- விவசாயத்தின் மீது நமக்குப் பொதுவாக ஒற்றைப் பரிமாணப் பார்வைதான்; அது பரிவு, பற்று, பாசம். சேறு, சோறு என்று எதுகை மோனையில் பேசி உணர்ச்சிவசப்படுவது! நிலத்தில் வேலைசெய்யும் அடிமைகள், ஆண்டையின் கருணையாலும் பெருந்தன்மையாலும் மகிழ்ச்சியாகத் தம் அடிமை வாழ்வை அனுபவிப்பதான கற்பனை நமக்கு உண்டு.
- எதுவொன்றைக் கண்மூடித்தனமாகப் புனிதப்படுத்துகிறோமோ, நிபந்தனையற்று அங்கீகரிக்கிறோமோ அதுகுறித்த சிக்கல்கள் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அதனாலேயே, விவசாயத்தில் நிலவும் சர்வாதிகாரப் போக்கையும் ஜனநாயகமற்ற தன்மையையும் யானை கட்டிப் போரடித்த காலம் தொட்டு நம்மால் மாற்றவே முடியாமல் போய்விட்டது.
- கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் விவசாயத் தொழில் பரவலாக ஆண்டை - அடிமை என இரு எல்லைகளுக்குள் ஒரு சாதித் தொழிலாகவே இயங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் என்பது பயிரல்ல; நிலம். அதாவது, அது வாழ்வாதாரமல்ல; அதிகாரம். ஆக, விவசாயம் பற்றிய நமது பெருமையெல்லாம் நிலவுடைமைச் சமூகமான ஆண்டைகளை மையப்படுத்தியதுதான்.
- உலகத்தின் முக்கால்வாசி நாடுகள் விவசாயம் செய்கின்றன. ஆனால், இந்தியாவைப் போல நிலம் என்பது சமூக ஆதிக்கத்தின் குறியீடாக உள்ள நாடு வேறு இல்லை. வளர்ந்த, வளரும் நாடுகள் பல வேளாண் தொழிலாளர்களுக்குக் கௌரவமான ஊதியத்தை வழங்குகின்றன.
- ஆனால், ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் விவசாயம் இன்றும் கூலிக்கு மாரடிக்கும் அடிமை வேலையாகவே இருக்கிறது. விவசாயம் இங்கே மண்ணின் பண்பாட்டோடு இரண்டறக் கலந்திருக்கிறது எனப் பெருமைப்படுவோர் அந்தப் பண்பாட்டுக்கு சாதியே அடித்தளமாக இருக்கும் கொடூர உண்மையை மறந்துவிடுகின்றனர்.
- நிலத்துக்கும் சாதிக்குமான உறவு அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்குமான உறவாக உள்ள அவலநிலையைச் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நாம் திருத்தி எழுதவே இல்லை.
பஞ்சமி நிலங்களின் நிலை
- காலனிய இந்தியாவிலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி சமூகப் பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்டோரை மேம்படுத்தும் வகையிலான நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்கது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள். ஆனால், தலித்துகளை மிரட்டியும் ஏமாற்றியும் அந்நிலங்களை ஆதிக்க சாதியினரே அபகரித்து வைத்திருக்கின்றனர்.
- பஞ்சமி நிலச் சட்டப்படி இந்தியா முழுவதும், 2.5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தலித் மக்களுக்கு அரசால் வழங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் தலித் மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இப்படி அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் சுமார் 9 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருந்ததும், அவற்றில் தற்போது 10% நிலம் மட்டுமே தலித்துகளிடம் இருப்பதும் எவ்வளவு பெரிய கொடுமை!
- இந்த ஆக்கிரமிப்பானது வெறுமனே தனிநபர்கள் சம்பந்தப்பட்டதாக மட்டும் இல்லை; பல தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அவ்வளவு ஏன் பல அரசு அலுவலகங்கள்கூட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருக்கின்றன.
