TNPSC Thervupettagam

விவசாயிகளுக்கு ஒரு புதிய வாய்ப்பு...

June 22 , 2020 1669 days 787 0
  • மத்திய அரசு பல்வேறு துறைகளில் தொடர்ந்து மேற்கொள்ளும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை தாங்களே நேரடியாக விற்பனை செய்வது, மாநிலங்களுக்கு இடையே விவசாயப் பொருள்களைக் கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் அண்மையில் அவசரச் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டன.
  • இவை தவிர 65 ஆண்டுகள் பழைமையான அத்தியாவசியப் பொருள்கள் சட்டம், 1955-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • "விவசாயிகளின் வியாபாரம், வர்த்தகம் (மேம்பாடு, ஊக்குவிப்பு) அவசரச் சட்டம் 2020' மூலம் விவசாயிகள், வர்த்தகர்கள் நாடு முழுவதும் கொள்முதல் - விற்பனையைத் தேர்வு செய்வதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் சரியான விலை, சந்தையைத் தேர்வு செய்ய வழி ஏற்படுகிறது.

வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துதல்

  • வேளாண் சந்தையில் நீண்டகாலமாக தடைக்கற்களாக உள்ள பல்வேறு பழைய சட்டங்களை அகற்றுவதன் மூலம் விவசாயிகள் தங்கள் பொருள்களை அருகில் உள்ள சந்தையில் மட்டுமே விற்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது.
  • விவசாயிகள் தங்கள் பொருள்களை யாரிடம் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் விற்பனை செய்யலாம் என்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது.
  • வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துதல் தொடர்பான அரசின் சட்டங்கள் புதிய வகை வர்த்தகர்களை உருவாக்குகின்றன.
  • உள்ளூர் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நியாயமான விலையில் விற்க உகந்த சூழலை உருவாக்கியுள்ளது.
  • இது முழுக்க முழுக்க விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கை என்றுதான் கூற வேண்டும்.
  • விவசாய மண்டிகளில் பொருள்களைக் கொள்முதல் செய்பவர்கள் மண்டியில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
  • ஆனால், பல நேரங்களில் இந்தச் சுமை விவசாயிகள் மீதுதான் ஏற்றப்படுகிறது. மண்டியில்தான் பொருள்களை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை இருந்ததால் மண்டி நடத்துவோரும் அதில் உறுப்பினராக இருப்பவர்களும் தனி அதிகாரம் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.
  • இதுபோன்ற வேளாண் பொருள் சந்தைகள் கூட்டமைப்பு, மாநில அரசுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு இருந்தது.
  • இதுதான் ஒரு காலத்தில் மத்தியப் பிரதேச மாநில நிலவரமாக இருந்தது. வேளாண் பொருள் சந்தைகள் கட்டமைப்புக்கு அச்சாணியாக இருந்தது விவசாயிகள்தான். ஆனால், அவர்கள் பலனடையவில்லை.
  • கட்டுப்படுத்தப்பட்ட சந்தை வாய்ப்புகள் மூலம் அவர்களை வைத்து மண்டி நடத்துவோர் பலன் அடைந்தனர். இதே நிலை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதத்தில் அமைந்தது.
  • இப்போது கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டம் அதற்குத் தீர்வு காண்பதாக உள்ளது. விவசாயிகள் குறிப்பிட்ட சந்தையில் மட்டுமே விளைபொருள்களை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை மாறி, தங்களுக்கு உரிய விலை கிடைக்கும் சந்தையில் விளைபொருள்களை விற்பனை செய்ய முடியும்.
  • இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பது மட்டுமின்றி, அதற்கான பணம் சரியாகக் கிடைப்பதையும் அவசரச் சட்டம் உறுதி செய்கிறது.
  • விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையே பணம் தொடர்பாக எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் இந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அவசரச் சட்டத்தினால் பலன்

  • இப்போது விவசாயிகள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் பொருள்களின் தேவை குறித்துத் தங்கள் செல்லிடப்பேசி மூலம் அறிந்து கொள்ள முடியும்.
  • இதன் மூலம் எங்கு விற்பனை செய்தால் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதற்காகத் தமிழ்நாடு அரசு தனியாக அவசரச் சட்டம் இயற்றி விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.
  • விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் தொடர்பான அவசரச் சட்டம், விவசாய ஒப்பந்தங்கள் குறித்த தேசிய கட்டமைப்பை வழங்குகிறது.
  • வேளாண் சார்ந்த நிறுவனங்கள், செயலிகள், மொத்த வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களுடன் விவசாயிகளுக்கு உள்ள ஒப்பந்தங்களைப் பாதுகாக்கிறது.
  • விலை நிர்ணயம் வெளிப்படைத்தன்மையுடன் விளங்க வழி வகுக்கிறது. விவசாயிகளிடம் இருந்து பொருள்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதையும், அது முறையாகச் செயல்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது.
  • பெரு நிறுவனங்களும் சிறு விவசாயிகளுடன் நியாயமான ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும்.
  • சிறு விவசாயிகள் இணைந்து அதிக அளவில் ஒரே பொருளை விளைவிக்கும்போது பரஸ்பரம் சாதகமான அம்சங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
  • தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்யும் நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன.
  • மூன்றாவதாக அத்தியாவசியப் பொருள்கள் திருத்த அவசர சட்டம் 2020, வேளாண் துறையில் போட்டித்திறனை மேம்படுத்துகிறது.
  • விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கிறது. போர், பஞ்சம், எதிர்பாராத அதிக விலை உயர்வு, இயற்கைப் பேரிடர்கள் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே பொருள்களை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்படும்.
  • தோட்டப் பயிர்களைப் பொருத்தவரையில் 100% விலை உயர்வு இருந்தால் மட்டுமே இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்படும்.
  • அரிய வகை விவசாயப் பொருள்களின் விலை 50% அளவுக்கு உயர்ந்தால் மட்டும் அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டத்தின்கீழ் இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்க முடியும்.
  • தானியங்கள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் பருப்பு வகைகள் உற்பத்திக்கும், இருப்பு வைப்பதற்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்

  • அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955 என்பது இதுவரை இருந்ததிலேயே மிகவும் கடுமையான சட்டமாகும். இது விவசாயப் பொருள்களின் இருப்பு, விநியோகத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தியது.
  • அத்தியாவசியப் பொருள் என்று அறிவிக்கப்படும் பொருளின் உற்பத்தி, இருப்பு வைக்கும் அளவு, விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அரசுக்கு முழு அதிகாரம் வழங்கியது.
  • இந்தச் சட்டத்தின் மூலம் கடந்த காலத்தில் மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே விவசாய உற்பத்தி பொருள்கள் புழக்கமும்கூட வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
  • மத்தியப் பிரதேசத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, அனைத்து நிலைகளிலும் ஊழலுக்கு வழி வகுத்தது.
  • அதே நேரத்தில் ஒரு சில நேரங்களில் பதுக்கலைத் தடுக்க இச்சட்டம் உதவியது. அண்மையில் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் மீது இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவே சில பொருள்கள் அத்தியாவசியப் பொருள்கள் என்று அறிவிக்கப்படுகின்றன என்றாலும், பிற நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் இல்லாமல்கூட விலை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகிறது.
  • ஏனெனில், அங்கு அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களும், சேவைகளும் முழு அளவில் சுதந்திரமான முறையில் கிடைக்கின்றன.
  • ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால், கையிருப்பு பொருள்களை வர்த்தகர்கள் பதுக்காமல் இறக்குமதி மூலம் ஈடு செய்வார்கள்.
  • இதன் மூலம் விலை குறையத் தொடங்கும். ஆனால், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் இருக்கும்போது, பொருள்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் அபாயமே அதிகம் உள்ளது.

முறையாக அமல்படுத்தப்பட்டால் பெரும் பலன் கிட்டும்

  • விவசாயத் துறை சீர்திருத்தம் தொடர்பான இந்த மூன்று சட்டங்களும் முறையாக அமல்படுத்தப்பட்டால், விவசாயிகளுக்கு பெரும் பலனை அளிக்கும்.
  • அதே நேரத்தில் விளை பொருள்களின் உற்பத்தித் திறனிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் பின்தங்கியுள்ளோம்.
  • பண்ணை அளவு பெரியதாக இல்லாததும் இந்தியாவில் உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
  • "பிரதமர் பசல் பீமா திட்டம் 2016' மூலம் பயிர்க் காப்பீடு அளிக்கப்படுகிறது. இது தவிர "பிரதமர் கிசான் சம்மான் நிதி' திட்டம், "பிரதமர் கிசான் ஓய்வூதிய திட்டம்' ஆகியவற்றின் மூலம் முறையே ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6,000-ம், குறு - சிறு விவசாயிகளுக்கு ரூ.3000 ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றன.
  • விவசாயிகளின் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் தொடர்பான பல பயிர் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
  • இந்தத் திட்டங்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படும்போது விவசாயிகளுக்கு அதிக பலனை அளிக்க வேண்டும்.
  • அதே நேரத்தில் விவசாயிகளும் தங்கள் நிலத்தை வாரிசுக்கு பகிர்ந்து கொடுக்கும் விதத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அவர்கள் தொடர்ந்து தங்கள் வாரிசுகளிடையே அவற்றைப் பிரித்துக் கொண்டால், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
  • ஏனெனில், சிறிய நிலத்தில் பயிரிட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்துவது கடினம்.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பயிர்கள், வெவ்வேறு மண், தட்பவெப்ப நிலைகளின் கீழ் விவசாயத்துக்குத் தேவையான நில அளவையை அரசு தீர்மானிக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் விவசாய நிலத்தை துண்டாக்கி பத்திரப் பதிவு செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். அப்படிச் செய்வதால் மட்டும்தான் இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் வேளாண் சீர்திருத்தங்கள் வெற்றிஅடையும்.

நன்றி: தினமணி (22-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்