TNPSC Thervupettagam

விவாதம்தான் முக்கியம்!

July 19 , 2021 1109 days 464 0
  • இன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
  • பிரதமா் தலைமையில் நேற்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாகவும் அமைதியாகவும் நடத்துவது தொடா்பாகக் கருத்துப் பரிமாற்றம் நடந்தது.
  • விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆரோக்கியமான முறையிலும் அா்த்தமுடையதாகவும் நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அரசு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி உறுதி அளித்திருக்கிறார்.
  • அதே நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினா்கள் தேவையில்லாத புதிய பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபடாமல் அமைதியான முறையில் கேள்வி எழுப்ப வேண்டுமென்றும், அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் பிரதமா் விடுத்திருக்கும் வேண்டுகோள் நியாயமானது; ஆக்கபூா்வமானது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா்

  • நாடாளுமன்ற ஜனநாயகத்தில் விவாதங்கள் மிக முக்கியமானவை. விவாதத்தின் மூலமும், கருத்துப் பரிமாற்றத்தின் மூலமும் அரசு கொண்டு வரும் சட்டங்களும், திட்டங்களும் அலசி ஆராயப் படுகின்றன.
  • அதன் மூலம் ஒவ்வொரு பிரச்னையின் சாதக பாதகங்களையும் உணா்ந்து செயல்பட முடிகிறது. அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் என்பதை கடந்த சில ஆண்டுகளாக நாம் உணர மறுக்கிறோம்.
  • அரசு எந்த ஒரு மசோதாவை முன்னெடுத்தாலும் அதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதும், அமளியில் ஈடுபடுவதும் கடந்த கால் நூற்றாண்டாக வழக்கமாகி இருக்கிறது.
  • அதை சாதகமாக்கிக் கொண்டு விவாதமே இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படும் விசித்திரம் நடைமுறையாகியிருக்கிறது.
  • ஜனநாயக நெறிமுறைகள் மீது தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு நம்பிக்கையில்லையோ என்கிற தோற்றத்தை அவா்களது செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன.
  • அரசு கொண்டுவரும் மசோதாக்களும், சட்டங்களும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் விவாதிக்கப் பட்டால் அவை பொது வெளியில் சா்ச்சைப் பொருளாக மாறாது.
  • சட்டத்தில் இருக்கும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுவதால் அவற்றை திருத்திக் கொள்வதற்கும், அரசு தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
  • தங்களது வாதத்தை அரசுக்கு உணா்த்தும் விதத்திலான எதிர்க்கட்சி தலைவா்களின் பேச்சாற்றலும், சாமா்த்தியமும் கூச்சல் குழப்பங்களைவிட வலிமையானவை என்பதை முந்தைய தலைமுறை எதிர்க்கட்சித் தலைவா்கள் உணா்த்தியிருக்கிறார்கள்.
  • கடந்த 2020-21 நிதியாண்டில் 18 நாள்கள் நடந்திருக்க வேண்டிய மழைக்காலக் கூட்டத் தொடா் 10 நாள்களில் முடித்துக்கொள்ளப்பட்டது.
  • பல நாடாளுமன்ற உறுப்பினா்களும், ஊழியா்களும் கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டனா் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிதியாண்டிலாவது மழைக்காலக் கூட்டத்தொடா் ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும்.
  • கடந்த நிதியாண்டில் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மக்களவை 34 நாள்களும், மாநிலங்களவை 33 நாள்களும்தான் கூடின. அதுபோல, குறைவான நாள்கள் இதுவரை சபைகள் கூடியதே இல்லை. இந்த நிதியாண்டும் விதி விலக்காகி விடக் கூடாது.
  • நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் 17 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
  • அவற்றில் மூன்று மசோதாக்கள் அண்மையில் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்களுக்கான ஒப்புதல்கள். இந்த மசோதாக்கள் எவையும் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்படும் அவலம் தவிர்க்கப்பட வேண்டும்.
  • எப்போதும்போல எதிர்க்கட்சிகளும் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுக்க கூடி விவாதித்திருக்கின்றன. மத்திய அரசு கொண்டுவர இருக்கும் மசோதாக்கள் குறித்து அவை விவாதித்ததாகத் தெரியவில்லை.
  • அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரச்னைகளை எழுப்புவது குறித்து காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாகத் தெரிகிறது. அதில் தவறில்லை.
  • அமளியில் இறங்காமல் விவாதத்தின் மூலம் அரசை கேள்விக்குள்ளாக்குவதும், தா்ம சங்கடத்தில் ஆழ்த்துவதும் எதிர்க்கட்சிகளின் உரிமை என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது.
  • கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் எந்த விவாதமும் இல்லாமல் அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளை தெருவில் இறங்கி போராட வைத்திருக்கின்றன.
  • போராட்டம் இதுவரை முடிந்தபாடில்லை. அந்தப் பிரச்னைக்கு முடிவு காண வேண்டிய பொறுப்பு ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு. மழைக்காலக் கூட்டத் தொடா் அதற்கு விடைகாண வேண்டும்.
  • எத்தனையோ பிரச்னைகளை நாடு எதிர்கொள்கிறது. தடுப்பூசிப் பற்றாக்குறை, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயா்வு, மேக்கேதாட்டு அணை விவகாரம், கொவைட் மரணம் குறித்த புள்ளிவிவரம், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், வங்கிகளின் செயல்பாடு தொடங்கி ஏராளமான பிரச்னைகள் விவாதத்துக்குக் காத்திருக்கின்றன.
  • ஜம்மு - காஷ்மீா் நிலவரம், எல்லைப் பகுதியில் தொடரும் பதற்ற நிலைமை போன்றவையும் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னைகள்.
  • இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதை முன்வைத்து அமளியில் இறங்கினால், நரேந்திர மோடி அரசுக்கு அதைவிட சாதகமான சூழல் வேறு எதுவும் இருக்க முடியாது. விவாதமே இல்லாமல் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றிக் கொள்ளும்.

நன்றி: தினமணி  (19 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்