- தமிழ்நாட்டின் சாலைகளில் வசிக்கும் வீடற்ற மக்களின் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்குச் சமூகநீதி அடிப்படையில் சரியான அணுகுமுறை தேவைப்படுகிறது. தற்போது இம்மக்களின் எல்லா தேவைகளும் ‘தற்காலிகத் தங்கும் விடுதிகள்’என்னும் ஒற்றைத் திட்டத்தின்கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- குடும்பங்களாக, பல தலைமுறைகளாக, வீடற்றவர்களாக வாழும் மக்களின் வீட்டுரிமை குறித்த கொள்கைகளோ, நலிவடைந்த நிலையில் சாலையில் வாழும் தனிநபர்களான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம்பாதிக்கப்பட்டோர், திருநங்கைகள் ஆகியோரின் மீட்பு,மறுவாழ்வுக்காகத் தேவைப்படும் நிதி உதவியோஇத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படவில்லை.
- சென்னையில் மாநகராட்சியும் காவல் துறையும் வீடற்றவர்களுக்கான மீட்புப் பணிகளில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மட்டும்தான் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர், திருநங்கையர் ஆகியோருக்கான தங்கும் விடுதிகளை அமைத்துள்ளது.
- இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இத்தகைய மீட்புப் பணிகள் நடைபெறவில்லை, தங்கும் விடுதிகளும் அமைக்கப்படவில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் 37,117 பேர் வீடற்றவர்களாக அடையாளம் காணப்பட்டனர். ஆனால், உரிய புரிதலுடன் கணக்கெடுப்புச் செயல்முறை உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்பதால், இந்த எண்ணிக்கை திட்டவட்டம் என்று கூற முடியாது.
பலனளிக்காத திட்டம்
- நகர்ப்புற வீடற்றோருக்கான பிரத்யேகத் திட்டங்களை 1992இல் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. ‘நகர்ப்புறங்களில் உள்ள நடைபாதைகளில் வசிப்போருக்கான தங்குமிடம் - சுகாதார வசதிகள்’ என்கிற பெயரில் மாநில வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், 2002இல் ‘நகர்ப்புற வீடற்றோர் இரவு தங்குமிடம்’ என்று பெயர்மாற்றம் பெற்றது. இத்திட்டத்துக்கான நிதி சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால் 2005இல் இத்திட்டம் கைவிடப்பட்டது.
- வீடற்றவர்களின் நிலையை உணர்ந்த உச்ச நீதிமன்றம், இந்தியாவில் முதல் கட்டமாக 62 நகரங்களில் வீடற்றவர்களுக்காக 24 மணி நேர நிரந்தரத் தங்குமிடங்களை ஏற்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு 2010இல் உத்தரவிட்டது. ஒரு லட்சம் நகர்ப்புற மக்களுக்குக் குறைந்தது 100 பேருக்கான தங்குமிடம் என்கிற அளவில் படுக்கை, மெத்தை, போர்வை, குடிநீர், கழிப்பறை, முதலுதவி, ஆரம்ப சுகாதார வசதிகள், போதைப்பொருள் தடுப்புச் சேவை, பொழுதுபோக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளோடு 24 மணி நேரம், 365 நாட்களும் செயல்பட வேண்டும் என்கிறது அந்த உத்தரவு.
- தனியாக வாழும் பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியவர்கள், வேறு வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு அல்லது மீட்பு முகாம்களாக இந்தத் தங்கும் இடங்களில் 30% ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிட வசதியை அனைத்து மாநில அரசுகளும் வழங்க வேண்டும் என்றும் இது தொடர்ந்து பரிசீலிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
புதிய திட்டம்
- 2013இல், நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம் (SUH) திட்டம் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (NULM) கீழ் தொடங்கப்பட்டது. பின்னர் ‘தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா’ (DAY) என்று பெயர் மாற்றப்பட்ட இத்திட்டம் நகரங்களின் பொருளாதார வளர்ச்சியில் நகர்ப்புற வீடற்றவர்களின் பங்களிப்பை ஒப்புக்கொண்டதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தரத் தங்கும் இடங்களை வழங்க முற்பட்டுள்ளது.
