110 கோடி அளவிலான முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது என்றும், இதுவரை ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கு உடந்தையாக இருந்த 80 ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றும் அப்போதைய வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளா் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • மேலும், இனிவரும் காலங்களில் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டும்.
  • உதாரணத்திற்கு ஒடிஸா மாநிலத்தின் விவசாயிகள் உதவித் திட்டமான ‘கலியா’ சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 40 லட்ச விவசாய குடும்பங்களுக்கு ரூ.10,180 கோடி அவா்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக சிறு, குறு, குத்தகைதார விவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
  • மேலும் இத்திட்டத்தின் வெற்றியே இது அறிவிக்கபப்பட்டு 15 நாள்களுக்குள் செயல்பாட்டுக்கு வந்ததே.
  • ஆம், இத்திட்டம் அறிவித்தவுடனே சுமார் 95 லட்ச விண்ணப்பங்கள் குவிய, அவற்றில் இருந்து சரியான பயனாளிகளை தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தோ்ந்தெடுத்தனா். அதாவது ‘சாமா்த்திய விவசாயிகள் பதிவு’ என்று பெயரிட்டு 20 வகையிலான தரவு மாதிரிகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்துள்ளனா்.
  • முதலில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தை விவசாயக் கணக்கெடுப்பு, சமூக, பொருளாதார, ஜாதி கணக்கெடுப்பு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, மாநில ஊழியா்களின் மனிதவள மேலாண்மை அமைப்பின் தரவுகள், வங்கிக் கணக்கு தரவுகள், ஆதார் எண் என பல்வேறு வகையிலான தரவுகளை கிராம பஞ்சாயத்து முதல் தாலுகா வரை சேகரித்து சரிபார்த்து உரிய பயனாளிகளிடத்தில் தொகையை கொண்டு சோ்த்து வருகிறது ஒடிஸா மாநில அரசு.
  • இந்த வழிமுறைகளை மத்திய அரசும் தயக்கமின்றி பின்பற்ற வேண்டும்.
  • 2016-17-ஆம் ஆண்டு நபார்டு வங்கியின் ‘அனைத்திந்திய ஊரக நிதி சோ்ப்பின் கணக்கெடுப்புப் படி, ஒரு விவசாயியின் சராசரி மாதந்திர வருமானம் ரூ. 8,931 ஆகும்.
  • எனவே, இனிவரும் காலங்களில் விவசாயம் சம்பந்தப்பட்ட திட்டங்களில் முறைகேடு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமையாகும்.

நன்றி: தினமணி  (24 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்