- மனித உரிமைகள் மறுக்கப்படும்போதும் பறிக்கப்படும்போதும் நீதி கோருவது என்பது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை.
- அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள முதல் உத்தரவாதமே இந்த நீதிதான். இந்த நாட்டின் கடைசிக் குடிநபருக்கும் எந்தவிதப் போராட்டமும் இன்றி எளிதாகவும் தகுதி உடையதாகவும் பாரபட்சமின்றியும் விரைவாகவும் இந்த நீதி கிடைக்கக்கூடியது என்பதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
- இந்த லட்சியம் மிக உயர்வானது என்றாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் பல தடங்கல்கள் மனதளவிலும் பொருளாதாரரீதியிலும் இருந்துவந்துள்ளன.
- ஆனால், உலகத்தை ஒரு புள்ளி ஆக்கிவிட்ட தகவல் தொழில்நுட்பப் புரட்சியானது நீதித் துறைக்கும் ஒரு பெரும் மாற்றத்துக்கான நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
- சமீபத்தில், இந்திய அரசாங்கமும் உச்ச நீதிமன்றத்தின் மின்னணு தகவல் தொழில்நுட்பக் குழுவும் இணைந்து வழக்கு தகவல் அமைப்பு தொடர்பான வலைதளத்தை மறுவடிவமைத்து வெளியிட்டுள்ளன.
- இந்த வலைதளத்தின் முகவரி https://ecourts.gov.in/ecourts_home/. உச்ச நீதிமன்றத்தில் மின்னணு தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவரான நீதிபதி சந்திரசூட், இந்த வலைதளத்தை வெளியிடும்போது இது தரவுகளின் தங்கச்சுரங்கம் என்றும், இதைப் பயன்படுத்தும்போது நீதி ஒரு சேவையாகக் கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
தாய்மொழியில் தகவல்கள்
- இந்த வலைதளம் அடிப்படையில் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டாலும், உபயோகிப்பவர்கள் தங்களது தாய்மொழியை அல்லது தெரிந்த மொழியைப் பயன்படுத்தி இதைக் கையாள முடியும்.
- உபயோகிப்பவர்கள் தங்களது தேவைகளுக்கேற்ப திருத்தங்கள் செய்துகொள்ள வாய்ப்பளிக்கும் இலவச மென்பொருள்கள் பயன்படுத்தப்படுவதால் இதைப் பயன்படுத்துவோருக்கு எவ்விதச் செலவும் இல்லை.
- இந்த வலைதளத்தின் முக்கியச் சிறப்புகளைப் பார்த்த உலக வங்கி, எளிதில் தொழில்புரியும் காரணிகளில் முக்கியமாக அதைக் கருதி இந்தியாவை இருபது படிகள் முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது.
- இந்த வலைதளம் வழக்கறிஞர்கள், வழக்காளிகள், வழக்குகளின் தீர்ப்பை அறிய விருப்பம் கொண்ட பொதுமக்கள் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையிலும், பாதுகாப்பான வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தைப் பார்வைரீதியான சவால் உள்ளவர்கள்கூட பயன்படுத்த முடியும்.
- உடல்ரீதியான சவாலை எதிர்கொள்ளும் ஒரு மனிதர் இதை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வலைதளத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் மூலமாக வழக்கின் வரலாற்றையும் நீதிமன்றச் செயல்பாடுகளையும் தெரிந்துகொண்டு, நீதிமன்ற நிர்வாகத்தை மதிப்பிடவும்கூட முடியும்.
- கரோனா தொற்று உலகத்தையே சிறையில் வைத்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் புதிதாக வழக்கு தொடுக்கவிருக்கும் நபர்களுக்கு வீட்டை விட்டு வெளியில் சென்று எப்படி வழக்கு தாக்கல் செய்வது என்ற பிரச்சினை.
- வழக்கை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு சாட்சிகளின் வாக்குமூலம் கிடைக்கவில்லை என்ற கவலை. தீர்ப்பைப் பெற்றுவிட்டவர்களுக்கும்கூட தீர்ப்பு நகல் கிடைக்கவில்லை என்ற வருத்தம்...
- இப்படி பல்வேறு நிலைகளில் பல்வேறு பிரச்சினைகள். அவற்றைச் சரிசெய்யும் வகையில் இந்த வலைதளத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
மின்னணு முறையில் வழக்கு
- இந்த வலைதளத்தில் மின்னணு முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம். அதற்கு முதலில் https://efiling.ecourts.gov.in/tn/register என்ற முகவரியைப் பயன்படுத்தி வழக்கறிஞரோ அல்லது வழக்கைத் தாக்கல் செய்யும் நபரோ பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
- அப்படிப் பதிவுசெய்துகொள்பவர்கள் மட்டுமே இந்த முகவரி மூலமாக மின்னணு முறையில் வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். அவ்வாறு பதிவுசெய்துகொள்வதற்கு வழக்கறிஞர்கள் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், பார் கவுன்சில் பதிவு எண் ஆகிய விவரங்களை அதில் பதிவுசெய்ய வேண்டும்.