- தற்போது தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின்கீழ் 150 தங்குமிடங்கள் செயல்பட்டுவருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் காப்பகங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காது; எனவே, மாநில அரசுதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதற்கென மாநில அளவிலான கொள்கையோ திட்டமோ இதுவரை இல்லை.
- எனவே, நகர்ப்புற வீடற்றவர்களுக்கான இந்த நலத்திட்டம் பாதியில் நிறுத்தப்படும் சூழல் இருப்பதால், மாநில அளவில் கொள்கை - நிதி உதவியுடன் கூடிய திட்டத்தைத் தமிழக அரசு வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், வீடற்றவர்களின் நிலையை மேம்படுத்தத் தற்காலிக வீட்டு வசதி ஏற்பாடு, குழுக் குடியிருப்புத் திட்டங்கள், வாடகை வீட்டுத் திட்டம் அல்லது அந்தந்த நபரின் குறிப்பிட்ட தேவைக்கான நிரந்தர வீட்டு வசதி போன்ற பல்வேறு வகை இருப்பிடத் திட்டங்களை உறுதிப்படுத்தும் கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும்.
ஒருங்கிணைந்த கொள்கை ஏன் தேவை?
- அடையாளம் காணப்படும் ஆவணங்கள் கிடைக்கவும், வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளவும், திறன் பயிற்சி பெறவும், வேலைவாய்ப்பு இணைப்புப் பெறவும், வாழ்வாதார உதவி (தொழில் முனைவோர் திட்டம் அல்லது கடன்பெறுதல்) பெறவும், கல்விக் குழந்தைப்பராமரிப்பு வசதிகளும், முதியோர் உதவித்தொகை (OAP), தனியாக வாழும் பெண்களுக்கான உதவித்தொகை (கைம்பெண்கள், கைவிடப்பட்டவர்கள்), மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை போன்ற பல்வேறு சமூக உரிமைகள் இவர்களுக்குக் கிடைக்கவும் சமூக பொருளாதார மறுவாழ்வுக்கான தேவைகளை உறுதிசெய்யவும் அரசுத் துறைகள் இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
- போதைப் பழக்கத்திலிருந்து விடுபடல், ஆக்கபூர்வமான சிகிச்சைகள் போன்ற சமூக - உளவியல் செயல்பாடுகளும் தேவைப்படுகின்றன. குறிப்பாக, வீடற்றவர்களில் ஆதரவற்றோருக்குத் தங்கள் குடும்பத்துடன் ஒன்றுசேர்வதற்கான சாத்தியக்கூறுகளைப் பின்பற்றவும் இத்தகையோரின் குடும்பங்களைக் கண்டறிய முடியாத சூழலிலோ, குடும்ப உறுப்பினர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளாத பட்சத்திலோ கடைசித் தீர்வாக நீண்ட கால நிறுவனப்பராமரிப்புக்காகப் பரிந்துரை செய்யப்படவும் சம்பந்தப்பட்ட சமூக நல / சமூகப் பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
- வீடற்றவர்கள் போதுமான உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் வாழும் நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கான குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. வெயில், குளிர், மழை போன்ற கடுமையான தட்பவெப்பநிலையில் அதிகமான துன்பத்துக்கு உள்ளாகின்றனர்; இயற்கைப் பேரிடர்களின்போது மிகுந்த பாதிப்புக்குள்ளாவதும் இவர்களே.
- சரியான தங்குமிடம் இல்லாமல் வாழ்ந்துவருவதால் மேலும் பாதிக்கப்படுவதுடன் மாண்புடன் வாழும் உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாட்டில் வீடற்றவர்களாக வசிக்கும் ஒவ்வொருவரும் மாண்புடன், நிலையான வாழ்க்கை வாழ உறுதிசெய்யும் வகையில், வீட்டு வசதிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- அக்டோபர் 10 - உலக வீடற்றோர் நாள்
நன்றி: தி இந்து (16 – 10 – 2022)