TNPSC Thervupettagam

வீடுதேடி குடிநீர்?

August 25 , 2021 1073 days 526 0
  • உலகில் மூன்றில் இரண்டு பங்கு வெள்ளத்தால் ஆனது என்பதும், மனித இனம் வாழும் மண்ணால் ஆன பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டவை என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை.
  • ஆனால், ஊர்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலும் நாடுகளுக்கு இடையிலும் தண்ணீருக்கான போராட்டம் அதிகரித்து வருகிறது என்கிற உண்மையையும் எல்லோரும் உணராமல் இல்லை.
  • இந்தியாவில் அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் தண்ணீருக்கான தட்டுப்பாடு பெரிய அளவில் உருவாகும் என்கிற எச்சரிக்கையை பல்வேறு ஆய்வுகள் விடுத்தவண்ணம் இருக்கின்றன.
  • அதை உணர்ந்துதான் முன்னெச்சரிக்கை உணர்வுடன் மத்திய அரசு "உயிர் நீர் திட்டம்' (ஜல் ஜீவன் மிஷன்) என்கிற திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்துகிறது.
  • எல்லா வீடுகளிலும் 2024-க்குள் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது என்பதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதுதான் இதன் நோக்கம்.
  • தண்ணீர் தட்டுப்பாடு, மாசுபட்ட தண்ணீர் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் இந்தியாவில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டிருப்பதுதான் இந்தத் திட்டம்.
  • ஒடிஸா மாநிலத்தின் கோயில் நகரமான புரி, இந்தியாவின் முன்னோடி நகரமாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
  • பாதுகாக்கப்பட்ட குடிநீர் புரி நகரத்தில் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படுவதை நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிஸாவின் பிஜு ஜனதாதள அரசு பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.
  • அடுத்த கட்டமாக இந்தத் திட்டத்தை கட்டாக், ரூர்கேலா, பெஹ்ரான்பூர் உள்ளிட்ட ஏனைய 14 நகரங்களுக்கும் விரிவுபடுத்தி ஏறத்தாழ 40 லட்சம் பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை இலக்காக்கி இருக்கிறது அந்த அரசு. மார்ச் 2022-ஐ அதற்கான இலக்காக நிர்ணயித்திருக்கிறது.

மத்திய அரசின் உயிர் நீர் திட்டம்

  • 2019-இல் மத்திய அரசு "உயிர் நீர் திட்ட'த்தை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் கிராமப்புறங்களிலுள்ள 41% வீடுகளுக்கு இதுவரை குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
  • ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் என்கிற "உயிர் நீர் திட்டம்' 2024 மக்களவைத் தேர்தலுக்குள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது மத்திய அரசு.
  • பல மாநிலங்கள் அதற்கு முன்பேகூட அந்த இலக்கை எட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றன.
  • 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 19 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் கிராமங்களில் வாழுகின்றன.
  • 2019-இல் "உயிர் நீர் திட்டம்' அறிவிக்கப்பட்டபோது, அதில் மூன்று கோடி வீடுகளுக்குத்தான் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது என்கிற முறை காணப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக நான்கு கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
  • ஏற்கெனவே தெலங்கானா, கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உயிர் நீர் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
  • இந்தத் திட்டத்தை ஏனைய மாநிலங்களும் விரைவுபடுத்துவதன் மூலம் மேலும் ஐந்து கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு என்பதை சாத்தியமாக்க முடியும்.
  • மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல், நகரங்களும் உயிர் நீர் திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • அதன்மூலம் 4,378 நகராட்சிகள், மாநகராட்சிகள், பெருநகராட்சிகளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது உறுதிப்படுத்தப்படும். ஏறத்தாழ 2.68 கோடி தண்ணீர் குழாய் இணைப்புகள் இதன்மூலம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படாததால் இந்தியா பல பிரச்னைகளை எதிர்கொள்கிறது.
  • உலக வங்கியின் அறிக்கை ஒன்றின்படி, சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி தடைப்படுவது மட்டுமல்லாமல், பல்வேறு நோய்த்தொற்றால் குழந்தைகள் உயிரிழப்பதும் தெரியவந்திருக்கிறது.
  • சீனாவைவிட இந்தியாவில் முறையான பாதுகாக்கப்பட்ட தண்ணீரும் கழிவுநீர் வசதிகளும் இல்லாததால் நோய்த்தொற்று பாதிப்பு 40% அதிகம் என்கிறது நீதிஆயோக்கின் அறிக்கை ஒன்று.
  • உலக மக்கள்தொகையில் 17% இருக்கும் இந்தியாவில், உலகின் மொத்த நல்ல தண்ணீரில் 4% மட்டுமே காணப்படுகிறது. பல மாநிலங்கள் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன.
  • பல நதிநீர் படுகைகளிலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும்கூட கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காணப்படுகிறது.
  • தமிழகத்தின் 1.26 கோடி கிராமப்புற குடும்பங்களில் 27 லட்சம் வீடுகளுக்குத்தான் (21%) குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. கிராமப்புற குடும்பங்களில் 80% தண்ணீர் குழாய் இணைப்புப் பெற்றிருப்பதாக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் கூறப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை பயன்பாட்டில் இல்லை, கணக்கில்தான் இருக்கின்றன.
  • கடந்த ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் கண்டறியப்பட்டு தூர்வாரப்பட்டன என்றாலும்கூட, தமிழ்நாடு தண்ணீர் மிகை மாநிலம் அல்ல.
  • அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம், அனைவருக்கும் உணவு - இவையெல்லாம் கிடைப்பதற்குக்கூட சற்றுப் பொறுக்கலாம். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது உயிர் நாடி. ஒடிஸாவை அடுத்து தமிழகத்தின் முதல் இலக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீராகத்தான் இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி  (25 - 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்