- தனிநபர் எனில் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
- இந்தத் தகவல்களை 18 நிமிடங்களுக்குள் பதிவுசெய்து முடிக்க வேண்டும் என்பதால் முன்னதாக அனைத்துத் தகவல்களையும் பதிவுசெய்பவர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- இந்த மின்-தாக்கல் முறையைப் பின்பற்றி அனைத்து உயர் நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்களுக்கு முன்பாக உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளைப் பதிவுசெய்யலாம்.
- நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் வலைதளச் செயலி மூலமாகவே வழக்குகளை வழக்கறிஞர்களும் வழக்கு நடத்துபவர்களும் பதிவுசெய்துவிடலாம். இந்த நேர்வில் காகிதங்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். நேரமும் காலமும் சேமிக்கப்படும். செலவும் தவிர்க்கப்படும். செயல்திறனும் அதிகமாகும்.
பதினாறு இலக்க எண்
- வழக்கறிஞர்கள் இந்த வலைதளத்தில் எப்படிப் பதிவுசெய்துகொள்ளலாம் என்பது குறித்து படிப்படியாகச் செயல்முறைகளை விளக்கும் பயனர் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- மின்னணு நீதிமன்றச் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கிக்கொள்ளலாம். செயலியின் பெயர் ‘eCourts Services’. அந்தச் செயலியைப் பயன்படுத்தி வழக்கின் நிலையையும் அதுகுறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
- இணையதள இணைப்பு இல்லாதவர்கள் தங்களுடைய வழக்கின் நிலைமையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ‘சிஎன்ஆர்’ என்ற 16 இலக்க எண்ணைத் தட்டச்சு செய்து 9766899899 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால் உடனடியாக வழக்கின் நிலைமை குறித்து குறுஞ்செய்தி கிடைத்துவிடும்.
- வழக்கு தாக்கல் செய்யும்போதே உருவாகும் ‘சிஎன்ஆர்’ என்ற 16 இலக்க எண்ணைக் குறித்துவைத்துக்கொள்வது அவசியமானது. அந்த எண்ணை வைத்து உரிமையியல் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு எங்கு சென்றாலும் அதன் நிலைமையை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.
- ‘சிஎன்ஆர்’ 16 எண் இலக்கம் என்பதால் அதை நினைவில் கொள்வது கடினம் என்றால் ‘கியூஆர் கோட்’ (QR CODE) வசதியைப் பயன்படுத்தலாம்.
அழைப்பாணைக்கும் தனிச் செயலி
- வழக்கைத் தாக்கல் செய்த பிறகு எதிர்மனுதாரருக்குச் செல்லும் சம்மன் அல்லது அழைப்பாணை என்னவாயிற்று என்பதுதான் வழக்கைத் தாக்கல் செய்தவரின் முக்கியமான கேள்வியாக இருக்கும்.
- அதை நிவர்த்திக்கும் வகையில் ‘என்ஸ்டெப்’ (NSTEP) என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலியை அழைப்பாணையைக் கொண்டுசெல்லும் நீதிமன்றப் பணியாளர் எடுத்துச்செல்லும்போது, அதிலுள்ள பதிவுகள் அந்த அழைப்பாணை விதிமுறைகளின்படி சார்வு செய்யப்பட்டுவிட்டதா என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டும்.
- அதன் மூலமாகக் காலவிரயமும் தவிர்க்கப்படும். நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்படும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், நீதிமன்றத்தில் வழக்கின் நிலை குறித்து பதிவுசெய்யப்படும் விவரங்கள், அன்றாடம் அளிக்கப்படும் உத்தரவுகள், இறுதியாக வழங்கப்படும் தீர்ப்புகள் ஆகியவை தானியங்கி மின்னஞ்சல் மூலமாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கறிஞர்கள், வழக்கு நடத்துபவர்களின் செல்பேசிச் செயலி வழியாகச் சென்றுசேரும்.
- இந்த வலைதளத்தில் உள்ள தேசிய நீதி தரவுக் கட்டம் (என்ஜேடிஜி) இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளின் மொத்த எண்ணிக்கையையும், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள மற்றும் முடிந்துபோன வழக்குகளின் எண்ணிக்கையையும் அளிக்கிறது.
- இதுவரை 12 கோடிக்கு மேலான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன; 35,000 குறுஞ்செய்திகள் இந்த வலைதளத்தின் மூலமாகவும் செல்பேசிச் செயலி மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளன; தானியங்கி மின்னஞ்சல் மூலமாக 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன; செல்பேசிச் செயலி 43 லட்சம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
- இதுவரையில் 25 லட்சம் பேர் சேவையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மக்களுக்கும் நீதி நிர்வாகத்துக்குமான இடைவெளி குறைவதை இந்த எண்ணிக்கையின் வேகம் வெளிப்படுத்துகிறது.
நன்றி: தி இந்து (09-09-2020)