TNPSC Thervupettagam

விவசாயத் தரவுத் திரள் என்ன தரவிருக்கிறது?

June 29 , 2021 1129 days 531 0
  • விவசாயிகள், விவசாயத் தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு ‘அக்ரி ஸ்டேக்’ எனும் மின்னணுத் தரவுத் தொகுப்பை ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது.
  • விவசாயத் தரவுத் திரள் எனும் இந்தத் தொகுப்பை விவசாயப் புள்ளிவிவரத் தொகுப்பு என்று குறிப்பிடலாம்.
  • கடன் வழங்கல், விவசாய விநியோகச் சங்கிலியில் வீணாகும் விளைபொருள் போன்ற சிக்கல்களைச் சமாளிப்பதற்காக இந்தத் தரவுத் தளம் உருவாக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறுகிறது.
  • இதற்காக ஒன்றிய வேளாண் அமைச்சகமும், மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனமும் 2021 ஏப்ரல் 13 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • தன் உள்ளூர் கூட்டாளி ‘க்ராப் டேட்டா’ மூலம் விவசாயிகளின் தரவுத் தளத்தையும் விவசாயிகள்/குழு எதிர்கொள்ளும் சவால்களை மைக்ரோசாப்ட் எதிர்கொள்ள முற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் அமைச்சகத் தகவல்கள்

  • “தேசிய விவசாயிகள் தரவுத் தளத்தின் அடிப்படையில் வேளாண் நிதி உருவாக்கப்படும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிலப்பதிவுகளை இணைப்பதன் மூலம் இந்தத் தரவுத் தளத்தை அரசு உருவாக்கிவருகிறது. அரசிடம் 5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் நில ஆவணங்கள் உள்ளன. மேலும், பிஎம் கிசான், மண் வள அட்டை - பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மற்ற தரவுகளைச் சேர்க்கும் நடைமுறை தொடர்ந்துவருகிறது” என்று வேளாண் அமைச்சகம் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
  • அமைச்சகத்தின் இந்த முன்னேற்பாடுகள் விவசாயத் தரவுத் திரளை அடிப்படையாகக் கொண்டவை என ஊகிக்கலாம்.
  • அதே நேரம், இவை யாவும் விவசாயிகளின் தரவுத் தனியுரிமைப் பாதுகாப்பு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்துக் கொள்கை வகுக்கப்படாத வெற்றிடத்தில் நடைபெறுவது கவலைக்குரியது.
  • ‘தரவுதான் இன்றைய புதிய கச்சாப் பொருள்’ என்று கருதப்படும் நிலையில், பெரு நிறுவனங்கள் இதில் லாபத்தை மட்டுமே அடிப்படையாக எதிர்பார்க்கும் நேரத்தில், விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது.
  • இதை லாபம் ஈட்டுவதற்கு அப்பாற்பட்ட வாய்ப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அணுகும் சாத்தியம் குறைவு.
  • தொடர்ச்சியாக, ‘சந்தைத் தீர்வுகள்’ என்கிற பெயரில் கடன் தொல்லை பெருகலாம், இடுபொருள் விற்பனை திசைமாறலாம். இது விவசாயிகளின் கடன்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இடப்பெயர்வையும் (displacement) அதிகரிக்கும்.
  • இந்த இடத்தில் ஆதார் அட்டை இல்லாததால் விலக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்கிற ஒப்பீடு தேவைப்படுகிறது. ஏனென்றால், தரவு என்பது இரு பக்கமும் கூரான கத்தி.

இந்தியாவில் உருவாக்கும் விளைவுகள்

  • “விவசாயத் தரவுத் திரள் திட்டத்தை வெறும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியாக மட்டும் பார்க்க முடியாது, அதனுள் ஒளிந்திருக்கும் சமூக/பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பார்க்க வேண்டும். உலகின் பொருளாதாரச் சக்தியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ள பில் கேட்ஸின் நிறுவனம், இந்தத் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது, பெரும் நில அபகரிப்புக்கு வழிவகுக்கும்” என்று விமர்சிக்கிறார் சூழலியலாளர் வந்தனா சிவா.
  • இந்தத் திட்டம், சில காலத்துக்குச் சில நன்மைகளைத் தரலாம். அதே நேரம், ஒரு மாவட்டத்தில் விளையும் மொத்த விளைச்சல், கொள்முதல் குறித்த மொத்தத் தரவும் ஒரு பெருநிறுவனத்திடம் இருந்தால், அதன் பிறகு வேளாண் விளைபொருட்கள் சார்ந்து என்னவெல்லாம் நிகழும்?
  • விவசாயிகளுக்கு எப்படி நல்ல விலை கிடைக்கும்? இவை யெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.
  • எத்தனை விவசாயிகளால் இந்த முயற்சியில் பங்கேற்க முடியும்? ஏற்கெனவே டிஜிட்டல் இடைவெளி பாரதூரமாக நிலவும் நம் நாட்டில், இது என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது?
  • சரி, மேலை நாடுகளில் இது போன்று செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் நிலை என்ன? அமெரிக்காவில், விவசாயிகள் இடம்பெயர்க்கப்பட்டு, பலரும் விவசாயத்தை விட்டே வெளியேற்றப் பட்டுள்ளனர்.
  • பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அது மட்டுமல்ல, தவறான தரவுகளாலோ, சரியாகப் பதிவேற்றப்படாத தரவுகளாலோ, காப்பீடு/கடன் கிடைக்காமல் பல சிரமங்களுக்கு ஆளாக்கலாம்.
  • காப்பீட்டுத் தொகை நேரடியாகக் கடன் கணக்குக்குச் செலுத்தப்படலாம். சரியாகப் பதிவிடப்படாத நில ஆவணங்களால், நிலம் அபகரிக்கப்படலாம்.

யார் கையில் அதிகாரம்?

  • இந்தியாவில் 70% பேர் 2 ஏக்கருக்கும் குறைவான நிலத்தையே வைத்துள்ளனர். இப்படி லட்சக்கணக்கானோர் தொடர்புடைய ஒட்டுமொத்தத் தரவு, உற்பத்தி, சந்தை, வாழ்வாதாரம் மின்னணுமயமாக்கப்பட உள்ளது.
  • தரவுகளை வைத்துக்கொண்டு தனியார் நிறுவனங்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை நிர்ணயிப்பது, பாதுகாப்பது, ஒழுங்குமுறைப்படுத்தப் போவது யார்?
  • தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள், தனியுரிமைப் பாதுகாப்பு எனப் பலவும் உறுதி செய்யப்பட்ட பின்பே, இந்தத் திட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். மேலும், இது மாநில அரசுகளினுடைய பட்டியலின் கீழ் வருகிறது.
  • இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்து அறியப்பட்டதா என்று தெரியவில்லை. அரசுக் கொள்கை வகுப்பாளர்களின் கொள்கைகள், நோக்கம், மக்கள் மீதான பரிவு, தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் தன்மையை உரசிப் பார்ப்பதாக இந்தத் திட்டம் உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (29 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்