- அதிகாரமற்ற மக்களுக்கு வழங்கப்படும் நிலம் என்பதால், அதை யாரும் ஏமாற்றி அபகரித்துவிடக் கூடாது என்பதற்காகவே பஞ்சமி நில விற்பனைக்குக் கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. முதல் 10 ஆண்டுகளுக்கு அதை விற்கவோ, குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ யாருக்கும் உரிமையில்லை. 10 ஆண்டுகள் கழித்து விற்றாலும் அதை ஒரு தலித் இன்னொரு தலித்துக்குத்தான் விற்க முடியும். இந்த விதிமுறையை மீறும் விற்பனை செல்லாது. ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி அபகரிப்பு தொடர்கிறது.
அம்பேத்கரின் முன்னெடுப்புகள்
- நிலமெனும் நிறைவேறாப் பெருங்கனவை ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிஜமாக்கித் தர அம்பேத்கர் பல வகைகளிலும் போராடினார், பல்வேறு திட்டங்களையும் முன்மொழிந்தார்.
- 1946-ல் அனைத்திந்தியப் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பாக, அம்பேத்கர் நிலம், கல்வி, காப்பீடு மற்றும் தொழில்களை நாட்டுடைமையாக்கக் கோரி சட்டமன்றத்தில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். விவசாயம் நாட்டுடைமையாக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிலங்கள் ஒரே அளவில் பிரிக்கப்பட்டு எல்லாக் குடும்பங்களுக்கும் சமமாகக் குத்தகைக்கு விட வேண்டும் என்பதே அவர் கண்ட கனவு.
- ‘நிலம் அரசுடைமையாகி சாதி, மத வேறுபாடு இல்லாமல் கிராம மக்களுக்கு விடப்படும்போது மேலும் நில உரிமையாளர், குத்தகைதாரர், நிலமற்ற தொழிலாளி என்ற முறை இருக்காது’ என நிலப்பகிர்வின் வழியே ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்க நினைத்தார். நிலம் தனியார் சொத்தாக மாறினால், அரசால் ஒருபோதும் அந்நிலங்களைக் கையகப்படுத்தவியலாது என அம்பேத்கர் எச்சரித்தார். அந்தக் கனவு நனவாகவில்லை.
- 1954-ம் ஆண்டு நிலங்களை வாங்க தலித்துகளுக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என அம்பேத்கர் கோரினார். அப்படியொரு திட்டத்தை இதுவரை எந்த அரசும் கொண்டுவரவில்லை. 1944-ல் பொது நிலங்களைக் கையகப்படுத்தவும் தலித்துகளை ஊக்கப்படுத்தினார். மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமிக்கும் கெய்ரான் என்றழைக்கப்படும் அந்தப் போராட்ட வடிவம் இன்றளவிலும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் உயிர்ப்போடு இருந்தாலும் ஆவணரீதியாக அந்நிலங்களைத் தலித்துகளுக்குச் சொந்தமாக்கித் தர அரசுக்கு மனமில்லை.
- அரசாணையின்படி 1971-1998 வரையிலான காலகட்டங்களில் மகாராஷ்டிரத்தில் மட்டும் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலங்களைச் சுமார் 85 ஆயிரம் தலித்துகள் கையகப்படுத்தினர். குடும்பத்துக்கு இரண்டு ஹெக்டேர்கூடத் தேறாது என்றாலும் அதைக்கூட அரசு முறையாகப் பதிவுசெய்து தர மறுக்கிறது.
- நிலம் வைத்திருந்தால் மட்டும் விவசாயம் செய்துவிட முடியுமா? தலித்துகளால் உழைக்க முடியும். ஆனால், பயிர் செய்ய ஆகும் செலவுகளுக்கு அவர்களிடம் பணம் இருப்பதில்லை. வறட்சியில் பயிரிட முடியாமல் போக, நிலத்தை அப்படியே போட்டுவிட்டுப் பஞ்சம் பிழைக்க வேறு ஊர்களுக்கு இடம்பெயர்வதால் போராடிப் பெற்ற நிலத்தைத் தொலைத்துக்கொண்டே இருக்கின்றனர். ஒரு ஜனநாயக நாட்டின் சொந்தக் குடிமக்கள் இப்படி ஆக்கிரமிப்பு செய்துதான் நிலத்தைப் பெற வேண்டும் என்பது அந்நாட்டுக்கு அவமானம் இல்லையா?
- சாதி ஆளும் சமூகத்தில் தலித்துகளுக்கான நில அதிகாரம் ஒரு கனவுலகக் கருத்தாக்கமாகவே நீடிக்க அரசுகள், நீதிமன்றம், சாதிவயப்பட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என எல்லோருக்குமே பங்கிருக்கிறது.
- 19-ம் நூற்றாண்டில் கறுப்பின மக்கள் நடத்திய சிவில் உரிமை, நில உரிமைப் போராட்டங்களின் விளைவாக அரசு நிதி உதவியின் மூலம் பெருமளவிலான நிலம் வழங்கப்பட்டது. அந்நூற்றாண்டின் இறுதியில் கறுப்பின மக்கள் அமெரிக்காவின் 14% விவசாய நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தனர். இங்கே தலித்துகள் வஞ்சிக்கப்பட்டதைப் போல வெள்ளையர்களின் அடக்குமுறை, சூழ்ச்சியால் கறுப்பர்களின் நிலம் அபகரிக்கப்பட்டது.
- ‘கறுப்பர்கள் நில இழப்பு’ என வரலாறு இதைக் குறிப்பிடுகிறது. அமெரிக்க மக்கள்தொகையில் 13% இருக்கும் கறுப்பர்களிடம் தற்போது 1% கிராமப்புற நிலங்கள்தான் உள்ளன. 98% நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் வெள்ளை அமெரிக்கர்களே. இனவெறி ஒடுக்குமுறையில் அனுபவிப்பதைப் போன்ற துயரத்தில்தான் தலித்துகளும் அல்லலுற வேண்டும் என்றால், நாம் ஏன் சாதிய ஒடுக்குமுறையை இனவெறி என அழைக்கக் கூடாது?
விவசாயத் தற்கொலைகளின் பின்னணி
- அண்மையில் 2016-ம் ஆண்டுக்கான விவசாயிகள் தற்கொலைக் கணக்கை தேசியக் குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டது. மொத்தம் 11,379 பேரில் 5,109 பேர் விவசாயக் கூலிகள். ‘விவசாயம் பொய்த்துப்போனால் விவசாயிகளைப் போலவே விவசாயக் கூலிகளும் பாதிக்கப்படுவார்கள். அதுவே, இந்தத் தற்கொலைக்குக் காரணம்’ என்று தோன்றலாம். ஆனால், ஆய்வு வேறு கதையைச் சொல்கிறது.
- ஹரியாணாவில் அவ்வாண்டு உயிரை மாய்த்துக்கொண்ட 250 பேரும் விவசாயக் கூலிகள். அவ்வாண்டு ஹரியாணாவில் பயிர் உற்பத்தி சிறப்பாக இருந்தபோதும், அதற்கான பலன் தொழிலாளர்களைச் சென்றடையவில்லை. கூலியைச் சரிவரத் தராததால் உண்டான மன அழுத்தமே அவர்களின் தற்கொலைக்குக் காரணம் என்கிறது அறிக்கை. விவசாயிகள் தற்கொலையைச் சாதிவாரியாகக் கணக்கிட வேண்டிய கட்டாயத்தை இது உணர்த்துகிறது.
- நில உரிமை ஒடுக்கப்பட்ட சமூகங்களை அதிகாரப்படுத்தும் எனக் காலங்காலமாகச் சொல்லிவருகிறோம். அதிகாரப்படுத்த வேண்டியதில்லை; சமத்துவப்படுத்தினால் போதுமானது. காகிதங்களில் அல்லாமல் ஜனநாயகத்தை மண்ணில் தழைக்க வைத்திருக்கும் சமூகம்தான் வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்து, ஒடுக்கப்பட்டோரின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க முன்வரும். சாதிய இந்தியாவில் அது சாத்தியமே இல்லை என்பதைத்தான் வரலாறும் சமகாலமும் உணர்த்துகின்றன.
நன்றி: இந்து தமிழோ திசை (07-01-2020)